பிரபாகரன்

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை

Posted on Updated on

தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள்.ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார்.

உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.


1989 முதல் 2008 வரை மாவீரர் நாள் நிகழ்வில் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரைகள்

Leader V Prabakaran’s Heros day speeches from 1989 to 2008

காணொளியில்
எழுத்து வடிவம்
English Translation
2008 எழுத்து வடிவம் 2008
2007 எழுத்து வடிவம் 2007
2006 எழுத்து வடிவம் 2006
2005 எழுத்து வடிவம் 2005
2004 எழுத்து வடிவம் 2004
2003 எழுத்து வடிவம் 2003
2002 எழுத்து வடிவம் 2002
2001 எழுத்து வடிவம் 2001
2000

எழுத்து வடிவம்

2000
1999

எழுத்து வடிவம்

1999
1998 எழுத்து வடிவம் 1998
1997 எழுத்து வடிவம் 1997
1996 எழுத்து வடிவம் 1996
1995 எழுத்து வடிவம்  1995
1994 எழுத்து வடிவம்  1994
1993 எழுத்து வடிவம்  1993
1992 எழுத்து வடிவம்  1992
1991 எழுத்து வடிவம் 1991
1990 எழுத்து வடிவம் 1990
1989 எழுத்து வடிவம் 1989

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008

Posted on

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது. மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம். இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம். ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது. சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம். இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது. பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது. எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன. தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன. இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது. இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது. பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது. சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது. எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது. உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது. சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது. கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது. இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று. உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை. எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது. அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது. போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை. மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது. தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது. புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது. சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2007

Posted on

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2007.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.

ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.

மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான். அவனிடத்தில் எத்தனையோ புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன் எத்தனையோ புதிய கருத்தோட்டங்கள் பிறந்திருக்கின்றன. எத்தனையோ புதிய எண்ணங்கள் அவன் மனதிலே தெறித்திருக்கின்றன. இந்தச் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான்.

சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்திலிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம்.

இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து, மனிதன் போராடப் புயலாகப் புறப்பட்டான். ஓயாது வீசும் இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம்கொண்டு நிற்கிறது. சுழன்றடிக்கும் சூறாவளியாக, குமுறும் எரிமலையாக, ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்றுதிரண்டுநிற்கின்றனர்.

ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாக, ஒன்றுபட்ட இனமாகத் தமக்கு முன்னால் எழுந்த எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்துநிற்கின்றனர்.

எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்துநிற்கின்றனர். போர்க்கோலம் கொண்டு, மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டுநிற்கின்றனர்.

முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீரவிடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும் படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம்.

நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்மபலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்துநிற்கிறோம்.

நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர்புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம். இந்த மலையான நிமிர்விற்கு, இந்தப் பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் இங்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது. இருபத்தொராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த, எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக, பொருளாதார, விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன.

அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன. மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது; அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்துவைத்திருக்கிறது.

ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது.

சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்தபோதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும், அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது.

அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்புவைத்துவிட்டு, தனது இராணுவ நிகழ்ச்சித்திட்டத்தைத் துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.

எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது. சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

இப்படியான அநீதியில் அமைந்த அந்நியத் தலையீடுகள், காலங்களை விழுங்கி நீண்டுசெல்லும் எமது போராட்டத்திற்குப் புதியவை அல்ல. அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக எமது தேசியப் பிரச்சினையிலே தலையீடு செய்தது. தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி, சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்தது. அடிப்படையில் அந்த ஒப்பந்தம் தமிழரது நலனுக்காகவோ நல்வாழ்விற்காகவோ செய்யப்பட்டதன்று. தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற் கைச்சாத்தான பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள்மீது கட்டிவிட முயற்சித்தது. ஓர் இலட்சம் இராணுவத்தினரின் பக்கபலத்தோடும் இரண்டு அரசுகளின் உடன்பாட்டு வலிமையோடும் எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்திவிட இந்தியா தீவிரமாக முயற்சித்தது. தமிழரது தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டுநிற்காத, தமிழரின் அரசியல் அபிலாசைகள் எதையும் பூர்த்திசெய்யாத அந்த அரைகுறைத் தீர்வைக்கூடச் செயற்படச் சிங்களப் பேரினவாதிகள் அன்று அனுமதிக்கவில்லை.

சிங்களத் தேசம் பற்றியும் அதன் நயவஞ்சக அரசியல் பற்றியும் நாம் நன்கு அறிவோம். எமக்கு அதுபற்றிய நீண்ட பட்டறிவும் கசப்பான வரலாறும் இருக்கின்றன. எனவேதான், நாம் அன்று இந்தியாவுடன் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிற் பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது, சிங்களப் பேரினவாதம் பற்றி அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறினோம். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, தமிழர் தேசத்தில் அமைதியைக் கொண்டுவருவது சிங்கள அரசின் நோக்கமன்று, தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, தமிழரின் வளங்களை அழித்து, தமிழரை அடிமைகொண்டு, அழித்தொழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை அன்று இந்தியாவிற்கு எடுத்துரைத்தோம். இந்தியா இணங்கமறுத்தது. இதனால், தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர்.

அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது. சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒருகாலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்.

இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டுவருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.

எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

இத்தகைய நடுநிலை தவறிய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம்மீது எம்மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்புவைத்திருக்கின்றன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குகொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து, அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழிசெய்திருக்கின்றன. அத்தோடு, இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன. இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்துவருகிறது.

இராணுவப் பலத்தைக்கொண்டு, தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்துவிடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது. தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது. முழுஉலகமும் முண்டுகொடுத்துநிற்க, போர்நிறுத்தத்தைக் கவசமாக வைத்து, சமாதானச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது. போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது.

அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள். எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மௌனித்துப் பேசமறுத்தன. சமாதானத்திற்கான போர்| என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை| என்றும் தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்| என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது.

மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச்சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது. ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயானபூமியாக மாறியது. சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது. தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது. வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

மொத்தத்தில், சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர் தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது. எமது தாய்நிலம், ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய, மறுபுறம் உயர்பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது. சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும் வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும் பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது.

இதன் உச்சமாக, தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுரவேகத்திலே முளைத்துவருகின்றன. அநீதியான யுத்தம் ஒன்றை நடாத்தி, பொருளாதாரத் தடைகளை விதித்து, போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து, தமிழரைக் கொன்றுகுவித்து, இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்துவிட்டு, தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடிமகிழ்கிறது.

தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி, வாணவேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது. கிழக்கு மீதான முற்றுகைவலயம் முற்றுப்பெற்றுவிட்டதாகவும் யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கிவிட்டதாகவும் சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது. பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை, கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டுவிட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது. புலிகளுக்கு எதிரான போரிற் பெருவெற்றி ஈட்டிவிட்டதாகச் சிங்கள ஆட்சிப்பீடம் திருப்திகொண்டது.

எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது; குறைத்தே மதிப்பீடுசெய்கிறது. பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம். எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம். இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம்.

புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் ஜெயசிக்குறு|| சமரிற் கற்றறிந்திருக்கலாம். ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்.

வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய எல்லாளன்|| நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது. இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது. அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை. ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்துகொள்ளப்போவதில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப்பிடிக்கவேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களமயமாக்கிவிடவேண்டும் என்ற ஆதிக்கவெறியும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அகன்றுவிடப்போவதில்லை. தொடர்ந்தும் கோடிகோடியாகப் பணத்தைக் கொட்டி, உலகெங்கிலிருந்தும் அழிவாயுதங்களையும் போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது. எனவே, மகிந்த அரசு தனது தமிழின அழிப்புப்போரைக் கைவிடப்போவதில்லை.

தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாகத் தமிழீழ மண்ணில் ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பி, உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது. இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன். வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து, எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கமுடியாது, இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டிநிற்கிறது.

தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

சிங்களப் படைகளின் அக்கினிக்கீல என்ற பாரிய படைநடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி, போரிற் புலிகளை வெற்றிகொள்ளமுடியாது என்பதைச் சிங்களத் தேசத்திற்கு இடித்துரைத்தபோதுதான் அன்று சிங்களம் அமைதி முயற்சிக்கு ஆர்வம்காட்டியது. எமது உயரிய போராற்றலை வெளிப்படுத்தி, இராணுவ மேலாதிக்கநிலையில் நின்றபோதுதான் சிங்களத் தேசம் அமைதி ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டது. உலக நாடுகளிலிருந்து பெற்ற தாராள நிதியுதவிகளையும் ஆயுத உதவிகளையுங் கொண்டு தனது சிதைந்துபோன இராணுவ இயந்திரத்தைச் செப்பனிட்டு, தனது இராணுவ அரக்கனைப் போரிற்குத் தயார்ப்படுத்திச் சிங்களத் தேசம் சமாதான வழியிலிருந்தும் சமரசப் பாதையிலிருந்தும் விலகித் தனது பழைய இராணுவப்பாதையிற் பயணிக்கிறது.

மகிந்த அரசு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை முறித்து, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டையும் தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் இராணுவச் செயற்றிட்டத்தை இன்று ஈவிரக்கமின்றிச் செயற்படுத்திவருகிறது. ஆயிரக்கணக்கில் எம்மக்களைக் கொன்றுகுவித்து, கடத்திப் புதைகுழிகளுக்குட் புதைத்து, பெரும் மனித அவலத்தை எம்மண்ணில் நிகழ்த்திவருகிறது. அனுசரணையாளரான நோர்வேயை அதட்டி அடக்கிவருகிறது. கண்காணிப்புக்குழுவைக் காரசாரமாக விமர்சித்துவருகிறது. தனது பயங்கரவாதத்தை மூடிமறைக்க ஐ.நாவின் உயர் அதிகாரிகளைக்கூடப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறது. செய்தியாளர்களோ தொண்டுநிறுவனங்களோ செயற்படமுடியாதவாறு தமிழர் தாயகத்திற் பதற்றத்தையும் பயப்பீதியையும் உருவாக்கி, உண்மை நிலைவரத்தை உலகிற்கு மறைத்துவருகிறது.

உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை. இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன. இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன. கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.

இருப்பினும், எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை. இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது. அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது. எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி, மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது. உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து, கலங்கியழவைத்திருக்கிறது.

சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான். சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது. சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன. சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன? சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா? இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன. எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.

எனது அன்பார்ந்த மக்களே!

நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம்; மிகவும் தொன்மை வாய்ந்த இனம்; தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம். நீண்ட காலமாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டிப் போராடிவருகிறோம். நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீளநிலைநாட்டுவதற்காகவே போராடிவருகிறோம். இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாம் போராடிவருகிறோம்.

எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்களத் தேசம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது. மாறாக, எம்மண்மீதும் மக்கள்மீதும் பெரும் இனஅழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்திவருகிறது.

அறுபது ஆண்டுக்காலமாக அநீதி இழைக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ குரல்கொடுக்கவில்லை…

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு – இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத் தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம்.

எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.

புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து, அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2006

Posted on

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2006.

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது இனம் சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சிநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.

தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.

மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டே மனிதகுலம் விடுதலை வேண்டி வீறுடன் போராடி வருகிறது. வீறுகொண்டெரியும் இந்தப் போராட்டங்களை அடக்கியொடுக்க ஆக்கிரமிப்பாளர்களும் அடக்குமுறையாளர்களும் காலங்காலமாகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டுவருகிறார்கள். முதலிற் போர் அரக்கனை ஏவுவதும் அது முடியாதுபோக, போராடும் இனங்களின் விடுதலைப் பாதையைத் திசைதிருப்பி, அவர்கள் போகும் வழிகளெல்லாம் பொறிகள் வைத்து, சமாதானச் சதிவலைக்குள் சிக்கவைத்து, காலத்தால் மோசம் செய்து, சமாதான மாயைக்குள் தள்ளிவிட்டு, அமைதியாக அழித்தொழிப்பதுவும் வரலாற்றிலே நீண்ட நெடுங்காலமாக நடந்துவருகிறன. இந்த உத்தியை எமது சுதந்திர இயக்கத்திற்கெதிராகவும் செயற்படுத்திவிடலாம் எனச் சிங்கள அரசு கனவுகாண்கிறது. ஆனால், இந்த ஐந்து ஆண்டுக்கால அமைதி முயற்சியில் இந்த அக்கினிப் பரீட்சையில் நாம் எரிந்துபோய்விடவில்லை அழிந்துபோய்விடவுமில்லை. மாறாக, நாம் இந்த வேள்வித்தீயிற் புடம்போடப்பட்டு, புதிய புலிகளாகப் புதுப்பொலிவுடன் எழுந்துநிற்கிறோம். தமிழரின் பலமும் வளமும் ஒன்றுகுவிந்து, பலம்மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்துநிற்கிறோம். இந்த இமாலயச் சக்தியின் ஊற்றுவாய்கள் எமது மாவீரர்கள் என்பதை இந்நாளில் நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது அன்பார்ந்த மக்களே!

எமது வீரவிடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட, கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொண்டுநிற்கிறோம். வரலாற்றில் என்றுமில்லாதவாறு போரையும் பேச்சையும் சமகாலத்திலே சந்தித்துநிற்கிறோம்.

போருக்கு ஓய்வுகொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் முயற்சித்து ஆறு ஆண்டுகள் அசைந்தோடிவிட்டன. நாம் அமைதி காத்த இந்த ஆறு ஆண்டுக்காலத்தில் இந்த நீண்ட காலவிரிப்பில் தணியாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டதா?தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா? ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும் இம்சைக்கும் ஆளாகி நிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா? எம்மக்களை நாளாந்தம் அழுத்திவரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள்தானும் தீர்த்துவைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லை. மாறாக, எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கிறன. சோதனைமேற் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்கமுடியாத துயரச்சுமை தமிழர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த அமைதிக் காலம் தமிழர் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத இரத்தம் தோய்ந்த இருண்டகாலமாக மாறியிருக்கிறது.

அமைதி போதித்த உலகநாடுகள் மௌனத்திற்குள் தமது மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவலம் இன்று அரங்கேறி வருகிறது. பிரதான வழங்கற் பாதைக்கு மூடுவிழா நடாத்திய சிங்கள அரசு, தமிழரை அவர்களது சொந்த மண்ணிலேயே சிறைவைத்திருக்கிறது. எமது மக்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களது சமூக வாழ்வைத் துண்டித்து, நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவர்களைத் தடுத்துவைத்து, அவர்களது நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொடுமைப்படுத்துகிறது. தமிழரின் தாயகத்தைப் பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரமாண்டமான மனித வதைமுகாமாக மாற்றியிருக்கிறது.

இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல் என இருமுனைகளில் எமது மக்கள் மீது சிங்கள அரசு யுத்தத்தை ஏவிவிட்டிருக்கிறது. வகைதொகையற்ற கைதுகள், சிறைவைப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், காணாமற்போதல்கள், எறிகணை வீச்சுக்கள், விமானக்குண்டு வீச்சுக்கள், தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள் என எம்மக்கள் மீது இராணுவ அழுத்தம் என்றுமில்லாதவாறு இறுக்கமாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் வாழிடங்கள் இராணுவ அரண்களாலும் படைநிலைகளாலும் நிரப்பப்படுகின்றன. மறுபுறத்தில் உணவுத் தடை, மருந்துத்தடை, பொருளாதாரத்தடை, போக்குவரத்துத்தடை, மீன்பிடித்தடை என எம்மக்கள் உயிரோடு வாட்டி வதைக்கப்படுகிறார்கள்.

போர்நிறுத்தம் செய்து, சமாதானப் பேச்சுக்கள் நடாத்தி, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தபோதும் எம்மக்களுக்குச் சமாதானத்தின் பலாபலன்கள் எவையுமே கிட்டவில்லை. அவர்களது வாழ்வு இருண்டுபோய் நரகமாக மாறியிருக்கிறது. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எம்மக்களை வாட்டி வதைக்கிறது, தொடரும் போரினால் எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டுநிற்கிறார்கள். பல்லாயிரம் மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து குடிபெயர்க்கப்பட்டு, நோயும் பிணியும் பசியும் பட்டினியும் வாட்ட அகதிமுகாங்களில் அல்லற்படுகிறார்கள். எம்மக்களது உயிர்வாழ்விற்கான உணவையும் மருந்தையும் மறுத்து, பாதையைப் பூட்டி, பட்டினி போட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம்மக்களுக்குக் கருணைகாட்டி, காருண்யம் செய்து, அரசியல் உரிமைகளை வழங்கிவிடும் என யாரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமே அன்றி வேறொன்றுமன்று.

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவியலும் அதனால் எழுந்த புதிய உலகப் பார்வையும் மனிதனை ஒரு புதிய யுகத்திற்கு இன்று இட்டுச்செல்கிறன. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, காலமாற்றத்திற்கு ஏற்ப, சமூகப் பண்பாட்டுப் புறநிலைகளுக்கு ஏற்பச் சிந்தனை உலகமும் மாற்றங்களைச் சந்திக்கிறது. ஆனால், சிங்களத் தேசத்திலே அதன் சிந்தனை உலகிலும் சரி, அதன் சமூக உலகிலும் சரி எதுவித மாற்றமும் நிகழவில்லை. சிங்களத் தேசம் புதிய காற்றைச் சுவாசித்து, புதிதாகச் சிந்திக்க மறுக்கிறது.

பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளாற் சிங்கள இனம் வழிதவறிச்சென்று தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்துகிடக்கிறது. இதனால், சிங்களப் பௌத்தப் பேரினவாதம் இன்றொரு தேசியச் சித்தாந்தமாகச் சிங்களத் தேசத்தில் மேலாதிக்கம் செலுத்திவருகிறது. இந்தக் கருத்தாதிக்கம் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களிலிருந்து பத்திரிகைத்துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ புத்திஜீவிகளோ எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்கமுடியாதவாறு சிங்கள மூளையத்தை இந்தக் கருத்தாதிக்கம் சிறைப்பிடித்துவைத்திருக்கிறது. பௌத்தப் பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மனவமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாகப் பொறித்துவிடப்பட்டிருக்கிறன. இதனால், சிங்களத் தேசம் போர்வெறிபிடித்துச் சன்னதமாடுகிறது போர்முரசு கொட்டுகிறது.

தமிழரின் தேசியப் பிரச்சினையை நாகரீகமாக அமைதி வழியில் தீர்க்க அது முயற்சிக்கவில்லை. உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தித் தமிழரைப் பட்டினிபோட்டு அழித்தொழிக்கவே அது விரும்புகிறது. வன்முறைகளைத் தூண்டி, போரைத் தீவிரப்படுத்தி, தமிழரை அடிமைகொண்டு ஆழவே அது கங்கணங்கட்டி நிற்கிறது. காலியில் தமிழர் தாக்கப்பட்டமையும் இதனையே எடுத்துக்காட்டுகிறது. எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. வன்முறைப் பாதையையும் விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதான வழிமுறை தழுவி, அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதுமில்லை. இதனால்தான் திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு தடவைகள் பல்வேறு காலகட்டங்களிற் பல்வேறு நாடுகளிற் பேச்சுக்களை நடாத்தியிருக்கிறோம். நோர்வேயின் அனுசரணையோடும் சர்வதேசச் சமூகத்தின் ஆசீர்வாதத்தோடும் உலக நாடுகளின் தலைநகரங்களில் நடந்துவரும் தற்போதைய சமாதான முயற்சி அடிப்படையில் வித்தியாசமானது.

இற்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவராக இருந்த திரு. எரிக் சொல்கெய்ம் ஐப்பசி 31, 2000 ஆம் ஆண்டு வன்னிக்கு அமைதிப் பயணம் மேற்கொண்டு எம்மைச் சந்தித்ததோடு இந்தச் சமாதானப் பயணம் ஆரம்பமாகியது. இது வித்தியாசமான காலத்தில் வித்தியாசமான வரலாற்றுச்சூழலில் வித்தியாசமான வடிவத்தில் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது. அமைதிக்கான முன்னெடுப்புக்கள் ஒருபுறமாகவும் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப் போர்நடவடிக்கை மறுபுறமுமாகவும் இரு தளங்களிலே நகர்கிறது. தமிழரின் குருதியைக் குடித்து, தமிழரின் எண்ணற்ற உயிர்களைக் காவுகொண்டு, காலத்தால் உப்பிப்பெருத்து வெடிப்பதற்குத் தயாராகத் தருணம் பார்த்து நிற்கிறது.

நாம் அமைதி காத்த ஆறு ஆண்டுக் காலத்திலே சமாதான நடவடிக்கைகளில் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டோம். சமாதானத்திற்கான முன்னெடுப்புக்களையும் முன்முயற்சிகளையும் நாமே முதலில் மேற்கொண்டோம். முதன்முதலாகப் போர்நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தி, நம்பிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு ஆக்கபூர்வமான நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு சமாதானத்திற்கான உறுதியான அத்திவாரத்தை அமைத்தோம். பேச்சுக்களில் நியாயமற்ற நிபந்தனைகளையோ நிர்ப்பந்தங்களையோ போடாது வரம்புகளையோ வரையறைகளையோ விதிக்காது காலக்கட்டுப்பாடுகளைத் திணிக்காது அமைதி முயற்சிகளை முன்னெடுத்தோம். இவற்றை நாம் பலவீனமான நிலையில் நின்று மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பையும் இயக்கச்சி- ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளத்தையும் மீட்டெடுத்தோம். சிங்கள இராணுவத்தின் “அக்கினிகீல” முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தோம். உலகின் போரியல் வரலாற்றில் மகத்தான சாதனைகளைப் புரிந்து, இராணுவ மேல்நிலையில் நின்றுகொண்டே இத்தனையையும் மேற்கொண்டோம்.

