பிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு

Posted on Updated on

praba book nedumaran

பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் கடந்த 12ம் திகதி கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலின் முதல் பதிப்பாக தேசியத் தலைவர் குறித்த சொற்ப செய்திகளுடனும், விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988 இலேயே மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாறு ஆகியன இணைக்கப்பட்டு சென்ற ஆண்டு பெப்ரவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு கட்நத ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக இது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகள் எங்கும் வெளியிட்டதன் தொடர்ச்சியாக கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது.

பழ. நெடுமாறன் ஐயா அவர்களால் எழுதப்பட்ட இந்த பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற 1200 பக்கங்களைக் கொண்ட நூல், முள்ளிவாய்க்காலுக்கு முந்திய 33 ஆண்டுகால விடுதலைப் போராட்ட வரலாற்றையும், அந்த வரலாற்றின் பாடுபொருளாகிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சேர எடுத்து அக்காலகட்டத்தில் பயணித்து பதிவு செய்து இருக்கிறது.

அந்த வகையில், பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக இந்நூலில் ஆவணப்படுத்தியுமிருக்கிறார்.

praba book nedumaran 2
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் அன்பரசி, முன்னாள் முழக்கம் இணை ஆசிரியர் ஆற்றிய ஆய்வுரை

இன்று இங்கு வெளியிடப்படும் பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற இந்த நூல் முதல் பதிப்பாக தலைவர் குறித்த சொற்ப செய்திகளுடனும், இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988இலேயே மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாறு ஆகியன இணைக்கப்பட்டு சென்ற ஆண்டு பெப்ரவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக இது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகள் எங்கும் வெளியிட்டதன் தொடர்ச்சியாக இன்று கனடாவில் வெளியிடப்படுகிறது.

பழ. நெடுமாறன் ஐயாஅவர்களால் எழுதப்பட்ட இந்த ‘பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற 1200 பக்கங்களைக் கொண்ட நூல், முள்ளிவாய்க்காலுக்கு முந்திய 33 ஆண்டுகால விடுதலைப்போராட்ட வரலாற்றையும், அந்த வரலாற்றின் பாடுபொருளாகிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சேர எடுத்து அக்காலகட்டத்தில் பயணித்து பதிவு செய்து இருக்கிறது என்று சொல்லலாம்.

தொடக்க காலம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அறம் குறித்தும், எழுச்சி குறித்தும் அறிந்தவர் என்ற வகையிலும், வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் பங்குகொண்டவர் என்ற வகையிலும், கெரில்லாப் போராட்ட தாக்குதல் சம்பவங்களில் தொடங்கி வான்படை அமைத்துப் போராடிய வரையிலான போராட்ட வளர்ச்சியினை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் பழ. நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதுவதற்கு மிகப்பொருத்தமான தெரிவாகிறார் என்பது ஐயத்திற்கிடமற்றது.

வரலாற்றை ஆவணப்படுத்துதல் என்பது காலங்காலமாய் நடைமுறையில் இல்லாமை என்பது எம் இனத்தைப் பீடித்த சாபம் எனலாம். அந்தளவுக்கு எம்மினம், எமது வரலாற்றை, எம்மினச் சான்றோர்களது வரலாற்றை, இலக்கியங்களை, அரசியலை, நாகரீகத்தை, கண்டுபிடிப்புகளை, அறிவியலை, மருத்துவத்தை என்று எதனையும் சரிவர ஆவணப்படுத்தத் தவறிவிட்டது என்பது சோகம்.

அந்த வகையில், அந்தக் குறையை ஓரளவேனும்போக்க, தமிழகத்தில் தான் கூட இருந்து தெரிந்துகொண்டது, செவிவழி அறிந்தது, பிறர் சொல்லக் கேட்டது, படித்தது என்று அத்தனையையும் தன்னாலியன்ற வகையில் தொகுத்து இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார் திரு. நெடுமாறன். பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக ஆவணப்படுத்தியுமிருக்கிறார்.

தம்மை எதிரியிடம் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் ஆயுத தளபாடங்களைத் தாமே உருவாக்குவதில் தொடங்கி வானூர்தி வரை உருவாக்கி, உலகத்தையே வியக்கவைத்த, எதிரியை அச்சுறுத்திய தொழில்நுட்பத்திறனை வளர்த்தது, இயக்கத்தை கெரில்லாப் போராட்ட வழிமுறையில் இருந்து மரபுவழி இராணுவமாக உருவெடுக்க உழைத்தது, தான் கொண்ட இலட்சியத்தில் எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், பதவி ஆசை என்பது சிறிதுமற்று, இறுதிவரை தனது இலட்சியத்தில் தெளிவாக, நேர்மையாக இருந்தது.. சாதி, மத, ஆண்-பெண் பேதமற்ற சமூகத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தது என்ற உலக விடுதலைப்போராட்டங்கள் அனைத்துக்கும் முன்மாதிரியாக விளங்கிய ஆளுமை, தலைவர் பிரபாகரன் என்பதை ஆதாரங்களோடு சரியான வகையில் ஆவணப்படுத்தி, தலைவர் பிரபாகரன் அவர்களே தமிழர் எழுச்சியின் வடிவம் என்பதை அறுதியிட்டுக் கூறியிருக்கிறது இந்நூல்.

தமிழீழத் தேசியத் தலைவரது இளமைப்பருவம் தொடங்கி, போராட்ட ஆரம்பகால வளர்ச்சி, குறிக்கோள்கள், இந்தியத் தலையீடு, ஈழப்போர், வாகைசூடிய களங்கள், படைப்பிரிவுகள், சமரச முயற்சிகள் எனப் பல்வேறு வரலாற்றுச்செய்திகளை 90 தலைப்புகளில் ஆராய்கிறது நூல்.

இதில் இந்திய இராணுவத்தலையீட்டுக்குப் பின்னரான காலம் குறித்து ஐயா ஈழவேந்தன் அவர்களும், சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி குறித்து ஐயா குணநாதன் அவர்களும் உரையாற்ற இருப்பதால் இந்திய இராணுவத் தலையீடு வரையிலான பகுதியைக் கொஞ்சம் சுருக்கமாக, அதாவது போராட்ட தொடக்க காலம் மீதான என் பார்வையை இங்கே உங்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன்.

இந்தப் போராட்ட ஆரம்ப காலத்தை, அதாவது முதல் பத்தாண்டுகளை, தலைவர் பிரபாகரனது இளமைப்பருவம் தொடங்கி இயக்கம் பிறந்ததுவரையான காலகட்டம், இயக்கம் தொடங்கிய காலந்தொட்டு திம்பு மாநாடு வரையான காலம், திம்பு மாநாடு தொடங்கி இந்திய- சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும், அதன் பின்னரான காலப்பகுதியும் என மூன்று பகுதிகளாக பிரித்துப் பார்க்கலாம்.

1982 ஆம் ஆண்டு பலமுறை தனது இல்லத்துக்கு திரு. பேபி சுப்ரமணியம் அதாவது இளங்குமரன் அண்ணா அவர்களுடன் வந்த இளைஞர்தான் பிரபாகரன் என்பதைத் தான் அறியாமலே இருந்ததையும், தலைவர் அவர்களிடமேயே பலமுறை உங்கள் தலைவர் பிரபாகரனைப் பார்க்கவேண்டும் என்று கேட்டதையும் குறிப்பிடும் பழ. நெடுமாறன் அவர்கள் பின்னர் பாண்டிபஜார்சூளை சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களைப் பார்க்கச்சென்றபோதுதான் காவலர் முன்னிலையில் மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணா, நான்தான் பிரபாகரன் என்று தலைவர் அவர்கள் சிரித்தபடி அறிமுகப்படுத்திய நெகிழ்வான நிகழ்வை நினைவுகூர்ந்தபடி தொடங்குகிறது நூல்.

