வீரவரலாறு

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 07 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

Posted on

(சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 07)

தலைவர் பிரபாகரன் அவர்களின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமும் – தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இந்தியாவும் – தாயகம் திரும்பிய சிறுத்தை தலைவரும்

கடந்த பாகத்தில் திம்பு பேச்சு வார்த்தை பற்றியும் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டது பற்றியும் பாத்திருந்தோம் இந்த பாகத்தில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பற்றியும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

சென்னை ராயப்பேட்டையில் இடம்பெற்ற கைதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதால் சென்னையில் பதற்றம் நிலவ தொடங்கியது. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

ஆயுதப் போராட்ட இயக்கத்தின் மாபெரும் தலைவர், சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான சிறுத்தை தலைவர், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ஆம் நாள் தொடங்கினார்.

அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார்.

இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒரு நாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். ‘அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே’ – என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள்.

இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!’ என்றார்.

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்-
உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள்.

தலைவர் பிரபாகரன்” உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்” என்றார்.

இதேவேளை தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ஆம் ஆண்டு தை 3ஆம் நாள் தமிழீழம் திரும்பினார்.

தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் “இரட்சகர்” என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

1987 வைகாசி முதலாம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில்,

“நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்” என்றார்.”

சிறுத்தைப்புலி தலைவனின் பாய்ச்சல் தொடரும்..

வரலாற்று பதிவில் இருந்து ஈழம் புகழ் மாறன்

ஈழப்பறவைகள்

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கம் !

Posted on

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

ltte leaders dead


leader prabakaran tribute

praba god




 

எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !

Mullivaikal Remembrance 2

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)

Posted on

தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.

1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.

தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.

தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004

Posted on

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள்.

எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்திற் கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எமது வீர விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்கள் புரிந்த மகத்தான தியாகங்கள் காரணமாக ஒப்பற்ற போரியற் சாதனைகளை நாம் நிலைநாட்டினோம். உலகமே வியக்கும் வகையிற் போர் அரங்குகளில் எதிரிப் படைகளை விரட்டியடித்து வெற்றிகளை ஈட்டினோம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த எமது தாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து அங்கெல்லாம் எமது நிர்வாக ஆட்சியதிகாரத்தை நிறுவினோம். உலக நாடுகளின் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட சிறீலங்கா அரசினது ஆயுதப் படைகளுக்கு ஈடாகப் படை வலுச் சமநிலையை நிலைநாட்டினோம். தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேசமயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறைவுபெறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலைபெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை.

தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்துவரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்பமுடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்தச் சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை.

எனது அன்பான மக்களே,

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்புநிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.

மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்த ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின. நெருக்கடி நிலையைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவித்து, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தவும் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் போரினாற் பேரழிவுக்கு ஆளான கட்டுமாணங்களைப் புனர்நிர்மாணம் செய்யவும் நிறுவப்பட்ட உப-குழுக்கள் செயலிழந்து செத்துப்போயின. இவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வா~pங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம். இப்படியான புறநிலையிற்றான் பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த எமது இயக்கம் முடிவெடுத்தது. எமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தவே நாம் இந்த முடிவை எடுத்தோம். பேச்சுக்களை ஒரேயடியாக முறித்து, சமாதான முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட நாம் விரும்பவில்லை. பேச்சுக்களை இடைநிறுத்தம் செய்த இடைவெளியில், ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான திட்ட வரைவை முன்வைக்குமாறு ரணில் விக்கிரமசிங்காவின் அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். நீண்ட காலப் போரினாலே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கவும் சிதைந்துபோன தமிழர் தேசத்தை மீள்நிர்மாணம் செய்யவும் கணிசமான அதிகாரத்துடன் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு அவசியமென்பதை வலியுறுத்தினோம்.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக ரணிலின் அரசு முன்வைத்த, இடைக்கால நிர்வாகம் பற்றிய மூன்று வரைவுகளும் எமக்குத் திருப்தியை அளிக்கவில்லை. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் நிர்வாக வலுவற்றதாக இத்திட்ட வரைவுகள் அமையப் பெற்றதால் எம்மால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறுதியில், ஒர் இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவை நாமாகத் தயாரித்துக்கொடுக்க முடிவெடுத்தோம். பல மட்டங்களிலே தமிழீழ மக்களின் கருத்தைப் பெற்று, வெளிநாடுகளிற் புலம்பெயர்ந்து வாழும் அரசியல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோரின் கலந்தாலோசனையுடன் ஒர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தயாரித்தோம். இத் திட்டம் புதுமையானது; நடைமுறைச் சாத்தியமானது. எமது மக்களின் அவசரமான வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் இதன் கட்டமைப்பு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகளைத் தாமதமின்றிச் செயற்றிறனுடன் நிறைவுசெய்ய வழிவகுக்கும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமையப்பெற்றது.

இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைச் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி நாம் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், ஊடகங்கள் வாயிலாகப் பொதுசன அரங்கிலும் பகிரங்கப்படுத்தினோம்.

சர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை. நீண்ட காலத்தின் பின்பு முதற்றடவையாக விடுதலைப் புலிகள் தமது அரசியற் சிந்தனைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுத்தில் வடித்திருக்கின்றார்களென இந் நாடுகள் திருப்தி தெரிவித்தன.

நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை. தாம் சமர்ப்பித்த வரைவுகளைப் பார்க்கிலும் எமது திட்டம் வித்தியாசமானது என்று குறிப்பிட்ட அரசாங்கம், எமது யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க இணங்கியது. ஆனால், அதே சமயம், எமது இடைக்கால நிர்வாகத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அது தமிழீழத் தனியரசுக்கு இடப்பட்ட அத்திவாரமெனக் கண்டித்தது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கா ஒருபடி மேலே சென்று அதிரடி நடவடிக்கையை எடுத்தார். எமது இடைக்கால நிர்வாகத் திட்டம் அறிவிக்கப்பட்ட நான்காவது நாளே சந்திரிகா அம்மையார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை தென்னிலங்கை அரசியலைப் பெரும் நெருக்கடிக்குள்ளே தள்ளியது. பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுகளை ஜனாதிபதி சந்திரிகா பறித்தெடுத்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிபீடம் அதிகார வலுவிழந்து ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதத்திற்குள் ஜனாதிபதி சந்திரிகாவினாற் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக ரணில் அரசாங்கம் கவிழ்ந்தது.

இவ்வாண்டு முற்பகுதியில் நிகழ்ந்த பொதுத் தேர்தல் சிங்கள, தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது. சமாதானத்திற்கும் இன இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்களப்பௌத்த பேரினவாத சக்திகள், என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க இப் பொதுத் தேர்தல் வழிவகுத்தது. இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது.

பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள்சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.

தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைதூக்கின.

அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.

சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது. இந்த நெருக்கடிக்கு முகம்கொடுப்பதாயின் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரச கூட்டணிக்குள் நிலவும் உள்முரண்பாடும், அடிப்படையான கொள்கை வேறுபாடும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குப் பெரும் இடையூறுகளாக எழுந்துள்ளன. தமிழரின் தேசிய இனப் பிரச்சினை குறித்து அரச கூட்டணிக்குள் அங்கம்வகிக்குங் கட்சிகள் மத்தியில் ஒரு தெளிவான கொள்கைத் திட்டமோ பொதுவான அணுகுமுறையோ இருக்கவில்லை. தமிழர் விரோத இனவாதத்திலும் போர்வெறி பிடித்த இராணுவவாதத்திலும் சிங்களப்பௌத்த மேலாதிக்கத்திலும் ஊறித் திளைத்த தீவிரவாதச் சக்திகளுடன் அதிகாரக் கூட்டுறவு வைத்திருக்கும் சந்திரிகா அம்மையாரால் ஒரு தெளிவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிற் சமாதான முயற்சியை முன்னெடுக்க முடியவில்லை. இதுதான் தென்னிலங்கையில் நிலவும் உண்மையான அரசியல் யதார்த்த நிலை. அரச கூட்டணிக்குள் கருத்தொற்றுமையில்லையென்ற அரசியல் உண்மையானது மிகவும் சாதுரியமான முறையில், சர்வதேச சமூகத்திற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகிறது.

ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்துடன் நாம் நிகழ்த்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அதன் இறுதிக் கட்டத்திலேயே எமது இடைக்கால நிர்வாக யோசனைகளை முன்வைத்தோம். அந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து உடன் பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற எமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஆதரிக்கிறது. ஆனால் எமது நிலைப்பாட்டிற்கு மாறாக, சந்திரிகாவின் அரசு ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதாவது, எந்த வகையான இடைக்கால நிர்வாக அமைப்பும் ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தின் இணைபிரியாத அங்கமாக அமையவேண்டும் என வலியுறுத்துகிறது. நாம் ஒர் இடைக்கால நிர்வாக ஒழுங்கை வேண்டிநிற்க, சந்திரிகாவின் அரசு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுபற்றி பேச விரும்புகிறது.

கால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப்பெறவேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந்தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டியமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.