தென்னிலங்கையிலோ நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. தோல்வி மேல் தோல்வியைப் பெற்று, போரிடும் மனோநிலை குலைந்து, இராணுவத்தின் முதுகெலும்பு உடைந்து, நாட்டின் பொருளாதாரம் படுத்துத் தள்ளாடிய நிலையிலேயே சிங்களத் தேசம் சமாதானப் பேச்சிற்குச் சம்மதித்தது. இந்தச் சமாதான முயற்சி ஆரம்பித்ததிலிருந்து இற்றைவரையான ஐந்து ஆண்டுக் காலத்தில் ரணில், சந்திரிகா, மகிந்த என மூன்று அரசுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் ஆட்சிகள் மாறமாற சமாதான முயற்சிகளும் ஒரு சிறையிலிருந்து மீட்கப்பட்டு இன்னொரு சிறைக்குள் தள்ளப்பட்டன. சமாதானப் புறாவும் கூடுவிட்டுக் கூடுதாவியதே தவிர அதனால் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்கமுடியவில்லை. கூட்டுப்பறவையாகிக் கூட்டுக்குள்ளேயே குத்தப்பட்டு இன்று குற்றுயிராகக் கிடக்கிறது.

முதலில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டு ஆறு மாதங்கள் அமைதிப் பேச்சு நடாத்தினோம். கடந்த அரசுகளைப் போலவே ரணில் அரசும் வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது, ஏற்றுக்கொண்ட ஒப்பந்த விதிகளையும் கடப்பாடுகளையும் செயற்படுத்தாது காலத்தை இழுத்தடித்தது. ஒப்பந்த விதிகளுக்கமைய மக்களது வாழிடங்கள், வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து தமது படைகளை விலக்கிக்கொள்ளாது, அவற்றை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி, மக்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்புவதற்கு நிரந்தரமாகத் தடைபோட்டது. போர் நெருக்கடியைத் தணித்து, இயல்புநிலையை ஏற்படுத்துவதற்கான உபகுழுவும் முழுமையாகச் செயலிழந்தது. இதேபோன்று எம்மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட உபகுழுவும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளாற் செயலிழந்து செத்துப்போனது.

எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மறுத்த ரணில் அரசாங்கம் எமது விடுதலை இயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி, ஓரம்கட்டுகின்ற வேலையையும் இரகசியமாக மேற்கொண்டது. தமிழர் தாயகத்தில் ஒரு முறையான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னரே உதவி வழங்கும் நாடுகளின் மாநாடுகளைக் கூட்டி, உதவிப் பணத்தைப் பெற்று, தென்னிலங்கையைக் கட்டியெழுப்பவும் திட்டம்போட்டது. இலங்கைக்கு உதவி வழங்குவதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட வா~pங்ரன் மாநாட்டில் நாம் பங்குபற்றுவதற்கான வழிவகைகளைச் செய்யாது எம்மை உலக நாடுகளின் மத்தியில் அந்நியப்படுத்தி, அவமானப்படுத்தியது. இதனால், ரோக்கியோ மாநாட்டை நாம் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இத்தோடு நின்றுவிடாது, சில உலக நாடுகளின் உதவியோடு எமக்கு எதிரான பாதுகாப்பு வலையைக் கட்டியெழுப்பி, அதற்குள் எமது சுதந்திர இயக்கத்தைச் சிக்கவைத்து அழித்தொழிக்கவும் ரணில் அரசாங்கம் சதித்திட்டம் தீட்டிச்செயற்பட்டது.

இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை நாம் முன்வைத்தபோது தென்னிலங்கையிலே அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தது. எமது வரைபின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க மறுத்ததோடு ஒட்டுக்குழுக்களை அரங்கேற்றி புதிய வடிவிற் புலிகளுக்கு எதிரான நிழற்போரை அவர் தீவிரப்படுத்தினார். இந்த ஆயுதக்குழுக்களின் அராஜகத்தால் தமிழர் தாயகம் வன்முறைக் களமாக மாறியது. அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், போராளிகள், அப்பாவிப் பொதுமக்கள் எனப் பலரும் கொல்லப்பட்டனர். போர்நிறுத்த ஒப்பந்த விதிகளுக்கமைய அரசக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எமது போராளிகள் ஆற்றிய அரசியற்பணிகளையும் இடைநடுவில் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. இதனால், எமது மக்கள் இராணுவத்தின் பிடியில் தனித்துவிடப்பட்டார்கள். இறுதியாகச் சுனாமியாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கெனக் கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பையும் சந்திரிகா அரசு செயற்படுத்தவில்லை. முழுக்கமுழுக்க மனிதாபிமான நோக்கங்கொண்ட இந்தப் பொதுக்கட்டமைப்பை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் வரையறைகளைக் காட்டிச் சிங்களப் பேரினவாத நீதிமன்றம் நிராகரித்தது. இதனால், ஆழிப்பேரலை தாக்கிய மக்களின் வாழ்வுநிலைதான் மோசமடைந்துநிற்கிறது. இதன்மூலம் சிங்களப் பேரினவாதம் எத்துணை மோசமானது என்பதை உலகம் கண்டுகொண்டிருக்கும் என நான் நம்புகிறேன்.

இந்தச் சூழமைவில்தான் கடந்த ஆண்டு நடந்த அரசுத் தலைவர் தேர்தலிற் சிங்களத் தேசம் தமது புதிய தலைவராக மகிந்த ராஜபக்சவைத் தேர்வுசெய்தது. அவரும் கடந்தகாலச் சிங்களத் தலைமைகளைப் போன்று இராணுவப் பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலுமே நம்பிக்கைகொண்டு செயற்படுகிறார். தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வுகாணுமாறு கடந்த ஆண்டு மாவீரர் நினைவுரையில் நான் விடுத்த இறுதியான உறுதியான அவசர வேண்டுகோளையும் நிராகரித்துக் கடும்போக்கைக் கடைப்பிடித்துக் காலத்தை இழுத்தடித்து வருகிறார். புலிகளை அழிக்கும் இலக்குடன் ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கிவிட்டு, மறுபுறம் சமாதான வழித் தீர்வு பற்றிப் பேசுகிறார். போரும் சமாதானமும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை, அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்டச் சக்தியுடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமோ அந்தப் போராட்டடச் சக்தியை அந்நியப்படுத்தி அழித்துவிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது என்றுமே நடக்கப்போவதில்லை. இது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

மகிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன்மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையிற் கட்டிவிட எண்ணுகிறது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டாற் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்துபோய்க் கிடக்கிறது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மகிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியைகளையும் நடாத்தி முடித்திருக்கிறது.

மகிந்தவின் போர்த்திட்டம் தரைப்போருடன் நிற்காது வான், கடல் என மும்முனைகளிலும் நீண்டு விரிந்திருக்கிறது. இதன்மூலம் மகிந்த அரசு தமிழின அழிப்புப் போருக்கு முழுவடிவம் கொடுத்திருக்கிறது. தமிழர் தாயகமெங்கும் எறிகணைகளையும் விமானக்குண்டுகளையும் வீசி இனக்கொலை புரிகிறது. ஆயுதக்குழுக்களைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்து பெரும் கொலைக் கலாச்சாரத்தை அரங்கேற்றியிருக்கிறது. போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டு மாவிலாறையும் சம்பூரையும் ஆக்கிரமித்து நிற்கிறது. தூரநோக்குடைய எதிர்காலப் போரியல் திட்டங்களுக்கு அமைவாக மாவிலாற்றிலும் சம்பூரிலும் நாம் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலைச் சிங்களப் படைத்துறை தவறாக எடைபோட்டது. பாரிய படைக்கலச் சக்தியையும் சுடுகலச் சக்தியையும் ஒன்றுகுவித்து, தமிழரின் தாயக நிலங்களைச் சிங்கள அரசாட்சியின் கீழ்க் கொண்டுவரப் புதியபுதிய படையெடுப்புக்களை முடுக்கிவிட்டது. இதனால், தமிழர் மண் ரணகளமாக மாறியது.

இந்நிலையில்தான் நாம் சிங்களத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதென முடிவெடுத்தோம். கிளாலியிலும் முகமாலையிலும் முன்னேறிவந்த இராணுவத்தை எமது படையணிகள் மின்னல் வேகத்தில் தாக்கியழித்தன. எதிரி என்றுமில்லாதவாறு இரத்தம் சிந்தினான். எதிரி இராணுவத்திற் பெருமளவானோர் உயிரிழந்து, ஊனமடைந்தனர். சிங்களத்தின் இராணுவ இயந்திரம் ஓரிரு மணித்தியாலங்களில் வேரறுந்துவிழுந்த விருட்சமாகச் சரிந்துகிடந்தது. சிறப்புப் படையணிகள் சிதைவுற்று முகமாலையில் முன்னேற முடியாது முடக்கப்பட்டபோதும், சிங்கள அரசு தனது போர்த்திட்டத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்தும் இராணுவ வழியையே நாடிநிற்கிறது.

மகிந்தவின் அரசு தமிழ்மக்களை இன அழிப்புச் செய்கின்ற அதேநேரம் அதன் இனஅழிப்புப் போரிலிருந்து தமிழ்மக்களைக் காக்கப் புலிகள் நடாத்துகின்ற ஆயுதப் போராட்டத்தை அர்த்தமற்ற பயங்கரவாதமாகச் சித்தரித்தும் வருகிறது. தமிழரின் நீதியான போராட்டத்தைத் திரிபுபடுத்தி, இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்யான விசமப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறது. எமது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாது இலங்கை அரசின் இராஜரீக அழுத்தங்களுக்குப் பணிந்து, அதன் பொய்யான பரப்புரைகளுக்கு மசிந்து ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன. உலக அரங்கில் எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராகத் தனிமைப்படுத்தி, ஒதுக்கி, ஓரங்கட்டின.

நீதி நியாயங்களைச் சீர்தூக்கிப் பாராது, அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு பாரதூரமான எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. சிங்கள அரசோடு பேச்சுக்களில் எமக்கிருந்த சமநிலையையும் சமபங்காளி என்ற தகைமையையும் இது ஆழமாகப் பாதித்தது. விட்டுக்கொடாத கடும்போக்கைக் கைக்கொள்ளச் சிங்கள அரசை ஊக்கப்படுத்தியது. கண்காணிப்புக்குழுவைப் பலவீனப்படுத்தி, சிங்கள அரசு தனது போர்த்திட்டத்தைத் தடையின்றித் தொடர வழிவகுத்தது. அத்தோடு அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் சில உலகநாடுகள் சிங்களத்தின் இன அழிப்புப் போரைக் கண்டிக்காது ஆயுத, நிதி உதவிகளை வழங்கி, அதன் போர்த்திட்டத்திற்கு முண்டுகொடுத்து நிற்கின்றன. இப்படியான புறநிலையில்தான் மகிந்த அரசினால் தனது இராணுவப் படையெடுப்புக்களை துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தமிழர் மண்ணில் தொடரமுடிகிறது.

மகிந்த அரசாங்கம் நீதியின் அடிப்படையில், மனித தர்மத்தின் அடிப்படையிற் செயற்படவில்லை. அது பலாத்காரப் பிரயோகத்திலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கை கொண்டிருப்பதாற் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஜெனீவாவில் நடந்த இரண்டு கட்டப் பேச்சுக்களும் எதுவித பயனுமின்றி முற்றுப்பெற்றன. முதலாம் கட்டப் பேச்சுக்களில் இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் ஒன்றோடொன்று கூட்டுச்சேர்ந்து கூட்டுச்செயற்றிட்டத்தில் செயற்படுவதை ஆதாரங்களோடும் அத்தாட்சிப் பத்திரங்களோடும் புள்ளிவிபரச் சான்றுகளோடும் சம்பவக் கோவைகளோடும் பேச்சு மேசையிலே முன்வைத்தோம். அவற்றை மறுக்கவோ மாற்றுக் காரணங்களைக் கூறவோ முடியாத இக்கட்டில், ஒட்டுக்குழுக்களைத் தமிழர் தாயகத்திலிருந்து அகற்றி, போர்நிறுத்தத்தைச் செம்மையாக அமுற்படுத்துவதாக அரசு ஒப்புதலளித்தது. அந்தப் பேச்சுக்களின் பின்னர், அரச வன்முறையும் அரசப் பயங்கரவாதமும் புதிய வேகத்தோடு – புதிய வீச்சோடு தமிழர் தாயகத்தைச் சுட்டெரித்ததே தவிர வேறெதுவும் நடக்கவில்லை.

இதேபோன்றுதான் ஜெனீவாவில் நடந்த இரண்டாம் கட்டப் பேச்சுக்களும் முற்றுமுழுதாகத் தோல்வியில் முடிந்தன. எமது மக்கள் அனுபவித்து வருகின்ற மாபெரும் மனிதாபிமானப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்திப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமைவாக யாழ்.-கண்டி நெடுஞ்சாலையை மீளத்திறந்து கண்காணிப்புக்குழுவை முழுமையாகச் செயற்படவிடுமாறு நாம் அரசைக் கோரினோம். எமது மக்களது மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மேலாகத் தனது இராணுவ நலன்களை முன்னிலைப்படுத்தி எமது இரு கோரிக்கைகளையும் அரசு அடியோடு நிராகரித்தது. இயற்கையாக ஏற்பட்ட பேரவலத்திற்கே இரங்க மறுத்து, பொதுக்கட்டமைப்பை நிராகரித்த சிங்களத் தேசம் தானே செயற்கையாகத் திட்டமிட்டு உருவாக்கிய மனிதப் பேரவலத்திற்குக் கருணைகாட்டி ஒருபோதும் நியாயம் செய்யப்போவதில்லை.

புலிகளுக்கு எதிராக ஒரு பொய்யான நீண்ட குற்றப்பத்திரிகையை வாசித்து, பேச்சு மேசையை விவாத மேடையாக்கி, போர்க்களமாக மாற்றிய அரசப் பேச்சுக்குழுத் தலைவரும், போரும் செய்வோம் பேச்சும் நடத்துவோம் எனக் குதர்க்கம் பேசும் அரசப் பேச்சாளர்களும் இருக்கும் வரை பேச்சுக்கள் எப்படி ஆக்கபூர்வமாக முன்னகரும்? எப்படி நல்லெண்ணமும் நம்பிக்கையும் பிறக்கும்? எப்படிச் சமாதானம் வரும்?

மகிந்த உள்நாட்டில் தமிழின அழிப்புப் போரை நடாத்திக்கொண்டு, உலக நாடுகளுக்கு சமாதானம் விரும்பும் ஓர் அமைதிப் புறாவாகத் தன்னை இனங்காட்ட முனைகிறார். தனது ஏமாற்று நாடகத்திற்குத் பக்கத்துணையாக அனைத்துக்கட்சி மாநாட்டை கூட்டியிருக்கிறார். எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடாது, தட்டிக்கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிசனையோ ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவையோ அமைத்து, சர்வகட்சி மாநாட்டையோ ஒரு வட்டமேசை மாநாட்டையோ நடத்தி அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியற் பாரம்பரியம். இதனைத்தான் மகிந்தவும் செய்கிறார். பற்றியெரியும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வுகாணுமாறு நாம் வழங்கிய வாய்ப்புக்களையும் உதாசீனம் செய்து உதறித்தள்ளிவிட்டு, இந்த அனைத்துக்கட்சி மாநாட்டிற்குள் மகிந்த பதுங்கிக்கிடக்கிறார். அந்த அனைத்துக்கட்சிக் குழுவும் கடந்த பத்து மாதக் காலமாக இருட்டுக்குள் கறுப்புப் பூனையைத் தேடியலைபவன்போலத் தமிழர் பிரச்சினையைத் தேடியலைந்து கொண்டிருக்கிறது.

அனைத்துக்கட்சி மாநாடு பிசுபிசுத்துப்போக, மகிந்த உலகத்தை ஏமாற்ற மீளவும் ஒரு புதிய துருப்புச்சீட்டை கையில் எடுத்திருக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதானச் சிங்களக் கட்சிகளும் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க மேற்கொண்ட முயற்சிகளைப் புறநோக்காக ஆராய்ந்து பார்த்தால், இன்று தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இரு கட்சி இணக்கப்பாடு என்பது உலகத்தை ஏமாற்றுவதற்கான வெறும் கண்கட்டுவித்தையே தவிர வேறன்று என்பது புலப்படும். தென்னிலங்கையின் அரசியலை ஆட்டிப்படைத்துவரும் இரு பிரதானச் சிங்களக் கட்சிகளும் சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே. இவை சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சகதிக்குள்ளிருந்து பிறப்பெடுத்த இரு பெரும் பூதங்கள். ஒன்றோடொன்று போட்டிபோட்டு, பலப்பரீட்சை நடாத்தி, தமிழரின் உரிமையைப் பறித்து, தமிழரைக் கொன்றுகுவித்து, கொடுமை இழைத்துவருபவையும் இந்த இரு கட்சிகளும்தான். எதிரும் புதிருமாக நின்று, இனக்கொலை புரிந்த இரு கட்சிகளும் இன்று ஒன்றாகக்கூடி, ஒன்றுக்கொன்று சேவகம் செய்து, அதிகாரக் கூட்டமைத்திருப்பது தமிழரை அழித்தொழிப்பதற்கேயன்றி வேறொன்றிற்குமன்று.

அமைதித் தீர்வுகாணுமாறு நெருக்கும் சர்வதேச அழுத்தம் ஒருபுறமும் சரிந்துசெல்லும் பொருளாதாரம் மறுபுறமும் பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு அரசியல் இன்னொரு புறமுமாக பல்வேறு தளங்களில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துநிற்கும் மகிந்த, இந்த நெருக்கடிகளிலிருந்து தன்னைத் தற்காலிகமாக விடுவித்துக்கொள்வதற்காக அமைத்த சந்தர்ப்பவாதக்கூட்டே இந்த இருகட்சி இணக்கப்பாடு. மற்றும்படி இதிற் புனிதமான நோக்கம் எதுவும் கிடையாது. சிங்களப் பௌத்தப் பேரினவாதத்திற்கு மண்டியிட்டுக்கிடந்து, அதன் தாளங்களுக்குப் பொம்மலாட்டம் போடும் இந்த இரு கட்சிகளும் ஒருபோதும் தமிழர் பிரச்சினைக்கு நீதியான தீர்வை முன்வைக்கப்போவதில்லை. அனைத்துக்கட்சி மாநாட்டைச் சாகாது வைத்திருப்பதிலும் தமிழருக்கெதிரான இனஅழிப்புப் போரைத் தொடர்வதிலுமே மகிந்த அக்கறை காட்டுவார்.

எனது அன்பான மக்களே,

நோர்வேயின் அனுசரணையுடன் அமைதிப் பயணம் ஆரம்பமாகி, இன்று நீண்டகாலம் ஆகிவிட்டது. நீண்டு செல்கின்ற இந்தக் கால விரிப்பில் போரை நிறுத்தி, வன்முறைகளைத் துறந்து, எம்மால் முடிந்தளவிற்கு நாம் சமாதான முன்னெடுப்புக்களைச் செய்திருக்கிறோம். சமாதானச் சூழ்நிலைக்கும் சமரசத் தீர்விற்கும் எம்மால் இயன்றளவு முயற்சித்திருக்கிறோம். சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியைத் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறோம். போதுமான அளவிற்குமேல் பொறுமைகாத்திருக்கிறோம். அமைதிவழித் தீர்விற்கு எண்ணற்ற வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறோம். அரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய இடைவெளியைக் காட்டியிருக்கிறோம். நிலவதிர்வுப் பேரலைகள் தாக்கியபோது ஒரு தடவையும் மகிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, சமாதானத்திற்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இதனை உலகம் நன்கு அறியும்.

கடந்த ஆண்டு எனது மாவீரர் நாளுரையில் எமது மக்களது அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் ஒரு நீதியான தீர்வை வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத்திற்குள் முன்வைக்குமாறு இறுதியாகவும் உறுதியாகவும் ஜனாதிபதி மகிந்தவை நான் கோரியிருந்தேன். அந்த அவசர வேண்டுகோளை நிராகரித்துப் புறமொதுக்கிவிட்டு, கடந்தகாலச் சிங்களத் தலைமைகள் போன்று மகிந்தவும் தமிழின அழிப்புப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருக்கிறார்.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும் தமிழருக்கு நீதிகிடைக்கப்போவதில்லை என்பதும் இன்று தெட்டத்தெளிவாகியிருக்கிறது. எனவே, நடக்கமுடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.

தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.

எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து, சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென றுதியெடுத்துக்கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005

Posted on

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2005.

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.

சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.

எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது மாவீரன், எனது பிரியமான தோழன் சத்தியநாதன் எனது மடியில் உயிர்நீத்து இன்றுடன் இருபத்துமூன்று ஆண்டுகளாகக் காலநதி ஓடிவிட்டது. இந்தக் கால நீட்சியிற் கட்டவிழ்ந்த போராட்ட வரலாற்றில் பதினேளாயிரத்துத் தொள்ளாயிரத்து மூன்று (17,903) மாவீரர் தேச விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பெருந்தொகைப் போராளிகளைவிடப் பலமடங்கு தொகையில் பொதுமக்களும் எதிரியாற் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்தத்தில் எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த உயிர்ப்பலி மிகப் பெரியது. அளப்பரியது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சிங்களத் தேசம் மட்டுமன்றிச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து கொள்ளாதது எமக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது.

அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப்போவதில்லை. இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்ந்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத் தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது.

தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை. இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.

சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து, எமது உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டும் என உறுதிபூண்டிருந்தபோதும் தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாகச் சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்ற நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். பிரதேச வல்லரசான இந்தியாவின் தலையீடு ஒரு கால கட்டத்திலும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் இன்னொரு கட்டத்திலுமாகச் சமாதான முயற்சிகளில் எம்மை ஈடுபடச் செய்தன. அத்தோடு பேச்சுக்களில் நாம் பங்குபற்றியதற்கு வேறு காரணங்களும் இருக்கவே செய்தன.

தமிழீழ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எமது அமைப்புக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தை ஒரு சாதனமாக அமைந்தது. அதுமட்டுமன்றி, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்தி, சர்வதேசச் சமூகத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கும் இது அவசியமாக இருந்தது.

