தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரைகள் 1989 – 2008
–
—
மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்
—
மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்
—
தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்
–
வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்
“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை
—
30 ஆவது ஆண்டு நிறைவு நாளோடு தமிழீழ காவல்துறை
தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்று தனித்துவமான சிந்தனையோடு தமிழர்களுக்கான ஒரு தனி நாடு வேண்டும் என்ற இலச்சிய நோக்கோடு, எம் நாட்டை பாதுகாக்க இராணுவரீதியில் என்னென்ன கட்டமைப்புக்கள் தேவை என தெரிந்து உருவாக்கிய எம் தலைவர் எமது தாயகப் பகுதிக்குள் எம்மை நம்பி வாழுகின்ற மக்களுக்கான தேவைகளையும் கட்டமைப்புக்களையும் நிறுவுவதற்கு தவறவில்லை. அந்தவகையில் தான் மக்களுக்கான பொது நிர்வாக அமைப்பொன்றை தமிழீழ காவல்துறை என்ற பொது நிர்வாக அலகை 19.11.1991 அன்று உருவாக்கினார்.
காவல்துறை தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டு பொறுப்பாளர் பா. நடேசன் அவர்களின் வழிநடத்தலில் சம உரிமை, சம நீதி, ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமூக மேம்பாட்டிற்குமான முறையில் காவல்துறையை வழிநடத்திக்கொண்டு வந்தார்.
காவல்துறை உறுப்பினர்கள் ஆரம்ப காலத்தில் தமது கடமைகளை சிலவேளைகளில் நடந்தும் ஈருருளிகளிலும் சென்று மக்களுக்கான கடமைகளை மேற்கொண்டு வந்தனர். அவ்வேளைகளில் மக்களின் போதிய ஒத்துழைப்புக்களும் இருந்தது.
தனிநாடு வேண்டி இலங்கை ஏகாதிபத்திய அரசினது வன்முறைகளிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் மலரப்போகும் எமது ஈழத்தில் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கிலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அதிகாரமற்ற, ஆணவமற்ற, அடக்குமுறையற்ற ஒரு மக்களுக்கான நிர்வாகமாக செயற்பட வேண்டுமென்ற காரணங்களை உள்ளடக்கி எமது தலைவர் தமிழீழ காவல்துறையை வளர்த்தெடுத்தார்.
உலக அரங்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் சுதந்திர விடுதலைக்கான போராட்டத்தைப் பற்றியும் அதனது போரியல் யுக்திகள் பற்றியும் எத்தனை மலைபோல் எதிரி திரண்டுவந்தாலும் தனி ஒரு சிறு படையாக இத்தனை வருட போராட்டக் களங்களையும் அந்த மோதல்களுக்குள் வாழுகின்ற மக்களையும் மனிதாபிமான நோக்கோடும் அம்மக்களுக்கான சமூக அந்தஸ்களோடும் சரிவர வழிநடாத்தி ஆயுதப்போரட்டம் மௌனிக்கும் வரையும் தமிழீழ காவல்துறையைத் திறம்பட்டு செயல்பட வைப்பதற்கு எவ்வாறு முடிந்ததென பின்னாளில் பல உலக அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து அதைப் பற்றி அறிந்துகொள்ளமுடியாமல் வியந்துள்ளதை ஊடகம் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம்.
எமது தலைவர் எத்துறையை உருவாக்கினாலும் அதனது நீள அகல ஆழங்களைப்பற்றியும் விளைவுகளைப் பற்றி தனித்திருந்து விழிந்திருந்து பசித்திருந்து நன்கு ஆராய்ந்த பின்பே அதை செயற்படுத்துவார். அவ்வாறான தூரநோக்கும் சீரிய சிந்தையும் உள்ள எம் தலைவரின் நகர்வுகளை அறிந்துகொள்ள அவராலே மட்டும் முடியுமே தவிர எந்த வல்லாதிக்க சக்தியாலும் அணுவளவும் முயன்றாலும் முடியாது.