முதலாவது அத்தியாயத்தில் தமிழீழத்தேசியத் தலைவர் அவர்களது குடும்பப்பின்னணி குறித்து எடுத்துரைக்கும் நூலாசிரியர், பணியின் நிமித்தம் தலைவர் அவர்களது பெற்றோர் அனுராதபுரத்தில் தங்கியிருந்த சமயம்தான் பார்வதியம்மா அவர்கள் தலைவர் அவர்களைக் கருவில் சுமக்க ஆரம்பித்தார் என்பதையும் அப்போது அவர்கள் வீட்டுக்கு அருகே இருந்த எல்லாளனின் சமாதிக்கு தலைவர் அவர்களது தாய் தினசரி விளக்கு ஏற்றிவழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் அறியத் தருகிறார். பிரபாகரன் என்ற வரலாறு உருவாகி வளர்கிறது. மனோகரன், ஜெகதீஸ்வரி, வினோதினி என்ற மூத்தவர்களோடு தொடங்குகிறது கடைக்குட்டி பிரபாகரனின் வாழ்க்கை.

1958 இனக் கலவரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களின் விவரிப்பை மிகச்சிறிய வயதிலேயே கேட்டு மனம் வெம்பியது, தமிழன் காரணமின்றிச் சிங்களவர்களால் தாக்கப்படுவது குறித்து சினங்கொண்டது, பின்னர் தமிழீழம் விடுதலைபெறவேண்டும் என்ற கருத்தினைச் சிறுவயதில் விதைத்த தமிழாசிரியர் வேணுகோபால் என்று விரிகிறது அவர் வாழ்வு. பதின்ம வயதுகளிலேயே நாட்டுக் குண்டு தயாரிக்க முயன்று காலை எரித்தது, 16வயதிலேயே எதிரிகளால் தேடப்பட்டுத் தலைமறைவு வாழ்வை ஏற்றுக் கொள்ளவேண்டிய அவலநிலையை ஏற்றது, உறைவிடமின்றி, உணவின்றி நாடோடி வாழ்க்கை வாழ்ந்தது, பல நாட்கள் காடு, தெருக்களிலேயே உறங்கி எழுந்தது, பசி, பட்டினியால் பச்சை மரவள்ளிக் கிழங்குகளைப் பிடுங்கி பச்சைமிளகாயைக் கடித்தபடி பசிதீர்த்தது… இப்படியாக தலைவர் அவர்கள் ஆரம்பகாலத்தில் அனுபவித்த இடர்கள், சோதனைகள், சவால்கள் எல்லாமுமே அவரது இலட்சிய உறுதிக்கு எவ்வாறு உரமூட்டின என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

அநீதியாளர்களுடன் மோதியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையே அந்த நாட்களில் நான் சுற்றிச்சுழன்று கொண்டிருந்தேன் என்று தலைவர் அவர்கள் இந்து நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டதையும் அந்த ஈர்ப்புடன் அவர் வாழ்வு அமைந்ததையும் கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.

தலைவர் அவர்களது சிறுவயதுத் தோழர்கள் பிற்காலத்தில் இயக்கத் தோழர்களாகவும் மாறிய ஒவ்வொருவர் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளுடன் தொடர்கிறது நூல். மேற்கூறியவர்களுடனதும், இளங்குமரன், குமரப்பா. விக்டர் ஆகியோருடனுமான இயக்க ஆரம்ப நாட்கள், சத்தியசீலன் நிறுவிய தமிழ் மாணவர்பேரவையுடனான தொடர்பு, பொன். சிவகுமாரனின் செயற்பாடுகளின் மீதான ஈர்ப்பு, தமிழ் மாணவர் பேரவையின் தீவிரவாதப் பிரிவாக உருவாகிய குட்டிமணி, தங்கத்துரை சின்னசோதி சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கத்துடனான இணைவு என்று தொடர்கிறது ஆரம்ப காலம் தொடர்பான ஆசிரியரின் பதிவுகள்.

உலகத்தமிழாராய்ச்சி மாநாடும் அதில் கொல்லப்பட்ட 9 அப்பாவித் தமிழ் உயிர்களும் பொன் சிவகுமாரன் போன்றோர் மத்தியில் விதைத்த வலி தீவிரவாதப்போக்கினை உத்வேகம்பெறச் செய்தது என்பதை சிவகுமாரன் வரலாறு மூலம் விளக்கி புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் பிறப்பையும், அதுவே பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கான அடித்தளம் என்பதுமான செய்திகளை இங்கே பதிவாக்கியுள்ளார் நூலாசிரியர்.

1976 ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் பிறப்பெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டமே புதிய திருப்பம் பெற்றது என்பதை உணரவைக்கும் செய்திப் பகிர்வுகளைத் தருகிறார் பழ.நெடுமாறன்.

அதே மாதம் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதே தமது இலட்சியம் என வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தேசிய மாநாட்டினை நடத்தியது, அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேண்டுகோளுக்கு மக்கள் பேராதரவு அளித்தார்கள் என்ற குறிப்பை இங்கே தந்து, இந்தத் தீர்ப்பு தலைவர் அவர்களையும் தோழர்களையும் ஊக்கப்படுத்தியது, தமிழ் இனம் விடுதலைபெற தம்மாலியன்ற வழிகளில் உழைக்கவேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது என்பதனைப் பதிவு செய்கிறார்.

1978ஆம் ஆண்டு லெப். செல்லக்கிளி மறைந்திருந்த பயிற்சிப் பாசறையை பஸ்தியாம்பிள்ளை தலைமையில் சென்ற அணி தாக்கியதையும், அதில் வீரம்செறிந்த வகையில் லெப். செல்லக்கிளி செயற்பட்டு பஸ்தியாம்பிள்ளை, மற்றும் அவருடன் வந்த மூவரையும் அவ்விடத்திலேயே கொன்று தப்பித்ததையும் இதன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையும் விவரிக்கிறார். நூலின் இந்த அத்தியாயங்கள் கூடுதலாக ஐயர் அவர்கள் எழுதிய போராட்ட ஆரம்ப நாட்கள் குறித்த நூலில் பதியப்பட்ட நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டதாக வாசித்தபோது தோன்றியது.

அடுத்து, பயங்கரவாதத் தடைச்சட்டம், ஒருவரை எந்த விசாரணையுமின்றி 18 மாதங்களுக்கு சிறையில் வைக்கமுடியும் என்ற அடக்குமுறையை ஏவியது என்பதை பதிவுசெய்கிறார். தொடர்ந்து 1981ஆம் ஆண்டு யாழ் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டதைப் பார்த்த பிரபாகரன் மனம் பதைத்து அன்றிலிருந்து எப்பாடுபட்டேனும் என் மக்களை விடுவிக்கப் போராடியே ஆக வேண்டும் என்ற உறுதி என் நெஞ்சில் வேரூன்றியது என்று பின்னாளில் செவ்வியொன்றில் தெரிவித்ததை நினைவ+ட்டுகிறார்.