அடுத்ததாக நாம் ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட போர் வெறியர் அல்லர் என்பதையும் சமாதான மென்முறையில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதையும் உலகுக்கு உணர்த்திக் காட்டவேண்டிய தேவையும் எழுந்தது. இறுதியாக, எல்லாவற்றிலும் முக்கியமாகத் தமிழீழ மக்களின் அடிப்படையான அரசியற் கோரிக்கைகளை ஏற்று ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள இனவாத ஆட்சியாளர் முன்வைக்கப் போவதில்லை என்ற உண்மையைச் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவதும் எமது நோக்கமாக இருந்தது. இப்படியான குறிக்கோள்களுடனேயே நாம் பேச்சுக்களிற் பங்குகொண்டோம்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தொடரும் எமது தேச விடுதலைப் போராட்டத்தில், வௌவேறு கால கட்டங்களில், வௌவேறு வரலாற்றுச் சூழ்நிலைகளில், நாம் போருக்கு ஓய்வு கொடுத்துச் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றினோம். எதிரியானவன் கபட நோக்கும் வஞ்சக நெஞ்சும் கொண்டவன் என்பது எமக்குத் தெரியும். அத்தோடு சமரசப் பேச்சுக்களால் பயன் எதுவும் கிட்டப் போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும்.

சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி என்பதையும் நாம் நன்கு அறிவோம். இத்தனையையும் தெரிந்தும் நாம் நேர்மையுடனும் நேரிய நோக்குடனும் சமாதானப் பாதையில் பயணித்தோம்.

ஆயினும் நாம் மிகவும் விழிப்புடனும் விவேகத்துடனும் செயற்பட்டோம். சமாதானப் பயணத்தின் போது – சமரசப் பேச்சுக்களின் போது சிக்கலான பல சவால்களையும் நெருக்குவாரங்களையும் நாம் எதிர்நோக்க நேரிட்டது. எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையிற் பொறிகள் வைக்கப்பட்டன.

சதிவலைகள் பின்னப்பட்டன. ஆனால் நாம் நிலைமையைப் புரிந்து சாதுரியமாகக் காய்களை நகர்த்தியதால் பொறிகளுக்குள் மாட்டிக் கொள்ளவுமில்லை சதிவலைப் பின்னல்களுக்குட் சிக்கிவிடவுமில்லை. சிங்கள ஆட்சியாளரும் அவர்களுக்கு முண்டுகொடுத்து நின்ற வல்லரசுகளும் எமது விடுதலைப் போராட்டத்திற்கும் எமது மக்களின் நலனுக்கும் விரோதமாகச் செயற்பட எத்தனித்த போதெல்லாம் எமது இயக்கம் அம்முயற்சிகளை வன்மையாக எதிர்த்து நின்றது.

இந்தியத் தலையீடு நிகழ்ந்த காலத்தில், எமது மக்களின் நலனுக்கும் எமது தேசச் சுதந்திரப் போராட்டத்திற்கும் அச்சுறுத்தல் எழுந்தபோது இந்திய வல்லரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் எதிர்த்துப் போராடவும் நாம் துணிந்தோம் என்பதை எமது மக்கள் அறிவார்கள்.

எமது விடுதலை இயக்கம், திம்புவில் தொடங்கிப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு சமாதான முயற்சிகளிற் பங்குபற்றியபோதும் இம்முறையே எமது போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு நீண்ட கால இடைவெளியை – கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால இடைவெளியைச் சமாதானத்திற்கு நாம் அர்ப்பணித்தோம். இந்த நீண்ட கால விசாலத்தில் எமது மக்களின் பிரச்சினைகளுக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் அயராது மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே அர்த்தமற்றுப்போயின.

இம்முறை நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்கள் சாராம்சத்தில் வித்தியாசமானவை, முக்கியத்துவமானவை. மூன்றாம் தரப்பு உலக நாடொன்றின் அனுசரணையில், சர்வதேசச் சமூகத்தின் கண்காணிப்பில் இந்தப் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முதலில் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடனும் பின்னர் சந்திரிகாவின் ஆட்சிபீடத்துடனும் நிகழ்ந்த பேச்சுக்களின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள், உடன்பாடுகள் எவையுமே செயல்வடிவம் பெறவில்லை. நாம் பொறுமையின் எல்லையைக் கடந்து சகிப்புத்தன்மையின் சிகரம்வரை சென்றோம். எத்தனையோ விடயங்களில் விட்டுக்கொடுத்து, சகல வாய்ப்புக்களையும் நாம் வழங்கியபோதும் சிங்களப் பேரினவாத ஆட்சிப்பீடங்கள் எமது மக்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டன.

2001ஆம் ஆண்டு, டிசம்பர் 24 ஆம் நாளன்று, நாமாகவே தன்னிச்சையாகப் போரை நிறுத்திச் சமாதானக் கதவுகளைத் திறந்துவிட்டோம். வன்னி மாநிலத்தை மீட்டெடுத்து, ஆனையிறவுப் படைத் தளத்தை துவம்சம் செய்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாக நிலைநிறுத்தி, பலத்தின் அத்திவாரத்தில் நின்றவாறே சிங்களத் தேசத்திற்கு நாம் நேசக் கரம் நீட்டினோம். நோர்வே அரசு நடுநிலை வகிக்க ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடன் உலகத் தலைநகர்களில் நிகழ்ந்த பேச்சுக்கள் பற்றி நான் இங்கு விபரித்துக்கூறத் தேவையில்லை.

எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளையுங்கூட ரணிலின் ஆட்சிபீடத்தால் தீர்த்துவைக்க முடியவில்லை. ரணிலின் அரசாங்கமானது பேச்சுக்களை இழுத்தடித்துக் காலத்தைக் கடத்தியதோடு, உலக வல்லரசு நாடுகளுடன் இரகசியக் கூட்டுச் சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் ஒரு சூழ்ச்சிகரச் சதிவலையைப் பின்னுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இந்தச் சதித்திட்டத்தின் ஒரு முக்கிய ஏற்பாடாகவே 2003ஆம் ஆண்டு, ஜுன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேறவிருந்தது. இதனை அறிந்து கொண்ட நாம் டோக்கியோ மாநாட்டைப் பகிஸ்கரித்ததுடன் பேச்சுக்களிலிருந்தும் விலகிக் கொண்டோம்.

சமாதான முயற்சியில் எதையுமே சாதிக்காது ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, சமாதானத்திற்கு விரோதமான இனவாத சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்து புதிய அரசை அமைத்தார் சந்திரிகா. நாம் ஏற்கெனவே முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம்பற்றிப் பேசுவதற்கு எமது இயக்கம் இணக்கம் தெரிவித்தபோதும் சந்திரிகா அதற்கு இணங்காது காலத்தை இழுத்தடித்தார்.

இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, அரசியல் வெறுமைக்குட் காலம் ஓடியது. இந்த அரசியற் சூனியத்திற்குள், இந்த நிச்சயமற்ற வெறுமைக்குள் எம்மைச் சிக்கவைத்து, எமது விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பி மழுங்கடிப்பதே சிங்கள ஆட்சியாளரின் வஞ்சக நோக்கம் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். இனித் தொடர்ந்தும் சமாதான மாயைக்குள் செயலற்று இருப்பது அபத்தம் என எண்ணிய நாம் எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம். அதற்கான செய்திட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்த வேளையிலேயே, அதாவது சென்ற ஆண்டுக் கடைசியில், இயற்கையின் அந்தக் கோரத்தாண்டவம் நிகழ்ந்தது.

திடீரென எவருமே எதிர்பாராத் தருணத்தில் இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. எமது தாயகப் பூமியின் கிழக்குக் கரையோரக் கிராமங்கள், குடியிருப்புகள் மீது சுனாமிப் பேரலைகள் தாக்கி என்றுமில்லாத பேரழிவுகளை ஏற்படுத்தின. இயற்கையின் இரக்கமற்ற இந்த ஊழிக் கூத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருபதினாயிரம் பேர் கொன்றொழிக்கப்பட்டனர். மூன்று லட்சம் பேர்வரை வீடுகள், சொத்துக்களை இழந்து அகதிகளாக அல்லற்பட்டனர். ஏற்கெனவே யுத்தத்தினாற் சிதைந்து போயிருந்த தமிழர் தேசம்மீது இன்னொரு பேரழிவு ஏற்பட்டதால், சுமக்க முடியாத துன்பப் பளுவைச் சுமக்க எமது மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

உடனடியாகவே இப்பேரவலத்திற்கு முகங்கொடுக்க எமது விடுதலை இயக்கம் முடிவெடுத்தது. எமது இயக்கத்தின் படைத்துறைப் பிரிவுகளும் மற்றும் நிர்வாக, சமூக சேவைக் கட்டமைப்புகளும் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான, நிவாரணப் பணியில் ஈடுபட்டன.

ஆழிப்பேரலை அனர்த்தம் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டதால், பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்திற்கெனப் பெரும் தொகையில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வந்தன. அதேசமயம், எமது விடுதலை இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து, ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குச் சந்திரிகா அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.

பேரவலத்திற்கு ஆளாகி நிற்கும் தமிழ் பேசும் மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை அன்று எமக்கு எழுந்தது. இதனால் சந்திரிகா அரசாங்கத்துடன் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் பெற்றுக்கொடுக்க முடிவெடுத்தோம்.

நோர்வேயின் அனுசரணையுடன் இரு தரப்புச் சமாதானச் செயலகங்கள் மட்டத்திற் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முடிவின்றி, நீண்ட காலத்திற்கு இப்பேச்சுக்கள் இழுபட்டுச் செல்வதை நாம் விரும்பவில்லை. ஆகையால் நாம் மென்போக்கைக் கடைப்பிடித்து, சில முக்கிய விடயங்களில் நெகிழ்ந்து கொடுத்து, ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நிறுவுவதற்கு இணங்கினோம். இதற்கான உடன்பாடும் கைச்சாத்தாகியது.

சிறீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து உருவாக்கிய இந்த நிவாரணக் கட்டமைப்புக்கு அனைத்துலக நாடுகளும் தமது நல்லாதரவை வழங்கின. முரண்பட்டு நின்ற இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படும் நல்லெண்ணச் சூழ்நிலை பிறந்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தன. ஆயினும் இந்த நல்லெண்ணச் சூழ்நிலை உருவாகுவதையோ, தமிழருக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதையோ சிங்கள – பௌத்த இனவாதச் சக்திகளாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது.

சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது. சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி சந்திரிகாவினாற்கூட, சிங்கள இனவாதச் சக்திகளை மீறித் தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணத் திட்டத்தைத்தானும் நிறைவுசெய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்புக்கே தென்னிலங்கையில் இத்தகைய எதிர்ப்பு என்றால் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி அதிகாரமுடைய ஆட்சியமைப்பைச் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேசிப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவு. கடந்த நான்கு ஆண்டுகாலச் சமாதான முயற்சியின் பயனாக நாம் பட்டுணர்ந்துகொண்ட மெய்யுண்மை இது. இந்தச் சமாதான நாடகத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த உலக நாடுகளுக்கும் இந்த உண்மை தெளிவாகியிருக்கும் என்றே நாம் நம்புகிறோம்.

எனது அன்பான மக்களே,

சிங்கள ஆட்சியாளரின் நயவஞ்சக அரசியலுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக இன்னொரு பாரதூரமான விடயத்தையும் நான் இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். சமாதானத்தின் திரைக்குப் பின்னால், மறைமுகமாக, எமது இயக்கத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் ஓர் இரகசிய யுத்தம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எமது விடுதலை இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, எமது போராட்டத்திற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்குடன் இந்த நாசகார நிழல் யுத்தம் ஏவிவிடப்பட்டது.

எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய போராளிகள், ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என்ற வகையில் பெருந்தொகையானோர் மிகவும் கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இந்த நிழல் யுத்தத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது எமக்கு நன்கு தெரியும். இராணுவப் புலனாய்வுத் துறையின் வழிநடத்தலில் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றபோதும் இதன் பின்புலத்திற் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் அரூப கரங்கள் செயற்படுவதையும் நாம் அறிவோம்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அரச படையினரின் பாதுகாப்புக் கவசத்துடன் ஒட்டுப் படைகளான தமிழ் ஆயுதக் குழுக்களை கருவிகளாகக் கொண்டு இந்த மறைமுக யுத்தம் நடத்தப்படுகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுதபாணிகளாக நின்று அரசியற் பணிகளில் ஈடுபட்ட எமது போராளிகள் கொலை செய்யப்படுவதையும், எமது அரசியற் செயலகங்கள் தாக்கியழிக்கப்படுவதையும் நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால், சிங்கள அரசு எமது ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தவில்லை. இதனால் இறுதியில் எமது அரசியற் போராளிகளை எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மீள அழைக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

போருக்கு ஓய்வு கொடுத்ததால் உருவாகிய சமாதானச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஒரு வித்தியாசமான மென் தீவிர யுத்தம் எம்மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. போர்நிறுத்த விதிகளுக்கு அமையத் தமிழ்க் கூலிப் படைகளின் ஆயுதங்களைக் களைய வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு. இந்த முக்கிய கடப்பாட்டை நிறைவுசெய்யத் தவறிய சிங்கள அரசு, இந்த ஆயுதக் குழுக்களையே கருவிகளாகப் பயன்படுத்தி எமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக வன்முறையை ஏவிவிட்டிருப்பது ஒரு பாரதூரமான போர்க் குற்றமாகும். ஒரு கையால் அரவணைப்பது போல நடித்து மறுகையாற் குத்தும் நம்பிக்கைத் துரோகச் செயலிது.

சமாதான முயற்சியிலும் சமரசத் தீர்விலும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு உண்மையான ஆர்வமும் அக்கறையும் இருக்கவில்லை என்பதையே இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது. இராணுவ அணுகுமுறையை இவர்கள் இன்னும் கைவிட்டதாகத் தெரியவில்லை. சமாதானச் சூழலிலும் ஒரு புதிய வடிவிற் போரை உருமாற்றம் செய்து இராணுவப் பயங்கரவாதத்தைத் தொடர்கிறது சிங்கள அரசு. இந்த நிழல் யுத்தத்தின் நிஜ வடிவத்தையும் அதன் அசிங்கமான முகத்தையும் அந்தரங்க நோக்கத்தையும் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும் என நாம் நம்புகிறோம்.

சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன. சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேசச் சதிவலைப் பின்னல் – இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையிற் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது.

நிலையான அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் பெற்றுத்தராத சமாதானத்தில், வாழ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தை அகற்ற முடியாத போர்நிறுத்தத்தில், தீராது தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடித்தராத பேச்சுக்களில், எமது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

நிலையற்ற வாழ்வையும், நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது மக்கள் பொறுத்துக்கொள்ளத் தயாராகவில்லை. பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்த தமிழ் மக்களின் பொங்குணர்வாகவே அவர்களது அரசியல் அபிலாசைகளின் ஆவேச வெளிப்பாடாகவே தமிழீழத் தாயகமெங்கும் வெகுசனப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சமீப காலமாக, தமிழ் மாவட்டங்கள் தோறும் மாறி, மாறி அரங்கேறிவரும் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிற் சமுத்திரமாக மக்கள் திரண்டெழுந்து உரிமை முழக்கம் செய்து வருகிறார்கள்.

சுயநிர்ணய உரிமைகோரி, தம்மைத் தாமே ஆட்சிபுரியும் அரசியற் சுதந்திரங்கோரி, தமிழீழ மக்கள் எழுப்பும் உரிமைக் குரலானது உலக மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது. ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட தேசமாக அணிதிரண்டு நிற்கும் தமிழினத்தின் உரிமைக் குரலைச் சர்வதேசச் சமூகம் இனியும் அசட்டை செய்யமுடியாது. தமது அரசியல் தகைமையைத் தாமாகவே நிர்ணயித்துக்கொள்ள எமது மக்கள் விரும்புகிறார்கள். காலங்காலமாக அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய ஒரு தேசிய மக்கள் சமுதாயம் என்ற ரீதியில், தமது அரசியல் அபிலாசைகளைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அறைகூவலாகும்.

எமது சுயநிர்ணயப் போராட்டப் பயணத்தில் நாம் இன்று ஒரு தீர்க்கமான வரலாற்றுத் திருப்புமுனையை அடைந்துள்ளோம். தென்னிலங்கை அரசியல் அதிகார வர்க்கம் தமிழரின் சுயநிர்ணய உரிமையை என்றுமே அங்கீகரிக்கப் போவதில்லை. சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்திலும், அந்தச் சட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆட்சியமைப்பிலும் தமிழினத்தின் சுயநிர்ணயத்திற்கு என்றுமே இடமிருக்கப் போவதில்லை. நாமாகவே போராடி, எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை எமது மக்கள் இன்று உணர்ந்து விட்டார்கள். சுயநிர்ணயம் என்பதே சுயமாக, சுதந்திரமாக, மற்றவர்களின் தலையீடின்றி, எமது அரசியல் வாழ்வை நாமாகத் தீர்மானிப்பதுதான். அந்தக் காலமும் சூழலும் இப்போது கனிந்துவிட்டது.

தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர். சிறீலங்காவின் அரச அதிபர் தேர்தலில், பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காதமை இந்தப் புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்.

சிங்களத்தின் அரச அதிபரைத் தீர்மானிக்கும் வாக்குப் பலம் இருந்தபோதும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த எமது மக்கள் விரும்பவில்லை. வேட்பாளர்கள் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகவோ அவர்களது கட்சிகள், கொள்கைகள் மீதான தீர்ப்பாகவோ இதனைக் கருதுவது தவறு. ஒட்டுமொத்தமாகச் சிங்கள ஆட்சியமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான விரக்தியினதும் நம்பிக்கையீனத்தினதும் வெளிப்பாடாகவே இத்தேர்தற் புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளது. தமிழரின் அரசியற் போராட்ட வரலாற்றில் இதுவொரு பாரதூரமான திருப்பத்தை சுட்டிக்காட்டுகிறது. சிங்கள அரசியல் ஆட்சிமுறையில் நம்பிக்கையிழந்த தமிழீழ மக்கள், தனிவழி சென்று தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கத் துணிந்துவிட்டனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

சிங்களத் தேசமானது ஒரு புதிய தேசத் தலைவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்தத் தலைவனின் கீழ் ஒரு புதிய ஆட்சிபீடம் பதவி ஏறியுள்ளது. இந்த ஆட்சியமைப்பானது பிரத்தியேகமாகச் சிங்களப் பெரும்பான்மை மக்களால், அவர்களது வாக்குப் பலத்தால் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியமைப்பிற் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் பங்களிப்பு இருக்கவில்லை.

இது முற்று முழுதாகவே ஒரு சிங்களப் பௌத்த ஆட்சிபீடமாகும். இதனால் மகிந்த ராஜபக்சா இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சிங்கள – பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அரச அதிபர் மகிந்தாவின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் நாம் நன்கறிவோம். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அவரது அரசியல் தரிசனத்திற்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும் இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம். இவைபற்றி நான் இங்கு ஒப்பீட்டு மதிப்பாய்வு செய்ய விரும்பவில்லை.

சமீபத்திய அரச அதிபர் தேர்தலும் அதனை எமது மக்கள் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில், அரசியல் ரீதியாக, ஆழமான ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளன. தென்னிலங்கையில், சிங்கள – பௌத்தம் மேலாண்மை பெற்றுள்ள அதே சமயம், தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியம் நிலைப்பட்டு, பலப்பட்டு, எழுச்சிபெற்று வருகிறது. சிங்களத்தில் மகிந்த ராஜபக்சாவின் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தமிழீழத்திலும் தமிழ்த் தேசிய எழுச்சியின் திண்ணிய வடிவமாக எமது விடுதலை இயக்கத்தின் ஆட்சியமைப்பு விரிவடைந்து, வலுவடைந்து இயங்கி வருகிறது.

சிங்கள இராணுவ ஆதிக்கத்திலிருந்து எமது தாயக நிலத்தின் பெரும் பகுதியை நாம் மீட்டெடுத்து, அங்கு தன்னாட்சி அதிகாரமுள்ள ஆட்சியமைப்பை நிறுவி, அதனை நேர்த்தியாக நிர்வகித்து வருகிறோம் என்பது இன்று உலகறிந்த உண்மை. பெருந்தொகை மக்கள் வாழும் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் அதனைக் கட்டிக்காக்க பலம்பொருந்திய படைத் துறையையும் சட்டம் ஒழுங்கைப் பேணக் காவல்துறையையும் நீதித்துறையையும் அத்தோடு ஒரு நிழல் அரசாங்கத்திற்குரிய அடித்தளக் கட்டுமாணங்களையும் கொண்டதாக பிரமாண்டமான நிர்வாக அமைப்பை நாம் இயக்கி வருகிறோம்.

பெரும் தொகையான எமது மக்கள் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த போதும், உணர்வாலும் இலட்சியத்தாலும் அவர்கள் எமது விடுதலை இலட்சியத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள். இந்தக் கள யதார்த்தத்தை, அரசியல் மெய்ம்மையைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், எமது விடுதலை இயக்கத்தை ஒரு ‘பயங்கரவாதக் குழு|’என உலகத்திற்குச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துக்காட்ட முனைந்து வருகிறார்கள். இந்தப் பொய்யான பரப்புரைகளை நம்பி, உலக நாடுகள் சில எமது இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது எமக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லாதிக்க நாடுகள், ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தைப் ஷபயங்கரவாதிகள்| என ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, மறுதரப்பினரான சிறீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்தன. இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது.

அத்தோடு எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது. இந்நாடுகளின் ஒருதலைப்பட்சமான நிலைப்பாடும் குறுக்கீடும் சமாதானப் பேச்சுக்கள் முறிந்துபோவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன. பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு ஒரு தெளிவான, தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழிதழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன.

இந்தவகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடிமறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.

