மாவீரர்களை மனதில் சுமந்த தலைவர் பிரபாகரன்

Posted on

எல்லா நிலைகளும் சுயங்களை நோக்கியே நகர்கின்றன. இந்த சுயங்களை அடையாளப்படுத்தும் முயற்சிகளே எல்லா நிலைகளிலும் தொடர் கின்றன.

அடையாளம் – ஆம்… இதனுள் எத்தனை எத்தனையோ பேருண்மைகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைக் காலம் நமக்குக் காட்டும் என்று காத்திருந்தது ஓர் உன்மத்தம்தான். ஏனெனில் காலம் என்பது கடின உழைப்பினால் வென்றெடுக்கப்பட வேண்டிய விடயங்களில் முதன்மையானது. அடையாளத்தை இழந்து கொண்டிருக்கும் ஒரு தொன்மைமிகு சமுதாயத்தின் வழித்தோன்றல் என்கிற பிரக்ஞை மிகக் கொடுமையான ஒன்றே…

இந்த உணர்வு என்னை மட்டுமல்ல, தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரையும் அடிக்கடி உள்ளுறுத்தி வாட்டுவது உண்டு என்றாலும், அந்த `வலி’ கூட பழகிப் போன மாதிரி ஆகிவிட்டது. இது எனக்கு மட்டுந்தானா? ஒட்டுமொத்தமாய் என் சமுதாயத்திற்கே உரித்தான, பழகிப்போன வலியா? உலகக் களத்தில், ஆதிக்க வேட்டைகளில் தூளாகிக் கொண்டிருக்கிறோமே என்கிற உளைச்சல் நிறையவே!

போட்டி மிகுந்த பொருளாதாரச் சந்தையில், விளைந்தும் விலை போகாத விரயப் பொருளாகிக் கொண்டிருக்கிறோமே என்ற சுயவெறுப்புக்கள் நிறையவே!

நமது ஆளுமை என்பது தொன்றுதொட்டு வந்த பாட்டன் வீட்டுச் சீதனம் தானே… எப்படியோ காலவெள்ளத்தில் கரைந்து போனதே என்கிற கவலைகள் நிறையவே!
இப்படியாக, மண்டிக் கிடக்கின்ற எதிர்மறை விளைச்சல்களோடுதான் அன்றொருநாள் ஈழத் தமிழ் மண்ணில் கால் பதித்தேன். ஆயினும் சில பொழுதுகள் கடந்துபோன பின்னர், அங்கே வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் போராட்ட வேட்கை, எதிர்காலத்தின் பால் கொண்டிருந்த ஆளுமைமிகு நம்பிக்கையின் அனல், என்னைப் புரட்டியெடுத்துப் புடம் போட்டதை உணரமுடிந்தது.

எங்களின் அடையாளம் எங்களை விட்டு எங்கும் போய்விடவில்லை. என் இனத்தின் அடையாளத்தை எத்தகைய ஆதிக்க வெறியர்களாலும் அழித்தொழித்து விட இயலாது. எங்கள் சுவடுகளை அவ்வப்போது வந்து போகின்ற சூறைக்காற்றுகள் சிதைக்கலாம். ஆனால்,எங்களது பயணம் தொடர்ந்துகொண்டே இருப்பதால் எங்கள் சுவடுகள் மீண்டும் மீண்டும் புதிது புதிதாய் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.

ஈழத்து மண்ணில் சிறுவிதையாய் விழுந்து ஒரு விருட்சமாய் எழுந்து விட்ட என் சகோதரர்களின் விழுப்புண் வீரமும்செழுமிய இனச் சாரமும், ஆண்ட பரம்பரைக்கு மீண்டும் உரம்சேர்த்து, விரக்திச் சுமையில் வளைந்துகொண்டிருந்த உலகத் தமிழர்களின் முதுகெலும்பைச் சுண்டி நிமிர்த்தி விட்டுள்ளன. ‘எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.

தமிழ் தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல…’ என்று அடிக்கடி பிரகடனம் செய்கிறவர் நமது தமிழீழத் தேசியத்தின் தலைவர், புலிகளின் தலைமகன் வே. பிரபாகரன். பல நூற்றாண்டுகளாகவே உரிமைப் போராட்ட நிதர்சனங்களின் பேரொளிவீச்சுக்கு முகம் கொடுக்கத் தயங்கி, ஓரம் போய்க் கொண்டிருந்த தமிழினத்தின் உச்சந்தலையில் அழுத்தித் தட்டி, நெடுந் தூக்கத்தைக் கலைத்த தமிழின நாயகன் தலைவர் பிரபாகரன் தம்முடையவாழ்க் கையில் அரைநூற்றாண்டை எட்டித் தொட்டிருக்கிறார்.