இயக்கத்தில் பிளவு ஏற்படும் நிலை வந்தபோது அனைவரையும் கூட்டி நிலைமைகளை விளக்கிவிட்டு, தான் இயக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததானது பிரபாகரனின் பண்பு நலனுக்கு சான்றாகும் என்று குறிப்பிடும் ஆசிரியர், இதன் பின்னர் சாவகச்சேரி காவல்நிலையம் தாக்கப்பட்டது, முதல் மாவீரர் சங்கர் காயப்பட்டுப்பின்னர் சிகிச்சைக்காக மதுரை கொண்டுவரப்பட்டு அங்கு வீரச்சாவைத் தழுவியது, உயிர்போகும் நிலையிலும் தம்பி, தம்பி என்று தலைவர் பெயரை உரைத்தது, உயிர்த்தோழன் சங்கர் வீரச்சாவடைந்த நிலையில் தலைவர் அவர்கள் கதறி அழுதது என்பதான தான் நேரே பார்த்து அனுபவித்த அக்காலத்தை நினைவு கூர்கிறார் திரு. நெடுமாறன்.

1982 இலேயே தமது கோரிக்கைகள் குறித்து அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் அந்நாடுகளின் தலைவர்களிடம் புலிகள் மனு வழங்கினார்கள் என்ற செய்தியை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழ. நெடுமாறன், தமது அரசு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்து, தமிழர் சொத்துக்களை எரித்து, இரண்டு இலட்சம் தமிழர்களை அகதியாக்கியபோது, ‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நான் இப்போது சிந்திக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைக்குறித்து எத்தகைய கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியோ சிந்திக்கமுடியாது” என்று ஜெயவர்த்தனாவால் அறிவிக்கப்பட்ட கறுப்பு சூலை நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்து, தொடர்ந்த சிங்களப் பௌத்த இனத்துவேசம் துப்பும் நடவடிக்கைகள், தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான புறச்சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொடுத்தன என்பதைப் பதிவுசெய்கிறார்.

இந்த இனக் கலவரம் தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது, தமிழீழம் விடுதலைபெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தெளிவோடு, இயக்கங்களில் இணைவோரின் எண்ணிக்கை வகைதொகையற்றுப் பெருகின என்ற செய்தி இந்நூலில் வருகின்றது.

தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு தமிழீழப் பகுதியெங்கும் சென்று பார்வையிட்டு அங்கு நடைபெறும் கொடுமைகளை அம்பலப்படுத்தும் வீpடியோப் பதிவுகளைக் கொண்டு வந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காட்டியதாகக் கூறும் திரு. நெடுமாறன், அங்கு சென்றிருந்த வேளை, ஆண்களைப் போலவே பெண்களும் பயிற்சிபெற்று ஆயுதங்களை இலாவகமாகக் கையாளுவதைப் பார்த்து தான் ஆச்சரியடைந்ததாகவும், மருத்துவம், பிரச்சாரம் போன்ற பணிகளுக்கே பெண்கள் ஏற்றவர்கள் என்ற நிலையைப் பிரபாகரன் அடியோடு மாற்றியிருந்தார் என்றும் பதிவுசெய்து, விடுதலை வேட்கையும் உரிமை உணர்வும் கொண்ட பெண்போராளிகள் படையணியை அவர் உருவாக்கியுள்ள விதம் பாராட்டத்தக்கது என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண்களைப் பிரபாகரனே உருவாக்கியிருந்தார் என்றும் நெகிழ்கிறார்.

தொடர்ந்து வரும் அத்தியாயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எப்படி ஒரு தேசிய இயக்கமாக, மக்கள் இயக்கமாக உருவெடுத்தது என்பதை இயம்புகிறார். தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெறும் ஆயுதம் தாங்கிய கும்பலாக இல்லாமல், திட்டவட்டமான, தெளிவான இலட்சியங்களை இலக்காகக் கொண்டு அவற்றுக்காகப் போராடும் ஒரு புரட்சி இயக்கமாக, தமிழீழ மக்களின் சுதந்திர இராணுவமாக எப்படிக் கட்டி அமைத்தார் என்பதைப் பற்றிய செய்திகளை பகிர்கிறார்.

இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணைபிரிக்க முடியாத அங்கம் ஆவார்கள் என்பதில் தலைவர் அவர்கள் உறுதி கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார். தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், மக்களிடையே தங்களுக்குள்ள செல்வாக்கை 1989, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் விடுதலைப்புலிகள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். விடுதலைப்புலிகள் நேரடியாகப் போட்டியிடாவிடினும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் 15இடங்களையும், 2004ஆம் ஆண்டு 22 இடங்களையும் கைப்பற்றியதன் மூலம், ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளே தங்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதைத் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக நிலைநாட்டியதைப் பதிவுசெய்கிறார்.

தன் இளம் வயதிலேயே இலட்சிய நோக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது, தாயக விடுதலை உணர்வைப் பெற்றது எவ்வாறு என்பது குறித்து தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே ‘சண்டே, இந்து, தி வீக், வெளிச்சம், பிபிசி ஆகிய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளில் தெரிவித்திருப்பதைப் பகிர்ந்திருக்கிறார். ‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி” என்ற அவரது மேற்கோளுக்கமையவே அவரது வாழ்வும் அமைந்தது என்பதைச் சுட்டியிருக்கிறார்.

தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களுடனான தலைவர் பிரபாகரன் அவர்களது நட்புறவு குறித்தும், முதன்முறையாக திருமதி. அடேல் பாலசிங்கம் அவர்கள் நான்கு இளைஞர்களுடனும் சில பெண்களுடனும் சென்னையில் வீடெடுத்துத் தங்கியிருந்தபோது சில விச மூளைகள் ஒரு வெள்ளைக்காரப்பெண்ணொருத்தி கொஞ்சம் பெண்களை வைத்து விலைமாதர் விடுதியை நடத்துகிறாள் என்று கதைகட்டிவிட, சுற்றுவட்டார மக்கள் வீட்டைக் கல்லால் தாக்கத் தொடங்கியதுபற்றியும், அங்கு அப்போது வந்த பொன்னம்மான் சீற்றம் அடைந்து கூட்டத்தை நோக்கிக் கத்தி, பிஸ்டலை எடுத்துக்காட்டி தாங்கள் யார் என்பது குறித்து விளக்கியபின் கூட்டத்தினர் ஒவ்வொருவராக மன்னிப்புக்கேட்டுக் கலைந்த, நாம் இதுவரை அறிந்திராத சில சம்பவங்களை நினைவுகூருகிறார் நெடுமாறன் ஐயா.

அடுத்து திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் குறிவைத்துச் சென்னையில் நடந்த கொலைமுயற்சி குறித்தான நாம் அறியாத பல செய்திகளைப் பகிர்கிறார்.

இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட வரலாறு குறித்தும், இலங்கையில் இராணுவ ரீதியாகத் தலையிடுவது என்ற இந்திரா காந்தியின் இரகசியத் திட்டம் குறித்தும், இந்தியத்தலையீட்டின் உள்நோக்கம் குறித்தும் தான் அறிந்த, உணர்ந்த செய்திகளைத் தொடர்நது பகிர்கிறார்.

தலைவர் பிரபாகரன்-முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் ஆகியோரது முதல் சந்திப்பு குறித்தும், தமிழ்நாட்டின் அரசியலில் தலையிடுவதில்லை என்ற விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும், எம்ஜிஆர் அளித்த பேருதவி குறித்தும், தான் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த சம்மதிக்கமாட்டேன் என்று உறுதிகூறி அந்த வாக்குறுதியைக் கடைசிவரை எம்ஜிஆர் அவர்கள் காப்பாற்றியது குறித்தும் பதிவுசெய்து அக்காலகட்டத்தை நினைவுகூர்கிறார்.