போர்நிறுத்தம்செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்தியபோதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கிவருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டவேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவவேண்டுமென நாம் விரும்புகின்றோம். நாம் தெரிவித்த யோசனைகளிற் சில சர்ச்சைக்குரியனவாகத் தென்பட்டால் அவைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். முதலில், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவி, அது செம்மையாகச் செயற்படத் தொடங்குவதை அடுத்தே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுபற்றிப் பேச்சுக்களை நடத்தலாம் என்பதே எனது நிலைப்பாடு. எமது கோரிக்கை நியாயமானது. தமிழர் தாயகத்தில் நிலவும் வாழ்நிலை நிதர்சனத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

ஆனால், சந்திரிகா அம்மையாரோ இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றிப் பேச வருமாறு எமக்கு அழைப்பை விடுத்து வருகிறார். எந்த வடிவத்திலான இடைக்கால நிர்வாகத் திட்டமும், முழுமையான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தின் அங்கமாக அமையவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்துவதற்குப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். முதலாவதாக, அரசுக் கூட்டணிக்குள் அங்கம்வகிக்கும் தீவிரவாத இனத் துவேசச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக இருக்கலாம். அதுவும் குறிப்பாக, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வன்மையாக எதிர்த்து நிற்கும் ஜே.வி.பியினரைச் சமாதானப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம். இரண்டாவதாக, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டவர்போன்று சர்வதேசச் சமூகத்திற்கு ஏமாற்றுவித்தை காட்டுவதற்காக இருக்கலாம். மூன்றாவதாக, தமிழரின் சிக்கலான இனப் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்ற சாக்கிற் பேச்சுக்களை முடிவின்றி இழுத்தடிப்பதற்காகவும் இருக்கலாம். இப்படிப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். எப்படியான காரணங்களாக இருந்தாலும் ஒன்றைமட்டும் நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம். அதாவது, சந்திரிகா அம்மையாரின் முரண்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாடுகளைப் பார்க்கும்பொழுது, அவரது அரசானது தமிழ் மக்களுக்கு ஒர் இடைக்காலத் தீர்வையோ நிரந்தரமான தீர்வையோ வழங்கப்போவதில்லை என்பது புலனாகும். —

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுவேண்டிக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்திய கசப்பான வரலாறு பற்றி நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை. காலத்தாற் சாகாது, ஈழத் தமிழ் இனத்தின் கூட்டு அனுபவத்திற் புதைந்து கிடக்கும் அரசியல் உண்மை இது. மொழியுரிமை என்றும் சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி என்றும் சம~;டிக் கூட்டாட்சி என்றும் காலங் காலமாக நாம் பேச்சுக்களை நடத்தி, உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் செய்து, ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுப் பாதையில் மீளநடைபோட எமது விடுதலை இயக்கந் தயாராக இல்லை.

சிங்களப்பௌத்தப் பேரினவாதச் சகதிக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் பெருந்தன்மையும் மதிநுட்பமும் இல்லாதது ஒருபுறமிருக்க, தென்னிலங்கை அரசியல் இயக்கங்கள் மத்தியில் ஒத்திசைவற்ற, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பாடுகள் நிறைந்த கருத்துக்களையும் கொள்கைகளையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இப்படிக் குளறுபடியான கொள்கைகளை வரித்துக்கொண்டு, அப்பட்டமான இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமைவகிக்கும் சந்திரிகா அம்மையார், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றி அக்கறை காட்டுவது எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஜனாதிபதி சந்திரிகாவிடமும் அவர், கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறது. அதாவது, தமிழ் மக்களது இனப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்து, அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசீயம், சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள்.

தென்னிலங்கை அரசியலரங்கில் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்துத் தெளிந்த பார்வையும் நேரிய தரிசனமும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு. அல்லாதபட்சத்தில், நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. தமிழர் பிரச்சினை குறித்துப் பிளவுபட்டு, முரண்பட்டுக் குழம்பி நிற்கும் சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்போவதில்லையென்ற உண்மையை உணர்ந்துதான் நாம் இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தோம். எமது மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காவது நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனேயே நாம் இத் திட்டத்தை முன்வைத்து, பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தோம். ஆனால் சந்திரிகாவின் அரசு எமது நியாயமான நிலைப்பாட்டை நிராகரித்து, நிரந்தரத் தீர்வு என்ற சாக்குச் சொல்லி, சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சமாதானத்தின் விரோதிகளையும் இனவாத சக்திகளையும் அவர்களது குளறுபடியான கொள்கைகளையுந் தனது கூட்டாட்சித் திரைக்குள் மூடிமறைத்து, விடுதலைப் புலிகள் மீது வீண்பழி சுமத்த முனைகிறார் சந்திரிகா அம்மையார். சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை நினைவுகூரும் இப் புனித நாளில், தேச விடுதலை என்ற அவர்களது இலட்சியக்கனவை, எத்தகைய இடர்கள், சாவல்களை எதிர்கொண்டபோதும் நிறைவுசெய்வோமென நாம் உறுதிபூணுவோமாக.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

