பிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. # Prabhakaran

Posted on

மார்க்சிசம்/ கொம்மியூனிசம்/லெனினிசம் உட்பட இன்ன பிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது.

அதற்கு ஒரு வடிவமோ/ வரையறையோ கிடையாது.

நாம் ஒரு வசதிக்காக/ அதை தனித்துவப் படுத்தி அடையாளப்படுத்த பின்னொட்டாக ‘இசத்தை’ ஒட்டியுள்ளோமே தவிர அது அப்படியான ஒன்றல்ல.
ஏனென்றால் ‘பிரபாகரனியம்’ என்பது சொல் அல்ல – அது செயல்.

அதுதான் தற்போது முடிந்தளவு ‘நந்திக்கடல்’ என்ற வரையறைக்குள் அதை அடையாளப்படுத்த முனைகிறோம்.

இது இடதுசாரிகள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் இடப்பக்க மூளை வீங்கிகளுக்குப் புரியாது.

போராடும் போதும் எந்தப் பங்களிப்பும் இல்லாமல் கண்ட கண்ட புத்தகங்களையெல்லாம் விழுங்கி விட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள் – இப்போதும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

மௌனம்தான் பிரபாகரனியத்தின் மொழி. சிந்தனையுடன் கூடிய செயல் வடிவம்தான் அதன் அசைவியக்கம்.

தலைவர் இயல்பான அவரது இந்த பண்பை நந்திக்கடல் வரை சென்றும் அவர் இழக்கவில்லை.

இதனூடாக பிரபாகரனை வரலாற்றில் நிறுத்தியிருப்பதே இந்த மவுனம் தான்.

தொடர் தேடலாய், எல்லைகளற்று, முடிவிலியாய் விரியும் இந்த நூற்றாண்டின் அதி நவீன விடுதலைக் கோட்பாடான ‘பிரபாகரனியத்தின்’ மைய சரடே இந்த மவுனம் தான்.

ஏனைய புரட்சியாளர்கள் தங்களை தாங்களே எழுதினார்கள். மக்களுக்கும் போதித்தார்கள். அதை சிந்தனையாளர்கள் விரிவாக்கம் செய்தார்கள்.

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு புரட்சியாளனின் மவுனத்தை உடைத்து கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியை வரலாறு விட்டுச் சென்றிருக்கிறது.

இசங்களை வெறுத்த, கோட்பாடுகளை குலைக்கும் ஒரு புதிர் நிறைந்த பாத்திரத்தை வகித்த ஒரு அதி மனிதன் நந்திக்கடலில் வைத்து ஒரு கோட்பாட்டை உலகிற்கு விட்டுச் சென்ற கதையின் தத்துவ பின்புலம் இது.

அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார்.

ஆனால் ஏனைய கோட்பாடுகள் போல் அதை விஞ்ஞான பகுப்பாய்வின் வழியே வரையறை செய்ய முடியாது.

நாம் மட்டுமல்ல உலகில் பேசிக் கொண்டிருக்காமல் யாரெல்லாம் போராடுகிறார்களோ , அவர்களெல்லாம் பிரபாகரனியத்தை கோட்பாட்டுருவாக்கம் செய்பவர்கள் ஆவார்கள்- இதை எழுதிக் கொண்டிருக்கும் நானோ/ வாசித்து கொண்டிருக்கும் நீங்களோ அல்ல.

இதுதான் ‘ பிரபாகரனியம்’.

புரியாதவர்கள் கடையைச் சாத்துங்கள்.

பரணி