தமிழகத்தில் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்ட புலிகளின் பயிற்சி முகாம்கள், கோவை இராமகிருஸ்ணன் அவர்களின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட முகாம்கள், திராவிடர் கழகத்தின் கரூர் மாவட்டத்தலைவர் பழ. இராமசாமி அவர்கள் வழங்கிய ஜீப் வாகனம் குறித்தான செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார்.

தமிழர்கள் தமக்கென்று தனிநாடு அமைத்துவிடக்கூடாது என நினைப்பவர்களும் சிங்கள இந்திய ஏகாதிபத்தியத் தாசர்களுக்கு பிரபாகரனைப் பழிசாற்றுவதில் ஒன்றுசேர்ந்து கொள்கிறார்கள் என்றும் தமிழ்த் தேசிய எழுச்சியின் வடிவமாகத் தலைவர் அவர்கள் திகழ்வதே அவரைக் குறிவைத்து இவர்கள் அழிக்கத் திட்டமிடக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.

தமிழீழத் தேசியத் தலைவருக்கும் பிற இயக்கங்களுக்கும் உடனான உறவு குறித்துச் செய்திகளைத் தரும் திரு. நெடுமாறன், திரு பாலசிங்கம் அவர்களின் முயற்சியில் 1985 ஆம் ஆண்டு அனைத்து இயக்கத் தலைமைகளும் சந்தித்து அரசியல் ரீதியான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுபட்டுச் செயற்படத் தீர்மானித்ததையும், அவர்களைப் பிளவுபடுத்தும் சதித்திட்டம் தீட்டிய ரா உளவு அமைப்பின் சீர்குலைவு வேலைகள், திம்புப்பேச்சுக்கள், மற்றும் இயக்க மோதல்களின் பின்னணி, டெலோ அமைப்புடனான மோதல் ஆகியன குறித்தும் பதிவுசெய்கிறார்.

தமிழகத்தில் புலிகளின் பயிற்சிமுகாம்களில் இருந்த தொலைத் தொடர்புக்கருவிகளைப்பறிமுதல் செய்ததும் அவற்றை மீளத்தரவேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து அறவழியில் போராடியது, தொலைத்தொடர்புக்கருவிகள் மீளக்கிடைத்தபின்பே அறவழிப்போராட்டத்தைக் கைவிட்ட – எந்த வழியில் போராடினாலும் அதில் உறுதியாக இருக்கும் பாங்கு, இந்திரா காந்தி அம்மையாரின் மறைவும் அதன்பின்னரான ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாற்றம், புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலும் அது சிங்களத்துக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியும் இந்தியாவின் தலையீட்டை வேண்டிநின்ற பின்னணியையும், இதன் தொடர்ச்சியாக இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்டதையும் பதிவுசெய்கிறது நூல்.

ஆகஸ்டு 4 ஆம் தேதி சுதுமலையில் பிரபாகரன் அவர்கள் இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்துக்குப்பின்னர் ஆற்றிய உரையில். ‘நமது போராட்டத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுவிட்டது. ஒரு வல்லரசு நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து இரத்தம் சிந்தி உயிர் கொடுத்து நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற எமது ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லிவிட்டார்கள். எங்கள் கருத்தைக் கேட்காமல் மக்கள் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் நம்மீது திணிக்கப்பட்டது. அதற்கு எங்கள் எதிர்ப்பை முழுமையாகத் தெரிவித்தோம். இனி எம் மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, இந்திய அரசை எதிர்த்துப் போராடும் ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்.

அதே நேரம் ‘இப்போது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய இராணுவமும் விடுதலைப்புலிகளும் களத்திலே மோதிக்கொண்டு இருக்கிறார்கள். புரிந்ததா சூட்சுமம்? நான் எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என்பது இப்போது புரிகிறதா? என்கிறார் ஜெயவர்த்தனர்.. இந்நிகழ்வுகளை மக்கள் அறியப் பதிவுசெய்கிறார் திரு. நெடுமாறன்.

1987 செப்டம்பர் 16 அன்று இரவில் இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்குக்கு ஒரு தகவல் வருகின்றது. தீட்சித் பேசுகிறார். உங்களைச் சந்திக்க பிரபாகரன் வருகிறாரா என்று கேட்கிறார் அவர். ஆம் மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது என்கிறார் ஹர்கிரத் சிங். அவரைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள் டில்லியின் உத்தரவு என்கிறார் தீட்சித். அப்படியொரு துரோகத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று ஹர்கிரத் சிங்க பதில் சொல்கிறார். அதற்குப்பிறகு ஐந்துகோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாநிலை அறப்போர் தொடங்குகிறார். அதன்போது பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் அவ்வேளை தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பில் மரியாதையைத் தெரிவிக்க வந்திருக்கிறேன், எங்கள் அன்பைச் செலுத்த வந்திருக்கிறேன் என்று உறுதிகூற அங்கு விரைந்த நிகழ்வை இங்கே நினைவுகூருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சியையும் கட்டமைப்பையும் பாழாக்கித் துரோகம் செய்தது இந்தியா என்பதற்கான சான்றுகள் நூல் முழுதும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச்செய்திகளை ஆவணப்படுத்துவது என்ற கடமையை ஐயா நெடுமாறன் அவர்கள் மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் அவரறிய நடைபெற்ற நிகழ்வுகள், அரசியல் செய்திகள், பிறர் அறியாத பல செய்திகளை மக்கள் அறியத் தந்திருக்கிறார். பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல. அவரே தமிழர் எழுச்சியின் வடிவம் என்பதைப் படிப்போர் உணரும் வகையில் நேர்த்தியாக நிறுவியுள்ளார் ஐயா நெடுமாறன். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் எம் தலைமுறையும், இனி வரும் தலைமுறைகளும் அறியவேண்டியது. பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதன் இந்த இனத்தின் எழுச்சியின் குறியீடு. பிரபாகரன் என்று இளைஞனின் வரலாறு, ஒரு விடுதலை இயக்கத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியாக, ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு இந்த நூல்.

அழகான வடிவமைப்பு, வண்ண ஒளிப்படங்கள், நிகழ்வுகளின் கோர்வை, பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் குறித்த இணைப்புகள் என்று பாராட்டும் வண்ணம் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். செவ்விகள், நிகழ்வுகள், அனுபவங்களின் பதிவாக இந்நூல் இருப்பதால் அத்தியாயங்கள் தொடர் வரலாறாகச் செல்லவில்லை. அதாவது 70ஆம் ஆண்டுகளின் பதிவுகளிலேயே 80கள், 90களில் நடந்தவற்றின் குறிப்புகள் வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்து அடுத்து இது, அடுத்து என்ன என்று சொல்லும் வகையில் ஆண்டுவாரியாக, தொடர்ச்சியான காலப் பதிவாக இது இல்லை. தமிழீழப் போராட்ட வரலாறு குறித்து அதிகம் தெரியாத வாசகர்களை இது கொஞ்சம் குழப்புவதாகவே அமைகிறது.