[See also மாவீரர் நாள் –  Maha Veerar Naal –  2004  and
மாவீரர் நாள் உரை 2004 – ஒரு பார்வை – Sanmugam Sabesan]

விடுதலைப் புலிகள் பாவித்த எதிரியிடம் இல்லாத அதி நவீன ஆயுதங்கள்.!!!

Posted on Updated on

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலி வீரர்களின் மனவுறுதிக்கு அடுத்த நிலையில் ஆயுதங்களே இருந்தது. புலிகள் பாவித்த அதி நவீன ஆயுதங்கள் அன்றைய நேரத்தில் சந்தைக்கு புதியவையே. ஆனால் போராட்ட ஆரம்ப காலங்களிலேயே (1980களில்) புலிகளின் கைகளில் அதி நவீன ஆயுதங்கள் மின்னின.

ஒரு இராணுவ அமைப்பிற்கோ அல்லது அதற்கு எதிராக போராடும் அமைப்பிற்கோ நவீன ஆயுதங்கள் இன்றியமையாதவை. இதை ஆரம்பத்திலேயே தலைவர் உணர்ந்து கொண்டார். கைத்துப்பாக்கி முதல் விமான எதிர்ப்பு ஏவுகணை வரை நவீனமானதே புலிகள் பாவித்தனர். அதற்கான ரவைகளும், எறிகணைகளும் தங்கு தடை இன்றி புலிகள் கைகளில் கிடைக்க செய்தார்.

அவரது தூர நோக்கிற்கு அமையவே காலத்துக்கு காலம் ஆயுத சந்தைகளில் கிடைக்கும் அதி நவீன ஆயுதங்கள் புலிகள் கைகளில் தவழ்ந்தன. எதிரிக்கு அறிமுகம் இல்லாத ஆயுதங்கள் பல புலிகளே எதிரிக்கு அறிமுகப் படுத்தினர் என்பது வரலாறு.

இதில் இந்திய இராணுவம் புலிகளோடு மோதிய போது வல்லரசான இந்திய இராணுவத்தினர் மிகவும் பின் தங்கிய ஆயுதமான 303, SLR, பிரவுன் LMG போன்றவற்றையே பாவித்தனர். மாறாக எதிர்த்து போராடிய புலிகளின் கைகளிலோ அதி நவீன ஆயுதங்கள் இருந்தன. (படங்கள் இணைக்கப் பட்டுள்ளது) இதில் சிலது எதிரி பாத்திராத, கேள்விப்படாத ஆயுதங்களும் அடங்கும். இவை கூட தமிழர் பெருமைகளில் முக்கியமானது.

இது போலவே சிங்கள அரசுக்கும் பல நவீனரக ஆயுதங்கள் தமிழரே அறிமுகப் படுத்தினர். தலைவர் எப்போதும் சிறு விடயங்களையும் நுண்ணியமாக அவதானிக்கும் தன்மை கொண்டவர். அவர் நவீன ஆயுதங்களை கொள்முதல் செய்வது மட்டுமல்ல, அதற்கான பயிற்சிகளையும் போராளிகளுக்கு கிடைக்கச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தியமையே, அந்த ஆயுதங்கள் கொண்டு எதிரியை ஆயிரம், ஆயிரமாக புலிகள் கொன்று குவித்தார்கள்.

இப்போது பல நவீன ஆயுதங்கள் தினமும் சந்தைக்கு வருகின்றன. எல்லா நாடுகளும் ஆயுத உற்பத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இன்றைய திகதியில் அதுதான் கொள்ளை இலாபம் தரக்கூடியதும். எது எப்படியோ தென்கொரியர்களின் K-11 DUAL என்ற (ஒன்பது படங்கள் இணைக்கப் பட்டுள்ளது ) ஆயுதமே முன்னணி வகிக்கின்றது. (இது நிரந்தரமல்ல, அடிக்கடி புது வரவுகளின் போது நிலமை மாறும்)

இன்றும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தால் !  இதுவும் புலிகள் கைகளில் தவழ்ந்திருக்கும். தமிழர் இருக்கும் வரை புலிகளின் போராட்டமும் தலைவரும் பேசப்படுவார்கள்.

– நினைவுகளுடன் ஈழத்து துரோணர்.!!