நோர்வே நாட்டின் அனுசரணையுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் கடந்த நான்கு ஆண்டுக் காலம்வரை இழுபட்ட சமாதான முயற்சியின்போது சிங்கள அரச தரப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள், போடப்பட்ட முட்டுக்கட்டைகள், இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாவற்றையுமே உலகம் நன்கறியும். எத்தனையோ இம்சைகள், ஆத்திரமூட்டல்கள் மத்தியிலும் நாம் பொறுமையை இழந்து, சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்பதையும் சர்வதேசச் சமூகம் அறியும். நான்கு ஆண்டுக்கால அமைதிப் பயணத்திற் சமாதானத்தின் மீதான எமது பற்றுறுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டிவிட்டோம்.

எனது அன்பான மக்களே,

எமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டிய காலத்தை நாம் நெருங்கிவிட்டோம். இந்த வரலாற்றுத் திருப்புமுனையான கட்டத்தில், எமக்கு ஒரு புதிய சவாலாக, சிங்களத் தேசத்தில் ஒரு புதிய அரச அதிபரின் தலைமையில், ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தப் புதிய அரசு எமக்கு நேசக் கரம் நீட்டுகிறது. எமது விடுதலை இயக்கத்துடன் பேசுவதற்கு விருப்பம் தெரிவிக்கிறது.

போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து அமைதி பேணப் போவதாகச் சொல்கிறது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது. எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால், சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும், தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆகவே, ஜனாதிபதி ராஜபக்சாவின் நகர்வுகளை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம்.

பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிபூணுவோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004

Posted on



தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2004

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்திற்; கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எமது வீர விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்கள் புரிந்த மகத்தான தியாகங்கள் காரணமாக ஒப்பற்ற போரியற் சாதனைகளை நாம் நிலைநாட்டினோம். உலகமே வியக்கும் வகையிற் போர் அரங்குகளில் எதிரிப் படைகளை விரட்டியடித்து வெற்றிகளை ஈட்டினோம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த எமது தாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து அங்கெல்லாம் எமது நிர்வாக ஆட்சியதிகாரத்தை நிறுவினோம். உலக நாடுகளின் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட சிறீலங்கா அரசினது ஆயுதப் படைகளுக்கு ஈடாகப் படை வலுச் சமநிலையை நிலைநாட்டினோம்.

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேசமயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறைவுபெறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலைபெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை.

தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்துவரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்பமுடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்தச் சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை.

எனது அன்பான மக்களே,

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்புநிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.

மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்த ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின. நெருக்கடி நிலையைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவித்து, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தவும் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் போரினாற் பேரழிவுக்கு ஆளான கட்டுமாணங்களைப் புனர்நிர்மாணம் செய்யவும் நிறுவப்பட்ட உப-குழுக்கள் செயலிழந்து செத்துப்போயின.

இவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வாஷிங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம். இப்படியான புறநிலையிற்றான் பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த எமது இயக்கம் முடிவெடுத்தது.

எமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தவே நாம் இந்த முடிவை எடுத்தோம். பேச்சுக்களை ஒரேயடியாக முறித்து, சமாதான முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட நாம் விரும்பவில்லை. பேச்சுக்களை இடைநிறுத்தம் செய்த இடைவெளியில், ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான திட்ட வரைவை முன்வைக்குமாறு ரணில் விக்கிரமசிங்காவின் அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். நீண்ட காலப் போரினாலே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கவும் சிதைந்துபோன தமிழர் தேசத்தை மீள்நிர்மாணம் செய்யவும் கணிசமான அதிகாரத்துடன் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு அவசியமென்பதை வலியுறுத்தினோம்.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக ரணிலின் அரசு முன்வைத்த, இடைக்கால நிர்வாகம் பற்றிய மூன்று வரைவுகளும் எமக்குத் திருப்தியை அளிக்கவில்லை. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் நிர்வாக வலுவற்றதாக இத்திட்ட வரைவுகள் அமையப் பெற்றதால் எம்மால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இறுதியில், ஒர் இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவை நாமாகத் தயாரித்துக்கொடுக்க முடிவெடுத்தோம்.

பல மட்டங்களிலே தமிழீழ மக்களின் கருத்தைப் பெற்று, வெளிநாடுகளிற் புலம்பெயர்ந்து வாழும் அரசியல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோரின் கலந்தாலோசனையுடன் ஒர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தயாரித்தோம். இத் திட்டம் புதுமையானது; நடைமுறைச் சாத்தியமானது. எமது மக்களின் அவசரமான வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் இதன் கட்டமைப்பு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகளைத் தாமதமின்றிச் செயற்றிறனுடன் நிறைவுசெய்ய வழிவகுக்கும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமையப்பெற்றது.

இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைச் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி நாம் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், ஊடகங்கள் வாயிலாகப் பொதுசன அரங்கிலும் பகிரங்கப்படுத்தினோம்.

சர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை. நீண்ட காலத்தின் பின்பு முதற்றடவையாக விடுதலைப் புலிகள் தமது அரசியற் சிந்தனைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுத்தில் வடித்திருக்கின்றார்களென இந் நாடுகள் திருப்தி தெரிவித்தன.

நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை. தாம் சமர்ப்பித்த வரைவுகளைப் பார்க்கிலும் எமது திட்டம் வித்தியாசமானது என்று குறிப்பிட்ட அரசாங்கம், எமது யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க இணங்கியது. ஆனால், அதே சமயம், எமது இடைக்கால நிர்வாகத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அது தமிழீழத் தனியரசுக்கு இடப்பட்ட அத்திவாரமெனக் கண்டித்தது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கா ஒருபடி மேலே சென்று அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.

எமது இடைக்கால நிர்வாகத் திட்டம் அறிவிக்கப்பட்ட நான்காவது நாளே சந்திரிகா அம்மையார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை தென்னிலங்கை அரசியலைப் பெரும் நெருக்கடிக்குள்ளே தள்ளியது. பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுகளை ஜனாதிபதி சந்திரிகா பறித்தெடுத்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிபீடம் அதிகார வலுவிழந்து ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதத்திற்குள் ஜனாதிபதி சந்திரிகாவினாற் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக ரணில் அரசாங்கம் கவிழ்ந்தது.

இவ்வாண்டு முற்பகுதியில் நிகழ்ந்த பொதுத் தேர்தல் சிங்கள, தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது. சமாதானத்திற்கும் இன இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்களப்பௌத்த பேரினவாத சக்திகள், என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க இப் பொதுத் தேர்தல் வழிவகுத்தது.

இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது.

பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.

எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள்சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.

தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைது}க்கின.

அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.

சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது.

இந்த நெருக்கடிக்கு முகம்கொடுப்பதாயின் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரச கூட்டணிக்குள் நிலவும் உள்முரண்பாடும், அடிப்படையான கொள்கை வேறுபாடும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குப் பெரும் இடையூறுகளாக எழுந்துள்ளன. தமிழரின் தேசிய இனப் பிரச்சினை குறித்து அரச கூட்டணிக்குள் அங்கம்வகிக்குங் கட்சிகள் மத்தியில் ஒரு தெளிவான கொள்கைத் திட்டமோ பொதுவான அணுகுமுறையோ இருக்கவில்லை.

தமிழர் விரோத இனவாதத்திலும் போர்வெறி பிடித்த இராணுவவாதத்திலும் சிங்களப்பௌத்த மேலாதிக்கத்திலும் ஊறித் திளைத்த தீவிரவாதச் சக்திகளுடன் அதிகாரக் கூட்டுறவு வைத்திருக்கும் சந்திரிகா அம்மையாரால் ஒரு தெளிவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிற் சமாதான முயற்சியை முன்னெடுக்க முடியவில்லை. இதுதான் தென்னிலங்கையில் நிலவும் உண்மையான அரசியல் யதார்த்த நிலை. அரச கூட்டணிக்குள் கருத்தொற்றுமையில்லையென்ற அரசியல் உண்மையானது மிகவும் சாதுரியமான முறையில், சர்வதேச சமூகத்திற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகிறது.

ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்துடன் நாம் நிகழ்த்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அதன் இறுதிக் கட்டத்திலேயே எமது இடைக்கால நிர்வாக யோசனைகளை முன்வைத்தோம். அந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து உடன் பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற எமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஆதரிக்கிறது. ஆனால் எமது நிலைப்பாட்டிற்கு மாறாக, சந்திரிகாவின் அரசு ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதாவது, எந்த வகையான இடைக்கால நிர்வாக அமைப்பும் ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தின் இணைபிரியாத அங்கமாக அமையவேண்டும் என வலியுறுத்துகிறது. நாம் ஒர் இடைக்கால நிர்வாக ஒழுங்கை வேண்டிநிற்க, சந்திரிகாவின் அரசு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுபற்றி பேச விரும்புகிறது.

கால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப்பெறவேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந்தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டியமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.

போர்நிறுத்தம்செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்தியபோதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கிவருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டவேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவவேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

நாம் தெரிவித்த யோசனைகளிற் சில சர்ச்சைக்குரியனவாகத் தென்பட்டால் அவைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். முதலில், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவி, அது செம்மையாகச் செயற்படத் தொடங்குவதை அடுத்தே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுபற்றிப் பேச்சுக்களை நடத்தலாம் என்பதே எனது நிலைப்பாடு. எமது கோரிக்கை நியாயமானது. தமிழர் தாயகத்தில் நிலவும் வாழ்நிலை நிதர்சனத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

ஆனால், சந்திரிகா அம்மையாரோ இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றிப் பேச வருமாறு எமக்கு அழைப்பை விடுத்து வருகிறார். எந்த வடிவத்திலான இடைக்கால நிர்வாகத் திட்டமும், முழுமையான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தின் அங்கமாக அமையவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்துவதற்குப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம்.

முதலாவதாக, அரசுக் கூட்டணிக்குள் அங்கம்வகிக்கும் தீவிரவாத இனத் துவேசச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக இருக்கலாம். அதுவும் குறிப்பாக, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வன்மையாக எதிர்த்து நிற்கும் ஜே.வி.பியினரைச் சமாதானப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம்.

இரண்டாவதாக, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டவர்போன்று சர்வதேசச் சமூகத்திற்கு ஏமாற்றுவித்தை காட்டுவதற்காக இருக்கலாம்.

மூன்றாவதாக, தமிழரின் சிக்கலான இனப் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்ற சாக்கிற் பேச்சுக்களை முடிவின்றி இழுத்தடிப்பதற்காகவும் இருக்கலாம். இப்படிப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். எப்படியான காரணங்களாக இருந்தாலும் ஒன்றைமட்டும் நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம். அதாவது, சந்திரிகா அம்மையாரின் முரண்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாடுகளைப் பார்க்கும்பொழுது, அவரது அரசானது தமிழ் மக்களுக்கு ஒர் இடைக்காலத் தீர்வையோ நிரந்தரமான தீர்வையோ வழங்கப்போவதில்லை என்பது புலனாகும்.

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுவேண்டிக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்திய கசப்பான வரலாறு பற்றி நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை. காலத்தாற் சாகாது, ஈழத் தமிழ் இனத்தின் கூட்டு அனுபவத்திற் புதைந்து கிடக்கும் அரசியல் உண்மை இது. மொழியுரிமை என்றும் சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி என்றும் சம~;டிக் கூட்டாட்சி என்றும் காலங் காலமாக நாம் பேச்சுக்களை நடத்தி, உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் செய்து, ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுப் பாதையில் மீளநடைபோட எமது விடுதலை இயக்கந் தயாராக இல்லை.

சிங்களப்பௌத்தப் பேரினவாதச் சகதிக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை.

வடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.

தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் பெருந்தன்மையும் மதிநுட்பமும் இல்லாதது ஒருபுறமிருக்க, தென்னிலங்கை அரசியல் இயக்கங்கள் மத்தியில் ஒத்திசைவற்ற, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பாடுகள் நிறைந்த கருத்துக்களையும் கொள்கைகளையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இப்படிக் குளறுபடியான கொள்கைகளை வரித்துக்கொண்டு, அப்பட்டமான இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமைவகிக்கும் சந்திரிகா அம்மையார், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றி அக்கறை காட்டுவது எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

ஜனாதிபதி சந்திரிகாவிடமும் அவர், கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறது. அதாவது, தமிழ் மக்களது இனப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்து, அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசீயம், சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள்.

தென்னிலங்கை அரசியலரங்கில் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்துத் தெளிந்த பார்வையும் நேரிய தரிசனமும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு. அல்லாதபட்சத்தில், நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. தமிழர் பிரச்சினை குறித்துப் பிளவுபட்டு, முரண்பட்டுக் குழம்பி நிற்கும் சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்போவதில்லையென்ற உண்மையை உணர்ந்துதான் நாம் இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தோம். எமது மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காவது நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனேயே நாம் இத் திட்டத்தை முன்வைத்து, பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தோம். ஆனால் சந்திரிகாவின் அரசு எமது நியாயமான நிலைப்பாட்டை நிராகரித்து, நிரந்தரத் தீர்வு என்ற சாக்குச் சொல்லி, சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சமாதானத்தின் விரோதிகளையும் இனவாத சக்திகளையும் அவர்களது குளறுபடியான கொள்கைகளையுந் தனது கூட்டாட்சித் திரைக்குள் மூடிமறைத்து, விடுதலைப் புலிகள் மீது வீண்பழி சுமத்த முனைகிறார் சந்திரிகா அம்மையார். சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை நினைவுகூரும் இப் புனித நாளில், தேச விடுதலை என்ற அவர்களது இலட்சியக்கனவை, எத்தகைய இடர்கள், சாவல்களை எதிர்கொண்டபோதும் நிறைவுசெய்வோமென நாம் உறுதிபூணுவோமாக.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2003

Posted on

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2003

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள்.

இன்றைய நாள், வணக்கத்திற்குரிய புனித நாள். இன்று, தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.

அன்றைய தமிழர் இராச்சியம் வீழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியருக்கும் அயலவருக்கும் அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று மது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலகம் இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ், ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள். வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி, உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.

எனது அன்பான மக்களே!

சிங்கள தேசத்தில் இன்று அரசாங்கம் என்று கருதக்கூடிய ஓர் ஒழுங்கமைவான கட்டமைப்பு இயங்கவில்லை. அரச அதிகாரமானது, இரு பெரும் சிங்களக் கட்சிகளின் தலைமைகள் மத்தியிற் பிளவுபட்டுக் கிடக்கிறது. பாராளுமன்ற ஆட்சியும் சனாதிபதி ஆட்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதும் நிலையில் உள்ளன. பாதுகாப்பு, உள்துறை, ஊடக அமைச்சுகளை சந்திரிகா அம்மையார் திடீரெனப் பறித்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சி பீடம் அதிகார வலுவிழந்து முடங்கிக் கிடக்கிறது. இரு தலைவர்களுக்கும் மத்தியிலான இந்த அதிகார இழுபறியால் அரச கட்டுமானம் ஆட்டம் கண்டு உறுதிநிலை குலைந்துள்ளது. இந்த நெருக்கடி காரணமாகச் சமாதான முன்னெடுப்புகள் செயலிழந்து போயின. இந்தக் குழப்ப நிலையால் விரக்தியடைந்த நோர்வே அரசு தனது சமாதான முயற்சிகளை இடைநிறுத்தியுள்ளது. தென்னிலங்கையில் திடீரென உருவாகியுள்ள இத்தகைய நிலைமைகள் காரணமாக அமைதிச் சூழ்நிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சமாதான வழியிலான பேச்சுக்கும் சமரசத் தீர்வுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந் நெருக்கடி நிலைமை தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சர்வதேச நாடுகளுக்கும் கவலையையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.

கொழும்பில், திடீரென இந்த அரசியற் பூகம்பம் ஏற்பட்டதன் காரணமென்ன? ஏற்கனவே இரு துருவங்களாக முரண்பட்டிருந்த அரச அதிகார மையத்தில் திடீரென விரிசல் விழுந்ததன் காரணமென்ன? போர் ஓய்வைப் பேணி அமைதியைக் காப்பதற்கு அத்தியாவசியமான பாதுகாப்பு, உள்துறை அமைச்சுகளைச் சந்திரிகா அம்மையார் திடீரெனப் பறித்துக்கொண்ட புறநிலைக் காரணி என்ன?

தனது தலையீட்டுக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறார் சந்திரிகா. ஒன்று, விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்திப் போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருவதால் இலங்கையின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது. அடுத்தது, ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் புலிகள் இயக்கத்திற்குப் பெரிய அளவிற் சலுகைகளை வழங்கி வருகிறது என்பதாகும். இந்த இரண்டு குற்றச் சாட்டுகளிலும் எவ்வித உண்மையுமில்லை என்பதை நான் இங்கு திட்டவட்டமாக எடுத்துரைக்க விரும்புகின்றேன். எமது விடுதலை இயக்கத்தைக் களங்கப்படுத்தும் குறிக்கோளுடனும் தற்போதைய சமாதானச் சூழ்நிலையைக் குழப்பிவிடும் நோக்கத்தோடும் கட்டவிழ்த்துவிடப்பட்ட புரளிகள் இவை.

எமது இயக்கமுஞ் சரி, மக்களுஞ் சரி போரை விரும்பவில்லை. வன்முறைப் பாதையை விரும்பவில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். சமாதான வழியில் எமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதையே விரும்புகின்றோம். சமாதான வழிமுறையில் நாம் ஆழமான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே அமைதி நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வண்ணம் போர் நிறுத்தத்தை நாம் இறுக்கமாகவும் உறுதியாகவும் பேணி வருகின்றோம். இப் போர் நிறுத்தத்தை எமது இயக்கமே முதலில் ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் படைகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு நாம் அமைதி காத்து வருகின்றோம்.

நாம் பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருகின்றோமென சந்திரிகா அம்மையார் குற்றம் சுமத்துவது அபாண்டமான பொய்யாகும். அமைதி காக்கும் பணியில் நாம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோமே தவிர போருக்கான ஆயத்தங்கள் எதையும் செய்யவில்லை. எமது நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு ஆட்பலம் தேவை என்பதால் சிறிய அளவில் ஆட்சேர்ப்புச் செய்து வருகின்றோம் என்பது உண்மை. இதனைத் திரிவுபடுத்தி, பெரிதுபடுத்திப் போருக்கான முன்முயற்சியெனச் சிங்கள மக்களுக்குப் பூச்சாண்டி காட்டுகிறார் சந்திரிகா.

இப் போர்நிறுத்தத்தால் தமிழர் தாயகத்தில் முழுமையான அமைதி நிலை ஏற்படவில்லை. இயல்பு நிலையும் திரும்பவில்லை. அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளான அவல வாழ்க்கையே தொடர்கிறது. சிங்கள இராணுவம் போர் நிறுத்த விதிகளையும் கடப்பாடுகளையும் நிறைவு செய்ய மறுத்து வருகிறது. உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையிற் கணிசமான குடியிருப்பு நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்வதால், இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கும் வாழ்விடங்களுக்கும் திரும்ப முடியாது அவலப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் அடிக்கடி தலைது}க்கி வருகின்றன.

இதனால் தமிழ்ப் பொதுமக்கள் சதா துன்பத்திற்கும் இம்சைக்கும் ஆளாகி வருகின்றனர். போருக்கு ஓய்வு ஏற்பட்ட போதும் எமது மக்களுக்கு இன்னும் ஓய்வு கிட்டவில்லை. முழுமையான அமைதியையும் இயல்பான வாழ்வையும் எமது மக்கள் இன்னும் அனுபவிக்க முடியவில்லை. அதேவேளை, போர் நிறுத்தத்தாற் சிங்கள தேசத்தில் முழுமையான அமைதியும் இயல்பு நிலையும் நிலவுகிறது. பொருளாதார வாழ்வும் மேம்பட்டு வருகிறது. போர் நிறுத்தத்தின் ஆக்கபூர்வமான பயன்களைச் சிங்கள தேசமே அனுபவித்து வருகிறது. ஆனால், தமிழர்களின் அவல நிலை தொடர்கிறது. இதுதான் இன்றைய யதார்த்த மெய்நிலை.

இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் போர்நிறுத்த காலத்தில், சந்திரிகா அம்மையார் குற்றம் சுமத்துவது போல, எமது இயக்கத்திற்குப் பெரும் சலுகைகள் வாரி வழங்கப்படவில்லை. மாறாக, இழப்புக்களையே நாம் சந்தித்திருக்கிறோம். போர்நிறுத்தக் காலத்தில் எமது இயக்கத்திற்குச் சொந்தமான இரு பெரும் வணிகக் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பிற் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டன. எமது மீன்பிடிப் படகுகளும் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இச் சம்பவங்களின் விளைவாக, மூத்த உறுப்பினர் பலர் உட்பட கடற்புலிப் போராளிகள் இருபத்தாறு பேரை நாம் இழந்தோம். பொறுமையின் எல்லைக்கு எம்மைத் தள்ளிய இந்த ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் சகித்துக் கொண்டு நாம் அமைதியைப் பேணி வந்தோமென்றால் அது சமாதானத்தில் எமக்குள்ள உறுதியையே எடுத்துக் காட்டுகிறது.

எமது விடுதலை இயக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கும் மத்தியிற் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், தாய்லாந்தில் ஆரம்பித்த பேச்சுக்களில் உருப்படியான, ஆக்கபூர்வமான முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. ஆறு மாத காலத்திற்குள் நிகழ்ந்த ஆறு சுற்றுப் பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் நிறைவேற்றப்படவில்லை. போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் நிறுவப்பட்ட உப-குழுக்கள் செயலிழந்து போயின. அரசுடன் பேசி எமது மக்கள் எதிர்கொண்டு நின்ற பூதாகரமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாம் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின. இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையைத் தோற்றுவிப்பது, இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது, போரால் அழிவுற்ற கட்டுமானங்களை மீளமைப்பது, அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பது போன்ற எமது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை உதாசீனம் செய்துவிட்டு, அரச தரப்பும் அனுசரணையாளர்களும் மனித விழுமியங்கள் பற்றியும் இறுதித் தீர்வுக்கான வழிமுறைகள், வரைபடங்கள் பற்றியுமே முக்கிய கவனம் செலுத்தினர்.

