விடுதலைப்பேரொளி

திருமதி அடேல் பாலசிங்கம் பார்வையில் பிரபாகரன்

Posted on

Adele Balasingham

தமிழில்

PDF  Prabakaran in my view tamil-adle balasingam

****

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.
https://velupillaiprabhakaran.files.wordpress.com/2013/03/balafamily.jpg

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம்,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.

மேலும்

*************

ஆங்கிலத்தில்

PDF
Prabakaran in my view-adle balasingam

பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது

Posted on

கீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது.

அந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால் நான் அந்த அபூர்வமான கெரில்லாத் தலைவரை சந்திப்பதற்கு முன் இரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அந்த அறையில் உட்கார்ந்திருந்தபோது புலிகள் இயக்கப்போராளி ஒருவர் ஒரு வர்ணத்தொலைக்காட்சியை இயங்க வைத்தார்.

அவை நன்றாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடாவாகும். ஒளி பிரயோகிக்கப்பட்ட விதமும், கமெராவின் கோணங்களும் பிரபாகரனை நிஜத்திலும் பெரியதாகக் காட்டியது. அவர் பலமானவராக, கடுமையானவராக, வீரம்செறிந்தவராகக் காணப்பட்டார். அந்த ஒளியிழைநாடா, புலிகளை ஒரு பெருமை மிக்க தேசத்தின் ஒழுக்கமான இராணுவமாகக் காட்டியது. அங்கு பிரபாகரன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். சீருடையில் உள்ளார். புலிக்கொடியை ஏற்ற அவர் அணிவகுத்து நின்ற புலிப்படையினரைத்தாண்டிச் சென்றார். தேசபக்திப்பாடல் பின்னணியில் ஒலிக்க, பிரகாசமான கண்களுடன் – பெருமையுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை சூரியப்பிரகாசம் நிரம்பிய வெளியில் பிரபாகரன் பறக்க விடுகின்றார்.

 

அங்கு பிரபாகரன் கொள்கை கொண்ட பிரமாண்டமான மனிதர் – புரட்சியாளர், கவர்ச்சிகர மானவர். ஆனால் முதல்தடவையாக பிரபாகரனைச் சந்தித்தபோது பேச்சிழந்து போனதுடன் அதிருப்தியுற்றேன். அவர் அந்த அறைக்குள் நடந்து வந்தார். நான் அடையாளம் காணவில்லை. வீடியோவில் கண்ட ஆறடி உயரமுள்ள நேர்த்தியானவரால், பாதிக்கப்பட்டதால் அடையாளம் காணவில்லை. அங்கு வந்த மனிதன் கட்டையான, சிறு தமிழ் வணிகர் போன்ற உருவ முள்ளவர். நான் அவரை புலி ஆதரவாளர் என்று நினைத்தேன். ஒரு ஆர்வமுள்ள தலையாட்டலும் செய்தேன். சில நிமிடங்களின் பின்னர் ஒரு மென்மையான குரல் தமிழில் ஒலித்தது. ‘நான் தான் பிரபாகரன்’ என்றார். அவர் அடையாளம் கண்டுவிட்டார். நான் அடையாளம் காணவில்லை.

அந்த மனிதர் மன்னிப்பு கேட்பவர் போன்று சிரித்தார். நான் அந்த முகத்தை ஆராய்ந்தேன். எனது பேர திர்ச்சிக்கு பின் அது பிரபாகரன் தான் என்பதை உணர்ந் தேன். கமெராக்கள் பொய்சொல்லாதென யார் சொன்னார்கள். பிரபாகரன் கருஞ்சாம்பல் நிறக்காற்சட்டையும், வான நீலநிறமுள்ள சேர்ட்டும் அணிந்திருந்தார். அவர் வீதியால் நடந்து சென்றால் யாரும் அவரை இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்கமாட்டார்கள். வீடியோவில் பார்த்த உறுதிமிக்க, சீருடை தரித்த, கொரில்லாத் தலைவருக்கும், இந்த மென்மையான தோற்றமளிக்கும் சிவிலியனுக்குமிடையோன ஒப்பீடு ஒரு தற்செயல் நிகழ்வே. நான் ஏன் வீடியோவில் பிரபாகரன் பேசவில்லை என்பதை உணர்ந்தேன்.