விடுதலைப் புலிகள் இல்லாத போது தூற்றுவது கோழைத்தனம் !

Posted on Updated on

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒரு மாவீரன் என்று இலங்கையின் இராணுவத் தளபதிகளே போற்றுமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழினம் பற்றி இந்த உலகம் நினைக்கவும் சிந்திக்கவும் தலைப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனே காரணம் என்றால் அதை அவரின் எதிரியும் மறுக்க மாட்டார் என்பதே உண்மை.

ஆக, எதிரிகளும் மெச்சுகின்ற ஒரு தேசியத் தலைவராக பிரபாகரன் இருந்தார் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

இதைக் கூறும்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் அத்தனை நகர்வுகளும் மிகவும் சரியானது. அதை எவரும் விமர்சிக்க முடியாது என்பது பொருளல்ல.

ஓர் அமைப்பு என்றால் அந்த அமைப்பு எடுத்த தீர்மானங்கள், தீட்டிய திட்டங்கள் சில வேளைகளில் யதார்த்தத்துக்கு பொருத்த மற்றதாகவும் இருக்கும் என்பது ஏற்புடையதே.

பாரத தேசத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் சிற்பி ஜின்னா ஏமாற்றினார் என்றும் இந்திய தேசத்தின் மீது பாகிஸ்தான் போர் தொடுக்க முற்படும் போதெல்லாம் மகாத்மா காந்தி விட்ட தவறே இந்திய தேசத்துக்கு ஆயுத அச்சுறுத்தலை தருவதாகக் குறைபடுவோரும் உளர்.

அதற்காக பாரத பூமிக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தியின் தியாகத்தை மறந்து விடவோ மறைத்து விடவோ முடியாது என்பது உண்மை.

இந்த வகையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முன்னெடுத்த விடுதலைப் போராட்டம், அதைக் கட்டிக்காத்த நுட்பம், பேராளிகளின் ஒழுக்கநெறி; நிர்வாகக் கட்டமைப்பு; ஆயுத பலம்; தாக்குதல் திறன் என இவையனைத்தும் வியப்புக்குரியவை.

இந்த விடயங்களை தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டு கீழ் நிலைப்படுத்துவதோ அன்றி அதற்கு மாசு கற்பிப்பதோ அழகல்ல.அதிலும் இச்செயலை தமிழர்கள் குறிப்பாக விடுதலைப் புலிகளால் இழப்புக்களைச் சந்தித்தவர்கள் கூட, சொல்லமாட்டார்கள் என்று கூறுவதில் தவறில்லை.

ஏனெனில் விடுதலைப் புலிகளால் இழப்புக்களைச் சந்தித்தவர்களும் இலங்கை ஆட்சியாளர்களின் ஈனச் செயல்களாலேயே தமிழ் இளைஞர்கள்ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள் என்பதை ஏற்றுக் கொள்வர்.

இதன் காரணமாக அவர்களும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்புத் தேவை என்பதுடன் ஒத்துப் போவார்கள் என்பதே நிதர்சனம்.

நிலைமை இதுவாக இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கீழ்நிலைப்படுத்தும் வகையில் உரையாற்றியிருப்பது மிகப்பெரும் வேதனைக்குரியது.

தற்போதைய ஆட்சியை நல்லாட்சி என்று கூறுவதற்கு அவர் விரும்புவாராக இருந்தால் அதனை மகிந்த ராஜபக்­சவின் ஆட்சியுடன் ஒப்பீடு செய்து நல்லாட்சி என்று பேச வேண் டுமே தவிர விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது தமிழினத்துக்குச் செய்கின்ற அநீதியாகும்.

இதைவிடுத்து பேச வேண்டிய தேவைகள் இருந்தால் தியாகங்களைச் கொச்சைப்படுத்தாமல் பேசுங்கள்.இல்லை பேசுவோம் என்றால் புலிகள் இருந்த போதும் பேசியிருக்கலாமே.

அவர்கள் இல்லாத போது அவர்களைத் தூற்றுவது கோழைத்தனமல்லவா? என்று கூறுவதில் தவறில்லை.

வலம்புரி

பிரபாகரனின் உயரிய பண்புகள் !

Posted on Updated on

தலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள்.

ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது.

முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, தமிழன் என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் கேள்வி “தமிழ்ப் புலியா” எனப் புன்னகையுடன் வெளிவரும்.!

தமிழ்மொழியை தாய்மொழியாக்கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கே தான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமாத்திரம் தமிழரை ஒன்றிணைவதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை.

பிரபாகரம் நிகழ்ச்சியில் பிரபாகரனோடு பழகியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்

இதனால் தான் எமது முன்னோர்களான வீரமன்னர்களின் வரலாற்றையும் மறைத்தனர்.

