வீரவரலாறு

விடுதலைக்கான அந்த அற்புதத்தை பெற்றதாயே நன்றி உனக்கு!

Posted on

thank-you-mother( தலைவரின் பிறந்தநாள் எம்மை கடந்து போய் ஒருசில நாட்கள் ஆகிவிட்டன. இந்த பொழுதில் தலைவரை பெற்ற தாய் பற்றிய ஒரு பார்வை..)

அந்த மனிதன் மௌனித்து ஏழு ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவன் போராடிய காலத்தில் காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த தமிழீழ நிலம், மண் இன்று கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது.
சிங்கள பேரினவாதம் தனது இனஅழிப்பை எந்தவொரு சலனமும் இன்றி அதே வேகத்துடன் தொடர்ந்தே வருகின்றது. இதனை காப்பாற்றவோ, இதற்கு எதிராக எதையேனும் செய்வதற்கோ வக்கற்றவர்களாக அனைத்து தமிழர்களும் கூனிக்குறுகி நிற்கின்றனர்.

அந்த அதிமானுடன் இந்த தேசியவிடுதலைப் போராட்டத்தில் வகித்த வகி பாத்திரத்தின் லட்சத்தில் ஒரு பங்கினைகூட ஈடுசெய்ய முடியாத கையறு நிலையே இந்த பத்துகோடி மக்கள்தொகை கொண்ட இனத்துக்கு இன்றுள்ளது.

எந்த காலத்திலும் இல்லாத அளவில் அந்த ஒற்றை மனிதனின் வரலாற்று தேவையும், இந்த இனத்தால் ஒவ்வொரு கணமும் உணரப்பட்டுவருகின்றது. வெறுமனே முகாம்களை கைப்பற்றியது, நிலத்தின் மூன்றில் இரண்டு பகுதியை மீட்டது என்ற போரியல் வெற்றிகளுக்கு அப்பால் இந்த இனத்தின் சிந்தனை முறையிலும் விழிப்புணர்விலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தலைவன் அவர்.

சாதீய சிக்கல்களுக்குள்ளும், மதமாச்சர்ய மூடத்தனங்களுக்குள்ளும் முகம்புதைத்தபடியே பல நூற்றாண்டுகளாக தூங்கிகிடந்த ஒரு இனத்தினை விடுதலைக்காக போர்புரியும் இனமாக எழ வைத்த அற்புதமனிதனை பெற்ற தாய் பார்வதி அம்மாவின் ஐந்தாவது நினைவு ஆண்டு கடந்து போயுள்ளது. தேசத்தின் தலைமகனை ஈன்று எமக்களித்த அந்த தேசத்தின் தாயின் நினைவுகளை கொஞ்சம் மீட்டுவோம்.!

பார்வதி அம்மா எல்லாவிதத்திலும் ஒரு சாதாரணத்தாய்தான். அவர் தலைவருக்கு வீரத்திலகம் இட்டு அனுப்பினார் என்றோ தலைவரை ஒரு போராளியாக வளர்த்து எடுத்தார் என்றுமோ புறநானூற்று வீரத்தாயாக விளங்கினார் என்றோ மிகைப்படுத்தி எதையும் கூறிவிடமுடியாத வகையில் அவர் எளிய அம்மாவாகவே விளங்கினார்.
மார்க்சிம் கோர்க்கியின் உலகப்புகழ்பெற்ற தாய் நாவலின் நாயகன் பாவெலின் தாயார் போன்று புரட்சிக்கான முன்னெடுப்புகளிலும், அதன் முண்ணணியிலும் நின்ற தாய் போன்று பார்வதி அம்மா இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் ஒரு விடுதலைப்போராட்டத்தின் மூச்சுக்காற்றை பிரசவித்தவர் அவர். ஆனால் தலைவரிடம் இருந்த எளிமைக்கும், உண்மைத்தன்மைக்கும், அவருடைய தாயாரே மூலவேராக இருந்திருக்கிறார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகால ஒரு இனவரலாற்றின் மீது புதிய பரணியை எழுதிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை தன் கருவில் சுமந்தவர் அவர். அடக்கப்பட்டும், அடங்கியும், ஒடுங்கியும் கிடந்த ஒரு தேசிய இனத்தின் சிந்தனை முறைகளை முழுதாக திருத்தி எழுதிய ஒரு அற்புத போராளித் தலைவனை பத்து மாதம் தாங்கிப் பெற்றவர் அவர். இது ஒன்று போதும் அவரை தேசத்தின் அன்னையாக நாம் அஞ்சலிக்கவும், ஆராதிக்கவும். என்றென்றும் நன்றி தெரிவிக்கவும்.

1973ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள் தேசத்துக்காக வீட்டைவிட்டு முழுதாக புறப்பட்ட பின்னர் அந்த தாய் நிறைய நாட்கள் மனதுக்குள் தனது மகனுக்காக ஏங்கி இருப்பார். ஒரு இயல்பான தாயின் குணத்துடன் தனது மகன் இந்த போராட்ட களத்தில் இருந்து வெளிவந்து சாதாரண வாழ்வு வாழ்வேணும் என்று அந்த தாய் மனதுக்குள் வெம்மி இருக்கலாம். ஆனால் ஒரு நாளும் அவர் தனது மகனை எல்லாவற்றையும் விட்டுவா என்று அழைத்தது இல்லை. அப்படி அழைத்தாலும் அந்த மகன் வந்துவிடப்போவதில்லை என்பது எல்லாரையும்விட அவருக்குத்தானே தெரியும். அப்படி ஒரு ஆழ்ந்த புரிதல் மகனின் பாதையின் மீது தாய்க்கும் இருந்தது. தாய்க்கு மட்டுமல்ல அந்த மகனுக்கும் தாய் மீது மனதுக்குள் பாசமும், அன்பும், இருந்திருக்கும். ஆனால் அந்த பாசத்துக்காக எந்தக் கணத்திலும் அவர் தன் போராட்டபாதையில் திரும்பிப்போனதில்லை.

இப்படியான சில சம்பவங்களின் காலச்சாட்சிகளாக நாம் யாரோ விளங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். 1983ம் ஆண்டின் ஒருநாளில், கோழைத்தனமான சிங்களபேரினவாத ராணுவத்தால் தேசியத்தலைவரின் வீடும், வல்வெட்டித்துறை ராணுவ முகாமுக்கு அண்மையில் இருந்த சில வீடுகளும் எரிக்கப்பட்டு விடுகிறது. இரவு முழுதும் வீடெரித்து வெறியாட்டம் ஆடிய ராணுவம் நிலம் தெளியத் தொடங்கியதும் முகாம் திரும்பினர். அப்போது ஆயுத பொறுப்பாக இருந்த கப்டன் பண்டிதர்தான் (ரவீந்திரன்) ஆவணங்களுக்கும் பொறுப்பாக இருந்தான். அவனும் கப்டன்லாலாவும் (ஞானேந்திரமோகன்), கப்டன் வாசுவும் (சுதாகர்), சென்று எரிக்கப்பட்ட வீடுகளை, தலைவர் வீடு உட்பட படமெடுத்து திரும்பிக்கொண்டிருந்தோம். அந்த நேரம் தலைவர் பொலிகண்டி பாலாவிக்குடியேற்றத்திட்ட வீடு ஒன்றில் இருந்திருந்தார். அவரைப் பார்ப்பதற்காக போய்க்கொண்டு இருந்தபோது பொலிகண்டி கந்தவன கோயில் மடம் ஒன்றில் ஒருசிறு சாக்கு படங்கு போட்டு அதற்குள் வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகள் சின்ன சட்டிக்குள் ஏதோ சமைத்துக்கொண்டிருந்தனர். தலைவரிடம் சென்று நிலைமைகளைப் பற்றிக் கதைக்கும்போது ‘உங்கள் அப்பாவும் அம்மாவும் மடத்தில் இருக்கினம்’ என்று சொன்னபோது அந்த ஒப்பும் உவமையும் இல்லாத்தலைவர் சொன்னார் ‘அப்பா, அம்மா மடத்திலை… நான் ரோட்டிலை.. நீங்கள் போய் உங்கடை வேலைகளை செய்யுங்கோ…’என்று.