இதனாற் பேச்சுவார்த்தை, மக்களது பிரச்சினைகளுக்கும் அபிலாசைகளுக்கும் அப்பால் வேறு திசையில் நகர்ந்தது. இது இவ்வாறிருக்க, சமாதானப் பேச்சுக்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டி, உலக நாடுகளிலிருந்து உதவியையும் கடனையும் பெற்று, போரினால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதிலேயே ரணிலின் அரசு அதீத அக்கறை காட்டியது. அத்துடன் உலக நாடுகள் சிலவற்றின் உதவியுடன் ஒரு சர்வதேசப் பாதுகாப்பு வலையத்தை நிறுவி விடவும் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டது. ரணில் அரசின் இத் தந்திரோபாயம் காரணமாகச் சமாதான முயற்சியிலும் பேச்சுக்களிலும் உலக நாடுகள் பலவற்றின் அக்கறையும் தலையீடும் அதிகரித்தன. தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு எத்தகைய வரையறைக்குள் தீர்வுகாணப்படவேண்டும் என்பதையும் சில நாடுகள் வலியுறுத்திக் கூறின. இவ்விதம் சர்வதேசத் தலையீடுகள் அதிகரித்ததன் எதிர்மறை விளைவாகச் சமாதானப் பேச்சு மேலும் சிக்கலடைந்தது. இந்தச் சூழ்நிலையிற் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத நடுப் பகுதியில் எமது இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முக்கிய மாநாடு ஒன்று வாஷிங்டனிற் கூட்டப்பட்டது. பேச்சுவார்த்தையில் முக்கிய தரப்பாகவும் சம பங்காளி என்ற தகைமையுடனும் பங்குபற்றி வந்த எமது இயக்கம் இவ்விதம் சிறுமைப்படுத்தப்பட்டமை எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தந்தது. இப்படியான நிலைமைகள் காரணமாகவே பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திவைத்துச் சமாதான வழிமுறையின் பல்வேறு பரிமாணங்களையும் மறு பரிசீலனை செய்ய நாம் தீர்மானித்தோம்.

தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பது என்பது உடனடியாக, குறுகிய காலத்திற் சாத்தியப்படப் போவதில்லை. அது நீண்ட காலம் பிடிக்கும். ஆனால், எமது மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினைகள் அவசரமானவை. நீண்ட காலத்திற்குப் பின்போட முடியாதவை. அத்தியாவசியமான மனிதாபிமானத் தேவைகள் ஒரு புறமும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் போன்ற பிரச்சினைகள் மறுபுறமுமாக எமது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலான, பாரிய இடர்களுக்கு உடனடியாகப் பரிகாரம் தேவை. இதுபற்றி ஆழமாகப் பரிசீலனை செய்து பார்த்தபொழுதுதான் வடகிழக்கில் ஓர் இடைக்கால அதிகார சபை நிறுவப்படுவது அவசியமென உணர்ந்தோம். போரினாற் பேரழிவுகளுக்கு இலக்காகி, ஆயுதப் படைகளின் ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி நிற்கும் தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை தோற்றுவிக்கவும் இடம்பெயர்ந்தோரைக் குடியேற்றவும் புனர்நிர்மாண அபிவிருத்தி வேலைகளைச் செம்மையாகவும் துரிதமாகவும் நிறைவேற்றக் கூடிய செயற்றிறன்மிக்கதாக இந்த இடைக்கால ஆட்சியதிகார சபை அமைய வேண்டுமெனக் கருதினோம். இதன் அடிப்படையிற் கணிசமான அதிகாரங்களைக் கொண்டதான ஓர் இடைக்கால அரசியல் நிர்வாக ஆட்சியமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான ஒரு திட்ட வரைவை முன் வைக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஓர் உருப்படியான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு நாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்தோம். கடந்த மே மாதம் 15ம் திகதி நோர்வே வெளிவிவகார அமைச்சர் திரு. பீட்டர்சன் அவர்களை நான் சந்தித்தபோதும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்ட ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இருபது ஆண்டு காலமாக நீடித்த போரினால் அழிந்து போன எமது தேசத்தையும் எமது மக்களின் சிதைந்து போன வாழ்க்கையையும் மீளக் கட்டியமைப்பதற்கு இத்தகையதொரு ஆட்சியமைப்புத் தேவையென்பதையும் விளக்கினேன்.

எமது கோரிக்கைக்கு இணங்க, இடைக்கால நிர்வாகம் சம்பந்தமாக, ஒன்றன் பின் ஒன்றாக, இரு திட்ட வரைவுகளை அரசாங்கம் எமக்கு அனுப்பி வைத்தது. இத் திட்ட வரைவுகளிற் குறிப்பிடப்பட்ட நிர்வாக சபை, நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக அமையவில்லை. அத்துடன் எமது இயக்கத்தின் பங்கும் தெளிவானதாக வரையறுக்கப்படவில்லை. மிகவும் குறுகிய அதிகாரங்களுடன் அபிவிருத்தி வேலைகளை மட்டும் கையாளும் ஒரு நிர்வாக அமைப்பையே இவ் வரைவுகள் பரிந்துரைத்தன. இதனால் இத் திட்ட வரைவுகளை ஏற்க முடியாதென நாம் நிராகரித்தோம். இதனையடுத்து, இடைக்கால நிர்வாகஞ் சம்பந்தமாகப் புதிய யோசனைகள் அடங்கிய மூன்றாவது வரைவு ஒன்றை அரசாங்கம் எமது பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. இத் திட்டம் எமக்குத் திருப்தி அளிக்காதபோதும் நாம் அதனை நிராகரித்துவிடவில்லை.

எமது இயக்கம் எதிர்பார்த்தது போலவும் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையிலும் ஒரு திட்டவட்டமான இடைக்கால ஆட்சியமைப்பை முன்வைக்க அரசாங்கம் தயங்குகின்றது என்பது எமக்குத் தெளிவாகியது. ஆயினும், ரணிலின் ஆட்சிபீடம் ஏதோ புதியபுதிய யோசனைகளை முன்வைக்க விடுதலைப் புலிகள் இயக்கம் அவற்றைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருவது போன்ற ஒரு தப்பபிப்பிராயம் எழக்கூடுமென நினைத்தோம். ஆகவேதான், அரசாங்கத்தின் இறுதி வரைவை எடுத்த எடுப்பில் நிராகரிக்காமல், அதற்கு மாற்றுத் திட்டமாக எமது யோசனைகள் அடங்கிய ஒரு திண்ணியமான, உருப்படியான இடைக்கால ஆட்சியதிகாரக் கட்டமைப்பை வரைந்து; அதனை அரசாங்கத்திடம் கையளிக்க நாம் முடிவெடுத்தோம். எமது திட்ட வரைவைத் தயாரிக்கும் விடயத்தில் நாம் அவசரப்படவில்லை. கால அவகாசம் ஏற்பட்டாலும் நாம் முதன்முதலாக எழுத்தில் வரைந்து கொடுக்கும் திட்டம், ஒரு இடைக்கால ஒழுங்காக அமைந்தபோதும் அது செம்மையானதாக, புதுமையானதாக, நடைமுறைச் சாத்தியமானதாக இருக்க வேண்டுமென விரும்பினோம். அத்தோடு, பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட எமது மக்களின் சிக்கலான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்கும் வழிமுறைகளைக் கொண்டதாகவும் அது அமையவேண்டும் எனவும் எண்ணினோம். ஆகவேதான், எமது திட்ட வரைவைப் பரந்த அளவில், பல்வேறு மட்டங்களிற் பல்வேறு தரப்பினரதும் ஆலோசனையைப் பெற்றுத் தயாரித்தோம். பரந்துபட்ட ரீதியில் தமிழீழ மக்களையும் வெளிநாடுகளில் வதியும் எமது சட்ட, யாப்பு அறிஞர்களையும் சர்வதேச நிபுணர்களையும் கலந்தாலோசித்தே இத் திட்ட வரைவு உருவாக்கப்பட்டது.

அரசாங்கத்திடம் நாம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் பற்றி நான் இங்கு விபரமாக விளக்கிக் கூறுவது அவசியமில்லை. இத் திட்ட வரைவு ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக எல்லோரதும் பார்வைக்கும் ஆய்வுக்குமாக வெளியிடப்பட்டுள்ளது. எமது திட்ட யோசனைகள் பலரகமான சர்ச்சையையும் குழப்பத்தையும் கிளப்பியபோதும் சமாதானத் தீர்வை நோக்கி நாம் எடுத்த முயற்சியை உலக நாடுகள் பல வரவேற்றுள்ளன. எமது யோசனைகளை விபரமாகவும் தெளிவாகவும் முதற் தடவையாக எழுத்தில் முன்வைத்ததையும் சில வெளிநாடுகள் வரவேற்றுள்ளன. ரணிலின் அரசு எமது திட்ட வரைவை நிராகரிக்காது, அதன் அடிப்படையில் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்தது. அதே வேளை, எமது இடைக்கால நிர்வாக யோசனைகளுக்குச் சிங்கள இனவாத சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. தனித் தமிழ் அரசுக்கு அத்திவாரமாக எமது திட்டம் அமைவதாகச் சிங்கள இனவாதக் கட்சிகளும் ஊடகங்களும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. இந்திய ஊடக உலகத்திலிருந்தும் இந்திய அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தும் இதேபோன்று கண்டன விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.எதிர்க் கட்சிகளின் சார்பாகத் திரு. கதிர்காமர் விடுத்த நீண்ட அறிக்கையில் எமது திட்ட வரைவைப் படுமோசமாக விமர்ச்சித்து, தனியரசு உருவாக்கத்திற்கான அம்சங்கள் அதிற் பொதிந்து இருப்பதால் இலங்கையின் இறைமைக்குப் பேராபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்தார்.

எமக்கு ஒரு புறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் கொடுத்த விடயம் என்னவென்றால் எமது இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவு வெளியான சில தினங்களிலேயே சந்திரிகா அம்மையார் திடீரென ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியதிகாரத்தின் கீழிருந்த மூன்று முக்கிய அமைச்சுகளைப் பறித்தெடுத்தமையாகும். அவர் என்னதான் காரணங்களைக் கற்பித்தாலும் எமது திட்ட வரைவின் உடனடி எதிர்வினையாகவே இந்தப் பாரதூரமான நடவடிக்கையை எடுத்தார் என்பது இன்று உலகறிந்த உண்மையாகிவிட்டது. சந்திரிகாவின் இத் திடீர்த் தலையீட்டினால் ரணிலின் ஆட்சிபீடம் அதிகாரமிழந்து முடங்கிக் கிடப்பது மட்டுமன்றி சமாதான வழிமுறைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

எமது இயக்கம் முன்வைத்த இடைக்கால அதிகார சபை, தமிழீழத் தனியரசை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகவும் தனியரசுக்கான படிக் கற்களைக் கொண்டிருப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. நாம் தெரிவித்த யோசனைகள் எமது தேசியப் பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கான இறுதித் திட்டமன்று. எமது திட்ட வரைவு ஓர் இடைக்கால ஒழுங்கு பற்றியது. நாம் பரிந்துரைத்த நிர்வாக சபை கணிசமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதென்பது உண்மை. உருப்படியான நிர்வாக அதிகாரங்கள் இல்லாமற் போரினாற் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதும் சாத்தியமில்லை. அத்துடன் சட்டம் – ஒழுங்கு, நீதி நிர்வாகம், நிதி ஒதுக்கீடுகள், காணிப் பகிர்வுகள் போன்ற பிராந்திய நிர்வாகத்தையும் செம்மையாகச் செயற்படுத்த முடியாது. இங்கு இன்னொரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, வடகிழக்கிலுள்ள பெரும் பகுதி ஏற்கனவே எமது ஆட்சியதிகாரத்தின் கீழ் நேர்த்தியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்ற யதார்த்த உண்மையையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வடகிழக்கில் இன்று நிலவும் கொடூரமான யதார்த்தப் புறநிலைகள், தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, ஆயுதப் படைகளின் அனர்த்தங்கள், இயல்புநிலை தோன்றாத அவல நிலை, எமது மக்கள் எதிர்கொள்ளும் அவசர மனிதாபிமானத் தேவைகள் மற்றும் பல வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் நீதியான, நியாயமான, உடனடியான பரிகாரம் காணும் நோக்குடனேயே ஓர் உருப்படியான திட்டமாக எமது யோசனைகளை முன் வைத்தோம். இத் திட்டத்தில் முற்போக்கான, புதுமையான, ஆக்கபூர்வமான அம்சங்கள் பலவுண்டு. வடகிழக்கிற் பெரும்பான்மையினராக வாழும் தமிழரும் மற்றும் முஸ்லிம், சிங்கள மக்களும் தமிழீழ மண்ணில் தமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வை மேம்படுத்தும் வகையில் தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமைகிறது. இந்தச் சுயாட்சிக்கான அம்சங்களை மிகைப்படுத்தி, அவற்றைத் தனியரசுக்கான திட்டமாகத் திரிபுபடுத்தி எமது சமாதான முயற்சிக்குக் களங்கம் ஏற்படுத்தச் சில சக்திகள் முனைவது எமக்குக் கவலையைத் தருகிறது. இந்த இடைக்கால அதிகார சபைத் திட்டம் அரசாங்கத்தின் யோசனைகளுக்கு மாற்றீடாக, பேச்சுக்களுக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்டதாகும். நேர்மையுடனும், சமாதான வழிமுறையில் உறுதியான பற்றுடனும் நாம் மேற்கொண்ட இம் முன்முயற்சி தென்னிலங்கையில் ஓர் அரசியற் புயலைக் கிளப்பியிருக்கிறது. சிங்கள இனவாத சக்திகள் எமக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியுள்ளன. சிங்கள தேசத்தின் இரு பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் மத்தியில் எழுந்த அதிகாரப் போட்டியால் அரச கட்டமைப்பே ஆட்டம் கண்டு நிற்கிறது. காலங்காலமாகத் தமிழருக்கு உரிமையை மறுத்துவரும் சிங்கள இனவாதத்தின் முகமூடி கிழிந்து விட்டதால் அதன் உண்மையான, அசிங்கமான முகத்தை உலகம் காணக்கூடியதாக இருக்கிறது.

முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.

தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.

சிங்களப் பேரினவாதத்தின் சிலந்தி வலைக்குட் சிக்கித் தமிழரின் வாழ்வும் வளமும் சிதைந்து போவதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது. வன்முறையைத் துறந்து, மென்முறைப் பாதையைத் தழுவி சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்புகளுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகின்றோம். இதனை உலக நாடுகளனைத்தும் நன்கறியும். ஆனால், சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து, ஒடுக்குமுறையைத் தொடருமானால் எமது மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் கீழ் நாம் பிரிந்து சென்று தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இப்படியான இறுதி மார்க்கத்திற்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் புறநிலையை உருவாக்கிவிடவேண்டாமென நாம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு ஆளாகி, இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்தவொரு சத்தியாலும் அசைத்துவிட முடியாது. இந்த உண்மையை இன்றைய புனித நாளில், தமிழீழத்திலும் உலகெங்கும் எமது தியாகிகளை நினைவுகூரும் இந் நன் நாளில், எமது இதயங்களிற் பதித்து, விடுதலை என்ற எமது சத்திய இலட்சியத்தில் நாம் உறுதிகொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2002

Posted on

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
27.11.2002

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே,

இன்றைய நாள் ஒரு புனித நாள்.எமது மாவீரர்களின் நினைவு நாள். எமது இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள்.

விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.

மாவீரர்களே, தமிழர் தேசம் உங்களுக்குத் தலைவணங்குகிறது. உங்களது தற்கொடையால் தமிழீழ மக்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள். உங்களது இரத்தத்தாலும், வியர்வையாலும், உங்களது இலட்சிய உறுதியாலும் கட்டியெழுப்பப்பட்ட எமது விடுதலை இயக்கம், இன்று யாராலும் வெற்றி கொள்ள முடியாத மாபெரும் போராட்ட சக்தியாக உலகப் புகழீட்டி நிற்கிறது. போர் அரங்கில் நீங்கள் படைத்துச் சென்ற மகத்தான சாதனைகளையே இன்று உலகரங்கில், நாம் அரசியல் வெற்றிகளாக அறுவடை செய்து வருகின்றோம்.

இன்று உலகம் மாறி வருகிறது. உலக ஒழுங்கும் மாறி வருகிறது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இன்றைய உலக நிதர்சனத்தை, அதன் யதார்த்தப் புறநிலைகளை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இன்றைய காலத்தையும், இக் காலத்தில் கட்டவிழும் சூழலையும் நாம் ஆழமாகப் புரிந்து, கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, எமது விடுதலைப் பாதையை செப்பனிடுவது அவசியம். இன்றைய காலத்தின் தேவை அது. உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே.

எமது விடுதலைப் போராட்டம் கால்நூற்றாண்டுகால வரலாறாக நீட்சிபெற்றுச் செல்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன் இன்றைய நாளில், எமது முதலாவது மாவீரன் களப் பலி ஆகியதைத் தொடர்ந்து இன்று வரை பல்லாயிரக் கணக்கில் எமது போராளிகள் விடுதலைப் போரில் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள். எமது இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அந்நியனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம் மகத்தான தியாகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க சக்திகளின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். எமது விடுதலை இயக்கம் இன்று வானளாவ வளர்ந்து நிற்கிறது. நிமிர்ந்து நிற்கிறது. எமது இயக்க விருட்சத்தின் வேர்களும் விழுதுகளுமாக நிற்பவர்கள் எமது மாவீரர்களே.

எனது அன்பார்ந்த மக்களே,

இன்று எமது விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில், ஒரு புதிய வரலாற்றுத் திருப்பத்தில் காலடி வைத்திருக்கிறது. என்றுமில்லாதவாறு இன்று ஒரு புதிய சவாலை நாம் சந்தித்து நிற்கின்றோம். போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியில், சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். நாம் வன்முறையில் பற்றுக் கொண்ட போர் வெறியர் என்றும் சமாதானத்தின் விரோதிகள் என்றும், காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்டு வந்த பரப்புரையைப் பொய்யாக்கும் வகையில் நாம் நேர்மையுடனும் உறுதியுடனும் சமாதான வழிமுறையைத் தழுவி நிற்கின்றோம்.

ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. இன அழிவை இலக்காகக் கொண்ட இனவாத ஒடுக்குமுறையின் உச்சத்தில், அந்நிய இராணுவ அடக்குமுறை சகிக்க முடியாத அளவிற்குத் தீவிரமடைந்த கட்டத்திலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். எமது மக்களின் உயிரைக் காக்கவும், எமது மக்களின் உரிமையை நிலை நாட்டவும், எமது இயக்கம் மேற்கொண்ட ஆயுதம் தரித்த விடுதலைப் போரை பயங்கரவாதமாகச் சிங்கள அரசுகள் சித்தரித்தன. தமிழரின் உரிமைப் போரைத் திரிபுபடுத்தி, இழிவுபடுத்தி உலகடங்கிலும் விசமப் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. இப் பொய்யான பரப்புரையை நம்பி, பல உலக நாடுகள் எமது அமைப்பிற்குத் தடை விதித்தன.

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு உலக அரங்கிலிருந்து நாம் ஓரம் கட்டப்பட்டோம். உலக நாடுகள் ஒன்று திரண்டு எதிரியின் போர்த் திட்டத்திற்கு முண்டு கொடுத்தன. அனைத்து உலகத்தினதும் ஆதரவும், ஆயுத உதவியும் கிட்டியதால் மூர்க்கம் கொண்ட எதிரி போரைத் தீவிரப்படுத்தினான். நாம் தனித்து நின்று போருக்கு முகம் கொடுத்தோம். மக்களின் ஆதரவு மட்டும் எமக்கு மலையாக நின்றது. நாம் அலையலையாகத் திரண்டெழுந்து ஆக்கிரமிப்புப் படைகளுடன் மோதினோம். போர்க் கலையில் எமது வீரர்கள் படைத்த அபாரமான சாதனைகள் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பில் ஆழ்த்தின.

போரிற்புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்பதனைச் சிங்களத் தேசமும் உலகமும் உணர்ந்து கொண்டன. இந்தச் சூழ்நிலையில்தான், அதாவது எமது போராட்ட வல்லமையை நிரூபித்துக் காட்டி, எமக்குச் சாதகமான இராணுவ சமநிலையில் நின்றபடியே நாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்தோம். சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகத்திற்கு உணர்த்திக் காட்டவே நாம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம்.

போருக்கு ஓய்வு கொடுக்கும் விடயத்திலும் நாமே முன்முயற்சிகளை எடுத்தோம். ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தப் பிரகடனம் செய்து, அரசாங்கத்தை அமைதி வழிக்கு அழைத்தோம். சமாதானத்திற்கான மனுவைப் பெற்று ஆட்சி பீடம் ஏறிய புதிய அரசு, எமது போர்நிறுத்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டது. இவ்வாண்டு பெப்ரவரி 23ம் திகதியிலிருந்து இரு தரப்பும் இணங்கிய போர் நிறுத்தம் சர்வதேச நாடுகளின் கண்காணிப்புடன் செயலுக்கு வந்தது.

இப் போர்நிறுத்தம் கடந்த ஒன்பது மாதங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சிங்கள ஆயுதப் படையினரிற் சில பிரிவினரும், இனவாத சக்திகளும், சமாதான விரோதிகளும் போர் நிறுத்தத்தைக் குழப்பி, மோதலை ஏற்படுத்த பல தடவைகள் முயன்றனர். எத்தனையோ ஆத்திரமூட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது மக்கள் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். ஆயினும், எமது இயக்கம், ஒழுக்கம் கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடித்து, அமைதியை குலையவிடாது சமாதானத்தைப் பேணி வருகிறது. சமாதானப் பாதையில் எமக்குள்ள உண்மையான உறுதிப்பாட்டிற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.

எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின் அதனை முயன்று பார்ப்பதில் முழுமனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். எமது மக்கள், தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆட்சி புரியும் உரிமை உடையவர்களாக, சுதந்திரத்துடன் கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது போராட்ட இலட்சியம். இந்த இலட்சியம் சமாதான வழியிற் கைகூடுமானால் அந்த வழியைத் தழுவ நாம் என்றுமே தயாராக இருக்கின்றோம்.

சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதில்லை. திம்புவில், டில்லியில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில், இப்பொழுது தாய்லாந்திலாக நாம் பல தடவைகள், பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுவார்த்தையிற் பங்குபற்றி வந்திருக்கின்றோம். முன்னைய பேச்சுக்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிந்தன. முன்னைய சிங்கள அரசுகளின் கடும் போக்கும் நேர்மையற்ற அரசியல் அணுகுமுறைகளுமே தோல்விக்கு காரணம். எனினும், திரு. ரணில் விக்கிரமசிங்காவின் இன்றைய அரசாங்கம் நேர்மையுடனும் துணிவுடனும் தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைகிறது.

உறுதியான அடித்தளத்திற் கட்டியெழுப்பப்பட்ட போர்நிறுத்தமும், அதனை மேலும் வலுப்படுத்தத் சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினரின் முயற்சிகளும் சமாதான அணுகுமுறைக்கு உரமேற்றி வருகின்றன. அத்தோடு, மிகவும் சாதுரியமாகவும், சாணக்கியமாகவும் நோர்வே அரசு கடைப்பிடிக்கும் அனுசரணை முறையானது இன்றைய பேச்சுக்கள் முன்னேறிச் செல்வதற்கு பேருதவியாக இருந்து வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்றுமில்லாதவாறு சர்வதேச அரசுகள் இச் சமாதான முயற்சியில் காட்டிவரும் ஆர்வமும், அக்கறையும், ஊக்குவிப்பும் இரு தரப்பினருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து வருகின்றன. ஒரு வலுவான சமாதான அடித்தளத்தில் நிலையூன்றி நின்றவாறு, படிப்படியாக, கட்டம் கட்டமாக, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தபடி பேச்சுக்களை முன்நகர்த்திச் செல்வதே சாலச் சிறந்தது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முடிவில்லாது தொடர்ந்த கொடிய போரின் விளைவாக எமது மக்கள் பாரிய வாழ்நிலைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு நிற்கின்றார்கள். தமிழர் தேசத்தின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகள் சிதைந்து கிடக்கின்றன. தமிழரின் நகரங்களும், பட்டினங்களும், கிராமங்களும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. வீடுகள், கோவில்கள், பாடசாலைகள் அழிந்து கிடக்கின்றன. காலம் காலமாக இந்த மண்ணில் நிலைத்து நின்ற ஒரு பண்டைய நாகரீகம் வேரோடு சாய்க்கப்பட்டிருக்கிறது.

இச் சிதைவுகள், அழிவுகள் மத்தியிலிருந்து எமது மக்கள் மீண்டும் தமது சமூகப் பொருளாதார வாழ்வை மீளக் கட்டி எழுப்புவது என்பது இலகுவான காரியமல்ல. இதுவொரு பிரமாண்டமான மனிதாபிமானப் பிரச்சினை. இப் பிரச்சினையைச் சர்வதேச சமூகம் அனுதாபத்துடன் அணுக வேண்டும். அழிந்து கிடக்கும் தமிழர் தேசத்தின் புனர்வாழ்வுக்கும் புனர்நிர்மாணத்திற்கும் உதவியளிக்க வெளிநாடுகள் பல முன்வந்துள்ளமை எமக்கு நிம்மதியைத் தருகிறது.

தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றியபோதும் இயல்பு நிலை தோன்றவில்லை. “உயர் பாதுகாப்பு வலையங்கள்” என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை, சமூக, பொருளாதார, பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியியற் பரப்பும், குடிசன நெரிசலும் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டை நாற்பதினாயிரம் படையினர் ஆக்கிரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பு வாழ்வை நடத்த முடியாதவாறு மூச்சுத்திணறும் ஆக்கிரமிப்பு. என்றுமே ஒரு பதட்ட நிலை.

தமிழர் பண்பாட்டின் இதய பூமியான யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறையாக மாற்றப்பட்டிருக்கின்றது. இங்கு எமது மக்களைச் சிங்கள இராணுவம் தனது பாதுகாப்புக் கேடயங்களாகவே பாவித்து வருகிறது. வீடுகளும், வீதிகளும், கிராமங்களும் இராணுவ ஆக்கிரமிப்பில் விழுங்கப்பட்டிருப்பதால் இடம் பெயர்ந்த பல்லாயிரம் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாது அவதிப்படுகிறார்கள். இப் பிரச்சினைக்குத் தீர்வு காணாத வரை யாழ்ப்பாணத்தில் சமூக அமைதியும் இயல்பு நிலையும் தோன்றுவது சாத்தியமில்லை.

போரை முடிவுக்கு கொண்டு வந்து, போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவசர, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை பேச்சுக்களின் ஆரம்ப கட்டத்தில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே அன்றும் சரி இன்றும் சரி எமது நிலைப்பாடாக இருந்து வருகின்றது. எமது நிலைப்பாட்டை முன்னைய அரசு நிராகரித்ததன் காரணமாகவே அன்றைய சமாதான முயற்சி தோல்வி கண்டது.

ஏதோ நாம் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தொடுவதற்குப் பயந்து, அன்றாடப் பிரச்சினைகளை வலியுறுத்துவதாக முன்னாள் அரசு தவறாகக் கருதியது. ஆயினும் இன்றைய அரசாங்கம், பேச்சுக்களின் ஆரம்பக் கட்டத்தில் எமது மக்களின் அவசரமான வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வந்து நடவடிக்கைகளை எடுத்து வருவது ஆக்கபூர்வமான அறிகுறியாகும்.

பேச்சுவார்த்;தையின்போது, எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் வரை, சகல விடயங்களையும் பேசுவதற்கு நாம் தயார். ஆயினும் பேச்சுக்கள் எவ்வித நிபந்தனைகளும் நிர்ப்பந்தங்களும் இன்றி, வரம்புகள் வரையறைகள் இன்றி, காலக் கட்டாயமின்றி, சுதந்திரமாக நடைபெறுவதையே நாம் விரும்புகின்றோம். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டு எல்லைக்குள் பேச்சுக்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென வற்புறுத்துவதோ, அன்றி நிர்ப்பந்திப்பதோ எமது மக்களின் அடிப்படை அரசியற் சுதந்திரத்தையும், தேர்வையும் மீறுவதாக அமையும். தமது அரசியல் தகைமையையும், தமது சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வையும் நிர்ணயிப்பது எமது மக்களின் அடிப்படையான அரசியல் உரிமையாகும். சுயநிர்ணய உரிமையின் சாராம்சமும் இதுதான்.

ஐ.நா. சாசனத்திலும், பிரகடனங்களிலும் குறிப்பிடப்படும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை மையப் பொருளாகக் கொண்டே எமது போராட்ட இலட்சியம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றும் சரி, இன்றும் சரி, சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்ட இலட்சியத்தில் நாம் உறுதி பூண்டு நிற்கின்றோம். தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை ஆகியனவையே எமது அரசியல் இலட்சியத்தின் அடிப்படைகள். திம்புவிலிருந்து தாய்லாந்து வரை இந்த அடிப்படைகளையே நாம் வலியுறுத்தி வருகின்றோம். இம் மூலக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகின்றது.

தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை.

உள்ளான சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது. உள்ளான சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்;டத்;தை சாதகமாக பரிசீலனை செய்வோம். ஆனால், அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளான சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு, பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

இனவாதமும், இனவாத ஒடுக்குமுறையுமே பிரிவினைவாத அரசியலுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மூல காரணமாக அமைகின்றன. நிலையான சமாதானத்தையும், இன ஒருமைப்பாட்டையும், பொருளாதார மேம்பாட்டையும் சிங்கள மக்கள் விரும்புவார்களானால் இனவாத சக்திகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காண முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சுயாட்சி அதிகாரமுடைய ஆட்சியை நிறுவி, தம்மைத் தாமே ஆளுவதற்கு சிங்கள மக்கள் தடையாக இருக்கக் கூடாது. தமிழர்களுடன் சமாதான சகவாழ்வை நடத்துவதா அன்றி தமிழர்களை பிரிந்து செல்ல நிர்ப்பந்திப்பதா என்பது சிங்கள தேசத்தின் அரசியற் போக்கில்தான் தங்கியிருக்கிறது.

நம்பிக்கையூட்டும் நல்லெண்ண சூழ்நிலையில், அரசு-புலிகள் மத்தியிலான பேச்சுக்கள் முன்னேற்றமடைந்து செல்வது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சமரசப் பேச்சுக்களில் உலக நாடுகள் காட்டும் ஆர்வமும், யுத்தத்தால் சிதைந்து கிடக்கும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்பி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க முன்வந்திருப்பதும் எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. நோர்வே அரசின் அனுசரணையுடன் நடைபெறும் சமாதான முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதும், இத் தீவில் வதியும் சகல சமூகத்தினரும் ஒற்றுமையாக, ஒத்திசைவாக ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதுமே எமது ஆழமான அவா. பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் உலகத்தின் நல்லாசியுடனும் நிகழ்ந்து வரும் சமாதானப் பேச்சுக்களை, தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்காகச் சிங்களப் பேரினவாத சக்திகள் குழப்பிவிட்டால், அது தமிழ் மக்களைத் தனியரசுப் பாதையில் இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

அமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.

சத்தியத்தின் சாட்சியாக நின்று, எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2001

Posted on

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2001.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

இன்று மாவீரர் நாள்.

விடுதலை வேண்டிக் களமாடி வீழ்ந்த எமது வீரப் புதல்வர்களை நாம் எமது நினைவில் உயிர்ப்பித்துப் பூசிக்கும் நன் நாள்.

தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம்செய்த சுதந்திர வீரர்களுக்கு நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் புனித நாள்.

விடுதலைக்காக எமது இயக்கம் கொடுத்த விலை அளப்பரியது. உலகத்தில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் புரியாத அற்புத சாதனைகளை நாம் ஈட்டினோம். ஒப்பற்ற ஈகங்களைப் புரிந்து தியாகத்தின் சிகரங்களைத் தொட்டோம். இதனால் மானிடத்தின் விடுதலை வரலாற்றில், ஒரு மகத்துவமான இடத்தைத் தேடிக்கொண்டோம். எமது இனத்தின் வீரத்திற்கும் விடுதலை உணர்விற்கும் பெருமை சேர்க்கும் இம்மகோன்னதநிலைக்கு டிம்மை இட்டுச் சென்றவர்கள் மாவீரர்களே.

மனித நாகரீகம் தோன்றிய காலந்தொட்டே மனிதர்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள். அடக்குமுறைக்கும், அநீதிக்கும் எதிராக, யுகம் யுகமாக விடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. உலகில் அநீதியும் அடக்குமுறையும் தொடரும்வரை விடுதலைப் போராட்டங்களும் தொடரும். ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.

இன்றைய உலக ஒழுங்கு மாறிவருகிறது. சர்வதேச அரசியல் உறவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மனித உரிமைப் போராட்டங்கள் சம்பந்தமாக உலகின் பார்வையும் மாறிவருகிறது. அரசியற் கோட்பாடுகளிலும் தார்மீகக் கொள்கைகளிலும் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக நடத்தப்படும் வன்முறை தழுவிய உரிமைப் போராட்டங்கள் அனைத்திற்குமே உலக அரசுகள் பயங்கரவாதம் என்ற முத்திரையைக் குத்தியுள்ளன. இந்தக் குறுகிய வரையறையின் அடிப்படையில் உண்மையான உரிமைப் போராட்டங்களும் பயங்கரவாதத்திற்கும் மத்தியிலான வேறுபாடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அடிப்படை அரசியல் சுதந்திரங்களுக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் இரத்தம் சிந்திப் போராடும் விடுதலை அமைப்புக்களின் தார்மீக அடிப்படைகளுக்கு இதுவொரு சாவாலாகவும் எழுந்துள்ளது. இதுவொரு கவலைக்குரிய விடயம். இந்தப் புதிய போக்குக் காரணமாகச் சர்வதேச அரங்கில் எமது சுதந்திர இயக்கத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுத்து நிற்கும் உலகநாடுகள் முதலில் அரசியல் வன்முறையின் மூலவேர்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அரசியல் வன்முறையின் தோற்றப்பாடு பற்றி ஓர் ஆழமான பார்வை இருந்தால்த்தான் உண்மையான விடுதலைப் போராட்டங்களுக்கும் குருட்டுத்தனமான, பயங்கரவாதச் செயல்களுக்கும் மத்தியில் வேறுபாடு காணமுடியும்.

உரிமைப்போரின் நியாயத்தன்மை

எமது பார்வையில் அரசியல் வன்முறையில் இரு பரிமாணங்கள் உள்ளன.

முதலாவது, ஒடுக்குமுறையாளரின் வன்முறை.

இரண்டாவது, ஒடுக்கப்படுவோரின் வன்முறை. ஒடுக்குமுறையாளர் எப்பொழுதுமே ஆளும்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அரச அதிகாரம் உடையவர்கள், ஆயுதப் படைகளை வைத்திருப்பவர்கள். ஒடுக்கப்படுவோர் எப்பொதுமே ஆளப்படும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தோராக சுரண்டப்படும் மக்கள் சமூகமாக, ஏழைகளாக, அடிமைகளாக இருப்பார்கள்.

முதற்தர வன்முறையை அரச வன்முறை எனலாம்.

இரண்டாந்தர வன்முறையை அரச வன்முறைக்கு எதிரான வன்முறை எனலாம். அரச வன்முறையானது, ஒடுக்குமுறையாளரின் அடக்குமுறையான வன்முறை என்பதால் அது அநீதியானது. ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்படுவோரின் வன்முறை நீதியானது. ஏனெனில் அது அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விதமான வேறுபாட்டில்தான் ஒடுக்கப்படும் மக்களது வன்முறை வடிவிலான உரிமைப் போராட்டங்கள் நியாயத்தன்மை பெறுகின்றன.

வன்முறை வடிவில் உருவகம் பெறும் அரசியல் உரிமைப் போராட்டங்கள் அரச வன்முறையின் எதிர்விளைவாகவே எழுகின்றன. உலக விடுதலைப் போராட்டங்களின் மூலத்தை ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை புரியும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று மூலலும் அதுதான். விடுதலைப் புலிகள் இயக்கம் உத்தமமாவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே இலங்கைத் தீவில் அரச ஒடுக்குமுறை தலை தூக்கியது. இனவாதத் தீயாக மூண்ட இந்த அரச ஒடுக்குமுறை படிப்படியாக வளர்ச்சிகண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை வடிவம் எடுத்தது.

சிங்கள அரச வன்முறைக்கு எதிராகத் தமிழர்கள் நிகழ்த்திய அகிம்சை வழியிலான அரசியற் போராட்டங்கள் அனைத்தும் அரச வன்முறையால் அடக்கியொடுக்கப்பட்டன. அமைதி வழிப் போராட்டங்கள் அர்த்தமற்றுப் போய்விட்ட அதேவேளை, அரச அடக்குமுறை தீவிரமடைந்து இனக்கொலைப் பரிமாணம் பெற்றதால், தமிழ் மக்கள் அரச வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இன்னொருவகையிற் சொல்வதானால், பேரழிவை எதிர் கொண்ட தமிழினம், தனது இருப்பிற்காக, தனது பாதுகதப்பிற்காக, ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த வரலாற்றுப் புறநிலையில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்று அரச வன்முறைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் எமது ஆயுத எதிர்ப்புப் போராட்டமானது. இன்று தமிழரின் அரசியற் போராட்ட வடிவமாக வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டிருக்கிறது. நாம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இனவாதக் கொடுமைக்கு எதிராக அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக, அரச பயங்கரவாத வன்முறைக்கு எதிராக நாம் விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம். எமது போராட்டம் ஒரு தீர்க்கமான, நியாயபூர்வமான அரசியற் குறிக்கோளைக் கொண்டது. ஐ.நா சாசனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் பயங்கரவாதிகள் அல்லர். மதவாத, இனவாத வெறியால் உந்தப்பட்டுக் குருட்டுத்தனமான வன்முறையில் ஈடுபடும் மனநோயளர்களும் அல்லர். மனித விடுதலை என்ற உன்னதமான விழுமியத்திற் காதல் கொண்டே நாம் உயிரைக் கொடுத்துப் போராடிவருகின்றோம். நாம் சுதந்திர தாகம் கொண்ட இலட்சியவாதிகள். நாம் சுதந்திரப் போராளிகள். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எம்மை அழிப்பதற்கு முயன்று தோல்வி கண்ட சிங்கள அரச பயங்கரவாதிகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத மூலாம் பூசிவருகிறார்கள். இந்த அரச பயங்கரவாதிகின் பொய்யான விசமத்தனமான பரப்புரைகளை நம்பி உலக நாடுகள் சில எமது விடுதலை அமைப்பையும் பயங்கரவாதிகள் பட்டியலிற் சேர்த்துள்ளன. இது எமக்கு கவலையையும் ஏமாற்றத்தையும் கொடுக்கிறது. ஆயுத எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்து நிற்கும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் வரலாற்றையும் நியாயப் பாடுகளையும் சீர்தூக்கிப் பாராது இராஜதந்திர அழுத்தங்களுக்குப் பணிந்து, அவசரப்பட்டு எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். குறிப்பாகச் சிங்கள இனவாத ஆட்சியாளர்களுக்கு இவை ஓர் தவறான தகவலைக் கொடுக்கும். அவர்களது விட்டுக்கொடுக்காத கடும்போக்கை மேலும் கடுமையாக்கும். அத்தோடு அவர்களது இராணுவ அடக்குமுறைக் கொள்கைக்கும் ஊக்கமளிப்பதாக அமையும். ஒட்டுமொத்தத்தில் மேற்குலக நாடுகளின் இந் நடவடிக்கைகள் சமாதான வழிமூலமான தீர்விற்குத் குந்தகம் விளைவித்து, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையை மேலும் சிக்கலடையச் செய்யும். பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுத்துள்ள போரில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசுகளும் அணிசேர்ந்து நிற்கின்றன. இனவாத ஒடுக்குமுறைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் புகழ்போன பல அடக்குமுறை அரசுகளும் இந்தச் சர்வதேசக் கூட்டணியில் இணைந்து நிற்கின்றன. அதாவது, காவற்துறையினருடன் கொலைக் குற்றவாளிகள் கைகோர்த்து நிற்பதுபோல நாம் இங்கு சிறீலங்கா அரசை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம்.

இனக்கொலைப் பரிமாணத்தில் மனித உரிமை மீறல்களை நடத்தி, உலக சாதனை ஈட்டியிருக்கும் இந்தப் பயங்கரவாத அரசு, உலகப்பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச கூட்டயிணில் இணைந்து நிற்கிறது. இன்றைய சர்வதேச ஒழுங்கமைப்பில் இது ஓர் ஆபத்தான போக்கைக் குறித்துக் காட்டுகிறது. உலக ரீதியாக அரச அடக்குமுறைக்கு ஆளாகி நிற்கும் மக்கள் சமூகங்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களும் இப்புதிய போக்கானது ஓர் அச்சுறுத்தலாக அமைகிறது. பயங்கரவாத வன்முறைக்கு எதிராகப் போர்தொடுத்து நிற்கும் மேற்குலக நாடுகளின் ஆவேசத்தையும், அச்சங்களையும் நிர்ப்பந்தங்களையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையான பயங்கரவாதிகளை இனங்கண்டு தண்டிக்கும் நோக்குடன் சர்வதேச உலகம் மேற்கொள்ளும் பயங்கவாத எதிர்ப்பு நடவடிக்களை நாம் வரவேற்கிறோம். ஆயினும், அதேவேளை தீவிரவாத வெறியில் எழும் குருட்டுத்தனமான பயங்கரவாதத்திற்கும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் மத்தியிலான வேறுபாடினை விளக்கும் வண்ணம் மேற்குலக சனநாயக நாடுகள் பயங்கரவாதம் என்ற பதத்திற்கு விரிவான, விளக்கமான வரையறையைக் கொடுப்பது அவசியமாகும், உள்நாட்டில் இனக்கொலைப் பரிமாணத்திற் கொடுமைகளை இழைத்துவரும் அடக்குமுறை ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதத்தை சர்வதேச உலகம் அலட்சியம் செய்ய முடியாது. இந்தப் பயங்கரவாத அடக்குமுறை அரசுகளை இனங்கண்டு தண்டிக்க உலகம் முன் வரவேண்டும்.

விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். விடுதலைப் புலிகள் வேறு, எமது மக்கள் வேறு அல்லர். எமது மக்களும் நாமும் ஒன்றாகப் பிணைந்து, ஒன்றுபட்ட சக்தியாக ஒரே இலட்சியப் பாதையில் எமது தாயகத்தின் விடிவிற்காகப் போராடி வருகிறோம். எமது இயக்கத்தை எமது மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சந்திரிகா அரசு வஞ்சகமான வழிகளைக் கையாண்டது. எம்மைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனம் செய்து, எமது இயக்கம் மீது தடையை விதித்தது. இதனைத் தொடர்ந்து சந்திரிகாவும் அவரது வெளிவிவகார அமைச்சரான திரு. கதிர்காமரும் எமது இயக்கத்தையும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாத பூதமாகப் பூச்சாண்டிகாட்டிச் சர்வதேச அரங்கில் தீவிர பரப்புரைப் போரைத் தொடுத்தனர். இதன் விளைவாக அமெரிக்காவும் பிரிட்டனும் அதனைத் தொடர்ந்து சமீபத்தில் கனடாவும் எமது விடுதலை அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலிற் சேர்த்துள்ளன.

