தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்
“எமக்கென்றும் நீ வேண்டும் திரும்ப நீ வரவேண்டும்”
வல்வையின் வடிவே: தமிழர்
வாசலின் நிமிர்வே ஜயா!
சொல்லிய திசையில் சுடரும்
சூரிய தேவே! தழுவும்
மெல்லிய காற்றே: பாசம்
மேலிடும் ஊற்றே: உன்னை
அள்ளியே அணைக்க ஆசை
ஆவலோடு உள்ளோம் வாராய்!
00
அற்றைத் திங்கள் நீதான்.
அவ்வெண் நிலவும் நீதான்
ஓற்றைக்காற்றும் நீதான்,
ஓண்டமிழ்க் குரலும் நீதான்,
கோற்றவைப் பிள்ளை நீதான்,
கொடியர சாள்வாய் நீதான்,
இற்றை வரைக்கும் நீதான்,
இனியும் இனியும் நீதான்
00
நேற்று நீ இருந்தாய் அழகாய்
நிலவிலும் நீயே வடிவாய்
ஏற்றுமே துதித்தோம்: உன்னில்
எத்தனை கனவை நெய்தோம்
பேற்றிலும் பேறாய் உன்னைப்
பெற்றதே தவமாய் கண்டோம்
போற்றிடும் செல்வப் பேறே
போனநீ வருவாய் எப்போ?
00
நீயிருந்து ஆண்ட வன்னி
நீறுபூத்திருக்கே எண்ணி!
பாய்விரித்து உறங்கா வீரம்
பாய்ந்துமே வருமோர் நேரம்
தாய் முகம் தேடும் கன்றாய்
தாகமாய் உள்ளோம்: இந்தத்
தீயரும் திசை கெட்டோடத்
திரும்பி நீ வருவாய் எப்போ?
00
பின்னிய வலையை வென்றாய்
பீறிடும் தீயில் நின்றாய்
இன்நுயிர் சுமந்து சென்றாய்
இறுதியில் நீயெ வென்றாய்
அன்னியர் கண்ணில் மண்ணை
அண்ணா நீ தூவிச் சென்றாய்
எங்கோ நீ இருப்பாய் இருப்பாய்
இருந்து நீ எழுவாய் நெருப்பாய்!
00
சுற்றியே வளைத்தோம்: ஈழச்
சுதந்திரக்காற்றைக் கைகள்
பற்றியே இழுப்போம் : மிதிப்போம்
பகற்கனா கண்ட பகைவா;
வெற்றியா(ர்) பெற்றார் கோட்டை
விட்டவ ரானார்: அண்ணன்
காற்றினில் ஏறி எல்லை
கடந்துமே சென்றான்: வருவான்!
00
நீ இல்லா வாழ்வும் வாழ்வா
நிலவில்லா வானும் வானா
நீ இல்லை என்றால் தமிழன்
நிழலதும் மிஞ்சாதிங்கே
நீ இல்லாத் தெய்வம்: உன்னால்
நிமிர்ந்ததிவ் வையம்: நாளை
நீ வரும் திசையை நோக்கி
நெடுந் தவம் செய்வோம் வாராய்!
00
மலைத்தோள் அழகா வாழ்க,
மறப்புலி தலைவா வாழ்க!
வளைந்திடா வீரம் வாழ்க
வணங்கிடா ஓர்மம் வாழ்க
கலைந்திடாக் கனவும் வாழ்க
கனவதும் மெய்பட வாழ்க
நிலையென நீயே வாழ்க
நூறென அகவை காண்க!
00
ஒன்றென ஆவோம் : நாமும்
ஒரு கொடி சேர்வோம்: பாரில்
நன்றென நாங்கள் வாழ
நல்லதோர்; தலைவன் உள்ளான்
நின்று வான் முகிலை உரசும்
நிலைமையில் இருந்தோம் நாங்கள்
இன்றிவ் நிலைக்கேன் ஆனோம்
ஒற்றுமை எமக்குள் வேண்டும்
00
ஆளொரு வழியில் போனால்
ஆவது ஒன்றும் இல்லை
நாளொரு முடிவில் நின்றால்
நாறவே ஓடும் உண்மை!