தமிழீழ காவல்துறையானது ஆரம்பத்தில் தலைவரின் கண்காணிப்பின்கீழ் பயிற்சியளிக்கபட்டு மக்கள் மத்தியில் எவ்வாறு தமது சேவையை வழங்கவேண்டுமென்று தானே வழிநடத்தி சேவைக்காக வழியனுப்பிவைத்தார். தலைவரின் கையால் புடம்போட்டப்பட்ட நேர்மையாக மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய உறுப்பினர்களை வெளியேற்றி இவர்களுக்குள் மக்கள் தொடர்பகப் பிரிவு, குற்றத்தடுப்புப் பிரிவு, நீதிமன்ற பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, சிறுவர், பெண்கள், முதியோர், நலிவுற்றோருக்கான புனர்வாழ்வுப் பிரிவு, பொது நிர்வாகப் பிரிவு, அனர்த்த கால கண்காணிப்புப் பிரிவு போன்ற பல்வேறுபட்ட பிரிவுகளை உள்ளடக்கி இறுதிவரை உறுதியோடு பணியாற்றினார்கள்.
2002 இலங்கையரசுக்கும் தமிழீழ விடுதபை; புலிகளுக்கிடையிலான சமாதான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் பின்னர் தமிழீழ காவல்துறையினருக்கான பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அந்தவகையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகின்ற வாகனங்களையும் பயணிகளையும் பதிவிடுதல் மற்றும் சோதனையிடுதல் போன்ற பணிகளையும் சூனியப் பிரதேசங்களிலே புலிகள் பகுதிகளிலுள்ள போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் செயற்திட்டங்களிலும் போக்குவரத்துக் கண்காணிப்பிலும் அரசு-விடுதலைப்புலிகளுக்கிடையினால சமாதான தூதுவர்களின் சந்திப்புகளிலும் அனர்த்த காலங்களில் பணியாற்றுகின்ற செயற்திட்டங்களிலும் மாணவர்கள் பெண்கள் அவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுத்தல் போன்ற பணிகளிலும் இவர்களது சேவை விரிவுபடுத்தப்பட்ட தோடு தலைவரின் சிந்தனைக்கமைவாக தமிழர் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குள் அன்றாடம் கையேந்தி வாழ்க்கை நடத்துகின்ற நபர்களையும் தன்னிலையற்ற மனநலன் பாதிக்கப்பட்ட நபர்களையும் இனங்காண்டால் அவர்களுக்கென தலைவரின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இல்லங்களில் (வெற்றிமனை, மூதியோர் பேணலகம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள், பெண்கள் புனர்வாழ்வு நிலையங்கள், வலுவிழந்தோர் காப்பகங்கள்) அவர்களை சேர்ப்பித்து அவர்களுக்கான மறுவாழ்வு அளிக்கும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதுடன் அவர்கள் பாதுகாப்பான முறையில் வாழக்கூடிய இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பணியை தமிழீழ காவல்துறை மேற்கொண்டு வந்தது.
யுத்த காலங்களில் இராணுவத்தாலும் விடுதலைப் புலிகளாலும் கைது செய்யப்பட்டவர்களை புளியங்குளம் பகுதியில் கைதிப் பரிமாற்றங்கள் செய்யப்பட்ட நேரங்களில் பாரிய கடமைகளை காவல்துறையினர் செய்தனர்.
மக்களின் தேவைப்பாடுகளுக்காகவும் அரச சார்பற்ற நிறுவனங்களான I.C.R.C ,U.N.H.C.R ,UNICEFஆகிய நிறுவனங்கள் காவல்துறையுடன் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் பொதுப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் வைத்து எங்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள்.
காவல்துறையின் வேலைகளில் மக்களின் இடம் பிரதேசங்களுக்கு ஏற்றபடி விரிவாக்கம் பெற காவல்துறையின் பணிமனைகளும் விரிவாக்கமும் மேலதிக பணிமனைகளும் நிறுவப்பட்டன.
எமது உறவுகளுக்கு ஏற்படும் பிரச்சினைபற்றி கிராமங்களுக்கும், பிரதேசங்களுக்கும் சென்று சிறுவர்கள் கல்வி மேம்பாட்டிற்கும் தொற்று நோய்கள் வந்தால் அதில் இருந்து பாதுகாப்பது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படி எம்மையும் சுற்றத்தார்களையும் பாதுகாப்பது, வீதி விபத்துக்களில் இருந்து, எப்படி பாதுகாத்துக்கொள்வது பற்றியான கருத்தூட்டல் விழிப்புணர்வுகளை வழங்குதல்.
இயற்கை அனர்த்தம், மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றல், உடமைகளைக் காப்பாற்றல், போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் செய்யும் கடமையைச் செய்தும் அப்பணிகளில் உறுப்பினர்கள் தமது உயிர்களையும் தியாகம் செய்துள்ளார்கள்.