ஒரு 200 மீற்றர் தூரத்தில் தனது அம்மா வீடு இல்லாமல் மடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தும் அவர்களை சென்று பார்ப்பதிலும் பார்க்க விடுதலைக்காக உழைப்பதுதான் முக்கியம் என்று நினைத்த ஒரு உன்னத மனிதனை இந்த இனத்துக்கு தந்த ஒரு காரணத்துக்காக தன்னும் இந்த தாயை நன்றியுடன் நினைக்கவேண்டும். எத்தனையோ வீடுகள் அந்த இரவில் எரிக்கப்பட்டிருந்தது. எத்தனையோ உறவுகள் வீடுகளை இழந்து அந்த இரவில் வேறிடம் சென்றனர். அவர்களை சந்திக்காமல் தனது தாயை மட்டும் சந்திப்பதை விரும்பாதவர் அந்த மகத்தான தலைவன். இந்த ஒப்பற்ற அற்புதக்குணம் அவரின் தாயின் மனதிலும் இருந்ததை அறியக்கூடியதாக ஒரு சம்பவம் இருந்தது.

1983 யூலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் பயிற்சித் தளங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்குவதற்காக தலைவரும் உறுப்பினர்களும் சென்றிருந்த நேரம். இரண்டு இலக்கங்களில் இருந்த இயக்க உறுப்பினர் தொகை மூன்று இலக்கத்தை தொட்டுநின்ற நேரமும் அதுதான். உறுப்பினர்களின் உணவுத்தேவை, போக்குவரத்துதேவை என்பனவும் வேறு தேவைகளும் இயக்கத்தை உலுப்பிய நேரம்அது. நிதித்திரட்டலுக்காவும், போராட்ட விளக்கத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுப்பதற்காகவும் 1983 செப்டம்பரில் திருச்சி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் விடுதலைப்புலிகளின் கண்காட்சி அரங்குகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதில் மக்கள் அளிக்கும் உண்டியல் நிதியும், காசிஆனந்தனின் புத்தகம் விற்றுவரும் நிதியும்தான் அந்த நேரத்து தமிழ்நாட்டில் இயங்கிய எமது அமைப்பின் அன்றாட தேவைகளுக்கான வருமானம்.

திருச்சி தேவர் மண்டபத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் கண்காட்சியில் மேஜர்கரன்(குமரப்பா, புலேந்தியுடன் வீரச்சாவடைந்தவர், கேணல் சங்கர் அண்ணாவின் இளைய சகோதரர்) நின்றிருந்தோம்..

ஒரு மாலைப்பொழுதில் கண்காட்சி அலைமோதிக்கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தில் ஒருவராக தேசியத்தலைவரின் தாயாரும் நின்றிருந்தார். கையினில் ஏந்திக் களித்த மகன் கைகளில் ஒரு தேசத்தின் விடுதலையை தாங்கிய புகைப்படங்களைப்பார்த்து மனதுக்குள் நிச்சயம் ‘ஈன்றபொழுதினில் பெரிதுவக்கும் தாயாகி’ இருந்திருப்பார். அதன்பின்னர் தினமும் அவர் திருச்சி கண்காட்சிக்கு வந்துகொண்டுதான் இருந்தார். எந்த நேரத்திலும் மகனை பார்க்க விரும்புவதாகவோ, மகனை வந்து தன்னை சந்திக்கவோ அந்தத் தாய் சொல்லவே இல்லை. இதுதான் அந்ததாயின் சிறப்பு. மகனின் பாதையில் ஒருபோதும் குறுக்கிட்டதே இல்லை. தலைவருக்கும் தனது தாய் திருச்சிக்கு வநதுவிட்டிருந்தது தெரிந்துவிட்டிருந்தது. அவரும் அமைப்பு வேலை சம்பந்தமாக திருச்சிக்கும், திருச்சிக்கு அருகில் உள்ள மதுரைக்கும் ஏறத்தாள ஒவ்வொரு வாரமும் வந்து போய்க்கொண்டுதான் இருந்தார். அவர் நினைத்திருந்தால் தனது தாயை போய் பார்த்து இருக்கலாம். எத்தனை தாய்மார் இப்படி வீடுகளை இழந்து தமிழ்நாட்டின் அகதிமுகாம்களில் இருந்தபொழுதில் தனது தாயை மட்டுமே பார்க்கவேணும் என்று தலைவர் விரும்பியது இல்லை.

பார்வதி அம்மா தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டு வருடங்களின் பின்னரே 1985ல்தான் தலைவர் தன் தாயை சந்தித்தார். போராட்டத் தலைவனின் பாதையில் குறுக்கிடாத தாயும் தாய்காக எதையும் விட்டுவராத மகனுமாக இருந்தாலும் தலைவருக்கு இருந்த மிகப்பெரிய ஆளுமைகளின் முதல் ஊற்றாக அவரின் தாயே இருந்திருக்கிறார். தன் அனைத்தையும் தொப்புள் கொடிக்குள்ளாக ஊட்டி வளர்த்த அந்த தாய் எரிந்து முடிந்துவிட்டார். அவரின் சாம்பலைக்கூட காட்டுமிராண்டிச் சிங்களப் பேரினவாதம் எடுத்து எறிகிறது என்றால் அது எந்தளவுக்கு அந்த தாயின் இருப்பிலும், இறப்பிலும், எரிந்து முடிந்த சாம்பலிலும் பயம்கொண்டு இருக்கிறது.

பார்வதி அம்மாவின் சாம்பலை கடலில் கரைத்து ஒளிக்கலாம். அவரின் எஞ்சிய எலும்புச்சிறு துண்டுகளை எங்காவது வீசிவிடலாம். ஆனால் அந்த தாய் பெற்ற மகனின் நேர்மையும், உண்மையும், உறுதியும் யாரால் எடுத்து வீசிவிடமுடியும்.

விடுதலைக்கான அந்த அற்புதத்தை பெற்றதாயே நன்றி உனக்கு!!

– ச.ச.முத்து –

தமிழ்த்தேசிய தலைவர் 62வது பிறந்தநாள் வாழ்த்துப்பா -காணொளிகள்

Posted on Updated on

 

யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் 62 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதுprabhakaran-birthday-jaffna-2016

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில், சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கின் முன்பாக, அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின் உருவப்படம் வைக்கப்பட்டு, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழ்நாட்டிலும், வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்மினத்தைக் காத்த எங்களின் தேசியத் தலைவனை எண்ணி !

Posted on

praba-62

கார்த்திகைக் குமரனாய்ப் பிறந்து கீர்த்திமிகுவீரனாய்வளர்ந்து நேர்த்தி மிக எம்மினத்தைக் காத்தஎங்களின் தேசியத் தலைவனை எண்ணி… இனியதமிழ் விருத்தவரியில் இப்பா.

:-ந.கிருஷ்ணசிங்கம்.

ஆயிரம்மாண்டுக்கு ஓர் முறை ஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய் அந்தமில்லா அருந்தலைவர் ஒருவர் உதிப்பார் என்பார்.. அதுபோல்,வேயுயர்வீரமாநுட்பராய் எம்மிடைதோன்றிய எம் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களை.

எம்தமிழ் இனத்தின் சிந்தைகளில் நிலைத்த அந்த வேந்தனை அவர்தம் பண்பினைப் போற்றி.. எழுதியவிருத்தப்பா!

கடமையோடு கண்ணியம் கட்டுப்பாடு என்ன வென்றுகாட்டிய
திடமனம் உடைய தலைவனாய்.. பகையஞ்சும் தகையில்லா
வீரனாய்.. வீற்றிருந்த எம் தேசியத்தலைவனின் ஒழுக்கத்தை
வழுவாத வாழ்வியற் கோட்பாட்டைநிரைப்படுத்திஉரைக்கின்..

மூடமதித்திரை மூடியிருந்ததை நாடி விலக்கிட நீடு முயன்றவன்..
கோடிதுயரிலும் கேடுமறுப்பதில் நீதிவகித்து மேவாழ்வின் நீள.. ஆளமளந்து, வாசல்திறந்தவன்.