நாம் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்பதும் நாம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஒரு சுதந்திர இயக்கம் என்பதும் எமக்குப் பின்னால் எமது மக்களின் ஏகோபித்த ஆதரவு அணிதிரண்டு நிற்கிறது என்பதும் எம்மைத் தடைவிதித்த இந்நாடுகளுக்கு நன்கு தெரியும். அத்தோடு, தமிழரின் தேசிய இனப்பிச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காணப்படவேண்டும் என்பதும் சிறீலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காணவேண்டும் என்பதும் இந்நாடுகளின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்நிலைப்பாடானது ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறது. அதாவது, தமிழீழ மக்களின் அரசியற் பிரதிநிகளாகவே விடுதலைப் புலிகளை இந்நாடுகள் கருதுகின்றன. அப்படி என்றால் ஏன் எமது அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக இந்நாடுகள் முத்திரை குத்த வேண்டும்? எனவே, இந்நடவடிக்கையானது எந்தவகையிற் சமாதான ரீதியான ஒரு தீர்வை ஏற்படுத்த ஏதுவாக அமையும் என்பது எமக்குப் புரியவில்லை.

சிறீலங்கா அரசாங்கம் எம்மீது விதித்துள்ள தடையை நீக்கி, எமது இயக்கத்தைத் தமிழீழ மக்களின் உண்மையான, சட்ட ரீதியான அரசியற் பிரதிநியாக ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நாம் சமாதானப் பேச்சு வார்த்தைகளிற் பங்குபற்றப் போவதில்லையென்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் மிகவும் உறுதியாக இருக்கிறோம். நோர்வே அரசிடமும், நாம் இதனை திட்டவட்டமாக கூறியிருக்கிறோம். விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டால்தான் இலங்கைத் தீவில் சமாதானம் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. இப்படியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசின் அழுத்தத்திற்கு இசைந்து மேற்குலக நாடுகள் எம்மீது தடைகளை இறுக்கினால் அது சமாதானப் பேச்சுக்கும், சமாதான வழியிலான தீர்விற்கும் வழிகோலப் போவதில்லை. மாறாக, சமாதானப் பேச்சுக்குப் புலிகள் மீதான தடை நீங்க வேண்டும் என்ற எமது மக்களின் கோரிக்கைக்கு இந்நடவடிக்கைகள் மேலும் வலுச்சேர்க்கும்.

முழு அளவிலான போர் நெருக்கடியாக வெடித்துள்ள தமிழரின் தேசிய இனப்பிரச்சினை, அடிப்படையில் ஓர் அரசியற் பிரச்சினை என்பதை நாம் அறிவோம். இனப்பிரச்சினையைச் சமாதான வழிமுறைகள் மூலமாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை இன்னும் எம்மிடம் முற்றாக இடிந்து போகவில்லை. சிங்கள அரசியல் தலைமைகள் உண்மையாக, உறுதியுடன் மனம் வைத்தால் சமாதானமும் இணக்கப்பாடும் ஏற்படும் சாத்தியமுண்டு.

இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் கிடைத்து ஐம்பத்தி மூன்று ஆண்டுகள் ஆகியும் சிங்கள அரசியல் தலைமைகள் இன்னும் இனவாத சித்தாந்தச் சக்திக்குள்ளிருந்து வெளிவரவில்லை. இதனால் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை யதார்த்தமாக, புறநிலை நோக்குடன் அணுகித் தீர்க்கும் மனப்பக்குவம் அடையவில்லை. அடக்குமுறையாலும் ஆயுதப் பலத்தாலும் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்ற மனநிலையே சிங்கள அரசியல் உலகில் மேலோங்கி நிற்கிறது. இதன் காரணமாக எந்தவொரு சிங்களக் கட்சிகசியிடமும், தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் அணுகுமுறையோ, கொள்கைத் திட்டமோ இருக்கவில்லை. இந்த உண்மை சர்வதேச சமூகத்திற்குத் தெரியாததல்ல. தமிழர் பிரச்சினைக்குச் சமாதான வழிமூலமான தீர்வை வலியுறுத்தும் உலக நாடுகள், அதேசமயம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்தும் சிறீலங்காவின் இராஜதந்திர நகர்வுகளுக்கும் போர் முயற்சிகளுக்கும் முண்டுகொடுத்து உதவத் தவறவில்லை. உலக நாடுகளின் இந்த விசித்திரமான அணுகுமுறையும் தமிழரின் பிரச்சினை தீராது இழுபடுவதற்கு ஒரு காரணம் எனலாம்.

சமாதானத்தின் கதவுகளை நாம் தட்டியவண்ணமே இருக்கிறோம். ஆனாற் சந்திரிகா அரசு சமாதானத்தின் கதவுகளைத் திறக்க மறுக்கிறது.

சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் நாம் நோர்வேயின் தூதுவர்களைச் சந்தித்து உரையாடியதையடுத்து சமாதான முயற்சியை முன்னெடுக்கும் நோக்குடன் நான்கு மாதங்களுக்கு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தம் செய்தோம். சந்திரிகா அரசு எமது அமைதி முயற்சியைக் கேலிசெய்து நிராகரித்ததுடன் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. இறுதியாக எமது போர்நிறுத்தம் முடிவடைந்த ஒரு சில மணி நேரத்திற்குள் “அக்கினிச் சுவாலை” என்ற பாரிய படையெடுப்பை மேற்கொண்டது. இப்படையெடுப்பை முறியடித்து நாம் நடத்திய மூர்க்கமான எதிர்த் தாக்குதல் சிங்கள அரசுக்கு ஓர் உண்மையைப் புலப்படுத்தியது. அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட முடியாத பலம் பொருந்திய சக்தியாக இருக்கிறது என்பதை உணர்த்தியது.

ஆள்பலத்தோடும் ஆயுதப் பலத்தோடும் நாம் வலுமிக்க போராட்ட சக்தியாக வளர்ச்சிகண்டு நின்றபோதும் சமாதான வழிமுறைக்கு வாய்பளிக்கும் நோக்குடன் இவ்வாண்டு தரைமார்க்கமாகப் பாரிய படை நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வில்லை. நோர்வே அரசின் சமாதான முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கி வந்தோம். இந்தச் சூழ்நிலையில் தான் நோர்வேயின் சமாதானத் தூதுவரான திரு. எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்குப் பக்கசார்பானவர் எனப் பொய்க் குற்றம் சாட்டி, சந்திரிகா அரசு அவரை ஓரம் கட்டி ஒதுக்கியது. இதனை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நோர்வே அரசின் சமாதான முயற்சிக்குத் தடை ஏற்பட்டது. இதற்குப் பொறுப்பாளி சந்திரிகா அரசுதான். மிகவும் நெருக்கடியான வரலாற்றுத் திருப்பத்தில் இலங்கைத் தீவில் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாம் பாராளுமன்றத்திற்குப் புறம்பாக நின்று போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலை அமைப்பு என்பதால் நாம் தேர்தல்களில் அக்கறை காட்டுவதில்லை. எனினும் எதிர்வரும் பொதுத்தேர்தல் தமிழீழத்திலும் தென்னிலங்கையிலும் விடுதலைப் புலிகளை மையப் பொருளாகக்கொண்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதன்மையான பிரச்சினையாக முனைப்புற்று நிற்கும் தமிழரின் தேசிய இனச்சிக்கலானது சமாதானம், போர் என்ற இரு முரண்பட்ட துருவங்களில் அரசியல் சக்திகளை ஈர்த்துவருகிறது. சமாதானம் வேண்டிநிற்கும் சக்திகளுக்கும் சமாதானத்திற்கு விரோதமான தீவிரவாத சக்திகளுக்கும் மத்தியிலான போட்டியாக இத் தேர்தல் நடக்கிறது. எனவே எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவவேண்டுமா போர் தொடரவேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காதவரை அவர்களது அரசியல் அபிலாசைகள் நிறைவேறாதவரை இத்தீவில் சமாதானமும் இன ஒத்திசைவும் பொருளாதார மேம்பாடும் ஏற்படப்போவதில்லை என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் சிங்கள மக்களுக்கு விரோதிகள் அல்லர். எமது போராட்டமும் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள இனவாத அரசியல் வாதிகளின் அடக்குமுறைக் கொள்கை காரணமாகவே தமிழ், சிங்கள இனங்கள் மத்தியில் முரண்பாடு எழுந்து போராக வெடித்திருக்கிறது. ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமைகொள்ள முனையும் அரசுக்கும் அரச படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்துவருகிறோம். இந்தப் போரானது தமிழ் மக்களை மட்டுமன்றி சிங்கள மக்களையும் ஆழமாகப் பாதித்து வருகிறது. என்பது எமக்குத் தெரியும்.

போர் வெறிகொண்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக் கொள்கையால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிச் சிங்கள இளைஞர்களும் அநியாயமாகக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி, இப்போரினால் எழும் பொருளாதாரப் பளுவை சிங்களப் பொது மக்களே சுமக்க வேண்டியுள்ளது என்பதும் எமக்குத் தெரியும். எனவே இக்கொடிய போருக்கு முடிவுகட்டி, நிரந்தரச் சமாதானத்தை நிலைநாட்டுவதாயின் போர் வெறிகொண்ட இனவாத சக்திகளை இனம்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நீதி வழங்கவும் சிங்கள மக்கள் முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில் வரலாற்று ரீதியாகத் தாம் வாழ்ந்துவந்த தாயக மண்ணில், நிம்மதியாக, சமாதானமாக கௌரவத்துடன் வாழவிரும்புகிறார்கள். அவர்களது அரசியற் பொருளாதார வாழ்வை அவர்களே நிர்ணயித்துக்கொள்ள விரும்புகிறார்கள். தம்மை நிம்மதியாகத் தம்பாட்டில் வாழவிடுமாறு கேட்கிறார்கள். இதுதான் தமிழர்களது அடிப்படையான அரசியல் அபிலாசை இது. பிரிவினைவாதமோ, பயங்கரவாதமோ அல்ல தமிழர்களது இக்கோரிக்கை சிங்கள மக்களுக்கு எந்த வகையிலும் ஓர் அச்சுறுத்தலாக அமையவில்லை. சிங்கள மக்களது அரசியற் சுதந்திரங்களையோ அல்லது அவர்களது சமூக பொருளாதார, கலாச்சார வாழ்வையோ இக்கோரிக்கையானது எவ்வகையிலும் பாதிக்கவில்லை. தமது சொந்த நிலத்தில் தம்மைத் தாமே ஆளும் ஆட்சியுரிமையோடு வாழ வழிவகுக்கும் ஓர் அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியற் தீர்வு அமையவேண்டுமென அவர்கள் வலியுறுத்துவதும் இதைத்தான்.

தமிழ் மக்களின் அடிப்டையான அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்யும் அரசியல் தீர்வுதிட்டம் குறித்துச் சிங்கள அரசுடன் பேச்சுக்களில் பங்குபற்றுவதற்கு எமது இயக்கம் தயாராக இருக்கிறது. நாம் சமத்துவமாக, சுதந்திரமாகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகைமையுடன் அவர்களது உண்மையான போராட்டச் சக்தி என்ற அங்கீகாரத்துடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதாயின், எமது இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும். தமிழீழ மக்களது ஒட்டுமொத்தமான அபிலாசையும் இதுதான். இதனைச் சிங்கள அரசியற் தலைமைகளும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.

பரஸ்பரம் நம்பிக்கையூட்டும் ஒரு நல்லெண்ணச் சூழ்நிலையில் பேச்சுக்கள் நிகழவேண்டும். போர் நெருக்கடியும் பொருளாதாரத் தடைகளும் நீங்கிய இயல்பான, அமைதியான சூழ்நிலையில்தான் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறவேண்டும் என நாம் காலங்காலமாக வலியுறுத்தி வருகின்றோம். இந்த நிலைப்பாட்டையே நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழி மூலம் தீர்வுகாணப்பட்டால் தமிழர்களும் சிங்களவர்களும் ஏனைய சமூகத்தினரும் இந்த அழகிய தீவில் ஆனந்தமாக ஒத்திசைவாக ஒன்றுகூடி வாழ முடியும். ஆயினும், அதேவேளை சமாதான மார்க்கமாகப் பிணக்கைத் தீர்ப்பதற்கு சிங்கள தேசம் இணங்க மறுத்தால் தமிழர்களாகிய நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.

சிங்களத்தின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இனவாதம் நீடித்து நிலைக்குமானால், அந்த இனவாதமே தமிழீழத் தனியரசு பிறப்பதற்கான புறநிலையை அமைத்துக்கொடுக்கும்.

தமிழீழத் தனியரசு உதயமாவது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி என்றால் எந்தவொரு சக்தியாலும் அதனைத் தடுத்துவிட முடியாது. என்றோ ஒரு நாள் தமிழீழத் தனிநாடு பிறந்து எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2000

Posted on

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2000.

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே…,

எமது மண்ணிற்காக விடுதலை என்ற உன்னத விழுமியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த எம் உயிர் வீரர்களை நாம் நினைவு கொள்ளும் இன்றைய நாள் ஒரு புனித நாள். இந்த நன்னாளில் ஆன்மக்கதவுகளை அப் புனிதர்களுக்காக திறந்து கொள்வோம்.

நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால் சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் மாவீரர்களை இன்று கௌரவிப்பதில் தமிழீழ தேசம் பெருமை கொள்கிறது.

மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும்பொழுது அந்த எரியும் சுடரில் அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன்.

அக்கினியாக பிரகாசித்தபடி ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதிபோல ஒளிகாட்டி, வழிகாட்டிச் செல்லும் ஒரு அதிசயக்காட்சி திடீரென மனத்திரையில் தோன்றி மறையும்.

மாவீரர்களே எமது சுதந்திரப் பயணத்தின் வழிகாட்டிகள், அவர்களது வாழ்வும் வரலாறும் எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றுபவை, அவர்களே எமக்கு ஒளிகாட்டிகள்.

மாவீரர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி அவர்களை நினைவுகொள்ளும் இந்தப் புனித நாளில், நாமும் எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டிக்கொள்வோம். எமது தேசத்தின் சுதந்திரத்திற்காக அந்த உன்னத இலட்சியத்தை அடைவதற்காக எத்தகைய இடர்களையும், எத்தகைய துன்பங்களையும், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்போமென நாம் எமக்குள் வீரசபதம் செய்துகொள்வோம்.

எனது அன்பான மக்களே,

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்று நாமொரு முக்கிய திருப்புமுனையை அடைந்திருக்கிறோம். எமது படையணிகள் ஒப்பற்ற இராணுவ சாதனைகளை நிலைநாட்டி எமது தேசத்தின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தின் வாசற்படியை அண்மித்து நிற்கின்றன.

யாழ்ப்பாணத்தின் கழுத்தைத் திருகியபடி குடாநாட்டை வன்னி மாநிலத்துடன் துண்டித்து வைத்திருந்த ஆனையிறவுப் பெருந்தளம் புலிப்படை வீரர்களால் மீட்கப்பட்டமை இவ்வாண்டு நாம் ஈட்டிய மாபெரும் இராணுவ வெற்றியாகும். தகர்க்க முடியாத இரும்புக் கோட்டையாக இருபதினாயிரம் இராணுவத்தினருடன் தொடர்வலய முகாம்களால் சூழப்பட்டு பரந்தனில் இருந்து பளை வரையும் கரையோரத் தளங்களோடும் 80 சதுரமைல் நிலப்பரப்பைக் கொண்ட ஆனையிறவுப் பெருந்தளம் எம்மால் வெற்றிகொள்ளப்பட்ட நிகழ்வானது உலகப் போரியல் வரலாற்றுச் சமரில் புலிகள் வரித்த நுட்பமான போர் வியூகங்களும் திகைப்பூட்டும் தரை இறக்கங்களும் வீரம்செறிந்த தாக்குதல்களும்- தந்திரோபாயங்களும் போரியற்கலையில் எமது விடுதலை இயக்கத்தின் அபாரமான வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டியது. வெளிநாட்டில் பயிற்சி பெற்று உள்நாட்டில் களமாடி முதிர்ச்சிபெற்ற சிங்களத்தின் சிறப்புப் படையணிகள் இச்சமரில் சிதைக்கப்பட்டன. இந் நிகழ்வானது சிங்களத்திற்கு இராணுவ பொருளாதார ரீதியில் முண்டுகொடுத்து நிற்கும் உலக வல்லரசுகளை திகைப்பில் ஆழ்த்தியது.

ஆனையிறவுப் பெருந்தளத்தை வெற்றிகொண்டு தென்மராட்சியிலும் வடமராட்சி கிழக்கிலும் பெருமளவு நிலங்களை மீட்டெடுத்த அதேவேகத்தோடு கிழக்கு அரியாலை வழியாக எமது படையணி ஒன்று யாழ்ப்பாணத்தின் நகராட்சி எல்லைக்குள் பிரவேசித்தது. அதேசமயம் எமது மற்றைய படையணிகள் தனங்கிளப்பு வழியாக நாவற்குழி, கைதடி, மட்டுவில் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன. யாழ்ப்பாண நகரம் அரைப்பிறை வியூகத்தில் சுற்றிவளைக்கப்பட்டது. இதனையடுத்து, ஒரேயொரு ஆகாய விநியோக மார்க்கமாக விளங்கிய பலாலிப் பெரும்தளம் எமது பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகியது. மின்னல் வேகத்தில் நிகழ்ந்த இத்திடீர்த் திருப்பங்களின் விளைவாக, சந்திரிகா அரசு என்றுமில்லாத இராணுவ நெருக்கடியை சந்தித்தது. சந்திரிகா அம்மையார் நிலைகுலைந்து போனார். ஆயினும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சர்வதேச உலகத்தின் உதவிபெற்று நெருக்கடியை சமாளிக்கத் திட்டமிட்டார். யாழ்ப்பாணம் புலிகளிடம் வீழ்ந்தால் அங்குள்ள முப்பதினாயிரம் சிங்களப் படையினருக்கும் உயிராபத்து ஏற்படும் என உலகெங்கும் அபாயச் சங்கை ஊதினார். இந்த அபாய அறிவிப்பைக் கேட்டதுமே அனைத்துலக நாடுகளும் அம்மையாருக்கு உதவிசெய்ய முன்வந்தன.

இந்தியக் கடற்படையின் உதவியுடன் சிங்கள இராணுவத்தினரை பாதுகாப்பாக மீட்டெடுக்க இந்தியா முன்வந்தது. இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அவசர ஆயுத உதவி வழங்க முன்வந்தன. முழு உலகமுமே அம்மையாரின் பின்னால் அணிதிரண்டது. மிகவும் சக்திவாய்ந்த நவீனரக அழிவு ஆயுதங்கள் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டன. இஸ்ரேலும், ரஷ்யாவும் நவீனரக போர் விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் அனுப்பிவைத்தன. அவசர அவசரமாக ஆயுத ரீதியில் சிங்கள இராணுவ இயந்திரம் வலுப்படுத்தப்பட்டது. அபாயச் சங்கை ஊதி உலகத்தின் உதவியைப் பெற்று இராணுவத்தைப் பலப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போரைத் தொடரும் சந்திரிகாவின் தந்திரோபாயம் வெற்றிபெற்றது. யாழ்பப்பாணச் சமரில் ஒருதலைபட்சமாக உலகநாடுகள் குறுக்கிட்டு சிங்களத்திற்கு உதவிகளை வழங்கியதால் எமது போர்த் திட்டங்களை தாமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது.

1995ல் யாழ்ப்பாண நகரை சிங்கள ஆயுதப்படைகள் ஆக்கிரமித்தபோதும் அதன்விளைவாக ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த மாபெரும் மனித அவலம் ஏற்பட்டபோதும், உலகம் கண்களை மூடிக்கொண்டு மௌனம் சாதித்தது. ஆனால் இப்போது சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு படிப்படியாக உடைக்கப்பட்டு மீண்டும் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் வரும் புறநிலைகள் தோன்றியபோது உலகநாடுகள் பதட்டமடைந்து சிங்கள அடக்குமுறை ஆட்சியாளருக்கு உதவிகளைச் செய்வது எமக்கு ஒருபுறத்தில் ஏமாற்றத்தையும் மறுபுறத்தில் கவலையையும் கொடுக்கிறது.

யாழ்ப்பாணம் சிங்கள தேசத்திற்கு உரித்தானது அல்ல. யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களுக்கே உரித்தானது. இறையாண்மை என்பது ஒரு அரசின் தெய்வீக சொத்துரிமையல்ல. இறையாண்மையானது மக்களிடம் இருந்தே பிறக்கிறது. அது மக்களுக்கே சொந்தமானது. யாழ்ப்பாணத்தின்இறையாண்மை யாழ்ப்பாண மக்களுக்கே உரித்தானது. இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் தமிழரின் வரலாற்று மண்ணில் சிங்களத்தின் இறையாண்மையை திணித்துவிட முடியாது. தமிழரின் விடுதலைப்படை என்ற ரீதியில் நாம் எமது மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு இடமளிக்கப்போவதில்லை.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தகைய சக்திகள் எதிர்த்து நின்றாலும் எமது விடுதலை இயக்கம் யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்தே தீரும்.

எல்லாச் சமர்களுக்கும் தாய்ச்சமராக விளங்கிய ஆனையிறவுச் சமரிலும் மற்றும் வடமராட்சி, தென்மராட்சி, யாழ்ப்பாண நகராட்சிப் பகுதிகளில் நிகழ்ந்த சமர்களிலும் களமாடி சாதனைபடைத்த சகல போராளிகளுக்கும், படை நகர்த்திய தளபதிகளுக்கும் எனது பாராட்டுக்கள். எல்லைப்படையாக அணிதிரண்ட எமது மக்கள் இந்தச் சமர்களில் நேரடியாக பங்குகொண்டு போராடியது எமது விடுதலைப் போராட்டத்திற்கு புதிய தெம்பையும் பலத்தையும் அளித்தது. குடும்பப்பொறுப்புக்களைச் சுமக்கும் இவர்கள் தேசப்பற்றால் ஈர்க்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி எடுத்து பெரும் நிலமீட்புச் சமர்களில் பங்குகொள்வது எமது தேசத்திற்கு பெருமை சேர்க்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பரந்துபட்ட பொதுமக்கள் இணைந்துகொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டம் என்ற உயர்நிலை அரசியல் பரிமாணம் பெறுகிறது. எமது ஆயுதப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு மேலும் பெருகவேண்டும் அதுதான் எமது போராட்டத்தில் பாரியதிருப்புமுனைகளை ஏற்படுத்தும், அதுதான் எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு முடிவுகட்டி எமது விடுதலை இலட்சியத்தை வெகுவிரையில் நிறைவுபெறச் செய்யும்.