விசேடமாக மடுப் பெருநாள் விசேட திருநாட்களிலும் வற்றாப்பளை, புத்தூர் நாகதம்பிரான், புளியம் பொக்கனை கோயில்களின் விசேடமான திருவிழாக் காலங்களில் தமிழீழப் பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் இருந்து வரும் மக்களான சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாதபடி ஒழுங்குசெய்து கடமையாற்றினர்கள்.
ஆனையிறவு, கிளிநொச்சிப் பிரதேசங்களில் இருந்து இராணுவ நடவடிக்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் 2000 ஆம் ஆண்டுப் பகுதியின் பின்னர் தமது பகுதிகளுக்குத் திரும்பி குடியிருப்பதற்கு சென்று தமது இடங்களை துப்புரவுசெய்யும்போது மலக்குழிகளிலும் இடிந்திருந்த வீடுகளிலும் புதையுண்டு எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு, அதனை இனங்காணும் பொருட்டு சிதையுண்டு இருந்த மனித எலும்புக்கூடுகளில் அடையாளம் காணக்கூடியதான உடுபுடைவைகள் வெற்றிலை பாக்கு வைத்திருக்கும் லஸ்பிறே பைக்கற்றுகள், முறிந்த கால்களின் எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட இணைக்கப்பட்ட உலோகத் தகடுகள், கிறிஸ்தவர்கள் வைத்திருக்கும் செபமாலை ஆகியவற்றில் இருந்து இனங்காணக்கூடியதாக இருந்தது. இந்த எலும்புக்கூடுகளை I.C.R.C மனித உரிமை நிறுவனம், வந்து பார்வையிட்டனர். இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகளின் உறவினரிடம் இருந்து விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
எமது காவல் துறையின் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெற்ற காலங்களில் மக்கள் எதுவிதமான அச்சங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை. பெண்கள் எந்த இடங்களுக்கும் இரவு வேளைகளிலும் தனியாக சென்று வருவதற்கு எந்தப் பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை.
இவ்வாறு மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2005 ஆம் ஆண்டு முறிக்கப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் தமிழின அழிப்பு தமிழர் தாயகப்பகுதிகளில் சூழ்ந்து கொண்ட வேளைகளிலும் சர்வதேச தனியார் தொண்டு நிறுவனங்களை யுத்தம் நடைபெறும் பகுதிகளை விட்டு அவசரமாக வெளியேறுமாறு பணித்தபோதும் தங்கள் குடும்பங்களை விட்டு பந்த பாசங்களை துறந்து இரவுபகல் பாராது உயிரைப் பணயம் வைத்து தேச நாயகனின் விடுதலையை மூச்சாகக் கொண்டு தம் உயிர்களையும் விடுதலை வேள்வியில் ஆகுதி ஆக்கி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலப் பகுதிகள் உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை இராணுவத்தினரால் கடல், தரை, ஆகாயம் வழியாக ஆக்கிரமிக்கப்பட அவ்வேளையிலும் மும்முனை தாக்குதலிலும் சிக்குண்டு காயப்பட்ட மக்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லவும் பிரிந்துபோன உறவுகளை அவர்களினுடைய குடும்பங்களுடன் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் காயமடைந்து ஆபத்தானவர்களாக இருக்கும் மக்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல்களில் ஏற்றி அனுப்பும் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பது வரையும் 1991ஆம் ஆண்டு எமது தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழீழ காவல்துறையானது களமுனையிலும் மக்கள் மத்தியிலும் விடுதலை ஒன்றே எம் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்ற நோக்கோடு போராடிய ஆண், பெண் விடுதலைப் புலிகளின் படையணிகளோடு தாமும் ஒரு படையணியாக இணைந்து தமது உயிர்களையும் தேச விடுதலைக்காக அர்ப்பணித்து கல்லறைக்குள்ளே துயில்கொள்ளும் தமிழீழ காவல்துறையின் காவிய நாயகர்களையும் ஏனைய அனைத்து மாவீரர்களையும் பணியாளர்களையும் நாட்டுப்பற்றாளர் அவர்தம் உறவினர்களையும் தேசிய துணைப்படை மாவீரர்களையும் போராட்டத்தில் உயிர்நீர்த்த எமது உறவுகளையும் தமிழீழ காவல்துறையின் 30 ஆவது ஆண்டு நிறைவிலே வணக்கம் செலுத்தி நினைவுகூறுவதோடு வரும்கால எம்சந்ததிக்கு இவ்விடயங்கள் பற்றி ஆவணப்படுத்துவதில் புலம்பெயர்ந்தும் ஈழத்திலும் வாழும் தமிழீழ காவல்துறையினரின் சார்பாகவும் இந்நாளை நினைவுகூர்ந்து கொள்கின்றேன்.