எங்களது வரலாறு பிழைத்துக்கொண்டது என்ற நிம்மதியான சுவாசம், வெகு சுகமாகவே இருக்கிறது. 2002ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி… முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் உழன்றுகொண்டிருந்த ஒரு பத்திரிகையாளனாகிய எனக்கு, அந்த ஏப்ரல் 17ம் தேதி பொன் முத்திரையிடப்பட்ட நாள்… எம் இனத்தின் அடையாளத்தை மீட்டெடுத்து, பத்திரப்படுத்தி, எதிர்காலத் தலைமுறையின் கையில் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றுச் செயலாற்றியிருக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து கைகுலுக்கி அளவளாவிய அந்த நாளை நான் மறப்பதற்கில்லை.

எண்ணற்ற மலேசியத் தமிழ் மக்கள் இன்னமும் எனது வலது கையைப் பற்றி, இறுகப்பிடித்துக் குலுக்கிவிட்டு, ‘இது, எங்கள் அளப்பரிய அபிமானத்தை ஈர்த்துக்கொண்டு விட்ட மாவீரன் பிரபாகரனின் கரம் குலுக்கிய கரம் அல்லவா’ என்று பெருமையோடு நினைவுகூர்வது அன்றாட வழக்கமாகிவிட்டது.

உலகெங்கும் சுதந்திர சுவாசத்திற்கு செங்குருதி சிந்திக் கொண்டிருக்கும் போராளி இயக்கங்கள் பலவற்றைப் பற்றி ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் அறியவும், அவர்களின் போராட்டங்கள் பற்றி எழுதவும் வாய்ப்பைப் பெற்றவனாக இருந்து வந்துள்ளேன். எனது இந்தப் பயணம் புறப்பட்டது என்னவோ பாலஸ்தீனத்தில்…! போய்ச் சேர்ந்தது தமிழீழத்தில்…! இந்தப் பயணத்தின்போது உலகில் வேறெங்கெனும் காணமுடியாத – இருந்திராத ஒரு வித்தியாசத்தை ஈழமண்ணில் மட்டுமே காண முடிந்தது. வேறெந்த போராளிகளின் தலைமைக்கும் இல்லாத ஓர் அருந்தவக் குணத்தை தலைவர் பிரபாகரனிடம் காண முடிந்தது.

செருக்களத்தில் செம்புனலாடி, தாய்மண்ணுக்காக இன்னுயிர் நீத்து, நெஞ்சில் கல்லறை மண் சுமந்த வண்ணம் துயிலிடங்களில் நெடுந்துயில் கொண்டுவிட்ட மாவீரர்களின் தியாகத்தை, நெஞ்சில் சுமந்த வண்ணமிருக்கும் ஒரே தலைவர் தமிழீழத் தலைவர் பிரபாகரனாக மட்டுந்தான் இருக்க முடியும். இன்றைய காலத்தில், ஏற்கனவே விடுதலை பெற்று விட்ட எத்தனையோ தேசங்கள் தாய்மண்ணைக் காக்க தன்னை ஈந்த வீரர்களின் நினைவைத் துறந்து வெட்கமிழந்து நிற்கின்றன.

ஆனால், ஈழத்தில் மட்டுமே, தாய் மண்ணின் விடுதலைக்காக வீழ்ந்து வித்தாகிப் போன மாவீரர்கள் நீடு துயிலுக்கு நேர்த்தியான – நிம்மதியான துயிலிடங்கள் உண்டு. அவர்களின் நீடுதுயிலுக்கு இடையூறுவராது காக்க, கணப்பொழுதும் இமையாது காத்து நிற்கின்றன தேசியத் தலைவர் பிரபாகரனின் கரங்கள். தாய்மண்ணைப் போலவே, அதன் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களின் தியாகமும் புனிதமானது என்பதனை தலைவர் பிரபாகரனைத் தவிர சரியாக உணர்ந்த தலைவர் வேறெங்கும் இல்லை.

அதனால்தான் ஈழமண்ணில் வீரர்களின் துயிலிடங்கள் என்பது, மண்ணின் சுவர்க்கமாய் மதிக்கப்படுகிறது, போற்றப்படுகிறது. அதன் முத்தாய்ப் பாகவே, ‘மாவீரர்’ தினத்தை வீரவணக்கத்துடன் எழுச்சி மிகு அஞ்சலிக் குரிய தினமாக ஆக்கிக் காட்டியிருக்கிறார் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்.

இன்னுயிர் ஈந்த போராளிகளுக்காகதூய்மையும், சாந்தமும், தியாகமும் பரிணமிக்கும் துயிலிடங்களை உருவாக்கி, அதனைப் போற்றுதலுக்குரிய புனித ஸ்தலமாக மாற்றி உலகில் வேறெந்த போராளிகளின் தலைவனுக்கும் இல்லாத சிறப்பைப் புலப்படுத்திய தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆன்மநேயத்திற்குத் தலைவணங்குவோமாக!

அக்னி
எழுத்தாளர், ஆசிரியர்,
மக்கள் ஓசை,
மலேசியா.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s