நிச்சயமாய் இது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது முழுமையான வாழ்க்கை வரலாறு அல்ல, ஆயினும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆவணம் இது. தமிழீழத் தேசியத் தலைவரே எமது இனத்தின் எழுச்சியின் வடிவம் என்பதைச் சரியான சான்றுகளுடன் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் நூல் இது என்பதனைத் தெரிவித்து இந்த நூல் நிச்சயம் தமிழர்கள் வீடெங்கிலும் இருக்கவேண்டும், இந்தத் தலைமுறையும் அடுத்த தலைமுறைகளும் இவ்வரலாற்றினை நிச்சயம் தெரிந்துவைத்திருக்கவேண்டும், அதற்குதவும் வகையில் மொழிமாற்றமும் செய்திடப்படவேண்டும் என்ற அவாவையும் தெரிவித்து, இந்த உரையை நிறைவுசெய்கிறேன். நன்றி.

அனைவருக்கும் வணக்கம்.

இன்று இங்கு வெளியிடப்படும் பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற இந்த நூல் முதல் பதிப்பாக தலைவர் குறித்த சொற்ப செய்திகளுடனும், இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988இலேயே மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாறு ஆகியன இணைக்கப்பட்டு சென்ற ஆண்டு பெப்ரவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக இது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகள் எங்கும் வெளியிட்டதன் தொடர்ச்சியாக இன்று கனடாவில் வெளியிடப்படுகிறது.

பழ. நெடுமாறன் ஐயாஅவர்களால் எழுதப்பட்ட இந்த ‘பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற 1200 பக்கங்களைக் கொண்ட நூல், முள்ளிவாய்க்காலுக்கு முந்திய 33ஆண்டுகால விடுதலைப்போராட்ட வரலாற்றையும், அந்த வரலாற்றின் பாடுபொருளாகிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சேர எடுத்து அக்காலகட்டத்தில் பயணித்து பதிவு செய்து இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆரம்ப காலம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அறம் குறித்தும், எழுச்சி குறித்தும் அறிந்தவர் என்ற வகையிலும், வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் பங்குகொண்டவர் என்ற வகையிலும், கெரில்லாப் போராட்ட தாக்குதல் சம்பவங்களில் தொடங்கி வான்படை அமைத்துப் போராடிய வரையிலான போராட்ட வளர்ச்சியினை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் பழ. நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதுவதற்கு மிகப்பொருத்தமான தெரிவாகிறார் என்பது ஐயத்திற்கிடமற்றது.

வரலாற்றை ஆவணப்படுத்துதல் என்பது காலங்காலமாய் நடைமுறையில் இல்லாமை என்பது எம் இனத்தைப் பீடித்த சாபம் எனலாம். அந்தளவுக்கு எம்மினம், எமது வரலாற்றை, எம்மினச் சான்றோர்களது வரலாற்றை, இலக்கியங்களை, அரசியலை, நாகரீகத்தை, கண்டுபிடிப்புகளை, அறிவியலை, மருத்துவத்தை என்று எதனையும் சரிவர ஆவணப்படுத்தத் தவறிவிட்டது என்பது சோகம்.

அந்த வகையில், அந்தக் குறையை ஓரளவேனும்போக்க, தமிழகத்தில் தான் கூட இருந்து தெரிந்துகொண்டது, செவிவழி அறிந்தது, பிறர் சொல்லக் கேட்டது, படித்தது என்று அத்தனையையும் தன்னாலியன்ற வகையில் தொகுத்து இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார் திரு. நெடுமாறன். பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக ஆவணப்படுத்தியுமிருக்கிறார்.

தம்மை எதிரியிடம் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் ஆயுத தளபாடங்களைத் தாமே உருவாக்குவதில் தொடங்கி வானூர்தி வரை உருவாக்கி, உலகத்தையே வியக்கவைத்த, எதிரியை அச்சுறுத்திய தொழில்நுட்பத்திறனை வளர்த்தது, இயக்கத்தை கெரில்லாப் போராட்ட வழிமுறையில் இருந்து மரபுவழி இராணுவமாக உருவெடுக்க உழைத்தது, தான் கொண்ட இலட்சியத்தில் எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், பதவி ஆசை என்பது சிறிதுமற்று, இறுதிவரை தனது இலட்சியத்தில் தெளிவாக, நேர்மையாக இருந்தது.. சாதி, மத, ஆண்-பெண் பேதமற்ற சமூகத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தது என்ற உலக விடுதலைப்போராட்டங்கள் அனைத்துக்கும் முன்மாதிரியாக விளங்கிய ஆளுமை, தலைவர் பிரபாகரன் என்பதை ஆதாரங்களோடு சரியான வகையில் ஆவணப்படுத்தி, தலைவர் பிரபாகரன் அவர்களே தமிழர் எழுச்சியின் வடிவம் என்பதை அறுதியிட்டுக் கூறியிருக்கிறது இந்நூல்.

தமிழீழத் தேசியத் தலைவரது இளமைப்பருவம் தொடங்கி, போராட்ட ஆரம்பகால வளர்ச்சி, குறிக்கோள்கள், இந்தியத் தலையீடு, ஈழப்போர், வாகைசூடிய களங்கள், படைப்பிரிவுகள், சமரச முயற்சிகள் எனப் பல்வேறு வரலாற்றுச்செய்திகளை 90 தலைப்புகளில் ஆராய்கிறது நூல்.

இதில் இந்திய இராணுவத்தலையீட்டுக்குப் பின்னரான காலம் குறித்து ஐயா ஈழவேந்தன் அவர்களும், சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி குறித்து ஐயா குணநாதன் அவர்களும் உரையாற்ற இருப்பதால் இந்திய இராணுவத் தலையீடு வரையிலான பகுதியைக் கொஞ்சம் சுருக்கமாக, அதாவது போராட்ட தொடக்க காலம் மீதான என் பார்வையை இங்கே உங்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன்.

இந்தப் போராட்ட ஆரம்ப காலத்தை, அதாவது முதல் பத்தாண்டுகளை, தலைவர் பிரபாகரனது இளமைப்பருவம் தொடங்கி இயக்கம் பிறந்ததுவரையான காலகட்டம், இயக்கம் தொடங்கிய காலந்தொட்டு திம்பு மாநாடு வரையான காலம், திம்பு மாநாடு தொடங்கி இந்திய- சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும், அதன் பின்னரான காலப்பகுதியும் என மூன்று பகுதிகளாக பிரித்துப் பார்க்கலாம்.

1982ஆம் ஆண்டு பலமுறை தனது இல்லத்துக்கு திரு. பேபி சுப்ரமணியம் அதாவது இளங்குமரன் அண்ணா அவர்களுடன் வந்த இளைஞர்தான் பிரபாகரன் என்பதைத் தான் அறியாமலே இருந்ததையும், தலைவர் அவர்களிடமேயே பலமுறை உங்கள் தலைவர் பிரபாகரனைப் பார்க்கவேண்டும் என்று கேட்டதையும் குறிப்பிடும் பழ. நெடுமாறன் அவர்கள் பின்னர் பாண்டிபஜார்சூளை சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களைப் பார்க்கச்சென்றபோதுதான் காவலர் முன்னிலையில் மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணா, நான்தான் பிரபாகரன் என்று தலைவர் அவர்கள் சிரித்தபடி அறிமுகப்படுத்திய நெகிழ்வான நிகழ்வை நினைவுகூர்ந்தபடி தொடங்குகிறது நூல்.