தோளொடு தோளாய் தமிழர்
தோழர்க ளானால் வெற்றி
ஆளுமோர்; காலம் தன்னை
ஆக்குமெம் தலைவன் வாழ்க!
00
“எமக்கென்றும் நீ வேண்டும்
திரும்ப நீ வரவேண்டும்”
கவிஞர் “சீராளன்”
———–
வேங்கைகளின் வேந்தன்
தமிழினம்
தொலைத்துவிட்ட
சுதந்திரத்தைத் தேட,
தமிழினம் விற்றுவிட்ட
தன்மானத்தை மீண்டும்
மீட்க,
தலை நிமிர்ந்த
மனிதனை
தமிழினம் காண,
வீரத்தாயின்
பிரசவ வேதனையின் பின்னால்
ஓர் ஜனனம்!
அன்றைய குழந்தைதான்
இன்றைய
‘வேங்கைகளின் வேந்தன்’
அன்றைய அந்த
குழந்தைச் சிரிப்பு
இன்னும்
இவனுடன்
கொஞ்சிக் குலாவும்
அந்த
குழந்தையுள்ளம்
இன்னும் இவனுடன்
சொந்தம் பேசும்
பிஞ்சுக் கால்களின்
பூப்போன்ற மென்மை
இன்னும்
இவன் இதயத்துள்
இமயமளவுயரத்தில்!
வீரம் அது
இவன்
காலடிச் சுவடுகளிலிருந்து
விழித்துக் கொள்ளும்.
இவனது
சுதந்திரச் சிறகுகள்
அகலமானவை!
மிக… மிக… அகலமானவை
அதனால்
இவனைச் சிறைவைக்க
முயன்றவர்கள்
தங்களையே
சிறைக்குள்
போட்டுக் கொண்டார்கள்!
இராமனின்
சந்தேகம் தீர
சீதையின் தீக்குளிப்பை
பாரதம் பாராட்டி
பத்தினியென்று
பூச்சூடுகிறது!
ஆனால் இங்கே
இவனோ
வாழ்வின்
ஒவ்வோர் அத்தியாயத்தை
புரட்டும் போது
ஓராயிரம் தடவைகள்
தீக்குளிப்பு
செய்கிறானே!
யாருக்கிந்த
யதார்த்தம் தெரியப் போகிறது?
இவன்
எல்லாவற்றையும்
தனக்குரியதாக்கி
எதையுமே
தனக்கென்று
சொல்லத் தெரியாதவன்!
அச்சத்துக்குக் கூட
இவனிடம் அச்சம்
அதனால், இவனை
அண்டியதே இல்லை!
பாரபட்சம் அது
இவனுடன்
பாசங் கொண்டதேயில்லை
வரலாற்றை
வழிகாட்டியாக
வரித்துக் கொண்டவன்
இன்று ஓர்
வரலாற்றுக்கே
வழிகாட்டியாகி விட்டான்.
இயற்கையை
நண்பனாக்கியவன்
இன்று
இயற்கைக்கே
நண்பனாகிவிட்டான்.
வாழ்க்கையை
தத்துவாசிரியனாக
ஏற்றவன் இன்று
தமிழீழத்தின்
வாழ்க்கைக்கே
தத்துவாசிரியனாகி விட்டான்!
இவன் கைகள்
மட்டுமே
ஆயுதம் ஏந்தும்
இவன் கண்களோ
கருணை வெள்ளத்துள்
நீந்தும்
அன்புக்கு
அர்த்தம் பார்ப்பதற்கு
அகராதியைத் தட்டுவதை விட
இவனது
ஒவ்வோர்
அணுகுமுறையிலும்
ஓராயிரம்
அர்த்தங்களை
படித்துக் கொள்ளலாம்!