பெருமனிதனிடம் மென்மையான குரல். அது ஒரு நாயகனின் தோற்றத்தைப் பாதிக்கும். நான் என் நம்பாத தன்மையை மறைக்க முயன்றேன். ஆனால் அதிர்ஸ்டவசமாக அது பிரபாகரனை சிறிது அதிசயப்பட மட்டும் வைத்தது. எனது குழப்பத்தை மறைப்பதற்கு சிறந்தவழி எனது கேள்விகளை ஆரம்பிப்பது. அது இருமணிநேரம் நீடித்தது. முடிவில் என் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மனிதனைச் சந்தித்ததை உணர்ந்தேன். இன்று பல குறிப்பிடத்தக்க மனிதர்களைச் சந்தித்த பின்பும் பிரபாகரனே மிகக் குறிப்பிடத்தக்கவராவார்.பிரபாகரன், நான் சந்தித்தவர்களில் மிக உறுதிகொண்டவர். அவரது தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது. அவர் இன்று பார்ப்பதை அவரது எதிரிகள் நீண்டகாலங்களின் பின்னர் தான் உணர்வார்கள்.

ஊடகவியலாளர்,

தெற்காசியத் தலைமைச் செய்தியாளர்,

ரைம்ஸ்,

சி.என்.என். இந்தியா.

அனிதா பிரதாப்

ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்

Posted on

ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும்.

16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களும், தொடர்ந்து டெச்சுக்காரர்களும் இறுதியாகஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக 400 வருடங்களுக்கு மேலாக தமிழர்களை தம் அடிமை வலைக்குள் சிக்கவைத்து தமிழ் மக்களின் வாழ்வையும், அவர்கள் இறைமையையும் சீர்குலைத்தார்கள் என்பதையும் முழு உலகமும் அறியாமல் இருக்கமுடியாது. அந்நியர்களான போர்த்துக்கீசரும், டச்சுக்காரர்களும் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த போதிலும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கையும், கிழக்கையும் தனி நிர்வாக அலகாகக்கொண்டே ஆட்சி செய்தனர்.

ஆனால் 1796ல் டெச்சுக்காரர்களிடம் இருந்து இலங்கை முழுவதையும் தமதாக்கிக்கொண்ட ஆங்கிலேயர், தமது நிர்வாக வசதிக்காக இலங்கைமுழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கை இலங்கை வரைபடத்தில் இருந்து நீக்கிய பாதகமான, துரோகத்தனமான செயல். அந்த மண்ணின் கண்ணீர் சிந்தும் வரலாற்று நிகழ்வுகளில் மிகக் கொடூரமானது. மேலும், ஆங்கிலேயர்கள் 1948ம் ஆண்டு இலங்கையை விட்டு நீங்கும்போது ஜனநாயகம் என்ற போர்வையில் இலங்கை முழுவதையும், பெரும்பான்மைமக்களாகிய சிங்களவர் கையில் தாரைவார்த்துவிட்டுத் தப்பித்துக்கொண்ட,ஜனநாயக முறைகேடான நிகழ்வும் அங்குதான் நிகழ்ந்திருக்கிறது.

ஜனநாயக கோட்பாட்டை பேரினவாதக் கோட்பாடாகக் கருதிக்கொண்ட அல்லது மாற்றிக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் செய்த அனர்த்தங்கள் எண்ணற்றவை. இலங்கையிலும், ஈழமண்ணிலும் சிந்திய தமிழர்களின் இரத்தங்களும், சொத்துக்களின் அழிவுகளும், மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும் சோதனைகளும், வேதனைகளும், இழப்புக்களும் எண்ணில் அடங்கா. பொறுத்து,பொறுத்து ஈற்றில் பொங்கி எழுந்த தமிழ்க் குலம், குறிப்பாக இளைஞர்குழாம் தமது இழந்த உரிமைகளை மீளப்பெற்று சுதந்திரமாக வாழச் சித்தம் கொண்டனர்.