ஆளமனத்துயர் ஆறியெழுந்திட வீரம்கொடுத்தவன். ஆற்றல் அளித்துமே..வேலிபோட்டவர் வேகம் முறிக்கவேவியூகம் தந்தவன். கேலியுரைத்தவர் நாவையடக்கிடக் கேள்விதொடுத்தவன். வாழும் விதிமுறைநாளும் உரைத்தவன்.

தாலியறுத்தவள் பாவியெனத்தகும் தாழ்வுபழித்தவன். இன்னல் மகளிரின் அண்ணண் எனனத்தகும் அன்புநிறைத்தவன் பண்பில் உயர்ந்தவன்,தாரமிழந்தவர் மீழமணந்துமேமகிழ்ந்துவழ்ந்திட மார்க்கம் ஈந்தவன்.

அவர் ஆழ மகிழ்ந்திட வாழ்வு கொடுத்தவன். வானம்வியப்புறப் பூமிவிழிப்புற நீதிப்போரிலே வீரம்படைத்தவன்! மானம் நிலைத்திடப் பகையை விரட்டியே மண்ணினை மீட்டவன். சூட்சியர் கூட்டத்தைசண்டியர் ஆட்டத்தைதோடிஒழித்தவன்!

முப்பெரும் தமிழுக்கும் தப்பரும் வளற்சியைத் தந்து சிறக்கவே ஒப்பிலாக் கல்விகலை வல்லாரை அழைத்துமே வாழ்த்தியோன்!
இனித்த முகத்தினன் குழந்தையர் தம்மையே தாய்போற்தூக்கி அணைத்தவன்.செஞ்சோலை.. மூதாளர் காப்பகம் நிறுவியே..தன்பிள்ளைகள்.. தாய் தந்தையர் போலவே ஓயாதுகாத்தவன். இப்படி ஓர் தலைவனு முண்டா என்றெவர் வியக்க வேநன்றே நாட்டையேயாண்டஅந்தக் கண்ணியனைஎண்ணியேபாடும்!

ஒழுக்கத்தை மக்கள் வாழ்வில் வழுவாது பேண வேகாவலரைப் பயிற்றிப் பண்போடு பழகிப்பேசியே பணியாற்றப் பணித்தவன்.
மனிதரில் மேலோர் கீழோரெனவேபடி நிலைவகுப்பவர்பேணும் சாதித்திமிரையேசட்டச்சுத்தியலால் உடைத்தேஅழித்தவன்.

கல்வியால் வாழ்விலுள்ள தாழ்வது நீங்குமென்றகல்வியை ஊட்டியூட்டி பல்துறைவல்லாரைபடைத்தவன்.பாலினம்பாராதுபடைத்துறையாரையும் அனைத்தையும் படியெனப் பாசமாய்ப் பணித்தவன் பட்டறைகள்நடத்தவைத்து.. படிப்பைபோதித்தான்.praba-birthday-62

கொடியபகைநிலைகள்குதறுண்டுசரியவேகடிதும் முயன்று..
வெடிக்கருவிகளைஉருவாக்கிநவீனநுட்பமிகுபோரியற்பலத்தைபெருக்கியஒப்பிலாவீரன் தகைமிகுதலைவன் தரணியில் இவனே!

முத்தமிழ் இலக்கியங்களை இலக்கணத்தை விலக்கி ஒதுக்காது முறையாக தமிழறிஞர் தம்பாற்கற்றே இளையவர் எழுச்சியோடு இனத்தோடு மொழிநாடு மூன்றன்பாலும் ஏற்றமிகுபற்று வைத்து ஏத்தரிய எம் தமிழ்த் தாயைஈழத்தில் உயர்த்தல் வேண்டும்! சினத்தோடு ஏழையரைத் தின்றுவாழும் தீதுடைமைமற்றும்.. தனியுடைமை நீக்குமாறும், மனத்தோடு மகிழ்ச்சியோடு நாளும் மங்கையர்தம் மாபெரும் புரட்சி பூத்துவளரமிகவே உதவுமாறும்
தெளிவாக சமூக வாழ்வியலை தலைவன் சரியாகஉரைத்தான்!

இருலுறைக் காட்டிலும் பன்நெடுங்காலங்கள் கடியபாடுகள்பட்டு,
ஏந்திய கருவிகளே தமது உயிரெனக்கருதி உறக்கத்தைமறுத்து..

மாந்தியநோய்கள் மேனியை வருத்தபசிவதை வந்து பற்றி கொள்ள
வேதனைகள் துறந்து.. தலைவனும் அவனின் வீரத்தானையரும் குதித்தோடும் அருவிபோலவேகுறிக்கோளில் பதித்தநோக்கது குலையாது உழைத்ததாலே நிலையான நெடும்பாதுகாப்பை நாம் அன்று அடைந்து மனமகிழ்ந்து, எம்மண்ணில் இனிதே வாழ்ந்தோம்!

கடல்சூழ்ந்த இலங்கையின் வடக்குக்கிழக்கின் வளமீன்கரைகள்
எமக்கான நிலமாய் என்றென்றும் இருத்தல்வேண்டி மிகுதிறமான கடற்படையைக் கட்டியமைத்து.. கலங்களைஉருவாக்கிமேலும்
காவலை உயர்த்;தி.. மதியோடு நுண்ணறிவோடு அரன்செய்தான்.

சதியும் தந்திரமும் காட்டிக்கொடுப்பும் பதவியைக் கதிரையை
நீட்டியபோதும் நிராகரித்து,நோக்கத்தில் திடமோடுதலைவன்
மென்மேலும் ஊக்கமாய் மக்களைக் காத்தலேதன்பணியெனத்துணிந்துகூறி.. மண்விளங்கவிண்ணும்வசமாகஉலகம்வியக்க
சீறிடும்புயலாய் கெட்டசினத்தழல்சிந்தும் பேரினவாதத்தோடு இறுதிவரைபோராடியேசரியாதுநின்றுமேசமநிலைகண்டவன்..
நவசரித்திரநாயகன் நம்தலைவனைநன்கு இத்தரணியர் அறிவர்!

எம்தலைவா! உம்மையாம்பெறவேஎன்னதவம் செய்தோமோ!

:-ந.கிருஷ்ணசிங்கம்praba-birhday-wishes

அடிமுடி அறியவெண்ணா அற்புதத்துக்கு அகவை அறுபத்தி இரண்டாகிறது !

Posted on

*praba-birhday-wishes

praba-birthday-62

தலைவருக்கு வயது அறுபத்தி இரண்டாகிறது..’

அவர் குரல் கேட்காமல் விட்ட இந்த 7வருடங்களில் இந்த இனம்படும் அலைக்கழிப்புகள் ,சிதைவுகள், துரோகங்கள்,அவமானப்படுத்தல்கள் என்பனவற்றை பார்க்கும்போதுதான் எவ்வளவுதூரம் அந்த ஒற்றை மனிதனே இத்தகைய சீரழிவுகளிலிருந்து முழுத்தமிழினத்தையும் காப்பாற்றும் கேடயமாக இருந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிகிறது.

இன்றைக்கு யோசித்து பார்த்தால் வார்த்தைகளால் விபரிக்க முடியா பெரும் வியப்பு ஏற்படுகின்றது.

ஒரு கல்லூரிமாணவனாக வீட்டின் கதவுகளுக்கு அப்பால் பெரிதாக போய் இருக்காத இந்த மனிதன் தனது சிறு பராயத்தில் இந்த விடுதலைக்கான பெரும் யாகத்தில் இறங்கி நடந்தபோது அவரிடம் எதுவுமே இல்லை.விடுதலைக்காக தன்னை அர்ப்பணிப்பது என்ற இலட்சியவேட்கையைவிட வேறெதுவும் இல்லை.

ஆனால் தினமும் அவர் நடந்த பாதையின் தடைகள்,சந்தித்த சோதனைகள்,தடங்கல்கள் இவையே அந்த மனிதரைஆளுமைகளின் உச்சமாக உருவாக்கியது.அனைத்து திறமைகளின்,வழிநடாத்தும் அற்புத தலைமைப்பண்பின் உதாரணமாக உருவாக்கியது.