எனது அன்பான மக்களே,

மீண்டும் ஆறாண்டுகாலம் சந்திரிகாவின் ஆட்சி தொடரப்போகின்றது. இந்த ஆறாண்டு காலமும் இத்தீவில் அமைதி நிலவுமா அல்லது போரும் வன்முறையும் தலைவிரித்தாடுமா என்பது சந்திரிகா கடைப்பிடிக்கப்போகும் கொள்கையிலும் அணுகுமுறையிலும் தான் தங்கியிருக்கிறது.

இந்த அரசானது, தென்னிலங்கை இனவாத சக்திகளின் ஆதரவோடுதான் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது. புலிகளுக்கு எதிராக போர்முரசு கொட்டித்தான் தேர்தலை சந்தித்திருக்கிறது. மிகவும் மோசமான தேர்தல் மோசடிகள், வன்முறைகள் வாயிலாகவே வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. இனவாதக் கடும்போக்காளர்களே இந்த அரசின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கிறார்கள். இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் பதவியேற்றிருக்கிறார்கள். ஆயுத வன்முறையை பாவித்து மிகவும் கேவலமான தேர்தல் மோசடிகளைச் செய்து சனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய தமிழ்த் துரோகிகளும் இந்த ஆட்சிபீடத்திற்கு முண்டுகொடுத்து நிற்கிறார்கள். இப்படியாக இனவாதிகளையும் தமிழினத் துரோகிகளையும் நிர்வாக உயர்பீடங்களில் அமர்த்தி அவர்களது தயவில் தங்கிநிற்கும் சந்திரிகா அரசு, தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை தீர்க்க துணிவான முடிவுகளை எடுக்குமா என்பது சந்தேகமே.

போர்பற்றியும் சமாதானம் பற்றியும், இனப்பிரச்சனையை தீர்ப்பது பற்றியும், இந்த அரசிடம் ஒரு தெளிவான பார்வையும், திடமான அணுகுமுறையும் இருக்கவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களே முன்வைக்கப்பட்டுகின்றன. பல்வேறு கருத்தோட்டங்களை கொண்டவர்களும் கடும்போக்காளரும் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருப்பதால் இந்த அரசானது பல நாக்குகளால் பேசுகிறது. மிகவும் குழப்பகரமாகப் பேசுகிறது. புலிகளுடன் பேசத்தயார் என ஒரு குரலும், புலிகளைப் பூண்டோடு அழிப்போம் என இன்னொரு குரலும், புலிகள் சரணடையும்வரை போர் ஓயாது என மற்றொரு குரலுமாக ஜனாதிபதி, பிரதம மந்திரி, இராணுவத் தளபதி ஆகிய உயர் அதிகாரபீடங்களில் இருந்தே இத்தகைய முரணான குரல்கள் எழுப்பப்படுகின்றன. இந்த வித்தியாசமான குரல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் நோக்குடனேயே எழுப்பப்படுகின்றன. சந்திரிகாவும், கதிர்காமரும் வெளிநாடுகளுக்கு ஏமாற்று வித்தைகாட்ட பிரதம மந்திரியும், இராணுவத் தளபதியும் உள்நாட்டு இனவாத சக்திகளுக்கு தீனிபோட்டு வருகின்றனர்.

மேற்குல நாடுகள் சமாதானத்தை விரும்புகின்றன. சமாதான வழியில் அரசியற்தீர்வு காணப்படுவதை விரும்புகின்றன. போர் மூலமாக தமிழரின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது என்பதை வலியுறுத்துகின்றன. எனவேதான், மேற்குலக நாடுகளை திருப்திப்படுத்தும் வகையில் நுட்ப்பமான பிரச்சார அறிக்கைகளை சந்திரிகா வெளியிட்டு வருகிறார். சமாதானம் என்றும், பேச்சுவார்த்தை என்றும், அதிகாரப் பரவலாக்கம் என்றும், அரசியலமைப்பு என்றும் வார்த்தைப் பிரயோகங்களை கையாண்ட மேற்குலகின் கண்களுக்கு மண்தூவி வருகின்றார்.

தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பொறுத்தவரை சந்திரிகா ஒரு சமாதானப் பிரியை அல்ல. இராணுவத் தீர்வில் நம்பிக்கைகொண்ட கடும் போக்காளராகவே அவரை நாமும் எமது மக்களும் கருதுகிறோம். அவரது ஆறாண்டுகால அரசியல் வரலாறும், தமிழ் மக்களை தொடர்ந்தும் இராணுவ பொருளாதார கொடுமைகளுக்கு ஆளாக்கிவரும் அவரது அணுகுமுறையும் சமீபத்திய அவரது போர்த்தயாரிப்பு நடவடிக்கைகளுமே எம்மையும் எமது மக்களையும் இத்தகைய நிலைப்பாட்டிற்கு தள்ளியது. இராணுவச் செலவீனத்திற்கு ஒதுக்கப்படும் பெரும்தொகை நிதி, பாரிய அளிவிலான ஆயுதக் கொள்வனவு, இடைவிடாது படைக்கு ஆட்சேர்ப்பு, விலகிய இராணுவத்தினரை விரட்டிப் பிடித்தல் இப்படியாக இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்தி போருக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது சந்திரிகா ஒரு இராணுவவாதக் கடும் போக்காளர் என்பது புலனாகும்.

இம் மாதம் ஒன்பதாம் திகதி புதிய பாராளுமன்றத்தை திறந்துவைத்துப் பேசிய சந்திரிகா, தமிழரின் இனப்பிரச்சனை குறித்து வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் சந்திரிகாவின் குழப்பகரமான பார்வையும் அணுகுமுறையும் தெளிவாகும். இந்த அறிக்கையில் தமிழரின் இனப்பிரச்சனையின் தோற்றம் பற்றி விளக்கமுனையும் சந்திரிகா, கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழருக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார். ஆயினும் தமிழர் என்று குறிப்பிடாமல் சிறுபான்மை சமூதாயங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொதுப்படையாகக் கூறுகிறார். இந்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார அதிகாரக் கட்டமைப்பில் பங்குகொள்வதற்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு நியாயமான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை. அதுதான் இனப்பிரச்சனையின் தோற்றப்பாட்டிற்கு உண்மையான காரணம் என்று சந்திரிகா விளக்கம் அளிக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்களுக்கு எதற்காக அநீதி இழைக்கப்பட்டது? யாரால் இழைக்கப்பட்டது? எப்படி, எந்த வடிவங்களில் இழைக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு சந்திரிகா பதல் தரவில்லை. மாறாக தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த அநீதிகள் அனைத்திற்கும் அந்நிய காலனித்துவம் மீது பழியைச் சுமத்திவிடுகிறார். சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டங்கள் காலனித்துவ அதிகார கட்டமைப்பில் இருந்து உருவாக்கம் கொண்டவை என்றும், இவை எமது சமூகத்தில் நிகழும் புறநிலைக்களுக்கு ஏற்றதாக அமையவில்லை என்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இந்த அரசியலமைப்புச்சட்டங்களே காரணமாக இருப்பதாகவும் சந்திரிகா கூறுகிறார். சந்திரிகா அளிக்கும் இவ் விளக்கத்தில் தமிழருக்கு எதிரான சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கொடூரமான ஒடுக்குமுறை வரலாறு மிகவும் சாணக்கியமான முறையில் மூடிமறைக்கப்படுகிறது. அத்தோடு இந்த இன ஒடுக்குமுறை வரலாற்றில் சந்திரிகாவின் பெற்றோரது பங்கும் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அரசியலமைப்பில் குறைகாண்பது, அந்த அரசியல் அமைப்பை அந்நிய காலனித்துவத்தோடு தொடர்பு படுத்துவதும் முழுப்பூசணிக்காயை சேற்றில் மறைக்க முயலும் கேலிக்கூத்தான விடயம்.

அந்நிய காலனித்துவ தலையீடு காரணமாகவே தமிழீழ மக்கள் தமது வரலாற்று தாயகம் மீதான இறையாண்மையை இழந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. ஆனால், தமிழினம் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறையானது இலங்கைத்தீவு ஆங்கிலக் காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னரே ஆரம்பமாகிறது. இந்த ஒடுக்குமுறைக்கு காரணகர்த்தாவாக விளங்குவது சிங்கள பௌத்த இனவாதமாகும். பௌத்த மதத்தில் வேர் பாய்ச்சி, சிங்கள சமூகக் கட்டமைப்பில் விருட்சமாக வளர்ந்திருக்கும் இப் பேரினவாத சித்தாந்தம். சிங்கள அரசியல் உலகையும் ஆழமாக ஊடுருவி நிற்கிறது. சிங்கள அரசியல்வாதிகளால், படைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டங்களும் இந்த பேரினவாத சித்தாந்தத்தின் ஒரு வடிவம். ஆகவே தமிழருக்கு கொடுமை இழைத்துவருவது சிங்கள பௌத்த இனவாதமே தவிர சந்திரிகா கூறுவது போல ஆங்கில காலனித்துவ கருத்துலகம் அல்ல.

சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழர்கள் நிகழ்த்திய அரசியல் போராட்டங்கள் அமைதி வழியில் இருந்து ஆயுதப் போராக விரிவுபெற்று இறுதியில் முழு அளவிலான போர்வடிவம் பெற்றிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் படையான விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் மத்தியில் இப்போர் நிகழ்ந்து வருகிறது. தன்னாட்சி உரிமையுடைய மக்கள் சமூகம் என்ற ரீதியில் இன அழிப்பை நோக்காகக் கொண்ட அரச அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற ஆயுதம் ஏந்திப்போராடும் உரிமை எமக்கு உண்டு. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு இசைவான இந்த உரிமையின் நிலை. ஆனால், சிங்கள அரசு இந்தப் போர் பற்றிய உண்மை நிலையையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் உலகிற்கு இருட்டடிப்புச் செய்து வருகிறது. அதுமட்டுமன்றி தமிழரின் தேசவிடுதலைப் போரை “பயங்கரவாதம்” எனத்திரிபுபடுத்தி, இழிவுபடுத்தியும் வருகிறது.

தனது கொள்கைப் பிரகடன அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் மத்தியிலான போர் பற்றி சந்திரிகா குறிப்பிடும்போது, “இனப்பிரச்சினையின் ஒரு விளைவுதான் இந்தப் போர்” என்கிறார். ஆயினும் அதே அறிக்கையில் இப்போரை “ஆயுதப்பயங்காரவாதம்” என்றும் குறிப்பிடுகிறார். தமிழீழப் போரை இனப்பிரச்சனையின் வெளிப்பாடு என்று கூறும் அதே நாக்குத்தான் அதனை தமிழரின் ஆயுதப் பயங்கரவாதம் என்றும் வர்ணிக்கிறது. இனப்பிரச்சனையை சமாதான வழியில் தீர்த்து வைப்போம் என்று கூறும் சந்திரிகா பயங்கரவாதத்தை போர் மூலம் ஒழிப்போம் என்றும் முழங்குகிறார். இப்படியாக சந்திரிகா அரசு தமிழரின் போர்பற்றிய உண்மை நிலையைத் திரித்து, மறுத்து பயங்கரவாதம் எனப் பொய்சொல்லி, சிங்கள மக்களையும் உலகத்தையும் ஏமாற்றி வருகிறது.

தமிழீழப் போரானது ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் விடுதலைப் போர் என்ற யதார்த்த அரசியல் உண்மையை சிங்கள அதிகார வர்க்கம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த மறுதலிப்புத்தான் தமிழரின் இனப்பிரச்சனையை சிக்கலாக்கி வருகிறது. இதுதான் போரை தீவிரப்படுத்தி வருவதற்கும் காரணமாக இருக்கிறது. இதுதான் இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் தீர்வு காண்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகிறது.

சமாதான வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேவேளை, நாம் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்றத்தயங்கவும் இல்லை. சமாதான வழிமூலம் கிட்டப்படும் தீர்வானது நியாயமானதாக, நீதியானதாக, சமத்துவமானதாக தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதாக அமையவேண்டும் என்பதே எமது விருப்பம். நோர்வே நாட்டு சமாதானக் குழுவினரை அண்மையில் வன்னியில் நான் சந்தித்தபோது எமது இயக்கத்தின் இந்த நிலைப்பாட்டை தெளிவாக, அழுத்தம் திருத்தமாக எடுத்து விளக்கினேன்.

சமாதானப் பேச்சுக்களுக்கு நாம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை. ஆயினும் பேச்சுவார்த்தைக்கு உகந்ததான நல்லெண்ண புறநிலையும், இயல்புநிலையும் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே நாம் வலியுறுத்தி வருகிறோம்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக பரஸ்பரம் பகைமையுடனும், சந்தேகத்துடனும் ஒரு கொடிய போரில் ஈடுபட்டுவரும் இருதரப்பினரும் சண்டையை தொடர்ந்தபடி திடீரென சமாதானப் பேச்சில் இறங்குவது நடைமுறைச் சாத்தியமானதல்ல. இதனால்தான் போர் நெருக்கடியை படிப்படியாகத் தளர்த்தி போர் ஓய்ந்த சமாதான சூழ்நிலையில், நல்லெண்ணப் புறநிலையில் பேச்சுக்கள் நடைபெறுவதை நாம் விரும்புகிறோம். இயல்புநிலை என்னும் பொழுது தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்ட பொருளாதாரச்சுமைகள், தடைகள் நீங்கி எமது மக்களின் வாழ்க்கை நிலை இயல்பான இருப்பிற்கு திரும்பவேண்டும் என்பதையே நாம் கருதுகிறோம். ஒரு உறுதியான தளத்தில் உகந்த புறநிலையில், நல்லெண்ண சூழ்நிலையில் பேச்சுக்கள் நிகழும்பொழுதுதான் அவை ஆக்கபூர்வமானதாக அமையும். ஆகவேதான் பேச்சுக்கான நல்லெண்ண புறநிலையின் அவசியத்தையும், தேவையையும் நாம் வலியுறுத்துகின்றோமே தவிர, பேச்சுக்களுக்கு நாம் நிபந்தனைகளை விதிக்கவில்லை.

போர் நெருக்கடி தளர்ந்து இயல்புநிலை தோன்றுவதற்கு இருதரப்பில் இருந்தும் நம்பிக்கையை வளர்க்கும் நல்லெண்ண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நோர்வே அரசு சில யோனனைகளை தெரிவித்திருக்கிறது. இதனை நாம் ஆர்வமாகப் பரிசீலனை செய்துவருகிறோம். எமது மக்கள் அனுபவிக்கும் துன்பச்சுமை குறைந்து பரஸ்பர நல்லெண்ணம் நிலவும் சமாதான சூழ்நிலை தோன்றுவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம். அதற்கான முன் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளுமானால் பதிலாக நாமும் நல்ல முடிவுகளை எடுப்போம்.

சமாதானப் பேச்சுவார்த்தை என்பது தமிழ் மக்களுக்கு ஒரு புதிதான விடயம் அல்ல. தமிழ் மக்கள் சார்பில் எமது விடுதலை இயக்கமும் எமக்கு முந்திய தலைமைகளும், சிங்ளத்துடன் எத்தனையோ தடவைகள் பேச்சுக்களை நடத்தியுள்ளன. பண்டா-செல்வா ஒப்பந்த காலத்தில் இருந்து பல தசாப்தங்களாக பல வரலாற்றுச் சூழல்களில் பல்வேறு நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆயினும் இப்பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க தவறிவிட்டன. இதனால், தமிழரின் பிரச்சனை மேலும் மேலும் சிக்கலடைந்து பெரும் போராக விஸ்வரூபம் பெற்றிருக்கிறது. இந்த துரதிஸ்ட நிலைமைக்கு பிரதான காரணம் தமிழரது பிரச்சனையின் அடிப்படைகளை, தமிழரது அரசியல் அபிலாசைகளை சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான்.

தமிழரின் பிரச்சனைக்கு சமாதான வழியில் நிரந்தரமான அரசியற்தீர்வு காணப்பட வேண்டுமாயின் தமிழர் பற்றிய சில அடிப்படை உண்மைகளை சிங்கள தேசம் ஏற்றக்கொண்டே ஆகவேண்டும். அத்தோடு தமிழ் மக்கள் எத்தகைய தீர்வை விரும்புகிறார்கள் என்பதையும் அவர்களது அடிப்படை அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்கள் தனித்துவமான இன அடையாளத்தை கொண்டவர்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு அந்த இனத்துவ பிரக்ஞையோடு வாழும் ஒரு மக்கள் சமூகம் அவர்களுக்கு வரலாற்று ரீதியான தாயக மண்ணாக சொந்த நிலமுண்டு. எமது மக்கள் விரும்புவதெல்லாம் ஒன்றுதான். தமது சொந்த மண்ணில் நிம்மதியாக, நிறைவாக வாழவேண்டும் என்பதுதான். மற்றவர்களது அதிகார ஆதிக்கமோ, நெருக்குவாரங்களோ இல்லாத ஒரு அரசியல் சூழலில் தம்மைத்தாமே ஆட்சி புரிந்து, கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது மக்களின் ஆழமான அபிலாசையாகும். சிங்கள மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த புரிந்துணர்வின் அத்திவாரத்தில் இருந்து தான் ஒரு நியாயமான, நிரந்தரமான தீர்வைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்.

தமிழர் பிரச்சனையின் அடிப்படைகளை உணர்ந்து சமாதான வழியில் தமிழர்களுக்கு நீதி வழங்க சந்திரிகா அரசு முன்வருமா என்பது எமக்கு சந்தேகமே.

தமிழர்களுக்கு எதிராக தென்னிலங்கையில் குமுறும் இனக்குரோத வெறியாட்டங்கள், ஆட்சி அதிகாரத்தில் பேரினவாத சக்திகளின் மேலாண்மை, தொடர்ச்சியாக இராணுவ மயப்படுத்தப்படும் சிங்களசமூகம்,மகாசங்கத்தினரின் தமிழ் விரோதப்போக்கு, அரசாங்கத்தின் இராணுவத்தீர்வுக் கொள்கை இவற்றையெல்லாம்பார்க்கும்பொழுது தமிழரின் தேசிய இனப்பிரச்சனை சமாதான வழியில் தீர்க்கப்படுமா என்பதுகேள்விக்குறியாகிறது. அத்தோடு சந்திரிகா அரசு மேற்கொள்ளும் சில குருட்டுத்தனமான அணுகுமுறைகளும்இனப்பிரச்சனையின் தீர்வுக்கு முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடுகின்றது. பெருமாளுக்கு முதலமைச்சராக முடிசூட்டி முந்திய இந்திய அரசு இழைத்த மாபெரும் வரலாற்றுத் தவறுபோல, சந்திரிகா அரசும் தமிழ்விரோதக்குழு ஒன்றை வட கிழக்கில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியிருக்கிறது. இப்படியான நடவடிக்கைகள்மூலம் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வதுடன் இனப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி விடுகிறது.

எனது அன்பான மக்களே,

எமது தேசியப் பிரச்சனை இப்பொழுது உலக நாடுகளின் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்த்து வருகிறது. இப்பிரச்சனை சமாதான வழியில் தீர்க்கப்படவேண்டும் என சர்வதேச சமூகம் விரும்புகிறது. உலக மனச்சாட்சியின் பார்வை எம் பக்கம் திரும்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே எமக்குத் தெரிகிறது.

நாம் சமாதானப் பேச்சுக்கோ அல்லது சமாதான வழியிலான அரசியற்தீர்விற்கோ முட்டுக்கட்டை போடவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தி வருகிறோம். சமாதானப் பேச்சுக்கு உகந்ததாக சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டையும் தமிழர்களது அடிப்படைக் கோரிக்கைகளையும் உலக சமூகம் புரிந்து வருகிறது. தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையின் பின்னணியில் உள்ள சக்திகள் யாரென்பதையும் உலகம் இனங்கண்டு வருகிறது.

உலக நாடுகளில் இருந்து பெறப்படும் நிதி உதவியையும், ஆயுத உதவியையும் ஆதாரமாகக்கொண்டே சிங்கள அரசு தமிழருக்கு எதிராக இந்தப் போரை நடத்தி வருகிறது. பெரியதொரு அழிவுப்போரை நடத்திக்கொண்டு, பெருமளவு அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்துக்கொண்டு சமாதானத்திற்காகவே சண்டையை நடத்துவதாக சந்திரிகா அரசு உலகத்தை ஏமாற்றி வந்திருக்கிறது. ஆயினும் சந்திரிகா அரசு நடத்தும் இப்போரின் நோக்கம் என்ன என்பதையும், இப்போரினால் புலிகளை வெற்றி கொள்ளவோ அன்றி தமிழரின் பிரச்சனையை தீர்க்கவோ முடியாது என்பதையும் மேற்குலகம் இப்பொழுது உணரத் தொடங்கியுள்ளது. எனவே சிங்கள இனவாத ஆட்சியாளரை சமாதானப் பாதைக்கு திருப்பவேண்டும் என்றால் சிங்களத்திற்கு பொருளாதாரத் தீனி போட்டுவரும் உலக நாடுகளிடம்தான் அந்தக் கடிவாளம் இருக்கிறது. தென்னிலங்கைச் சமூகக் கட்டமைப்பின் சகல மட்டங்களிலும் பூதாகரமாக வளர்ந்துவரும் சிங்கள பௌத்த பேரினவாதம், தமிழ் மக்களை காருண்ணியத்துடன் அரவணைத்துக் கொள்ளும் என நாம் நம்பவில்லை. சிங்கள தேசம் இனவாதப்பிடியில் இருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை தொடருமானால் நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை.

காலமும் வரலாறும் எமது போராட்ட இலட்சியத்திற்கு நியாயம் வழங்கியே தீரும். அப்போது உலகமும் அதனை ஏற்றுக் கொள்ளும்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மை அழித்துக்கொண்ட மாவீரர்கள் சரித்திரமாக நின்று எமக்கு வழிகாட்டுவார்கள். அந்த தர்மத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள்.