தமிழர்கள் இழந்த உரிமைகளை மீள வழங்குவதில் சிங்கள அரசும், மாறிமாறி ஆட்சிக்குவந்த சிங்களத் தலைமைகளும் புரிந்த அரசியல் சாகசங்கள், வித்தைகள், நடவடிக்கைகள் பலப்பல. சமரச முயற்சிகளினால் எழுதப்பட்ட பல உடன்படிக்கைகள் எத்தனைதடவைகள் கிழித்தெறியப்பட்டு காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அவலங்களுக்கு முழுக்க, முழுக்க சிங்களத் தலைவர்கள் மட்டும்தான் பொறுப்பாளிகள் என்று கூறுவது ஒரு பக்கச்சார்பானது.

குறிப்பாக 1930 களில் இருந்து, ஈழத்தமிழர்களின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தெரிந்தோ, தெரியாமலோவிட்ட தவறுகளும், கைக்கொண்டதவறான அரசியல் கோட்பாடுகளும், காலத்துக்கு ஒவ்வாத அரசியல் கொள்கைகளும், பல சந்தர்ப்பங்களில் மாற்றான் கைக்கு விலைபோன நிகழ்வுகளும் பலவகைகளில் ஈழத்தமிழர்களின் இன்றைய இந்த அவலநிலைக்கு ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை நியாயவாதிகள் ஒப்புக்கொள்ளாமல் விடமாட்டார்கள். ஆனால் 1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய இனப்படுகொலையின் பின்னர் ஈழத்தின் அரசியல் நிலைமையிலும், தலைமையிலும் ஏற்பட்டமாற்றம்,தமிழர்களின் இந்தப் புரையோடிப்போன துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் ஒரு நிலையான பரிகாரம் கிடைக்கும் என்று தமிழ்த்தேசமும், நன்நோக்குள்ள பிறதேசங்களும் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கின்றன.

தமிழர்களுக்குக் கிடைத்த தலைமையாக ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற அரசியல் அமைப்பும், அதன் ஒப்பற்ற தேசியத் தலைவரே பிரபாகரன் என்பதும் தமிழ் மக்களும் உலகமும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும். பேரினவாத சக்திகளுக்கு, பதிலடி கொடுக்கக்கூடிய அரசியல் இராணுவ மாற்றுவழிகளையும், கொள்கைகளையும் மிகவும் திறமையாகவும், சாதுரியமாகவும் தீட்டி, அரசியல் சாணக்கியர்களையும், தன் தளபதிகளையும், போராளிகளையும், உரிய முறையில் வழிநடாத்தி, தமிழ்மக்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி உறுதியுடனும், தூரநோக்குடனும், நாட்டுப்பற்றுடனும், நேர்மையாகவும், உண்மையாகவும் அரசியல் விடிவை நோக்கி விரைந்துசெல்லும் ஓர் ஒப்பற்ற தலைவனாக தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தமிழ் மக்களுக்கு கிடைத்தமை காலம் ஈந்த ஒரு பெரும் பேறாகும்.

கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக, தளராமலும்,உறுதியுடனும், யாருக்கும் விலைபோகாமலும், நேர்மையாகவும், இதயசுத்தியுடன் கொண்ட கொள்கைக்காக, தமிழ்மக்களின் நிரந்தர விடிவுக்காய் தன் உயிரையும் துச்சமாக மதித்து, களத்தில் நின்று போரை வழிநடத்துகின்ற, போராடுகின்ற ஒரு வீரத் தமிழ் மகனை, ஓர் ஒப்பற்ற தேசியத் தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது அவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். தளபதிகளோடு தளபதிகளாய், கரும்புலிகளோடு கரும்புலிகளாய், போராளிகளோடு போராளிகளாய்,அரசியல் அறிஞர்களோடு சமமாய், தாமும் தலைவனாக மட்டும் இல்லாமல், அநாதரவற்றவர்களுக்கெல்லாம் தாயாய், தந்தையாய், ஊனமுற்றவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் திகழும் ஓர் ஒப்புயர்வற்ற தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது ஈழமண்ணின் வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும் என்று துணிந்து மகிழ்ச்சியோடு கூறக் கூடியதாய் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நீதி, நியாயம், தர்மம், என்பன உண்மையானால் இவ்வாசகங்கள் ஈழவரலாற்றின் இறுதி அத்தியாயத்தில் நிரந்தரமாக பதிவு செய்யப்படவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. அவ்வாறான ஒர் ஒப்பற்ற தலைவனின் 50வது பிறந்த தினம் 26.110. 2004 அன்று தமிழர்கள் பட்டி, தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்படும் இவ்வேளையில், ஈழத்தமிழர் பூரண சுதந்திரம் கொண்ட மக்களாக அந்த மண்ணில் வாழ தலைவனே! நீ வழிசமைக்க வேண்டும் என்று நல்லாசி கூறுவதோடு நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழவேண்டும் என்று எம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மனநிறைவோடு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

வரலாற்றாய்வாளர்,

விரிவுரையாளர், சார்ள்ஸ் ஸ்ரூபேட் பல்கலைக்கழகம்.