தினமும் ஏதாவது ஒன்றை தெரிந்து கொண்டபடியே தன் பயணத்தில் உறுதியாக நடந்தார். தன் அனுபவங்கள் ஒவ்வொன்றையுமே தன் மனதுக்குள் ஆழப்பதிந்துவைத்து அதனை தன்னுடன் இணைந்த ஒவ்வொரு போராளிக்கும் சொல்லி கற்பித்து ஆளாக்கிய ஒரு மகத்துவம் தேசியதலைவர்.

ஒரு தாய்க்கு உரிய பரிவுடன்,தந்தையின் பொறுப்புடன்,அண்ணனுக்கு உரிய ஆதரவுடன்,எல்லாவற்றிலும் மேலாக ஒரு உற்ற தோழனுக்கு மட்டுமே இருக்கும் அற்புதமான தோழமையுடன் சாப்பிடும்போது, சைக்கிளில் ஓடும்போது,தூங்கும்முன் கதைக்கும்போது, நடந்துகொண்டிருக்கும்போது,ஒரு பேரூந்து பணயத்திலோ, அல்லது புகையிரத பயணத்தின்போதோ என்று சின்ன சின்ன விடயங்களாக சொல்லி சொல்லி தனக்கு அடுத்த போராளிகளை வளர்த்த அந்த பக்குவம் இன்று நினைத்தாலும் மலைக்க வைக்கிறது.

ஒருமுறை, அது தமிழீழவிடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம். 1979ன் இறுதி மாதங்கள்.தலைவரின் கண்காணிப்பு,ஆலோசனைகளுடன் பயிற்சிநடந்தது.செல்லக்கிளிஅம்மான்,பொன்னம்மான்,மாத்தையா,சங்கர்,ஜோர்ஜ், சங்கர், ரகு,பிரீஸ்அண்ணை,நான்(முத்து) உட்பட 10பேருக்கு பயிற்சி.பயிற்சிமுகாம் வேலைகளுக்கு உதவியாக கிட்டுவும் சோமண்ணையும்.தமிழீழவிடுதலைப்புலிகளின் முதலாவது தானியங்கி ரைபிள் ஜி3 அப்போதுதான் தலைவரால் வேறு ஒரு நாட்டில் வாங்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தது.அதனுடன் அதற்கான 7.62ரக தோட்டாக்கள் 700 கொண்டுவந்திருந்தார்.

பயிற்சி காலத்தில் மிக அவசரவேலையாக தலைவர் வேறு இடம் சென்றுவிட்டார்.தலைவர் போனபின்னர் உணவுத் தேவைக்காக ஒருநாள் இரவில் தானியங்கி துப்பாக்கி ஜி3 ஐ எடுத்துக்கொண்’டு குளக்கட்டுக்கு செல்லக்கிளிஅம்மான்,கலாஅண்ணா,கிட்டு உட்பட நாலைந்து பேர் போய் காத்திருந்து ஒரு குளுவன்மாட்டை சுட்டுக்கொண்டுவந்து சமைத்து சாப்பிட்டு மிகுதியை வத்தல்போட்டு ஏனைய முகாம்களுக்கு (நம்பர்3,திருமலை 8ம்கட்டை) அனுப்பும் முயற்சியில் இருந்தனர்.சில நாட்களில் தலைவரும் தனது அலுவல் முடிந்து முகாம் திரும்பினார்.குளுவன் மாட்டின் வத்தலை சாப்பிட்டுக்கொண்டே இயல்பாக விசாரித்தார்.எங்கே வாங்கினீங்கள் என்று,நீங்கள் வாங்கி கொண்டுவந்த புதிய ஜி3ஆல்தான் குளுவன்மாட்டை சுட்டோம் என்று பெருமையுடன் சொன்னார்கள்.
தலைவர் கேட்டார் எத்தனை மாட்டை சுட்டனீங்கள் என்று. இருட்டுக்குள் சரியாக தெரியவில்லை.ஆனாலும் ஒரு மூன்று நாலு வெடி வைத்தோம் என்றனர்.

தலைவர் சொன்னார்.’ சாப்பாட்டுக்காக வெடிவைக்கிறது சரி.ஆனால் நீங்கள் மற்ற மாடுகளை அங்கேயே விட்டுவிட்டு வந்ததுதான் பிழை என்றார்.
முகாமில் இருந்தவர்களுக்கு என்ன பிழை என்று தெரியவில்லை.தலைவரே தொடர்ந்தார்.

‘ இப்ப எங்களிட்டை இருக்கிற தானியங்கி துப்பாக்கி ரகம் சிங்களராணுவத்திலும் இல்லை.அவங்கள் (ஆமி )வேட்டைக்கு காட்டுக்குள்ளை அடிக்கடி வரும்போது செத்த மாடுகளின் காயத்தை பார்த்தே பிடிப்பாங்கள்

இந்த காயம் நிச்சயமாக ஒரு தானியங்கி ரைபிளால்தான் வந்தது என்று.பிறகு அவங்கள் எச்சரிக்கையாயிடுவாங்கள் ‘ என்று.. தலைவர் பார்த்த கோணத்தில் அந்த முகாமில் எவருமே பார்த்திருக்கவில்லை.அவருக்கு அதுவே வாழ்வு.அதுவே யாகம்,அதுவே மூச்சு.. அதுதான் அவரது வாழ்வு.அதனால்தான் அவரால் ஒவ்வொரு விடயத்தையும் அது விடுதலைக்கு எவ்வளவுதூரம் உரம்சேர்க்கும்,அல்லது எவ்வளவு தூரம் சீர்குலைக்கும்,எதிரி இதனை எவ்வாறு நோக்குவான்,எமது மக்களுக்கு இந்த விடயத்தால் எவ்வளவு நன்’மை என்றெல்லாம் அணுஅணுவாக ஒவ்வொரு கணமும் சீர்தூக்கி அலச முடிந்தது.

இன்னுமொரு சம்பவம்,இதில் சங்கர் சம்பந்தபடுகின்றான். 1982ல் சிங்களதேசத்தின் சாரணர்களை அனுப்பி விடுதலைப்புலிகளை அழிப்பேன் என்று ஜேஆர் ஜெயவர்த்தனா ஆணவத்துடன் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை கொச்கைப்படுத்தியபோது அதற்கு பதிலடியாக சங்கரின் முக்கிய பங்கேற்றலுடன் நெல்லியடியில் சிறீலங்கா காவல்துறை ஜீப்வண்டிமீது நடாத்தப்பட்ட தாக்குதலில் நான்கு சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் கையப்படுத்தப்பட்டன.மறைந்திருந்து தாக்கும் முறையில் அல்லாமல் பலநூற்றுக்கணக்கான மக்கள் நிறைந்த ஒரு பொழுதில் ஜீப்வண்டிக்கு மிகஅருகில் சென்று நடாத்தப்பட்ட ஒரு தாக்குதல் அது.மூன்று காவல்துறையினர் ஜீப்வண்டிக்குள்ளும் ஒரு காவல்துறையினன் அதில் இருந்து ஒரு 100மீட்டர் தூரத்தில் நெல்லியடி யாழ்வீதியிலும் உயிரற்று கிடந்தனர்.சிங்களதேசத்தை உலுக்கிய ஒரு நிகழ்வு இது.

இது நடந்தபோது தலைவர் தமிழ்நாட்டில் இருந்தார்.இந்த சம்பவத்தின் பின்னர் தாயகத்தில் இருந்து தலைவரை சந்திக்க சென்ற போராளியிடம் தலைவர் கேட்ட முதல் கேள்வியே ‘ நெல்லியடி தாக்குதலில் ஜீப்புக்கு வெளியே 100மீட்டர் தூரத்தில் விழுந்து கிடந்த காவல்துறையினனை சுட்ட போராளி யார் என்பதே..
சங்கர்தான் சுட்டது. அதன் பின்னர் ஒருசில நாட்களில் சங்கருக்கு என்று ஒரு கடிதம் தலைவர் அனுப்பி இருந்தார்.அதில் ‘ஒரு தாக்குதலில் ஓடும் ஒருவனை கலைத்து போய் சுட்டால்,மறு தாக்குதலில் எமக்கான எதிர்ப்பு அதிகமாக இருக்கும்.உயிருக்கு பயந்து ஓட நினைக்கும் எதிரி நினைப்பான் ‘ஓடினாலும் கலைத்து வந்து சுட்டுகொல்வார்கள்.எப்படியோ சாகப்போகின்ற நான் நாலு சூடுசுட்டுவிட்டு சாவோம் என்று நினைப்பானாகில் அது எமது போராளிகளுக்கு நிறைய அழிவுகளை கொடுக்கும் ‘ என்று ஆழ்ந்த ஒரு உளவியல் பார்வையுடன் எழுதப்பட்ட அந்த கடிதம் பார்த்தபோது இந்த மனிதன் எப்படித்தான் ஒவ்வொன்றையும் எங்களை போல இல்லாமல் வித்தியாசமாக அணுகி பார்க்கின்றார் என்ற வியப்பு வானுயர்ந்து நிமிர வைத்தது..