இப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிராப்பகரனே இருக்கின்றார் என்பதால், இன்று தலைவரை இளம் தலைமுறையினர் நெஞ்சில் வைத்து சுமக்கின்ரனர்.

இதன் அபாயத்தை உணர்ந்த புலி எதிர்ப்பு சக்திகள், தலைவர் பிரபாகரனுக்கு சேறடிக்கும் முயட்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அவர்கள் சமூகவலைத்தளங்களையே பாவிக்கிறனர். இதில் பிரதான பங்கு வகிப்பவர்கள் யாரென்று பார்த்தால் 2009 வரை முக்காடு போட்டு மறைப்பில் திரிந்த சிலரே ஆகும்.

எமது மக்களால் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு, தமிழர் மரபிலிருந்தே ஒதுக்கப்பட்ட சிலரே இதில் முன்னிக்கின்றனர். இதில் பலர் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கி விட்டனர். சிலர் இப்போது மீள் சுழற்சியில் தயார்படுத்தப்பட்டு களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின்முக்கிய பணி தலைவருக்கு சேறடிப்பது, புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதே முதல் நோக்கம். அவர்களின் நோக்கம் தலைவரை பெரும் கொலைகாரன் போல சித்தரிப்பதேயாகும்.!

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அல்லது தண்டனைகளை இன்று அது ஒரு குற்றம் போல நிறுவ முற்படுகின்றனர். இந்த தண்டனைகளை புலிகள் ஏன் வழங்கினர் என்பதை நாசுக்காக மறைத்துவிடுகின்றனர்.

இவர்கள் போன்றவர்களிடம் இளையதலைமுறையினர் மிக அவதானமாக இருக்கவும். தயவு செய்து இவர்களை கடந்து போங்கள். இவர்கள் விரிக்கும் மாயவலையில் சிக்காதீர்கள்.

எனது பதிவுகள் ஊடாக நான் கடந்துவந்த பாதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்?

அந்த பயணங்களின் போது தலைவருடனான எனது சந்திப்பில் “நான் எவ்வாறு தலைவரைப் புரிந்து கொண்டேன்.?

எனது பார்வையில் தலைவர் எப்படியானவர் என்பதை,1988களின் மணலாற்றில் வைத்து ஒரு வருட காலம் அவருடன் பயணித்த போதும், பின்னர் வேறு துறையில் பயணித்தபோது, அவருடனான சந்திப்புகள் மூலம், நான் அவரைப்புரிந்து கொண்டதை, உங்களோடு பகிர விரும்புகின்றேன்.! தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.?

#இந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.!

#நேரத்தில் கஞ்சியோ அல்லது பருப்பும் சோறும் என்றாலும் அது போராளிகளுக்கு கிடைத்துவிட்டதா என்பதை உறுதி செய்தபின்பு தான் தனது உணவுக்கு தயாராவார். பருப்பும் சோறும் என்றாலும் அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்கவந்தால், நலம் விசாரித்தபின் அவரது கேள்வி “சாப்பிட்டியா”..!

#அவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும் பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல்) தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார்.

#உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ,சவற்காரம்,உடைகள்,பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார்.

#இது எனக்கு கிட்டண்ணை கூறியது.!
ஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப்போய் முகாம் திரும்பினாள். தாங்கள், கழட்டிப்போட்டுவிட்டு சென்ற அழுக்கான உடைகளை (உள்ளாடைகள் உட்பட) தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து துவைத்து வைத்திருப்பாராம். அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும் அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.

#புலிகளமைப்பில் எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையை நானும் அனுபவித்தேன்.!

#புன்னகையுடன் தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார்.

#வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார்.
பழிவாங்கும் எண்ணம் எப்போதும் அவருடன் இருப்பதை கண்டுள்ளேன்.

#வரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று எங்களுக்கும் வலியுறுத்துவார். அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது.

# 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர்போ, ராளிகள் தலைவருக்கு எழுதும் கடிதங்களை, அவரே படிக்கும் பழக்கமுடையவர். இதனால் இரவு நித்திரைக்கு செல்வது தாமதமாகின்றது என்பதால் பொறுப்பாளர்களால், முக்கியமான பிரச்னை இல்லாவிட்டால் தலைவருக்கு கடிதமெழுத்துவதை தவிர்க்கும் படி, அண்ணைக்கு தெரியாமல் அன்புக்கோரிக்கை விடப்பட்டது. காரணம் இரத்த அழுத்த தாக்கம் அன்றைய நேரம் தலைவரிடம் இனம்காணப்பட்டமையே இதற்கு காரணம்.