முதலாவது அத்தியாயத்தில் தமிழீழத்தேசியத் தலைவர் அவர்களது குடும்பப்பின்னணி குறித்து எடுத்துரைக்கும் நூலாசிரியர், பணியின் நிமித்தம் தலைவர் அவர்களது பெற்றோர் அனுராதபுரத்தில் தங்கியிருந்த சமயம்தான் பார்வதியம்மா அவர்கள் தலைவர் அவர்களைக் கருவில் சுமக்க ஆரம்பித்தார் என்பதையும் அப்போது அவர்கள் வீட்டுக்கு அருகே இருந்த எல்லாளனின் சமாதிக்கு தலைவர் அவர்களது தாய் தினசரி விளக்கு ஏற்றிவழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் அறியத் தருகிறார். பிரபாகரன் என்ற வரலாறு உருவாகி வளர்கிறது. மனோகரன், ஜெகதீஸ்வரி, வினோதினி என்ற மூத்தவர்களோடு தொடங்குகிறது கடைக்குட்டி பிரபாகரனின் வாழ்க்கை.

1958 இனக் கலவரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களின் விவரிப்பை மிகச்சிறிய வயதிலேயே கேட்டு மனம் வெம்பியது, தமிழன் காரணமின்றிச் சிங்களவர்களால் தாக்கப்படுவது குறித்து சினங்கொண்டது, பின்னர் தமிழீழம் விடுதலைபெறவேண்டும் என்ற கருத்தினைச் சிறுவயதில் விதைத்த தமிழாசிரியர் வேணுகோபால் என்று விரிகிறது அவர் வாழ்வு. பதின்ம வயதுகளிலேயே நாட்டுக் குண்டு தயாரிக்க முயன்று காலை எரித்தது, 16வயதிலேயே எதிரிகளால் தேடப்பட்டுத் தலைமறைவு வாழ்வை ஏற்றுக் கொள்ளவேண்டிய அவலநிலையை ஏற்றது, உறைவிடமின்றி, உணவின்றி நாடோடி வாழ்க்கை வாழ்ந்தது, பல நாட்கள் காடு, தெருக்களிலேயே உறங்கி எழுந்தது, பசி, பட்டினியால் பச்சை மரவள்ளிக் கிழங்குகளைப் பிடுங்கி பச்சைமிளகாயைக் கடித்தபடி பசிதீர்த்தது… இப்படியாக தலைவர் அவர்கள் ஆரம்பகாலத்தில் அனுபவித்த இடர்கள், சோதனைகள், சவால்கள் எல்லாமுமே அவரது இலட்சிய உறுதிக்கு எவ்வாறு உரமூட்டின என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

அநீதியாளர்களுடன் மோதியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையே அந்த நாட்களில் நான் சுற்றிச்சுழன்று கொண்டிருந்தேன் என்று தலைவர் அவர்கள் இந்து நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டதையும் அந்த ஈர்ப்புடன் அவர் வாழ்வு அமைந்ததையும் கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.

தலைவர் அவர்களது சிறுவயதுத் தோழர்கள் பிற்காலத்தில் இயக்கத் தோழர்களாகவும் மாறிய ஒவ்வொருவர் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளுடன் தொடர்கிறது நூல். மேற்கூறியவர்களுடனதும், இளங்குமரன், குமரப்பா. விக்டர் ஆகியோருடனுமான இயக்க ஆரம்ப நாட்கள், சத்தியசீலன் நிறுவிய தமிழ் மாணவர்பேரவையுடனான தொடர்பு, பொன். சிவகுமாரனின் செயற்பாடுகளின் மீதான ஈர்ப்பு, தமிழ் மாணவர் பேரவையின் தீவிரவாதப் பிரிவாக உருவாகிய குட்டிமணி, தங்கத்துரை சின்னசோதி சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கத்துடனான இணைவு என்று தொடர்கிறது ஆரம்ப காலம் தொடர்பான ஆசிரியரின் பதிவுகள்.

உலகத்தமிழாராய்ச்சி மாநாடும் அதில் கொல்லப்பட்ட 9 அப்பாவித் தமிழ் உயிர்களும் பொன் சிவகுமாரன் போன்றோர் மத்தியில் விதைத்த வலி தீவிரவாதப்போக்கினை உத்வேகம்பெறச் செய்தது என்பதை சிவகுமாரன் வரலாறு மூலம் விளக்கி புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் பிறப்பையும், அதுவே பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கான அடித்தளம் என்பதுமான செய்திகளை இங்கே பதிவாக்கியுள்ளார் நூலாசிரியர்.

1976 ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் பிறப்பெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டமே புதிய திருப்பம் பெற்றது என்பதை உணரவைக்கும் செய்திப் பகிர்வுகளைத் தருகிறார் பழ.நெடுமாறன்.

அதே மாதம் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதே தமது இலட்சியம் என வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தேசிய மாநாட்டினை நடத்தியது, அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேண்டுகோளுக்கு மக்கள் பேராதரவு அளித்தார்கள் என்ற குறிப்பை இங்கே தந்து, இந்தத் தீர்ப்பு தலைவர் அவர்களையும் தோழர்களையும் ஊக்கப்படுத்தியது, தமிழ் இனம் விடுதலைபெற தம்மாலியன்ற வழிகளில் உழைக்கவேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது என்பதனைப் பதிவு செய்கிறார்.

1978ஆம் ஆண்டு லெப். செல்லக்கிளி மறைந்திருந்த பயிற்சிப் பாசறையை பஸ்தியாம்பிள்ளை தலைமையில் சென்ற அணி தாக்கியதையும், அதில் வீரம்செறிந்த வகையில் லெப். செல்லக்கிளி செயற்பட்டு பஸ்தியாம்பிள்ளை, மற்றும் அவருடன் வந்த மூவரையும் அவ்விடத்திலேயே கொன்று தப்பித்ததையும் இதன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையும் விவரிக்கிறார். நூலின் இந்த அத்தியாயங்கள் கூடுதலாக ஐயர் அவர்கள் எழுதிய போராட்ட ஆரம்ப நாட்கள் குறித்த நூலில் பதியப்பட்ட நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டதாக வாசித்தபோது தோன்றியது.

அடுத்து, பயங்கரவாதத் தடைச்சட்டம், ஒருவரை எந்த விசாரணையுமின்றி 18 மாதங்களுக்கு சிறையில் வைக்கமுடியும் என்ற அடக்குமுறையை ஏவியது என்பதை பதிவுசெய்கிறார். தொடர்ந்து 1981ஆம் ஆண்டு யாழ் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டதைப் பார்த்த பிரபாகரன் மனம் பதைத்து அன்றிலிருந்து எப்பாடுபட்டேனும் என் மக்களை விடுவிக்கப் போராடியே ஆக வேண்டும் என்ற உறுதி என் நெஞ்சில் வேரூன்றியது என்று பின்னாளில் செவ்வியொன்றில் தெரிவித்ததை நினைவ+ட்டுகிறார்.

இயக்கத்தில் பிளவு ஏற்படும் நிலை வந்தபோது அனைவரையும் கூட்டி நிலைமைகளை விளக்கிவிட்டு, தான் இயக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததானது பிரபாகரனின் பண்பு நலனுக்கு சான்றாகும் என்று குறிப்பிடும் ஆசிரியர், இதன் பின்னர் சாவகச்சேரி காவல்நிலையம் தாக்கப்பட்டது, முதல் மாவீரர் சங்கர் காயப்பட்டுப்பின்னர் சிகிச்சைக்காக மதுரை கொண்டுவரப்பட்டு அங்கு வீரச்சாவைத் தழுவியது, உயிர்போகும் நிலையிலும் தம்பி, தம்பி என்று தலைவர் பெயரை உரைத்தது, உயிர்த்தோழன் சங்கர் வீரச்சாவடைந்த நிலையில் தலைவர் அவர்கள் கதறி அழுதது என்பதான தான் நேரே பார்த்து அனுபவித்த அக்காலத்தை நினைவு கூர்கிறார் திரு. நெடுமாறன்.