பாரதத்து
பாரதியால்
பாட்டில் மட்டுமே
காட்ட முடிந்த
‘புதுமைப் பெண்களை’
இவனோ
காட்டிலே உருவாக்கி
களத்திலே காட்டுகிறான்
சமூகத்தின்
பிற்போக்கு
சிந்தனைகள்
இவனது சீற்றத்தீயினால்
வெந்து… வெந்து
சாம்பலாகியபடியே…!
எழுதி… எழுதி…
எத்தனை
எழுதியும்…
இவனைப் பற்றி
சொல்ல முடிவது
சொற்பமே!
சொல்லக் கிடப்பதோ
மிச்சம்!!
உலகத்தின் கணிப்பில்
உன்னத ஸ்தானத்தை
தன்
உரிமையாக்கியவன்
உண்மையின் உறவுடன்
உருவாகிக் கொண்டிருக்கும்
தமிழனின்
தனிநாட்டில்
தமிழீழத்தில்
நாளை
தேசியக் கொடியில்
சேனை அசைந்திடும்
வேங்கையின் வேந்தனின்
‘வீரம்’ வென்றிடும்!!
கப்டன் வானதி
போராளிக்கவிஞர் (மாவீரர்)
தமிழீழம்.
வரலாற்றுப் பெரும் போரான ஆனையிறவுப் போரில் வீரமரணமடைந்த கப்டன் வானதி அவர்களால்,
26.11.1989 அன்று தலைவர்
வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளுக்கு
வாழ்த்துக் கூறி எழுதப்பட்ட கவிதை.
————-
தலைவா ! நேரில் வரவேண்டும் நீ !
பிரபா கரன்என்னும் – உன்றன்
பெயரையே தமிழினத்தின்
அரியதொரு முகவரியாய – உலகுக்கு
அளித்தவனே நீ வாழ்க !
உன்பெண்டு பிள்ளைகளே உனக்கு
உறவென்று எண்ணாமல்
இன்றமிழர் எல்லோரும் – உறவென்று
எண்ணியே வாழ்பவனே !
அந்த’மே’ நாளில்நீ எவரும்
அறியாத இடம்சென்றாய்
எந்தநாள் வருவாய் நீ – என்று
எதிர்பார்த்துக் கிடக்கின்றோம்.
எல்லாளன் பெயர்விளங்கத் – தமிழ்
ஈழத்தை ஆட்சி செய்தாய்
வல்லோனே! பகைவெல்ல – உன்
வரவெண்ணிக் கிடக்கின்றோம்.
வழிமேல் விழிவைத்துத் – தலைவா ! உன்
வரவை எதிர்பார்த்துக்
கழியும் நாள்எண்ணி – நாங்கள்
காத்துக் கிடக்கின்றோம்.
மாவீரர் நாளில்நீ உரைநிகழ்த்த
வருவாய் எனஎண்ணிக்
காவலனே ! ஆவலுடன் – நாங்கள்
காத்துக் கிடக்கின்றோம்.
ஈழத்தின் உறவுகள்தாம் – சிங்களர்
இழிசெயலால் சீரழிந்து
வாழும் துடிப்புடனே – உன்றன்
வருகைக்கே ஏங்குகிறார்.
கொன்றுவிட்டோம் எனச்சொல்லி நாளும்
கொக்கரிக்கும் இராசபக்சே
நின்றழுது புலம்பிடவே – உன்வரவை
நினைத்துக் கிடக்கின்றோம்.
நடித்திடலாம் தலைவர்சிலர் – ஆனால்
நல்லதமிழ் மக்களெலாம்
துடிக்கும்நல் உணர்வுடனே – என்று
தூயோராய் வாழ்கின்றார்.
தலைவர்சிலர் தமிழ்நாட்டில் – இனத்தைத்
தாங்குவதாய் நடிக்கின்ற
நிலையெண்ணி நின்றிடாமல் – தலைவா ! நீ
நேரில்வர வேண்டும் !
-பேராசிரியர் அறிவரசன்-
நன்றி – தமிழர் தாயகம்.