இன்னுமொருமுறை,இது 83மே உள்ளுராட்சிதேர்தல் நிராகரிப்பு காலம்.இருக்கின்ற ஒரு சில வாரங்களுக்குள் மக்களை முழுமையாக வீடுவீடாக சந்தித்து வாக்களிக்க வேண்டாம் என்று காரணங்களை சொல்லி விளக்க வேண்டிய ஒரு வியூகத்தை தலைவர் வகுத்தார் 83மார்ச் நடுப்பகுதியில்.
அப்போது இருந்த 30க்கும் குறைவான போராளிகளுக்கும் அவரவர் செல்லவேண்டிய இடங்கள் பற்றி தலைவர் விளக்க கொண்டிருந்தார்.தீடீரென கேட்டார்.’ இதிலை தேனீர்குடிக்காதவர்கள் எத்தனை பேர்’ என்று.அதிகமான போராளிகள் அப்போது தேனீர் குடிப்பதில்லை.
தலைவர் மீண்டும் ஒரு கேள்வியை போட்டார்

‘ நீங்கள் மக்களை சந்திக்க வீடுகளுக்கு,குடிசைகளுக்கு போகும்போது மக்கள் தேனீர் தந்தால் என்ன சொல்லுவீங்கள்’ஒருமித்த குரலில் எல்லோரும் சொன்னார்கள் ‘நாங்கள் தேனீர் குடிக்கிறது இல்லை.எங்களுக்கு தேனீர் வேண்டாம்’ என்று சொல்லுவோம். தலைவர் உடனே குரலை உயர்த்தி சொன்னார் ‘ நீங்கள் தேனீர் குடிக்கிறதை விட்டிருந்தால் கூட பரவாயில்லை,மக்களின் வீடுகள்,குடிசைகளுக்கு போகும்போது தேனீர் தந்தால் கட்டாயம் குடிக்க வேணும் என்றார்.
என்னடா தலைவர் இப்படி ஏன் சொல்லுகிறார் என்று நினைத்த தருணத்தில் தலைவரே ஏன் என்ற காரணத்தையும் விளக்குகிறார்

‘ எமது சமூகம் சாதீய ஏற்ற தாழ்வுகளால் பிளவுண்டு,உயர்வு தாழ்வு பார்த்திருக்கும் ஒரு பொழுதில் நாம் போராட இறங்கி இருக்கிறோம்.இங்கு பொதுமக்களுக்கு எதனையும் சாதீய கண்கொண்டு பார்க்கும் மேலாதிக்க எண்ணமும்,அதே நேரம் தாழ்வுமனப்பான்மையும் எல்லா இடத்திலும் இருக்குது.நீங்கள் போகும் ஒரு வீட்டிலோ குடிசையிலோ உங்களுக்கு அன்புடன் தரப்படுற தேனீரை நீங்கள் நிராகரிக்கும்போது அவர்களின் மனங்களை நீங்கள் காயப்படுத்துகிறீங்கள்..நாம் உங்களில் ஒருவர் என்று காட்டுவதற்கு அவர்கள் அன்புடன் தரும் உபசரிப்புகளை அது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லாதுவிட்டாலும்கூட இந்த தேசியவிடுதலைக்காக நீங்கள் அதனை முகம்சுழிக்காமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேணும் என்றார்.

ஒரு உற்சாகத்துக்கு, ஒரு சுவைக்கு அருந்தும் சாதாரண தேனீரிலேயே இத்தனை உளவியல் பார்வையா என்று தலைவரை பெரு வியப்பு கலந்து பார்க்க வைத்தது.இப்படி எதிர்ப்படும் அனைத்து சம்பவங்களில் இருந்தும் பாடங்களை எடுத்து தான் கற்று அதனையே அடுத்த போராளிகளுக்கும் அவர்கள் ஊடாக அடுத்த போராளிகளுக்கும் அவர்களின் வழியாக அனைத்து தமிழ்மக்களுக்கும் என்று விரிய வைத்த அந்த அதிமானுடனின் அகவை அறுபத்திஇரண்டு.
அவர் போராட புறப்பட்ட 72லிருந்து இன்றுவரை அவருக்கு தெரிந்ததுஎல்லாம் விடுதலைக்காக ஏதாவது செய்வதுதான்.

யாருடயை பதிலுக்காகவவும்,ஒப்புதலுக்காகவும்ஒருபோதும் காத்திருந்தது கிடையாது. அவர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இலட்சியகனலுடனும் கட்டிவளர்த்துவந்த விடுதலைப்புலிகள் அமைப்பு மிகப்பாரிய உடைவை 79ல் சந்தித்தது.குழப்பவாதிகள்இயக்கத்தின் உறுப்பினர்களை பிரித்துஎடுத்தார்கள்.மிகுதியாக தலைவருடன் நின்றவர்களிலும் பலர் மனச்சோர்வு அடைந்து தலைவரைவிட்டு பிரிந்து தமது பழைய படிப்புகளை தொடரவும் சொந்தவேலைகளுக்கும் சென்றஅந்த பொழுதில் ஏறத்தாள

ஒரு கை விரலில் அடங்கக்கூடிய உறுப்பினர்களே தலைவருடன் நின்றிருந்தார்கள்.அப்படியான ஒரு பொழுதில் அவரை கோண்டாவில் பஸ்டிப்போவுக்கு முன்பாக கண்டபோது அப்போதும் அவர் எந்தவித சோர்வும் மனக்குழப்பமும் இன்றி சிங்களத்துக்கு எதிரான போராட்டம் பற்றியே கதைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது.அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நெஞ்சுக்குள் நிற்கிறது.’இப்ப என்னுடன் இருக்கிறவங்கள் விட்டுவிட்டு போனாலும்கூட நான் தனித்து நின்று தன்னும் எங்கள் மக்களின் விடுதலைக்காக ஏதும் செய்துதான்.போவேன்’ என்று சொன்ன அந்த அறச்சீற்றம், அந்த இலட்சியக்கனல், எந்த நேரமும் தற்தியாகத்துக்கும், அர்ப்பணிப்புக்கும் தயாரான இந்த குணங்களே அவரை பல்லாயிரம் ஆண்டுகால செழுமையும் வளமும் செம்மொழித்தன்மைகளும் கொண்ட ஒரு மொழியை பேசிடும் பத்துகொடி மக்களினதும் ஒற்றை குரலாக உருவாக்கியுள்ளது.அது என்றென்றும் வழிகாட்டும்

– ச.ச.முத்து-

‘பிரபாகரனியம்’ உள் நுழைவிற்கான ஒரு முன் குறிப்பு

Posted on

pirabaharaniamதேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் விடுதலைக் கோட்பாடுகள் குறித்து விரைவில் வெளியாக இருக்கும் “Velupillai Prabhakaran : Being and Nothingness – (May 18 :Before and After) ” என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும் நீண்ட கால தமிழீழ அரசியற் செய்பாட்டாளரும், போருக்கு பின்னான பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவருமான திரு பரணி கிருஸ்ணரஜனியிடம் தொடர்பு கொண்டு தேசியத் தலைவரின் அகவை 62 ஐ சிறப்பிககுமுகமாக அவரது நூல் குறித்து கேட்டறிந்தவற்றின் தொகுப்பை வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.