1982இலேயே தமது கோரிக்கைகள் குறித்து அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் அந்நாடுகளின் தலைவர்களிடம் புலிகள் மனு வழங்கினார்கள் என்ற செய்தியை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழ. நெடுமாறன், தமது அரசு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்து, தமிழர் சொத்துக்களை எரித்து, இரண்டு இலட்சம் தமிழர்களை அகதியாக்கியபோது, ‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நான் இப்போது சிந்திக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைக்குறித்து எத்தகைய கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியோ சிந்திக்கமுடியாது” என்று ஜெயவர்த்தனாவால் அறிவிக்கப்பட்ட கறுப்பு சூலை நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்து, தொடர்ந்த சிங்களப் பௌத்த இனத்துவேசம் துப்பும் நடவடிக்கைகள், தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான புறச்சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொடுத்தன என்பதைப் பதிவுசெய்கிறார்.

இந்த இனக் கலவரம் தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது, தமிழீழம் விடுதலைபெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தெளிவோடு, இயக்கங்களில் இணைவோரின் எண்ணிக்கை வகைதொகையற்றுப் பெருகின என்ற செய்தி இந்நூலில் வருகின்றது.

தொடர்ந்து 1985ஆம் ஆண்டு தமிழீழப் பகுதியெங்கும் சென்று பார்வையிட்டு அங்கு நடைபெறும் கொடுமைகளை அம்பலப்படுத்தும் வீpடியோப் பதிவுகளைக் கொண்டு வந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் காட்டியதாகக் கூறும் திரு. நெடுமாறன், அங்கு சென்றிருந்த வேளை, ஆண்களைப் போலவே பெண்களும் பயிற்சிபெற்று ஆயுதங்களை இலாவகமாகக் கையாளுவதைப் பார்த்து தான் ஆச்சரியடைந்ததாகவும், மருத்துவம், பிரச்சாரம் போன்ற பணிகளுக்கே பெண்கள் ஏற்றவர்கள் என்ற நிலையைப் பிரபாகரன் அடியோடு மாற்றியிருந்தார் என்றும் பதிவுசெய்து, விடுதலை வேட்கையும் உரிமை உணர்வும் கொண்ட பெண்போராளிகள் படையணியை அவர் உருவாக்கியுள்ள விதம் பாராட்டத்தக்கது என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண்களை பிரபாகரனே உருவாக்கியிருந்தார் என்றும் நெகிழ்கிறார்.

தொடர்ந்து வரும் அத்தியாயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எப்படி ஒரு தேசிய இயக்கமாக, மக்கள் இயக்கமாக உருவெடுத்தது என்பதை இயம்புகிறார். தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெறும் ஆயுதம் தாங்கிய கும்பலாக இல்லாமல், திட்டவட்டமான, தெளிவான இலட்சியங்களை இலக்காகக் கொண்டு அவற்றுக்காகப் போராடும் ஒரு புரட்சி இயக்கமாக, தமிழீழ மக்களின் சுதந்திர இராணுவமாக எப்படிக் கட்டி அமைத்தார் என்பதைப் பற்றிய செய்திகளை பகிர்கிறார்.

இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணைபிரிக்க முடியாத அங்கம் ஆவார்கள் என்பதில் தலைவர் அவர்கள் உறுதி கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார். தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், மக்களிடையே தங்களுக்குள்ள செல்வாக்கை 1989, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் விடுதலைப்புலிகள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். விடுதலைப்புலிகள் நேரடியாகப் போட்டியிடாவிடினும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் 15இடங்களையும், 2004ஆம் ஆண்டு 22 இடங்களையும் கைப்பற்றியதன் மூலம், ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளே தங்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதைத் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக நிலைநாட்டியதைப் பதிவுசெய்கிறார்.

தன் இளம் வயதிலேயே இலட்சிய நோக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது, தாயக விடுதலை உணர்வைப் பெற்றது எவ்வாறு என்பது குறித்து தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே ‘சண்டே, இந்து, தி வீக், வெளிச்சம், பிபிசி ஆகிய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளில் தெரிவித்திருப்பதைப் பகிர்ந்திருக்கிறார். ‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி” என்ற அவரது மேற்கோளுக்கமையவே அவரது வாழ்வும் அமைந்தது என்பதைச் சுட்டியிருக்கிறார்.

தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களுடனான தலைவர் பிரபாகரன் அவர்களது நட்புறவு குறித்தும், முதன்முறையாக திருமதி. அடேல் பாலசிங்கம் அவர்கள் நான்கு இளைஞர்களுடனும் சில பெண்களுடனும் சென்னையில் வீடெடுத்துத் தங்கியிருந்தபோது சில விச மூளைகள் ஒரு வெள்ளைக்காரப்பெண்ணொருத்தி கொஞ்சம் பெண்களை வைத்து விலைமாதர் விடுதியை நடத்துகிறாள் என்று கதைகட்டிவிட, சுற்றுவட்டார மக்கள் வீட்டைக் கல்லால் தாக்கத் தொடங்கியதுபற்றியும், அங்கு அப்போது வந்த பொன்னம்மான் சீற்றம் அடைந்து கூட்டத்தை நோக்கிக் கத்தி, பிஸ்டலை எடுத்துக்காட்டி தாங்கள் யார் என்பது குறித்து விளக்கியபின் கூட்டத்தினர் ஒவ்வொருவராக மன்னிப்புக்கேட்டுக் கலைந்த, நாம் இதுவரை அறிந்திராத சில சம்பவங்களை நினைவுகூருகிறார் நெடுமாறன் ஐயா.

அடுத்து திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் குறிவைத்துச் சென்னையில் நடந்த கொலைமுயற்சி குறித்தான நாம் அறியாத பல செய்திகளைப் பகிர்கிறார்.

இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட வரலாறு குறித்தும், இலங்கையில் இராணுவ ரீதியாகத் தலையிடுவது என்ற இந்திரா காந்தியின் இரகசியத் திட்டம் குறித்தும், இந்தியத்தலையீட்டின் உள்நோக்கம் குறித்தும் தான் அறிந்த, உணர்ந்த செய்திகளைத் தொடர்நது பகிர்கிறார்.

தலைவர் பிரபாகரன்-முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் ஆகியோரது முதல் சந்திப்பு குறித்தும், தமிழ்நாட்டின் அரசியலில் தலையிடுவதில்லை என்ற விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும், எம்ஜிஆர் அளித்த பேருதவி குறித்தும், தான் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த சம்மதிக்கமாட்டேன் என்று உறுதிகூறி அந்த வாக்குறுதியைக் கடைசிவரை எம்ஜிஆர் அவர்கள் காப்பாற்றியது குறித்தும் பதிவுசெய்து அக்காலகட்டத்தை நினைவுகூர்கிறார்.

தமிழகத்தில் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்ட புலிகளின் பயிற்சி முகாம்கள், கோவை இராமகிருஸ்ணன் அவர்களின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட முகாம்கள், திராவிடர் கழகத்தின் கரூர் மாவட்டத்தலைவர் பழ. இராமசாமி அவர்கள் வழங்கிய ஜீப் வாகனம் குறித்தான செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார்.