————————————-
ஓப்பற்ற பெருந்தலைவா வாழ்க நீ பல்லாண்டு!
பிறந்தநாள் வாழ்துரைக்க
பெரியவனல்ல நான் உனக்கு!
உனக்கென்று கூறுகையில்
கவிதை மேல் வெறுப்பெனக்கு
அது உன்மீது நான் வைத்திருக்கும் விருப்பு!
இவ்வுலகில் நீ வாழ
என்னுயிரை வேண்டுமென்றால்
எமனிடம் நான் கொடுத்துடுவேன் எக்கணமும்!
நீ வாழ
என்னுயிரை கொடுத்துடுவேன் எக்கணமும்!
வாழ்க நீ பல்லாண்டு!
தமிழினம் தலை நிமிர்ந்து
இம்மண்ணில் வாழ்வதற்கு
நீ இன்றி வேறொருவன்
பிறந்தாலும் இயலாது!
உன் வீரம் விழைந்த பூமி இது!
நீ விதைத்த விதைகள் பல நூறு!
மலர்ந்த காதல் மலரும் முன்னே
மடிந்த உள்ளங்கள் பல வேறு!
மண்ணின் மீது
மலர்ந்த காதல் மலரும் முன்னே
மடிந்த உள்ளங்கள் பல வேறு!
வாழ்க நீ பல்லாண்டு!
ஒப்பில்லை இவ்வுலகில் உனக்கொருவன்
ஈரேழு ஜென்மங்கள் என்ரொண்டு இருந்துவிட்டால்
அத்துனை பிறப்பினிலும்
உன்னினைவில் நாம் வாழ்வோம்!
உன்பெயரை உச்சரிக்க
கரு கூட புறப்படும் களம் நோக்கி
நம் மண்ணை மீட்பதற்க்கு!
வாழ்க நீ பல்லாண்டு!
நம்மண்ணில் நீ பிறந்த இந்நாளை
இன் நன்நாளை
நம் நாடே கொண்டாடும் நன்றி சொல்லி
நம் தலைவன் வாழ்கவென்று!
கருவறை முதல் கல்லறை வரை
வாழ்த்திடுமே நம் தலைவன் வாழ்கவென்று!
வாழ்க நீ பல்லாண்டு வாழ்க நீ பல்லாண்டு!!
ஈழன் இளங்கோ
சிட்னி அவுஸ்திரேலியா
—————————————–
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடி
தரணியெங்கும் தன்முனைப்புடன் வாழ்வது தானைத்தலைவன் வரவினாலே….!
காலத்தால் அழியாத கல்லணை கண்ட கரிகாலன்…
சரித்திரம் போற்றும் தஞ்சைப் பெருங்கோயில் அமைத்த ராசராசன்…
ஈழஅரசமைத்து சிங்களத்தை சிதைத்த எல்லாளன்…
யாழ்பாண இராச்சியம் ஆண்ட சங்கிலியன்…
வணங்கா மண் வன்னியை மான்புடன் ஆண்ட பண்டாரவன்னியன்…
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தம்வீரத்தால் நல்லாட்சி தந்தவர்கள் அல்லவா இந்த மாமன்னர்கள்.
தடம்மாறிய பயணத்தால் ஈழத்தீவில் கால்பதித்தான் சிங்களன்.
பொருள்தேடி கடலோடிய மேலைத்தேயர்களது வருகை தாய் மண்ணை நிறம் மாற்றியது.
வாள் கொண்டு வேல் கொண்டு எதிர்நின்ற பகை வென்று
தரணியெங்கும் தமிழ்க் கொடி நாட்டிய வேந்தர்கள்.
இவர்கள் வீரத்தின் பெருமை பேசும் போதே கர்வம் கொள்ளவைக்கும்
நெஞ்சுநிமிர்த்திய மாவீரமல்லவா!
வாளும் வேலும் மறைந்து மான்பிழந்து நூற்றாண்டு சென்றபின்
இருள்கிழித்த பகலவனாக வந்துதித்தான் எங்கள் தலைவன் பிரபாகரன்.
சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர் வாழ்வை
சூறையாடி சன்னதம் கொண்டு ஆடிநிற்கையில்
இளம்புலியாக கருவிஏந்தி களமாடினான் வல்வை வீரன்.
உலகம் வியக்கும் வண்ணம் படை நடாத்தியதோடு
வான்படை கண்டு தமிழர் வரலாற்றில் தனிப்பெருந் தலைவனான் எங்கள் அண்ணன் பிரபாகரன்.
தமிழர்களின் தார்மீக ஆதரவுடன் படைநடாத்தி
சிங்களத்தின் படைகளை சிதைத்து ஈழத்தை அமைக்கும் தறுவாயில் தடைபோட்டது உலகம்.
படைகள் திரட்டி சிங்களத்தின் பின்நின்று ஈழத்தை சுடுகாடாக்கியது உலகநாடுகள்
தடையோடு பகைமையும் கொண்டு தமிழினத்தை காவுவாங்கியது காந்திதேசம்.
உலகமே சதிசெய்ய முள்ளிவாய்கால் கடற்கரையில் அநாதையானது தமிழினம்.
தமிழினத்தின் நிரந்தர விடியல் வேண்டி நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் தலைவா
தமிழினத்தின் ஒருமித்த ஆளுமை அல்லவா நீங்கள்.
களத்தில் இருந்த போதும் இப்போது மெளனமாக இருக்கின்ற போதும் நடப்பவைதான் நாடறிந்ததே.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
தமிழினத்தின் தலைமகனாகிய உங்கள் தலைமைத்துவம் இன்றி
உலகத் தமிழினம் தடுமாறுகிறது.. தள்ளாடுகின்றது… தத்தளிக்கின்றது…..
நாளை தலைநிமிர்வோம் என்ற நம்பிக்கையுடன்
ம.செந்தமிழ்.
———
மாவீரரே…எம் நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகள்..
வீரத்தின் விதை நிலத்தில் தாயகக் கனவோடு துயில் கொள்ளும்
மாவீரரே….
முடிவில்லாப் பெருவெளியில் இருத்தலை நிர்ணயம் செய்யும்
எம் தேசத்தின் புதல்வர்களே…..
எதிர்காலத்தை விடுதலைத்தீயில் கரைத்து முக்காலமுமாகி நிற்கும்
போராட்டச் சித்தர்களே…..
எம் நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகள்.
கந்தகக் காற்றில் உடல் கலக்கும் கணத்தினை
இருகையேந்தி அணைத்தவரே……
உயிர்ப்பூவை மண்ணில் உதிர்க்கும் அதியுச்ச ஈகத்தின்
பிதாமகரே….
எம் நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகள்.
கார்த்திகைப் பூக்கள் கண்ணீரால் நனைகின்றன.
செண்பகத்தின் சிறகுகள் அசைய மறுக்கின்றன.
வாகை விடும் பெருமூச்சு கல்லறைகளைத் தழுவுகின்றன.
சிறுத்தையின் அசாதாரண அமைதி அசைவியக்கத்தை நிறுத்துகின்றன.
உங்கள் கல்லறைகள் எங்கும் எம் தேசியக் கொடிகள்.
சமரசம் உலாவும் இடமையா உங்கள் துயிலுமில்லங்கள்.
சாதி மத பிரதேச வேற்றுமைக்கு அப்பால்
காலப் பெருவெளியில் உங்கள் வித்துடலைச் சுமந்து நிற்கும்
இடமம்மா இந்தத் துயிலுமில்லங்கள்.
கோலமிட்ட கரங்களில் தடையுடைக்கும் கருவிகளை ஏந்திய
மங்கையர் இங்கே உறங்குகின்றார்.
இளமைக்காலக் கனவுகளைத் துறந்து தாயக விடிவிற்காய்
தமது இன்னுயிரை ஈந்த பல்லாயிரம் மாந்தர்கள்
இங்கே வித்தாகிப் போயுள்ளார்.
ஆனாலும் துயிலுமில்லத் தூயவரின் நினைவுதனை அழித்திட
கல்லறைகளை உடைத்தழித்தான் ஆக்கிரமிப்பாளன்.
அவனால் முடிந்தது கல்லறையுடைப்பே.
மாவீரரே…இப்போது உங்கள் கல்லறைகள் எமது நெஞ்சங்களில்.
என்ன செய்ய முடியும் அவனால்.!
முரண்பாடுகளை பூதாகரமாக்கும் அடிபணிவுக் கொம்புசீவிகளாலும்
மக்களின் நெஞ்சங்களை நெருங்க முடியவில்லை.
வாகரையில், கரடியனாற்றில் உங்கள் இல்லங்களை நோட்டமிடுகிறதாம்
ஆக்கிரமிப்புப்படை.
மீண்டும் நீங்கள் உயிர்த்தெழலாம் என்கிற அச்சம் அவனுக்கு.
விளக்கேற்றவரும் உறவுகளை அழிப்பதற்கு காத்திருக்கிறதோ
அந்தப் பேரினவாதப் பூதங்கள்?
காரைநகரில் கோவில் மணிகளுக்கும் வாய்ப்பூட்டு.
ஆலய தீபங்களுக்கு ஒருவார கால கட்டாய விடுமுறை.
வாயைப் பிளந்து நிற்கும் ஒலிபெருக்கிகள் மூச்சு விடக்கூடாது.
இதுதான் எம் தேசத்தின் இன்றைய அவல நிலை.
வீழ்வது தவறல்ல….
வீழ்ந்தது எழாமல் இருப்பது தவறு.
அவ்வாறு நிமிர்ந்தாலும், ஒடுக்குமுறையாளனின் தோளைப் பற்றிப்பிடித்து எழுவது
மகா தவறு.
அடிபணிவுவாதிகளுக்கான செய்தி இது.
இருப்பினும்……மாவீரரே…..
உங்கள் நினைவு சுமந்து, மக்களின் விடிவிற்காய் எமது இலக்கினை
நோக்கி பயணிப்போமென இந்நாளில் உறுதி பூணுகின்றோம்.
-இதயச்சந்திரன்
————–
தலையெனவே காத்துநின்றெம் தலைவனாகினாய்
தலையெனவே காத்துநின்றெம் தலைவனாகினாய் – விடு
தலையதனை உதயமாக்கும் இரவியாகுவாய்
அலையெனவே மறத்தமிழர் திரண்டு நிற்கிறோம் – உம்
அடுத்த அடி வெற்றிக் கொடி சூளுரைக்கிறோம்
சிறுவயதில் ஏசுவாக கொடுமைகள் கண்டாய் – பின்
வீறு கொண்டு சிவகுருவாய் எதிரியழித்தாய்
இடையினிலே புத்தனாக சாந்தம் உடுத்தினாய் – இனி
கடைசியிலே கொள்ளும் அவதாரம் என்னவோ?
களத்தினிலே உம்முருவாய் வீரர் போரிட -சிங்
களத்தவர்கள் கதறியோடும் காட்சி நாம் கண்டோம்
அளப்பெரிய சாதனைகள் நிறைய நிகழ்ந்தன – எமது
இழப்பதனை ஈடுசெய்ய ஈழம் முகிழணும்
உம்மைப் போன்ற தலைவர் யார்க்கும் வாய்த்திடமாட்டார் – எம்
தெம்பைக்கூட்டி உணர்வை ஊட்ட முன்வரமாட்டார்
இம்மையில் நாம் ஈழமெனும் சுவர்க்கம் கண்டிட – நீர்
இருக்கையிலே(யே) ஈழம் கண்டு வளப்படுத்தணும்
அகவையிலே ஐம்பதுகள் தொட்டுவிட்டாலும் – எம்
அக அவையில் துடிப்புமிகு இளவரசர் நீர்
சுகமான சுமை தாங்கும் சூரிய தேவா – நீர்
யுகமாகி புகழோங்க வாழ்ந்திட வேண்டும்