“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழுங்கள்” என்னும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைச் சிரமேற்று தமிழீழ காவல்துறை முதன்மை ஆய்வாளர் –
– அ. விஜயகுமார்
1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது.
தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களோடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்மந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவல்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்” என்றார்.
குறிப்பு:- சிங்கள காவால்துறையினரால் யாழ். பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை பற்றிய அறிவும் எமது போராளிகளது நுண்மையான மன உணர்வுகளை புரிந்துகொள்கின்ற தன்மையும் அவசியம். இல்லாது போனால் எமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக்கொள்வது கடினம்.
போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புதைந்து போன வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளது வரலாற்றை துல்லியமாகக் கிரகித்தறிவது சிரமம். எனவே போர்க்களத்தில் அளப் பெரும் தியாகங்களையும். சாதனை களையும் படைத்த பெண்போராளிகளே இப்பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாளாக என்னிடம் இருந்த பேரவா.
எனது பேரவாவுக்கு விருந்தளிக்கும் மாலதி படையணியின் வெளியீடாக நெஞ்சையுறைய வைக்கும் பல்வேறு சமர்களின் தொகுப்பாக பெண் போராளிகளது வீரத்தையும் விவேகத்தையும் பறைசாற்றும் வரலாற்றுப் பதிவேடாக இந்நூல் வெளிவருவது பெரும் மகிழ்வைத்தருகிறது.
உலகிலே சரிபாதியினர் பெண்கள். எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் எமது
போராட்டத்தில் பங்குபெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப் படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேச விடுதலையும் முழுமைபெறாது. ஆனால அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துக்கள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதிசமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையும் சாதியக் கட்டமைப்புக்களும் இறுக்கமாகப் பின்னிப் பிணைந்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுப்பப்பட்டிருந்தது. அது சுயசிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கின்றோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் எம்மண்ணில் என்றுமில்லாதவாறு தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்திப் பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.
எனவே எமது விடுதலைப் போராட்டத்திற் பெண்களையும் அணி சேர்ப்பதனூடாக படிப்படியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும் தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என நான் உறுதியாக நம்பினேன். இவ்வாறு தான் எமது போராட்டத்திற் பெண்புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைபலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கின்றார்கள்.
ஒருநூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி புரட்சிகளை நடத்தி விவாதங்கள் புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றையும் விட எமது பெண்புலிகள் மிகவும் குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகளும் சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றார்கள். சமூக கருத்துலகின் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும் பெண்ணும் சமமான ஆற்றலுடனேயே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உடற்கூற்றியல் நிபுணர்களின் கூற்றுக்கு பெண்புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கின்றார்கள்.
புரட்சிப் புலிகளாகக் களமிறங்கியுள்ள எமது பெண்புலிகள் எத்தகைய துன்பங்களையும் சுமந்து எத்தகைய நெருக்கடிகளைம்; சமாளித்து எத்தகைய ஆபத்துக்களையும் எதிர்கொண்டு போராடுகிறார்கள். அசைக்கமுடியாத மனவுறுதியும் அதனால் பிறக்கும் துணிவும் அவர்களிடம் உள்ளன. அபாரமான சகிப்புத்தன்மையும் தளராத உறுதியும் கடும் உழைப்பும் கொண்டவர்கள் அவர்கள்.
அவர்கள் தரையில் மட்டுமல்லாது கடலிலும் சண்டை செய்கிறார்கள். கடற்போர்க்கலை மிகவும் நுட்பமானது. அதற்கு நிறையப்பயிற்சியும் அனுபவமும் தேவை. கடல் சதா அசைந்து கொண்டிருக்கும். அதன் முதுகில் சவாரிசெய்து கொண்டு சண்டை யிடுவது மிகவும் கடினமானது. எமது பெண்புலிகள் மீன்குஞ்சுகள் போலக் கடலோடு வாழப் பழகி விட்டார்கள்.