தமிழர்கள் தமக்கென்று தனிநாடு அமைத்துவிடக்கூடாது என நினைப்பவர்களும் சிங்கள இந்திய ஏகாதிபத்தியத் தாசர்களுக்கு பிரபாகரனைப் பழிசாற்றுவதில் ஒன்றுசேர்ந்து கொள்கிறார்கள் என்றும் தமிழ்த் தேசிய எழுச்சியின் வடிவமாகத் தலைவர் அவர்கள் திகழ்வதே அவரைக் குறிவைத்து இவர்கள் அழிக்கத் திட்டமிடக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.

தமிழீழத் தேசியத் தலைவருக்கும் பிற இயக்கங்களுக்கும் உடனான உறவு குறித்துச் செய்திகளைத் தரும் திரு. நெடுமாறன், திரு பாலசிங்கம் அவர்களின் முயற்சியில் 1985 ஆம் ஆண்டு அனைத்து இயக்கத் தலைமைகளும் சந்தித்து அரசியல் ரீதியான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுபட்டுச் செயற்படத் தீர்மானித்ததையும், அவர்களைப் பிளவுபடுத்தும் சதித்திட்டம் தீட்டிய ரா உளவு அமைப்பின் சீர்குலைவு வேலைகள், திம்புப்பேச்சுக்கள், மற்றும் இயக்க மோதல்களின் பின்னணி, டெலோ அமைப்புடனான மோதல் ஆகியன குறித்தும் பதிவுசெய்கிறார்.

தமிழகத்தில் புலிகளின் பயிற்சிமுகாம்களில் இருந்த தொலைத் தொடர்புக்கருவிகளைப்பறிமுதல் செய்ததும் அவற்றை மீளத்தரவேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து அறவழியில் போராடியது, தொலைத்தொடர்புக்கருவிகள் மீளக்கிடைத்தபின்பே அறவழிப்போராட்டத்தைக் கைவிட்ட – எந்த வழியில் போராடினாலும் அதில் உறுதியாக இருக்கும் பாங்கு, இந்திரா காந்தி அம்மையாரின் மறைவும் அதன்பின்னரான ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாற்றம், புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலும் அது சிங்களத்துக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியும் இந்தியாவின் தலையீட்டை வேண்டிநின்ற பின்னணியையும், இதன் தொடர்ச்சியாக இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்டதையும் பதிவுசெய்கிறது நூல்.

ஆகஸ்டு 4ஆம் தேதி சுதுமலையில் பிரபாகரன் அவர்கள் இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்துக்குப்பின்னர் ஆற்றிய உரையில். ‘நமது போராட்டத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுவிட்டது. ஒரு வல்லரசு நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து இரத்தம் சிந்தி உயிர் கொடுத்து நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற எமது ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லிவிட்டார்கள். எங்கள் கருத்தைக் கேட்காமல் மக்கள் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் நம்மீது திணிக்கப்பட்டது. அதற்கு எங்கள் எதிர்ப்பை முழுமையாகத் தெரிவித்தோம். இனி எம் மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, இந்திய அரசை எதிர்த்துப் போராடும் ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்.

அதே நேரம் ‘இப்போது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய இராணுவமும் விடுதலைப்புலிகளும் களத்திலே மோதிக்கொண்டு இருக்கிறார்கள். புரிந்ததா சூட்சுமம்? நான் எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என்பது இப்போது புரிகிறதா? என்கிறார் ஜெயவர்த்தனர்.. இந்நிகழ்வுகளை மக்கள் அறியப் பதிவுசெய்கிறார் திரு. நெடுமாறன்.

1987 செப்டம்பர் 16 அன்று இரவில் இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்குக்கு ஒரு தகவல் வருகின்றது. தீட்சித் பேசுகிறார். உங்களைச் சந்திக்க பிரபாகரன் வருகிறாரா என்று கேட்கிறார் அவர். ஆம் மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது என்கிறார் ஹர்கிரத் சிங். அவரைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள் டில்லியின் உத்தரவு என்கிறார் தீட்சித். அப்படியொரு துரோகத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று ஹர்கிரத் சிங்க பதில் சொல்கிறார். அதற்குப்பிறகு ஐந்துகோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாநிலை அறப்போர் தொடங்குகிறார். அதன்போது பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் அவ்வேளை தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பில் மரியாதையைத் தெரிவிக்க வந்திருக்கிறேன், எங்கள் அன்பைச் செலுத்த வந்திருக்கிறேன் என்று உறுதிகூற அங்கு விரைந்த நிகழ்வை இங்கே நினைவுகூருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சியையும் கட்டமைப்பையும் பாழாக்கித் துரோகம் செய்தது இந்தியா என்பதற்கான சான்றுகள் நூல் முழுதும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச்செய்திகளை ஆவணப்படுத்துவது என்ற கடமையை ஐயா நெடுமாறன் அவர்கள் மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் அவரறிய நடைபெற்ற நிகழ்வுகள், அரசியல் செய்திகள், பிறர் அறியாத பல செய்திகளை மக்கள் அறியத் தந்திருக்கிறார். பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல. அவரே தமிழர் எழுச்சியின் வடிவம் என்பதைப் படிப்போர் உணரும் வகையில் நேர்த்தியாக நிறுவியுள்ளார் ஐயா நெடுமாறன். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் எம் தலைமுறையும், இனி வரும் தலைமுறைகளும் அறியவேண்டியது. பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதன் இந்த இனத்தின் எழுச்சியின் குறியீடு. பிரபாகரன் என்று இளைஞனின் வரலாறு, ஒரு விடுதலை இயக்கத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியாக, ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு இந்த நூல்.

அழகான வடிவமைப்பு, வண்ண ஒளிப்படங்கள், நிகழ்வுகளின் கோர்வை, பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் குறித்த இணைப்புகள் என்று பாராட்டும் வண்ணம் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். செவ்விகள், நிகழ்வுகள், அனுபவங்களின் பதிவாக இந்நூல் இருப்பதால் அத்தியாயங்கள் தொடர் வரலாறாகச் செல்லவில்லை. அதாவது 70ஆம் ஆண்டுகளின் பதிவுகளிலேயே 80கள், 90களில் நடந்தவற்றின் குறிப்புகள் வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்து அடுத்து இது, அடுத்து என்ன என்று சொல்லும் வகையில் ஆண்டுவாரியாக, தொடர்ச்சியான காலப் பதிவாக இது இல்லை. தமிழீழப் போராட்ட வரலாறு குறித்து அதிகம் தெரியாத வாசகர்களை இது கொஞ்சம் குழப்புவதாகவே அமைகிறது.

நிச்சயமாய் இது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது முழுமையான வாழ்க்கை வரலாறு அல்ல, ஆயினும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆவணம் இது. தமிழீழத் தேசியத் தலைவரே எமது இனத்தின் எழுச்சியின் வடிவம் என்பதைச் சரியான சான்றுகளுடன் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் நூல் இது என்பதனைத் தெரிவித்து இந்த நூல் நிச்சயம் தமிழர்கள் வீடெங்கிலும் இருக்கவேண்டும், இந்தத் தலைமுறையும் அடுத்த தலைமுறைகளும் இவ்வரலாற்றினை நிச்சயம் தெரிந்துவைத்திருக்கவேண்டும், அதற்குதவும் வகையில் மொழிமாற்றமும் செய்திடப்படவேண்டும் என்ற அவாவையும் தெரிவித்து, இந்த உரையை நிறைவுசெய்கிறேன்.

நன்றி.

Advertisements