அவுஸ்திரேலியா.

கலாநிதி முருகர் குணசிங்கம்

ஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்

Posted on

கால இடவெளிகளுக்குள் கட்டற்றுப் பிரவகிக்கும் ஆகுதல்களாக வரலாற்றுப் பேராறு ஓடிக்கொண்டேயிருக்கிறது.

துளித்துளியாய் உருவெடுக்கும் சம்பவங்கள் பேரலைகளாகவும் பரிணமித்துப் பாரினை அதிசயிக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப்போராட்டம் இன்று கொண்டிருப்பது பேரலைப்பரிமாணம். புயலை எதிர்க்க ஆழத்திருந்து எழுந்த போர்க்கோலம். அடக்கு முறையை எதிர்க்கும் அரசியலாய் சொல் மழை பொழிந்த அரசியலார் காலத்தைக் கழித்த காலத்தில் மின்னல் தோன்றியது நம்வானத்தில். இன்று கேட்பதோ முழக்கம். உள்ளூரப் புகுந்து எதிரிகளின் உறக்கத்தை நிரந்தரமாய்க் கலைக்கும் முழக்கம். இம்மின்னல் ஒளி தோன்றிப் பின் ஒலி தோன்றும் இடைவெளிக்குள் தோற்றமுற்றான் ஒருவன். ஒரு தலைவன்.

இவன் உலகத் தமிழர்களின் இறைமைக்கும் தற்பெருமைக்குமான குறியீடு. இன்று நடைபெற்றுக்கொண்டிக்கும் ஈழத்தமிழர்களின் மகாபுரட்சி சென்றடையவேண்டிய இலக்கையும் அதன் திசையையும் தீர்மானிக்கும் தீர்க்கமான வல்லமை கொண்ட இவனை யாரும் வாங்கமுடியாது. இவனுக்கு விலையில்லை. தனக்கு இவன் தானிட்ட கட்டளையே தன் மக்களுக்கு இவன் கொடுத்த வாக்குறுதி. அடையவேண்டியதை அடைவதற்குக் கொடுக்கவேண்டிய விலையைக் கொடுக்கத் தயங்காதவர்களில் இவன் ஒருவன்.

மனிதர்களின் தீர்ப்புகள் எவையாயிருந்தாலென்ன. அவர்கள் வெறும் மனிதர்கள்தானே. தீர்ப்பளிக்கும் உரிமை வரலாற்றுக்குமட்டுமே உண்டு. மனிதர்களுக்குக் கடமைகளேயுண்டு. இயற்கையிடம் பாடம் கேட்டு, வரலாற்றினால் வழிகாட்டப்பட்டவர்களுக்குத் தோல்வி எப்போதும் வந்ததில்லை. அவ்வப்போது புரட்சியின் தொல்நகரான பாரிஸின் சில வீதிகளில்நடக்கும் போது இந்நகரின் ஆத்மா அறைகூவி அழைக்கிறது. அடக்கு முறைக்கெதிராக அணிதிரண்ட மக்களைத் திறம்பட வழிநடத்திய தலைவர்கள் பிறந்த தேசம் இது. மாறா(marat), டோன்தோ(ன்)(danton), காமி தெமூள(ன்) (camille desmoulins), ச(ன்) யுயிஸ்த் (sant just), றொபெஸ்பியர் (robespierre)மக்களுக்காய் மட்டுமே சுவாசித்த இந்த மகான்களின் சுவாசப்பைகளினால்தான் சுத்திகரிக்கப்பட்டது இத்தேசத்தின் நாடிகளில் இன்றும் ஓடும் உதிரம்.