இந்தப் பெண் போராளிகளை அவர்களது போராட்ட வாழ்க்கையை அவர்களிடையே நிலவும் ஆழமான புரிந்துணர்வை அளவிட முடியாத அன்புறவை இந்நூல் அழகு தமிழில் எளிய நடையில் மிக நுட்பமாக வெளிப்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களுக்கூடாக மாலதி படையணியின் வரலாறு சொல்லப்படும் பாங்கு சிறப்பாக அமைகிறது. மேலும் பெண்புலிகளது போரனுபவத்தை மாலதி படையணியின் சண்டையனுபவத்துடன் பின்னிப் பிணைத்து பெண்புலிகளது வரலாறு இந்நூலில் அழகாகப்படைக்கப்பட்டிருக்கிது. இந்நூலின் ஆக்கத்துக்கு அயராது உழைத்த மாலதிபடையணிப் போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு இந்நூல் சிறப்புடன் வெளிவர எனது நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து….…!
05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.!
எனது அன்புகுரியவர்களே !
கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில் கரும்புலிகள் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய தினத்தில் முழு இலங்கைத்தீவையும் அதிர வைத்த ஓர் சம்பவம் நிகழ்ந்தது. எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது கரும்புலி வீரன் கப்டன் மில்லர் ஓர் ஒப்பற்ற சாதனையை நிலைநாட்டினான். எமது வீரவரலாற்றில் என்றுமே நிகழாத ஓர் அதிசயம் ஒன்று அன்று நிகழ்ந்தது. எதிரியின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த ஓர் இராணுவ முகாமை இந்த இளம்புலிவீரன் தனித்த ஒருவனாகச் சென்று தகர்த்தெறிந்தான். ஒரு பெரிய படையணியாலும் செய்ய முடியாத பாரிய இராணுவ சாதனையை தனிமனிதனாகச் சென்று இவன் சாதித்து முடித்தான்.
எரிமலையை சுமந்து சென்று எதிரியின் பாசறைக்குள் வெடிக்கவைத்தான். இந்தப் பூகம்பமான தாக்குதல் நிகழ்வு அன்றைய வரலாற்றுச் சூழ்நிலையையே மாற்றியமைத்தது. எதிரியின் சைனியங்கள் நிலைகுலைந்து பின்வாங்கின. ஒரு பெரிய படையேடுப்பின் பேரழிவிலிருந்து யாழ்ப்பாணம் தப்பிக் கொண்டது. தனிமனிதனாக எமது போராளி ஒருவன் தன்னை அழித்து தனது தேசத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றினான்.
முதன் முதலாக, எமது போராட்ட வரலாறு தியாகத்தின் அதியுன்னதமான ஒரு அற்புதத்தைப் பதிவு செய்துகொண்டது. அன்றிலிருந்து எமது போராட்ட மரபில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டது. என்றுமில்லாத வகையில் ஒர் புதிய போர் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கப்டன் மில்லருடன் கரும்புலி வீரர்களின் சகாப்த்தம் ஆரம்பமாகியது. என்றுமே உலகம் கண்டிராத எண்ணிப்பார்க்க முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது.
கரும்புலிவிரர்களின் தோற்றமும், தற்கொடைப் படையாக அவர்களின் வளர்ச்சியும் எழுச்சியும் மிக நுட்பமான அவர்களின் போர்ச் சாதனைகளும் எமது போராட்டத்தின் ஒரு வரலாற்று தேவையாகவே எழுந்தது.
நாம் இன அழிவை எதிர்கொள்ளும் ஒரு சிறிய தேசிய சமுதாயம். எமக்குக் குரல் கொடுக்கவோ உலகில் எவரும் இல்லை. நாம் தனித்து நிக்கிறோம். எமது சொந்தக் கால்களில் நிலைத்து நிற்கிறோம். பலம் வாய்ந்த எதிரிகள் எம்மைச் சூழ்ந்து நிற்கிறார்கள். எம்மை ஒழித்துக்கட்ட உறுதிபூண்டு நிற்கிறார்கள். முழு உலகமே ஒன்று திரண்டு எமது எதிரிகளுக்கு முண்டு கொடுத்து வருகிறது.