அறிமுகம்

2009 இனஅழிப்பு நடந்து முடிந்த பிற்பாடு உள்ளும் வெளியுமாக தலைவர் குறித்தும் எமது விடுதலைப் போராட்டம் குறித்தும் எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும்; வதந்திகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு நிலையில் நின்று அதை நண்பர்களின் உதவியுடன் எழுதினேன்.

எழுத எழுத அது ஒரு கோட்பாடாக முகிழ்ந்ததை ஒரு கட்டத்தில் நானும் நண்பர்களும் அவதானித்தோம். எழுதி முடித்த பிற்பாடுதான் அதன் முக்கியத்துவம் புரிந்ததது. இது தமிழர்களுக்கான விடுதலைக் கோட்பாடு இல்லை. உலகளாவிய ஒடுக்கப்பட்ட இனங்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கான சூத்திரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை உணர்ந்து அதை இன்னும் விரிவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தற்காலிகமாக அதை தொடர்ந்து எழுதுவதை நிறுத்தியிருந்தேன். தற்போது தேவை கருதி மிக அவசரமாக மீதியை எழுதி முடித்திருக்கிறேன்.pirabaharaniam-1

‘பிரபாகரனியம்’ குறித்த ஒரு தத்துவப் புரிதல்.

ஒரு தத்துவம் – கோட்பாடு – சிந்தனை என்பதன் அடிப்படையை நாம் கவனமாக உற்று நோக்கி உள்வாங்கினால் சில உண்மைகள் தெரியவரும். ஒரு புதிய தத்துவம் ஏற்கனவே உள்ள ஒரு வடிவத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சிதைப்பதனூடாகவோ அல்லது அதை முற்று முழுதாக நிராகரிப்பதனூடாகவோதான் தோற்றம் பெறுகின்றது.

ஆகவே அந்தப் புதிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு – கிரகிப்பதற்கு அந்தத் தத்துவத்தை மட்டும் கற்பதனூடாகவோ – உள்வாங்குவதனூடாகவோ நாம் ஒரு முழுமையை எய்த முடியாது. எனவே பரந்துபட்ட அறிவும் வாசிப்பும் கற்கையும் நமக்குத் தேவைப்படுகிறது. அதாவது நாம் தேடும் கோட்பாட்டின் – தத்துவத்தின் சிதைந்த மூலம் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகிறது. நாம் அதைத் தேடும் போது அது வேறு ஒரு கோட்பாட்டின் – தத்துவத்தின் சிதைவாய் எமக்கு அறிமுகமாகிறது. அதிலிருந்து இன்னொன்று……..

ஒரு சங்கிலித் தொடராய்- ஒரு சிக்கலான வலைப்பின்னலாய் எமது தேடல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. என்றுமே நாம் ஒரு முடிவைக்கண்டடைய முடியாது என்ற பேருண்மை எமக்கு இறுதியில் தெரிய வரும். முடிவில் அது ஒரு பிரபஞ்ச உலகமாய் எமக்குக் காட்சியளிக்கிறது. அதுதான் தத்துவ உலகத்தின் சூக்குமமும்கூட.

முடிவை எய்தாத இந்த தேடல்தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது- மீண்டும் மீண்டும் அவனைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. மனிதன் என்னும் பூகோளப் பிராணியின் பூவுலக இருப்பே இத் தேடலில்தான் மையங்கொண்டுள்ளது. தேடுவதற்கு ஒன்றும் இல்லாத போது நாம் சடங்களாகிவிடுகிறோம். வாழ்வின் அர்த்தத்தை இழந்தவர்களாகிவிடுகிறோம். மனித இருப்பையும் மனித வாழ்வையும் அர்த்தப்படுத்துவதே இத்தகைய தேடல்தான்.

மனித வாழ்வின் இந்தப் பேருண்மையை ஒரு மனிதன் உணரும்போது அவன் முழுமையடைகிறான். அந்த மனிதன் சார்ந்திருக்கும் இனக்குழுமத்தின் குறிப்பிட்ட விழுக்காடு சதவிகித மனிதர்கள் இந்தப் பேருண்மையை உணரும்போது அந்த இனமே முழுமையானதாக முற்போக்கானதாக மாறிவிடுகிறது.

உலக தத்துவமேதைகள், கோட்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள் மனித இனம் குறித்துக் கண்ட கனவு இதுதான்.

இதன் வழி ஈழத்தமிழ்ச் சமுகம் குறித்து பிரபாகரன் என்ற மனிதர் கண்ட கனவின் வடிவம்தான் ‘பிரபாகரனியமாக ‘ நம்முன் கிடக்கிறது. இசங்களை வெறுத்த, கோட்பாடுகளை குலைக்கும் ஒரு புதிர் நிறைந்த பாத்திரத்தை வகித்த ஒரு அதி மனிதன் நந்திக்கடலில் வைத்து ஒரு கோட்பாட்டை உலகிற்கு விட்டுச் சென்ற கதையின் தத்துவ பின்புலம் இதுதான்.

ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான ஒரு அதி மனிதனை ‘நந்திக்கடல்’ ஒரு கோட்பாட்டாளனாக மறு அறிமுகம் செய்த கதையும் இதுதான்.

புரட்சியாளன் – கோட்பாட்டாளன்.

தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து தலைவர்களும் தமது போராட்டத்தை எதோ ஒரு வகையில் உலகின் ஏதோ ஒரு போராட்டத்துடன் அடையாள்ப்படுத்தும் முனைப்பில் இருந்தார்கள். அந்தந்த போராட்ட தலைவர்களுடன் தம்மை அடையாளப்படுத்தவும் புகுந்தார்கள். ஒரு சில தலைவர்கள் இன்னும் ஒரு படி மேலே அந்தந்த தலைவர்கள் போல் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்கள்.

மக்களுக்கும் சீனப் புரட்சி, ரஸ்யப்புரட்சி, தொடக்கம் கியூபா போராட்டம், வியட்னாம் போராட்டம் வரை வகுப்பெடுத்தார்கள். கொம்மியூனிசம், மார்க்கிசம் தொடங்கி உலகின் அனைத்து தத்துவங்களும் கோட்பாடுகளும் அவர்கள் பேராட்டத்தை வழி நடத்துவதாக பறை சாற்றினார்கள்.

இது தவறல்ல. ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார். முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.

முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் என்பது ஒரு கிட்டத்தட்ட ஒரு நிலப்பரப்பை குறிக்கும் இருவேறு பெயர்கள். ஒரு அங்குலம்தான் இந்த இரு நிலத்தையும் துண்டாடுகிறது. ஆனால் அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முற்றிலும் வேறுபட்ட செய்தியை இந்த நிலங்கள் பதிவு செய்கின்றன.

பெயருக்கேற்றாற் போல் முள்ளி ‘வாய்க்கால்’ ஒரு தேங்கிய அரசியலையும் நந்திக்’கடல்’ எல்லைகளற்று பரந்து விரியும் அரசியலையும் முன்மொழிகின்றன.

இது புரியாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் முள்ளி’வாய்க்காலோடு’ தேங்கி நிற்கிறோம். ஆனால் நாம் விடுதலையை தேட வேண்டிய இடம் நந்தி ‘கடலில்’ தான் கிடக்கிறது. எமக்கு மட்டுமல்ல போராடும் இனங்கள் நவீன அரசுகளை எதிர்கொள்ளும் சூக்குமத்தை விழுங்கியபடி ‘நந்திக்கடல்’ அமைதியாகக் கிடக்கிறது. ஒரு கோட்பாட்டாளன் உருவான கதையின் பின்புலம் இது. வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறது.

நினைவு அழிப்பு அரசியல் = புலி நீக்க அரசியல் = நீதி மறுப்பு அரசியல்.

எது ‘நினைவு அழிப்பு’ அரசியல்?

மிக எளிமையாக விளக்கினால் தமிழீழம் என்ற De facto state இன் மூன்று தசாப்த வாழ்வை மக்களின் மன அடுக்கிலிருந்து உருவுதல். அதன் அரசியல் ஒட்டு மொத்த உள்ளடக்கமாக இருப்பது ‘புலி நீக்க’ அரசியல்.

அதாவது “புலி நீக்கம் ” என்பதனூடாக தமிழத்தேச கருத்தியல்தான் அழிக்கப்படுகிறதோயொழிய “புலி” என்ற அமைப்பியல் அல்ல. தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற எமது அரசியல் அவாவை வெல்வதன் பின்னணியில் அதன் அடிப்படையான இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பேசப்படுகிற ஒரு விடயமாக இது இருக்கிறது. இந்த அடையாள அழிப்பே முள்ளிவாய்க்காலின் பின்னணயில் இருந்தது.
தற்போது எமக்கான நீதியை முற்றாக குழி தோண்டிப் புதைக்க ‘புலிகள’; என்ற கருத்தியலும் அவர்களின் சித்தாந்தமும் ‘நினைவு அழிப்பு’ அரசியலினூடாக தமிழ் பரப்பிலிருந்து நீக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதைத்தான் நாம் ‘புலி நீக்க’ அரசியல் என்கிறோம்.

இந்த ‘புலி நீக்க’ அரசியலை நாம் ஏன் தொடர்ந்து எதிர்க்கிறோம் என்பதன் மிக எளிமையான விபரணம் இதுதான்.

“புலி” என்ற குறியீட்டு பதத்தை தமிழ் பரப்பில் நாம் தொடர்ந்து நிறுத்துவது ஆயுதப்போராட்டத்தை முன்னகர்த்த அல்ல. ( அது நீண்டகால நோக்கில் ஒரு உதிரிக் காரணமாக இருப்பதை நாம் மறுக்கவில்லை) இந்த ‘நினைவு அழிப்பு’ அரசியலுக்கு எதிர்வினையாக – எமது இனத்தின் அரசியல் உள்ளடக்கத்தை தொடர்ந்து பேண நாம் எடுத்துள்ள அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். தமிழின அழிப்பினூடாக புலிகளை அழித்த மேற்குலக – பிராந்திய சக்திகள் புலிகளை பயங்கரவாத பட்டியலில் தொடாந்து வைத்திருக்கும் பின்புலமும் இதுதான்.

‘பிரபாகரனியம்’ என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல.. எமது நீதிக்கான கருவி அது.

30 வருட காலமாக நாம் வாழ்ந்த ‘நடைமுறை அரசு’ குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது. ‘பிரபாகரனியம்’ இதை இன்னும் உரத்து பேசும். விடுதலைக்கான கோட்பாடுகளை கட்டவிழ்க்கும்..pirabaharaniam-2

தேசிய இனங்களின் வழிகாட்டி.

2009 தமிழின அழிப்பிற்கு பிற்பாடு புலிகளின் போராட்ட வழிமுறைகளும், அவர்கள் அனைத்துலக சதிகளினூடாக அழிக்கப்பட்ட பிராந்திய பூகோள அரசியலும், அரச பயங்கரவாதத்தை மையப்படுத்திய “சர்வதேச உறவுகளும்” தலைவர் பிரபாகரன் குறித்த வேறொரு அரசியல் பரிமாணத்தை உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் சார்ந்து எழுதியிருக்கிறது. அது “பிரபாகரனியம்” என்ற விடுதலைக் கோட்பாடாக கட்டவிழ்ந்து ஒடுக்கப்படும் இனங்களுக்கான ஒரு விடுதலைக் கோட்பாடாக முகிழ்ந்திருக்கிறது.

எனவே நாம் இனி அவரை தமிழர்களுக்கு மட்டும் பொதுவான தலைவராக குறுக்குவது அரசியல்ரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் தவறானது. உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வழிகாட்டியாக வரலாறே அவரை உருவகித்திருக்கிறது. வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல் விதி.

தனி மனித அரசியல்.

‘ தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.

தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை எமது ஆய்வினூடாக துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்தோம். பிரபாகரன் – தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத – இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பதே எமது ஆய்வின் மிக முக்கியமான முடிவு.

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெரும் பிம்பமாகப் தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தமிழனது உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது.

தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஓர் இனம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.“பிரபாகரனியம்” என்ற நவீன விடுதலைக் கோட்பாடு ஒன்று அவரிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளதன் பின்புலம் இதுதான்.ltte-through-nanthikadal

‘நந்திக் கடல்’

உலக பயங்கரவாத அரசுகள் அதை தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள்; அமைப்புக்கள; வகுத்து வைத்திருந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்து உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான விடுதலைக்கோட்பாடு பிரசவிக்கப்பட்ட இந்த நூறறாண்டின் தாய்ச் சமர்ககளம்.

பற்றைகளும், புற்களும், சேறும், சகதியும் நிறைந்த ஒரு வறண்ட நிலப்பரப்பு ஒரு வரலாற்று நாயகனை ‘உள்வாங்கி’ ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டை வெளித்தள்ளியது. போராடும் இனங்களுக்கான படிப்பினையும் பாடமும் மட்டுமல்ல வழிகாட்டியுமாக உலக ஒழுங்குக்கு சவாலாக அச்சமாக எல்லாமுமாக அது அந்த மண்ணிலிருந்து வெளித்ள்ளபப்ட்டது.

வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறது.

-பரணி கிருஷ்ணரஜனி

எம் தலைவர் !

Posted on Updated on

தேசிய தலைவர் அவர்கள் போராளிகளை ஓர் தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளை வளர்த்தெடுடுப்பாரோ அவ்வாறு வளர்த்தெடுத்தார் .. தன் பிள்ளைகளுக்கு சமமாக போராளிகளை வளத்தார்

தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்பாளனாகவும் பிறர்மேல் கரிசனை கொண்ட அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார். தலைமைக்குரிய கண்டிப்பும் நேர்மையும் அதேநேரம் பிறருடைய உணர்வுகளைg; புரிந்தவாராக, அவர்களுடைய உணர்விகளிற்கும் மதிப்புக் கொடுக்கும் ஒருவராக இருந்தார். வெறுமனே தலைவர் அவர்களின் ஆளுமைக் கவர்ச்சியில் மட்டும் இளைஞர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படவில்லை. அவரிடம் இருந்த பனமுகப் பண்புகளே அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தது.

ஒரு நாள் தலைவர் வாகனத்தில் முகாமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் மீன் வித்துக் கொண்டு சென்றார் ஒரு வியாபாரி. அவரைப்பார்த்ததும் தலைவருக்கு மீன் சாப்பிடும் எண்ணம் ஏற்பட்டது. உடனே மீன் வாங்கும் படி கூறி, வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் இருந்த பாதுகாவலர் பின்னுக்கு வந்த பாதுகாப்பு வாகனத்தில் வந்தவர்களிடம் மீன் வாங்குமாறு கூறினர். சிறிது நேரத்திலேயே மீன் வாங்கியாகிவிட்டது என தெரிவித்தனர். தலைவர் ‘என்ன இவ்வளவு கெதியா வாங்கிட்டீங்களா?’ எனக் கேட்க, அந்தப்போராளியும் ‘ஓம் அண்ணை வாங்கியிட்டம்’ எனக் கூறினார். பின்னர் வாகனங்கள் புறப்பட்டு முகாமிற்குச் சென்றுவிட்டன.

வாகனத்திலிருந்து இறங்கிய தலைவர் ‘எங்க மீனைப்பாப்பம்’ என கேட்க அவர்கள் பெட்டிக்குள் இருந்த மீனைக்காட்டினார்கள். ஆச்சரியமைந்த தலைவர், ஏன் பெட்டியுடன் வாங்கினீர்கள் எனக் கேட்டார். அதற்குப் போராளி ‘நாங்கள் ஐந்து கிலோ கேட்டனாங்கள், அவரிடம் ஐந்து கிலோ மட்டில் இருந்ததால் அப்படியே எடுக்கச் சொன்னவர். எங்களிட்ட பை ஒன்றும் இல்லை, அதால பெட்டியுடன் தாறீங்களா? அதுக்கும் காசு தருகின்றோம் எனக் கேட்டேன், வியாபாரியும் ‘மறுக்காமல் சரி என்று சொன்னார். அதோட அந்த இடத்தில் உங்களை வைத்துக்கொண்டு தாமதிக்க விரும்பவில்லை எனவே அப்படியே வாங்கிக் கொண்டு வந்திட்டன்’ என்றனர்.

அதற்குத் தலைவர் ‘நாங்கள் இயக்கம் என்டபடியால், கேட்டதை மக்கள் மறுக்காமல் தருவினம் ஆனால் ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு பொருளை அதிஸ்டமாகக் கருதுவினம், அதுபோன்று இந்த வியாபாரிக்கும் அந்தப்பெட்டியில் மீன்வித்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்திருக்கும். சிலவேளை நாளைக்கு புதிய பெட்டி வாங்கி வியாபாரத்திற்குச் செல்லும் போது, சரியாக வியாபாரம் போகாவிட்டால், அதிஸ்டமான பெட்டியை பெடியள் கேட்டதால கொடுத்திட்டனே என்று கவலைப்படக்கூடும். இந்தக் கருத்து மனைவி, பிள்ளைகளிற்குகூட ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. இது இயக்கத்தைப்பற்றிய ஒரு தவறான பார்வையை மக்களிற்குள் தோற்றுவிக்கும். எனவே நீங்கள் நாளை எப்படியாவது இந்தப்பெட்டியை வியாபாரிக்கு கிடைக்கச் செய்து விடுங்கள்’ என்றார்.

மறுநாள் மீன் வாங்கிய இடத்துக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் மீன்வியாபாரியின் வீடு எங்கிருக்கின்றது என தேடிக்கண்டு பிடித்து, அந்தப்பெட்டியை திருப்பிக் கொடுக்க வியாபாரி வியப்படைந்து ஒரு புன்முறுவலுடன் வாங்கிக் கொண்டார். அன்று மதியம் மீன் வாங்கிய போராளியை அழைத்த தலைவர் ‘மீன் பெட்டியைத் திருப்பிக் கொடுத்து விட்டீர்களா?’ என அவ்வளவு வேலைகளுற்கு மத்தியிலும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

பிறிதொரு சம்பவத்தில் தலைவர் காலையுணவருந்திக் கொண்டிருந்தவேளை கேணல் சங்கர் அண்ணை அலுவலாக வந்திருந்தார். அப்போது தலைவர் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சங்கர் அண்ணை வந்ததும் ‘அண்ணை மாம்பழம் சாப்பிடுங்கோ’ என்று கூற அவரும் சாப்பிட்டார். மாம்பழம் நல்ல சுவையாக இருந்தது. சங்கர் அண்ணையும் நல்ல சுவையாக இருக்கின்றது எனச் சொல்லிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது மனவோட்டத்தை புரிந்து கொண்ட தலைவர் ‘மற்றப்பழத்தையும் சாப்பிடுங்கோ அண்ணை’ என்றார். சங்கர் அண்ணை சாப்பிடத் தொடங்க அண்ணை பாதுகாவலர்களிடம் ‘இன்னுமொரு மாம்பழம் ஒன்று வெட்டிவாங்கோ’ என்றார். உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்த அவர் ‘மாம்பழம் முடிந்து விட்டது’ என்றார்.

சங்கர் அண்ணை முகம் சற்று மாறியதை கவனித்த தலைவர் உடனேயே ‘சரி, வாழைப்பழம் எடுத்துவாங்கோ’ எனக் கூற அவர் அதுவும் முடிந்து விட்டது என்றார். சங்கர் அண்ணை சங்கடப்படுவதை உணர்ந்த தலைவர். ‘சரி தம்பி’ என்று அந்த சம்பாசனையை முடித்துக் கொண்டார். பின்னர் சங்கர் அண்ணையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கதைத்து அவருக்கு மனச்சங்கடம் இல்லாமல் வேறு வகையில் அவரை சந்தோசமாக அனுப்பி வைத்தார்.

பின்னர் அன்று மாலை தலைவர் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவேளை சம்பந்தப்பட்ட போராளி தலைவருக்கு முன்னால் சென்றார். ‘தம்பி இங்கை வாங்கோ’ என அப்போராளியை அழைத்து காலையில் நீங்கள் நடந்து கொண்டு முறை சரியா?’ எனக்கேட்டார். அவரும் எது என்று தெரியாமல் விழிக்க, தலைவர் சொன்னார் ‘காலையில் பழம்; கொண்டு வாங்கோ என்று சொல்ல, நீங்கள் சங்கர் அண்ணைக்கு கேட்கக்கூடியவாறு பழம் முடிந்து விட்டது என்று சொன்னீர்கள்.

அப்படி சொல்லியிருக்கக்கூடாது. ஏனென்றால் எனக்குரிய உணவை தான் சாப்பிட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி சங்கரண்ணைக்கு ஏற்பட்டதை அவரின் முகமாற்றத்திலிருந்து அறிந்து கொண்டேன். உணவு பரிமாறும் போது விருந்தினர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும் உணவு பரிமாறிமாறவும் பழகிக் கொள்ளவேண்டும். இனிமேல் இப்படியான தருணங்களில் நான் கேட்கும் உணவு முடிந்து விட்டால், ஒரு ஒற்றையில் எழுதித்தாருங்கள் நான் அதைப் புரிந்து கொள்வேன் அவர்களிற்கும் தர்மசங்கடம்; ஏற்படாது’ என்று சொன்னார்.

இது தனிமனிதர்கள் மீதும் அவர்களின் தனிமனித உணர்வுகளிற்கும் தலைவர் கொடுக்கும் முன்னுரிமை, மதிப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இதனூடாகப் போராளிகளை மனிதநேயம், மனிதப் பண்புகள் உள்ளவர்களாக உருவாக்குவதன் மூலம், இப்போராளிகாளால் உருவாக்கப்படும் சமூகம் ஒரு நன்நெறி மிக்க சமூகமாகவும் நல்ல சிந்தனைகள், நற்பண்புகளைக் கொண்ட சமூகமாகவும் அடுத்தவர்களின் உணர்வுகளிற்கு மதிப்புக் கொடுப்பவர்களாகவும் உருவாக வேண்டும் என்பதை, தன்னைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து மாற்றவேண்டும் என்பதில் ஒரு தெளிவான பார்வை இருப்பதை வெளிக்காட்டுகின்றது.

**ltte women brigade with leader

ஒப்பற்ற தலைவன் எம் அண்ணண்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் கூட்டத்திலிருந்து உலக நாடுகள் வியக்கும் வண்ணம் முன்னுதாரணமானதோர் விடுதலைப் போராட்டத்தை கட்டியெழுப்பியவர் எங்கள் தலைவர்..

நாற்புறமும் கடல்நீர் சூழ்ந்துள்ள சிறியதோர் நிலப்பரப்பில் சிறீலங்காவோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா,சீனா,பாக்கிஸ்தான் நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு முகம்கொடுத்து மரபுவழி தாக்குதல் படையணிகள்,சிறப்பு படைபிரிவுகள்,பீரங்கிப்படை பிரிவு,கடற்படைபிரிவு,உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத்துறை,70க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு,அரை உரிமம் கொண்ட செயற்க்கைகோள்.

இவற்றிக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002ம் ஆண்டுமுதல் ஒரு அரசுக்கு இருக்கவேண்டிய அனைத்து துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடைமுறை அரசை உருவாக்கி பல உலக நாடுகள் வியக்கும் வண்ணம் மிக நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும் கண்ணியமும் ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் எம் தேசபெருந்தலைவர்.

உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்கள் உரிமைப் பூமியாய் இருப்பதுபோல உலககெங்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்தாலும் தம் இனத்திற்கென்று ஒரு நாடிருக்கின்றது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு மிக அருகில் தமிழினத்தை கொண்டுவந்தவர் எங்கள் தேதியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.இந்த நிலையை தமிழினம் அடைவதற்க்கு அவர்பட்ட கஷ்டம்,துன்பம்,துயரம்,இன்னல்,இடர்,இழப்பு கொஞ்சநஞ்சமல்ல.தன் பள்ளி பருவம் தொடங்கி தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்கள் விடிவிற்காகவே அர்பணித்துக்கொண்டு இருக்கின்ற ஒப்பற்ற தலைவன் எம் அண்ணண்.