தமிழினத்தின் காவலனே நீடு வாழி

Posted on

Eelamwallpapers

வளமெல்லாம் நிறைந்த தமிழீழ மண்ணில் எமை
வாழ வைக்க வந்துதித்த தலைவா வாழி
உளமதனில் துயர் மிகுந்த தமிழர் வாழ்வில்
உறுதிதனை ஊட்டிவிட்ட தலைவா வாழி
பகையதனை நம் மண்ணில் துரத்திடவே
படை நடத்தி பல வெற்றி தந்தாய் வாழி
மிகையான போர்ப் பலத்தை எமக்குத்தந்து
மீதுயர்ந்த மதிப்பினை தந்தோய் வாழி..

அரசியலில் மதிநுட்பமிக்கவரே உலக
அரங்கத்தில் எமை உயர்தி வைத்தவரே
தரணிதனில் உம் தலைமை கிடைத்தாலே
தமிழர் எம் குனிந்த தலை நிமிர்ந்ததையா..

போர்க்கலைக்கு புதுவடிவம் கொடுத்தவரே
போர்நடத்திப் புதுப்பரணி படைத்தவரே
பாரதனில் தமிழினத்தின் மானம் காத்த
பைந்தமிழின் காவலனே நீடுவாழி..

ஆலம் கழுத்தனில் அணியாக கொண்டவரே
காலம் எமக்களித்த கற்பகமே அற்புதமே
ஞாலமெங்கும் உள்ளோருமை நாடிவருகின்ற
காலமடை கண்டு மனம் மகிழ்வுடனே வாழ்த்துதையா.

தாயகத்தை அமைத்திடவே நீடு வாழி
தாய் மொழியை காத்திடவே நீடுவாழி
தன்மானம் மிக்கவரே நீடுவாழி
தமிழினத்தின் காவலனே நீடு வாழி

கீழ்கரவை
கி.சிவனேசன்.

**

வில்லாண்ட பரம்பரையின் விழுதுக்கு பல்லாண்டு பாடுகின்றோம்

தாயாய் எம்மைக்காக்கும் தலைவா!
பகைவருக்கு
மாயாவியான மனதா !
வையமெல்லாம்
ஓயாத அலைதன்னை
உறுணரச் செய்ததினால்
சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !
கார்த்திகை 26 உனக்கு
பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.
எம்மண்ணில்
தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.
காலை வந்த
காற்றில் வாழ்த்துரைத்தோம்
காதினிலே கேட்டதுவா?
ஆற்றல் திருவே !
ஆண்டு பல்லாண்டெனவெ
பூத்திருப்பாய் ஐயா.
புலித்தலைவா! நீ வாழ்க.

கவிதை – புதுவை இரத்தினதுரை.

சொல் மந்திரம்: செயல் எந்திரம்

நாம்
விதைப்பதற்காக
நிலத்தை கிளறினோம்,
அவர்கள்
புதைப்பதற்காக
நிலத்தை கிளறினார்கள்.
நாம் கதிரறுக்க
கத்தி எடுத்தோம்,
அவர்கள் கருவறுக்க
கத்தி எடுத்தார்கள்.

நாம்
சூடு மிதித்தோம்,
அவர்கள்
சூடு வைத்தார்கள்.
பாடுபட்டு
விளைஞ்சதெல்லாம்
வீடு கொண்டு வந்து
சேர்க்க முயன்றோம்
வழி மறித்தார்கள்.
நம் மடியில்
கை வைத்தார்கள்.
கலங்கப்பட்டோம்
கலவரப்பட்டோம்
கூனிக்குறுகியது ஆத்மா.
விளைபூமி வினைபூமியாயிற்று.

இசைந்து போதல் சுகம்
என்றார் சிலர்.
மசிந்து போனாலே இருப்பு
என்றார் சிலர்.
கட்டுடைத்து குலைந்து போனது
ஒரு கூட்டம்
அவர்கள் வழி ஒற்றி.
தக்கனப்பிழைத்தலுக்கு
கற்பிதம் வேறு சொல்லி.

மாறாக நீயோ
“வலியது வாழும்”
பிரளயம் செய்தாய்.
நம் கூனல்களை நிமிர்த்தி
குத்து வரியாக்கி
இனியொரு விதி செய்தாய்.

கச்சைகளும் கந்தைகளும்
உருவப்பட்டு
உறுத்திக்கொண்டிருந்த
நம் அம்மணத்தை மறைக்க
சோழக்கொடியில்
ஆடை தந்தவன் நீ.

எமக்கு
சிராய்ப்புக்காயமெனில்
அவர்க்கு
விழுப்புண் கொடுத்தாய்.
எமக்கு
உடல் காயமெனில்
அவர்க்கு
உளக்காயம் கொடுத்தாய்.

எங்கள் பத்தாயங்களில்
தானியங்கள் குவிந்திற்று.
மடியில் கணம் கூடிற்று.
பசித்து வந்தார்க்கு
அறுசுவை அமுதிட்டோம்.
நிலப்பசி எடுத்து வந்தார்க்கும்
மனம் ஒப்பி
படையல்கள் வைத்தோம்.
ஒரு பிடி மண்ணும்
பகைவனை கொல்லும்
அதிசயம் நிகழ்த்தினாய்.
திரை கடலோடிய தமிழன்
வானோடினான் என்று
வரலாற்றை திருத்தி
எழுதினாய்.
இனி எவனும்
இங்கிருந்துதான்
வரலாற்றை
எழுத வேண்டும்.

எல்லோரும் தம்
முற்றத்து வேலிகள் பற்றி
சிந்தித்திருக்க,
தேசத்தின் எல்லைகள் பற்றி
சிந்தித்தவன் நீ.
ஆதலால்த்தான்,
உன்னால் மட்டும்
முடிகிறது
எங்கள் நினைவுகளில்
இன்றுவரை பயணிக்க.

எனது தூரிகைக்கு
வர்ணமாய் உனைத்தொட்டு
படைப்புகள் தருவதே
சிறப்பாயிற்று.
எனது எழுதுகோலும்
உனைப்பற்றியே அதிகமாக
எழுதி எழுகிறது.

உனக்குள் நாமும்
எமக்குள் நீயுமாக
கலந்திருந்த
அன்றைய பொழுதுகளை
நினைக்கும் போது
நீயில்லா
இன்றைய பொழுதுகள்
இலங்கையில்
“கொலைக்களம்”
எல்லோரும் நீ
வருவாய் வருவாய் என்றே
சொல்கிறார்கள்,
எமக்குள் தான்
நீ இருக்கிறாய்
என்பதை அறியாமல்!

– அ.ஈழம் சேகுவேரா-

Advertisements