இந்த இக்கட்டாண ஆபத்தான சூழ்நிலையில் நிர்கதியாக நிக்கும் ஒரு மக்கள் சமுகம் என்ற ரீதியில் நாம் எம்மாலான சகல வழிகளையும் கையாண்டு, எமது சக்திகள் அனைத்தையும் பிரியோகித்து ஒரு தற்காப்புப் போரை நிகழ்த்த வேண்டும். இந்தத் தேவையை, நிர்பந்தத்தை நாம் அசட்டை செய்து விட முடியாது. அல்லாத பட்சத்தில் நாம் இனவாரியாக அழிந்து போவதை தவிர்க்க முடியாது.
பலவினமான எமது மக்களின் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள்;. எமது போராட்ட பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனோபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள்.
கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் அழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். இந்த உலகில் வாழும் மனிதன் ஒவ்வொருவனும் எல்லாவற்றுக்கும் மேலாக தன்னையே காதலிக்கிறான். தனது உயிரையே நேசிக்கிறான். உயிர் வாழ வேண்டும் என்று துடிக்கிறான். மனிதன் உயிரை நேசிப்பதால் உயிர் வாழ விரும்புவதால் உயிர் அற்று போகும் சாவு என்ற இல்லாமை நிலைக்கு பயப்படுகிறான். இது மனித இயல்பு. இயற்கையின் நியதி.
ஆனால் ஒரு கரும்புலிவீரன் தன்னைவிட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கும் அப்பால் நிற்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்கவேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை தழுவிக்கொள்ளும் ஒவ்வொருவனும் முதலில் தன்னை விடுதலை செய்து கொள்ளவேண்டும். தனது மனவுலக ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலைவீரன் என்ற தகமையைப் பெற முடியும். மனமானது பயங்களிலிருந்து விடுதலை பெறும்போதுதான் வீரம் தோன்றுகிறது. துணிவு பிறக்கிறது.
இந்த மனவியல் உண்மையை நான் ஆரம்பத்தில் இருந்து எமது போராளிகளுக்கு எடுத்துரைத்து வருகிறேன். பயம் என்பது பலவினத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதிக்கு எதிரி. மனித பயங்களுக்கு எல்லாம் முலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான். கரும்புலிகள் பயத்தின் வேர்களைப் பிடுங்கி எறிந்தவர்கள். சாவு அவர்களிடம் சரணடைந்து விடுகிறது. மரணத்தின் நாளை அவர்கள் எதிர்பாத்து காத்திருப்பார்கள். சாவு பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தம்மை அழிக்கும் அந்த இறுதி கணத்திலும் தம் இலக்கை அழிக்கும் நோக்கிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். இலட்சிய உறுதியில் அவர்கள் இரும்பு மனிதர்கள்.
கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிபாட்டிற்குமே நாம் குறிப்பிடுகிறோம்.இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே ” கரும்புலி ” என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது.
இந்த இரகசியத்தன்மை கரும்புலி வெற்றிக்கு மூலாதரமானது. ஆளுக்கும் பெயருக்கும் அப்பால், அந்த தனிமனித தத்துவத்துக்கு அப்பால், செயற்ப்பாடே இங்கு முதன்மை பெறுகின்றது. மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே ஒரு போராட்ட வரலாற்றின் சக்கரத்தை சூழற்றுகிறது. பல கரும்புலிவீரர்கள் இன்று பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.
முகத்தை மறைத்து, பெயரையும் புகழையும் வெறுத்து இலட்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்துவிட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட இந்த இனிமையானவர்களை நான் அறிவேன். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளையும் நான் புரிவேன். ஏதோ ஒன்று மனித விடிவை நோக்கி நகரும் உந்து சக்தியாக அவர்களை ஆட்கொண்டிருந்தது. அந்த விடுதலையின் தாகத்தை தீர்க்க எதையும் செய்வதற்க்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களை அரவணைத்து விடையளிக்கும்போது இனம் புரியாத உணர்வுகளால் என் ஆன்மா நடு;ங்கும். ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிற்கும் எமது தேச மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்த தியாகப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். கரும்புலி வீரர்கள் பற்றி இன்று உலகமெல்லாம் பேசுகிறது. அவர்களது மகத்தான தியாகத்தை கண்டு மலைத்துப் போய் நிக்கிறது.