றொபெஸ்பியர். விடுதலையும், மக்களுக்கான ஒரு குடியரசும் என்பதற்காகத்தான் இவன் வாழ்ந்தான். மடிந்தான். இவன் மக்களுக்கான விடுதலையை மட்டுமே சுவாசித்தான். மக்களின் விடுதலைக்காக அறிவியல் ரீதியில் ரூசோ சிந்தித்ததை செயலுருவில் வடிவமைத்த இவன், சுதந்திரப் பிரெஞ்சு தேசத்தின் காரணகர்த்தா.காரணம் இவனை யாரும் விலைக்கு வாங்க முடியவில்லை. இவனை யாரும் கறைபடுத்த முடியவில்லை. தனது கொள்கையில் ஒருதுளியையேனும் இவன் விற்கவில்லை. இவனது உறுதிப்பாடுகளின் ஒரு இம்மியையேனும் யாரும் அசைக்க இவன் அனுமதிக்கவில்லை. வரலாறு உள்ள வரைக்கும் இவனுக்கு ‘மாசற்றோன்’ எனும் நாமமே இருக்கும். பிரஞ்சுத் தேச வரலாற்றில் இவனுக்குப் பின் வேறு யாருக்கும் இந்நாமம் சூட்டப்படவில்லை.

விடுதலை பற்றியும் அதற்குக் கொடுக்க வேண்டிய விலைபற்றியும் தரவுகளைத் தருபவை இந்நாட்டின் வரலாற்றேடுகள். சமாதானப் போர்வையில், பேசுவோம் எனும் தோரணையில் காலத்தை இழுத்துப் போராட்டத்தைச் சிதைப்பதற்கு பேரினவாதச் சக்திகளும், மேற்கு நாடுகளின் ‘நாகரீகப் புத்திஜீவிதங்களும்’, அண்டை நாட்டின் பிராந்திய வல்லரசுத் திமிருமாகச் சதிசெய்யும் இவ்வேளையில், விழிப்பாயிருந்து, விலைபோகாது, தூர அரசியல் நோக்குடன், ஈழத்தமிழர் போராட்டத்தை இதயத்தில் வரித்த தலைவனுக்கும் ‘மாசற்றோன்’ எனும் நாமம் சூட்டப்படட்டும். வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மீளப்பெறமுடியாதவை. மனிதர்களில் மகோன்னதமானவர்களின் கனவுகளை நனவாக்குவதைத் தவிர கடமையேதும் இல்லை.

றொபெஸ்பியரிடமிருந்து பெற்ற கனவை நிறைவாக்கக் கனலென உதித்தான் நெப்போலியன் எனும் வீர வேங்கை. வெற்றிமேல் வெற்றிவாகை சூடினான். கண்மூடி முழிக்கும் வேகத்தில் ஐரோப்பாவை அதிர வைத்தான். புயலெனஎழுந்த இவன் வேகத்தில் சருகென மறைந்தனர் எதிர்ப்புரட்சியாளர்களும் அடக்கு முறையாளர்களும். இவனது இராணுவ உத்திகளையும், தூர நோக்கையும், மனத்திடத்தையும், அஞ்சாத நெஞ்சையும், அசைக்கமுடியாத கொள்கை யுறுதியையும், தீர்க்கமான புத்திக்கூர்மையையும் கண்ட பிரஞ்சு தேசம் இவனிடம் தனது கனவைக்கையளித்தது.

சமகாலத்தவர்களின் எந்தத் தீர்ப்புகளுக்கும் இவன் அஞ்ச வில்லை. மாமனிதர்கள் வரலாற்றுக்கு மட்டுமே கணக்குக் கொடுக்கவேண்டியவர்கள். வரலாற்றுக்கு மட்டுமே அவர்களிடம் கணக்குக் கேட்கும் உரிமையுண்டு. மிகுதிகளை அவன் சல சலப்புகளாகவும், இயலாமைகளாகவும், அலறல்களாகவுமே கண்டான். பிரெஞ்சு தேசம் தனது வரலாற்றில் பதின்நான்கு தரம் தனது அரசியல் சாசனத்தை மாற்றிவிட்டது. ஆனால் நெப்போலியனால் உருவாக்கப்பட்ட சிவில் சட்டக் கோர்வையின் அடிப்படையில் கைவைக்கவில்லை. நெப்போலியனால் உருவாக்கப்பட்ட அரசியல் நிர்வாகக் கட்டுமானங்கள் இரண்டு நூற்றாண்டுக ளைத் தாண்டி இன்னமும் நிமிர்ந்து நிற்கின்றது. பிரெஞ்சுத் தேசியக்கட்டுமானத் தின் அதிசிறந்த இராணுவ மேதையாகவும், அதிசிறந்த அரசியல் ஞானியா கவும் இருந்த ஒரேயொருவன் நெப்போலியன்தான் என்பதை இன்று வரலாறு அறைந்து கூறுகிறது.

இது வரலாறு வழங்கிய தீர்ப்பு. ஈழத்தமிழரின் எதிர்கால வரலாறு வழங்கப்போகும் தீர்ப்பை இன்றே தமிழர்கள் வழங்கிவிட்டார்கள். தமது தேசியக் கட்டுமானத்தின் தலைவன் யாரென்பதை ஈழத்தமிழர்கள் ஐயமின்றி உணர்ந்து கொண்டுவிட்டார்கள். வரலாற்றின் தீர்ப்பிற்காய் காத்திருப்பவர்கள் இருந்து விட்டுப்போகட்டும். எகிப்திய அடிமை நுகத்திலிருந்து அறுத்தெடுத்துத் தன் எபிராய மக்களை விடுதலைக்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட பூமிக்குமாக அழைத்துச் சென்றான் தீர்க்கதரிசி மோசஸ். கட்டளைகளிட்டான், மீறியவர்க்குத் தண்டனை கொடுத்தான்.

கடக்கவேண்டியிருந்ததோ இரக்கமற்ற பாலைவனம். கடினப்பாதைகள் கண்டு மக்களோ அஞ்சினர். மீண்டும் அடிமைகளாகவே எகிப்துக்குச் சென்று விடுவோமே எனக் கெஞ்சினர். கடைமனிதர்களுக்கும், கண்ணீர் வடிப்பவர்களுக்கும் அரை வழியில் விடைகொடுத்து விட்டுத் தொடரவேண்டியிருந்த பயணமது. யாருக்குச் சுதந்திர பூமி வேண்டும்? அடிமைத்தளைகளை தமது உள்ளங்களிலிருந்து அறுத்தெறியாதோர் சுதந்திரத்தைப் பெற்றுத்தான் என்ன செய்யப்போகிறார்கள்?அடிமை நிலை மறந்த சுயாதீன மக்களை வழி நடத்த வேண்டி மோஸஸ் நாற்பது வருடங்கள் தன் மக்களைக் கொண்டலைந் தான். சினாய் பாலைவனத் தின் கொடூரங்களுக்கு மக்கள் முகம் கொடுத்தார்கள். இரக்க மற்ற பாலைவனப் பாதையில் மக்கள் துன்பத்தீயில் புடம் போடப்பட்டார்கள்.

நாற்பது வருடங்கள் துன்பத் தீயில் புடம்போடப்பட்ட மக்கள் இறுதியில் போராடித் தமக்கு வாக்குறுதியளிக்கப் பட்ட பூமியை அடைந்தார்கள்.

சுதந்திர பூமிக்குச் சுதந்திர மக்களை, அறிவில் மேம்படுத்தி, ஆற்றலில் உன்னதமானவர்களாக்கி, அடிமைத்தளையறுத்து, சமத்துவம் நிறுவி, சாதியழித்து, அழைத்துச் செல்லும் வல்லமைமிக்க தலைவன்!

இக்கனவை நனவாக்கி நீங்கள் காலத்தை வெல்ல வாழ்த்துகிறேன்.

இதுவன்றோ நாமனைவரும் வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்குக் கொடுத்த வாக்குறுதி. இதுவன்றோ நாம் நனவாக்கி அவர்களுக்கு காணிக்கையாச் செலுத்த வேண்டிய கனவுப்பூ.

இடருற்று, அடக்கு முறைக்குப் பலியாகிய ஈழத்தமிழரின் துணிவுச்சுடர் பிறந்து ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டன.

நீழ்காலம் ஒங்கியது ஒளிருமென வாழ்த்தி நிற்போம்.

மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்

படைப்பாளி.

பிரான்ஸ்.

வாசுதேவன்