#தனக்கு தெரியாத எந்த விடையமானாலும், அது பற்றித் தெரிந்த, சிறிய போராளிகளாக இருந்தாலும் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு அவர் பின்நின்றதில்லை. அவரிடம், எமது எந்தக்கேள்விக்கும் சரியான பதில் இருக்கும்.!

#ஒரு சிறியபோராளியின் கூற்று, சரியாக அவருக்கு தோன்றினால், அதை ஏற்பதற்கு, ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.

# எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் நிதானம் இழந்ததில்லை. அந்த நேரத்தில் அவரது முடிவுகள் தெளிவாகவே அவரிடமிருந்து பிறக்கும்.

#போராளிகளுடன் உரிமையுடன் உரையாடுவதே அவரது தனிச்சிறப்பு. அம்மான் தொடங்கி சிறிய போராளிவரை அந்த உரிமை,பாகுபாடின்றி தொடரும்.

#பொறுப்பாளராக இருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும் சரி பிழைகளுக்கான(யுத்த பின்னடைவுகளுக்கு) தண்டனை பாகுபாடின்றி கிடைக்கும். இதில் அம்மான் தொடங்கி பானு அண்ணை, பால்ராஜ் அண்ணவரை பெரும் பாலும் எல்லாத்தளபதிகளும் பாகுபாடின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

#1990இல் ஈழப்போர் தொடங்கிய நேரம், பலாலியில் இருந்து எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது போராளிகள் அணியொன்று குப்புளான் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த நேரம், அதிகாலை 3மணிக்கு எழுந்து ரோந்தில் சென்று வந்த அணியை, திடீர் என்று அங்குவந்த தலைவர், போராளிகளுடன் உரையாடும் போது, மாசிப்பனியினால் தலைமுழுவதும் ஈரமாக இருந்த போராளிகளை தொட்டுப்பார்த்து மனம் வருந்தினார்.

தன்னுடன் வந்த ரிச்சர்ட் (இவர் பின்னர் மரணமடைந்துவிட்டார்) என்பவரை அனுப்பி, எல்லோருக்கும் ரெஸ்சீன்(மெழுகுத்துணி) கொண்டு தொப்பி தைத்து கொடுத்தபின்,அவரை முகாம் திரும்பும்படி கூறிச்சென்றார். அன்று இரவே போராளிகள் எல்லோருக்கும் அந்த தொப்பி வந்துசேர்ந்தது.!

#ஒரு சந்திப்பின் பின் ஒரு பயணத்தின் போது ஒரு கர்ப்பணிப்பெண்னொருவர், கைவேலிக்கும், சுதந்திரபுரத்துக்கும் இடையில் கொளுத்தும் வெய்யிலில், ஒரு குழந்தையையும் தூக்கி சுமந்தபடி நடக்கமுடியாது சென்றதை கண்டா தலைவர், பாதுகாப்பு போராளிகளின் எச்சரிக்கையை கடிந்து வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்மணியை வாகனத்தில் ஏற்றியபின் தான் தெரியும், சுகவீனமுற்ற கணவனால் வரமுடியாமையால் நிவாரணப்பொருட்கள் வாங்குவதற்கு புதுக்குடியிருப்பு செல்வதை அறிந்து தனது போராளியொருவரையும், அந்த தாயுடன் துணைக்கு அனுப்பி தமிழ்ச்செல்வண்ணை ஊடாக அந்தக் குடும்பத்துக்கு உதவவைத்தார்.

#அது போலவே தான் தேராவில் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு வெடித்து காயமுற்ற ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வைத்திய சாலைக்கு அனுப்புவதற்கு தான் இறங்கி காட்டில் நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்த சந்பவத்தில் கூடயிருந்த அம்மான் பின்னைய நாட்களில் அடிக்கடி எமக்கு சொல்வதற்கு தவறவில்லை.

#மன்னார் பேசாலை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் நினைவு நாள் நிகழ்வொன்று அவர்களின் இறந்தோரைப்புத்தைக்கும் சேமக்களையில் பூசையின் நிறைவின் பின் அதில் பங்குபற்றிய இராணுவ உளவுத்துறை அதிகாரியை மேஜர்.ஜோனுடன் சென்ற இன்னொரு போராளி சுட்டு கொன்றுவிட்டார். நீண்டநாள் இலக்கு புலனாய்வுத்துறை போராளிகளால் அன்று அழிக்கப்பட்டது.

இதற்கு கிறிஸ்த்தவ மக்கள் தங்கள், புனித நாளில் இந்த தாக்குதல் நிகழ்ந்தமையால் தமது கண்டனத்தை கடிதம் மூலம் தலைவருக்கு தெரிவித்தனர். தலைவர், அந்த தவறை உணர்ந்து, அதற்கான மன்னிப்பை அரசியல்துறை ஊடாக அந்த மக்களுக்கு தெரிவித்தார்.

இந்த தாக்குதலை வழிநடத்திய புலனாய்வு அதிகாரியை பதவி குறைத்து தாக்குதல் மேற்கொண்ட போராளிக்கு ஒரு மாதம் பங்கரில் அடைக்கப்பட்டார். இது வெளித்தெரியாத போதும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையில் தலைவரோ அல்லது போராளிகளோ தலையிட்டதில்லை இதுவும் தலைவரின் பெரும் சிறப்பு. இப்படி பல சம்பவங்கள் இருந்தபோதும், இந்த மூன்று சம்பவங்களும் போதும்,” தலைவர் எமது மக்களை எந்தளவு தூரம் நேசித்தார்” என்பதைக்காட்டுவதற்கு.!

#1997ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து, உளவுஇயந்திரத்தில் வந்த சிங்கள இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு பெண் சிப்பாய்கள் உட்பட 14சிங்களப்படையினர் பலியாகியிருந்தனர். இது வெற்றிகரமான தாக்குதல் என்றபோதும், எம் மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தபோதும் திடீர் என்று அவ்விடத்துக்கு வந்த இரண்டு மாணவிகளும் பலியாகினர்.

இதனால் சினம் கொண்ட தலைவர், இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிகாரியையும், போராளியையும் மூன்று மாதம் 4×4 கம்பிக்கூட்டினுள் அடைத்து தண்டனை வழங்கினார். பொறுப்பாளர் என்ற ரீதியில் அம்மானும் கடும் திட்டை வாங்கினார். வெளித்தெரியாத போதும் இப்படியான அசம்பாவிதங்களை தலைவரின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.!

#புத்தூரில் ஒரு சம்பவம். குறிப்பிட்ட இடமொன்றில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றையினுள், கள்ளிறக்கும் ஒருவரால், ஒரு கானில் கள்ளு மறைத்து வைக்கப்படும். இதை குறிப்பிட்ட காவலரணில் நிக்கும் சிப்பாய்கள் ஒவ்வொருத்தராக வந்து,அந்தக் கள்ளைக் குடித்துவிட்டு செல்வார்கள்.

இதை அறிந்த உளவுத்துறைப் போராளிகள் அந்த கள்ளுக்கானுக்குள், தங்களிடமிருந்த இரண்டு சயனைட் குப்பிகளை உடைத்து சயனைட் பவுடரை போட்டுவிட்டு வந்தனர். அதை அருந்திய நான்கு இராணுவத்தினர் மாண்டனர்.

போராளிகளின் பார்வையில் இது வெற்றிகரமான தாக்குதல். ஆனால், இந்த தாக்குதலின் பின் சம்பந்தப்பட்ட போராளியுடன் அம்மானும் தலைவரை சந்திக்கப் போன போது தலைவர் கூறினார். இந்த சம்பவம் என்னைத்தலைகுனிய வைத்துவிட்டது. வீரர்கள் ஒரு போதும் எதிரியை நஞ்சுவைத்து, நயவஞ்சகமாக கொல்லமாட்டார்கள்.

நேருக்கு நேர் மோதியே வெல்வார்கள் என்பதை மிகுந்த கோபத்துடன் கூறித்திட்டினார். திட்டுவாங்கியபின், அந்த போராளிக்கு ஒரு மாத பங்கரும், பொறுப்பாளருக்கு கடும் திட்டும் கிடைத்தது.

போரில் கூட தனக்கென ஒரு விதிமுறையை வைத்து, அதை போராளிகளிடம் எதிர் பாக்கும் தலைவர்.! இப்படி ஆயிரம் விடையங்கள் இருந்த போதும், பதிவின் நீளம் காரணமாக முக்கியமானவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.!

இது தான் எங்கள் தலைவன். எதிரிக்கு கூட வீரமரணம் தான் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்ட தலைவன்.! உறுதியில் உருக்கை ஒத்த குணம் கொண்ட போதும் மனத்தால் குழந்தை போன்றவர். நகைச்சுவைகளை ரசித்து மனம் விட்டுச்சிரிக்கும் அழகு தனியழகே..

ஒரு சிலரைத்தவிர தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு போதும் கண்ணால் காணாதபோதும், அன்புசெய்யும் ஒரு தலைவன், எமது தலைவன் மட்டுமே.!

நரிகளுக்கும், பச்சோந்திகளுக்கும், அவரை புரிந்துகொள்வது கடினமே.!

பெருமையுடன் துரோணர்.!!