பூகம்ப அதிர்வாக குமுறும் எமது போராட்டத்தின் உக்கிரத்தை உலக சமுதாயற்கு உணர்த்தியவர்கள் கரும்புலிகளே. அன்றோரு காலம் அமைதி வழியில் உரிமை கேட்டு ஆர்பரித்த தமிழினத்தை அடக்குமுறையாளனின் இரும்புக்கரங்கள் நசுக்கி விட்டன. இன்று நீதிகேட்டு நெருப்பாக எரியும் தமிழரின் ஆவேச எழுச்சியை எந்தச் சக்திகளாலும் நசுக்கிவிடமுடியாது.
‘இது கரும்புலிகளின் சகாப்தம்” இடியும் மின்னலுமாக விடுதலைப் புலிகள் போர்க்கோலம் கொண்டுவிட்ட காலம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும் சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்.
கரும்புலிகளின் புனித தினமாகிய இன்றைய நாளில் வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அந்த அற்புதமான தியாகிகளை எமது நெஞ்சில் நிறுத்தி பூசிப்போமாக.
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
—
—
எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.
1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.
அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.
தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.
அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.
குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.
போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.
ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:
01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.
02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
03. வான்படை
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை
07. வேவுப்பிரிவு
08. ஒளிப்பதிவுப் பிரிவு
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10. கணணிப் பிரிவு
11. மாணவர் அமைப்பு
12. தமிழீழ வைப்பகம்
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14. அனைத்துலகச் செயலகம்
15. சுங்கவரித் துறை
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18. அரசறிவியற் கல்லூரி
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை
21. தமிழீழ நிதித்துறை
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32. ஈழநாதம் செய்தி இதழ்
33. வெளிச்சம் செய்தி இதழ்
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36. நிதர்சனம்
37. புலிகளின் குரல் வானொலி
38. மாவீரர் பணிமனை
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம்
42. சேரன் சுவையகம்
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44. பாண்டியன் வாணிபம்
45. பாண்டியன் சுவையூற்று
46. சோழன் தயாரிப்புகள்
47. வழங்கற் பிரிவு
48. சூழல் நல்லாட்சி ஆணையகம்
49. நிர்வாக சேவை
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55. தமிழீழ விளையாட்டுத்துறை
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
தமிழீழ தனியரசு மனதளவில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டதான உணர்வு மனதை ஆட்கொண்ட நாள்.
அன்பரசன் நடராஜா
ஏப்பிரல் 10 2002..
தமிழீழ தனியரசு மனதளவில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டதான உணர்வு மனதை ஆட்கொண்ட நாள்.
இராணுவபலத்தில் இலங்கை அரசை விஞ்சி நின்ற புலிகளின் அரசியல் ஆளுமையும் வெளிப்பட்ட நாள்.
தேசியத்தலைவர் அவர்கள் பலதடவைகள் பலதரப்பட்ட ஊடகவியலாளர்களுடனும், அரசியல்துறை சார்ந்த தனிமனிர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தாலும் முதல் தடவையாக தென்னிலங்கை, ஆசிய பிராந்திய, சர்வதேச பத்திரிகையாளர்கள் வன்னியில் ஒன்றுகூடிய தினம்.
புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளும், போராட்டத்தின் மீதான அவர்களின் பற்றுறுதியும் ஆணித்தரமாக ஒவ்வொரு நொடியும் வெளிப்பட்டதினம்.
சர்வதேச சக்திகளை, இராணுவ விற்பன்னர்களை வன்னியினை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஏராளம் கேள்விகள் புலிகளை நோக்கி வீசப்பட்டது.
தமிழீழ கோரிக்கையினை கைவிட்டால் மரணதண்டனை என்னும் உங்கள் நிலைப்பாடு இனியும் தொடருமா என்னும் கேள்விக்கு, அது தொடரும் என கூறியதையும்,
இன்டர்போல் மூலம் உங்களை கைது செய்து, தண்டனை வழங்க முற்பட்டால் என்ன செய்வீர்கள் என்னும் கேள்விக்கு தனக்கேயுரிய புன்னகையுடன் நடக்கிற கதையினை கதைக்க சொல்லுங்கோ என கூறியதும் … ..,
உண்மையிலேயே மனம் பெருமை கொண்ட தருணங்கள் அவை.
தமிழர் வாழ்வியலின் பல பெருமைக்குரிய தருணங்களை எமக்கு தந்தவர்கள் புலிகள்.
மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்
தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்
தேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan
தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures
Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்
வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்
“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை