தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களின் புதிய யுகமொன்றின் சிற்பி

Posted on

தமிழீழ தேசத்தின் எழுச்சிநாள்

2004 நவம்பர் 26ம் நாள் இன்றைய தமிழர் யுகத்தின் இணையில்லாத் தலைவரான தமிழீழத்  தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 50வது பிறந்த நாள். தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களின் புதிய யுகமொன்றின் சிற்பி. விடுதலையின் பிரபை. தமிழ் இலக்கியங்கள் தமிழர் ஆன்மீகம் தேடுகின்ற தமிழர் பண்பாட்டின் மனித உரு. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்.

இந்த தன்னலம் கருதாப் பெருநெஞ்சம் கொண்டதினால் தமிழர்களின் தன்னிகரற்ற வீரத்தை, தலைசிறந்த தலைமையைத் தமிழர்களுக்குத்தந்து, அவர்கள் இதயமூச்சாகப் பேச்சாகத் திகழ்கின்றார். உலகால் தமிழர் தேசியத்தின் மனிதக் குறியீடாக தமிழர் இனமானத்தின் அடையாளச் சின்னமாக கருதப்படுகிறார். தமிழீழ மக்களின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவராக மட்டுமல்ல, தமிழர் வரலாற்றில் யாருக்குமே அவர்கள் கொடுக்காத அரசியல் பணிவை அவர்கள் மனம் உவந்து அளிக்கும் மாபெரும் மக்கள் தலைவன் என்ற உன்னதமான பெயருக்குச் சொந்தக்காரனாக அவர் விளங்குகின்றார்.

இதனால் அவரின் 50ம் பிறந்த நாளாம் இந்நாளைத் தமிழீழ மக்கள் தங்கள் அடையாளத்தின் திருநாளாக – தங்கள் உயிரினும் மேலான தமிழீழத் தேசத்தின் விடுதலையினை உறுதி செய்யும் பொன்னாட்களில் ஒன்றாக –  பாதுகாப்பான அமைதி என்னும் தங்கள் தேவையை நிறைவேற்றக் கூடிய தன்னாட்சிக்கு தங்களை வழிநடத்தும் நன்னாளாக கருதுகின்றனர்.

அதனால் இந்நாள் மக்கள் திருநாளாக மாறுகிறது. தேசத்தின் எழுச்சிநாளாக மலர்கிறது, தமிழர் இதயங்களில் இருந்து நன்றி என்னும் நறுமணம் நானிலமெங்கும் பலவகைகளில் பரவுகிறது. தமிழீழ மக்களையும் தமிழீழத் தேசத்தின் இருக்கையையும் உலகிற்குப் பதிவாக்குகிறது.  இந்நேரத்தில் தேசியம் தேசஇனம் என்பன குறித்துச் சிறிது எடுத்து நோக்குவது நல்லது. தேசியம் என்பது ஒரு ஆன்மா. அந்த ஆன்மாவின் மகிமையை உணர்ந்து அந்த ஆன்மாவால் மக்கள் இயங்குகின்ற பொழுது அவர்கள் தேச இனமாக உயர்ச்சி காண்பர்.

தேசியத் தலைவனின் தோற்றம் என்பது; தேசத்தின், விழிப்பின், மானிடக் குறியீடு. இந்த தேசியம் என்னும் ஆன்மாவை உருவாக்குகின்றனவாக நேற்றும் இன்றும் திகழ்கின்றன. நேற்று என்பது உயர்வான நினைவுகள் ஊடாக உயர்வான பாரம்பரியம் ஒன்றினுக்கு மக்களைச் சொந்தக்காரர் ஆக்குகின்ற பொழுது, அந்த உயர்வான பாரம்பரியத்தைப் பேணிடும் பொதுமைஉணர்வு காரணமாக அம்மக்கள் இன்றும் என்றும் கூடி வாழும் விருப்புடையவர்களாக மாறுவர்.

இதுதான் தேசியம். இவ்வாறு இணைந்த மக்கள் தாம் அந்தத் தேசியத்தைப் பேணி வளர்க்க உறுதி பூணுகின்ற பொழுது தேசமக்களாகப் பரிமாணமடைகின்றனர். இவ்வாறு மக்களைத் தேசியத்தால் இணைய வைத்து அவர்கள் மண்ணையும் மக்களையும் காத்திடும் உறுதியுள்ளவர்களாக அவர்களை மாற்றும் ஆற்றலாளன்தான் தேசியத் தலைவன். ஆகத்தேசியத் தலைவன் மக்களின் ஆன்மாவாக இலங்குபவன். தேசியத் தவைனின் தோற்றம் என்பது தேசத்தின் விழிப்பின் மானிடக் குறியீடு.

மூச்சாய்ப், பேச்சாய், எம்முயிராய். நானு£று ஆண்டு கால அடிமை வாழ்வில் இருந்து விழிப்புற்ற தமிழ் மக்களின் விடுதலைக் குறியீடாகி அவர்கள் பேச்சாக, மூச்சாக, ஊணாக, உயிராக, உணர்வாக என்றும் எங்கும் அவர்களுடன் வாழும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். பிரபாகரன் என்றதுமே தமிழ் மக்களின் விடுதலை உணர்வின் என்றும் மாறாஉறுதியான தலைமையின் வடிவைத்தான் உலகு உணர்கிறது.

எங்கள் தலைவனைஉலகு காணும் விதம் பிரபாகரன் என்ற வார்த்தை தமிழீழ மக்களுக்கும் உலகில் விடுதலையை அமைதியை விரும்பும் அனைவருக்கும் உன்னதமான புனிதமான தெய்வீக உணர்வை உண்டு பண்ணுகிறது. அதேவேளை ஆக்கிரமிப்பாளர்க்கும், அவர் தம் அடிவருடிகளுக்கும் உலகை தம் சந்தையாக இராணுவ நலனாக காண்பவர்களுக்கும் அதே பிரபாகரன்என்ற வார்த்தை பயங்கரமானதாக, தம் தோல்விக்கு அச்சாரம் என்கிற பயத்தைதோற்றுவிக்கிறது.

இதனால் அவர்கள் நடாத்திய நடாத்தும் நடாத்தக் கூடிய அனைத்து ஆக்கிரமிப்புக்களினதும் தன்மைகளை உணர்ந்து அவற்றை ஏற்ற வகையில் தனதுமதியுக வழிநடத்தலால் என்றும் முறியடித்து தமிழீழ மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் இராணுவ அரசியல் தலைமையாகவும் பிரபாகரன் என்ற வார்த்தைக்கு உலகு பொருள் கொள்கிறது.

தலைவர் பிரபாகரன் ஈட்டிய வெற்றிகள் பார்ப்பவர்களைப் பிரமிப்படையச் செய்வன. ஆனால் அவரிலோ அது அகந்தையை ஆணவத்தை ஏற்படுத்தியதில்லை. மாறாகக் கடமை ஒன்று முடிந்த திருப்தியில் அடுத்த கடமைக்கு தன்னைத் தயாராக்கும் கடமை வீரனாக அவர் மாறுவதையே தமிழர்கள் கண்டுள்ளனர். அவ்வாறே தலைவர் பிரபாகரன் தோல்விகளைச் சந்திக்கும் பொழுதும். அது கண்டு அவர் துவண்டதில்லை. அந்த நெருப்பாற்றில் எவ்வாறு நீந்தியெழுந்து அடுத்த வெற்றியை ஈட்டலாம் என்னும் துடிப்பினையும் அந்தத் துடிப்புடன் கூடிய நிதானமான காய் நகர்த்தல்களையுமே, தோல்விகளின் பொழுது அவரில் தமிழ் மக்கள் கண்டனர்.

இதனால் தான் எதனையும் தாங்கி எழுந்துகொண்ட இலட்சியத்தை அதனை அடையும் வரை முன்னெடுக்கும் உறுதியின் நடமாடும் சக்தி வடிவாக அவரைத் தமிழ் மக்கள் நம்புகின்றனர்; போற்றுகின்றனர். போரிலும் களத்திலும் நின்று களப்பணியாற்றும் இக்கட்டான நிலையிலும் மக்கள் நல்வாழ்வுக்கு எவை எவற்றையெல்லாம் செய்யலாமோ அவற்றையெல்லாம் சிந்தித்து செயல் உருக்கொடுத்த மக்கள் தலைவன் எங்கள் தேசியத் தலைவர்.

புனர் வாழ்வுக் கழகம் யுத்த சூழலிலே மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வைத் தொடர்வதற்கான மக்கள் நல சக்தி.பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் தேசத்தின் உட்கட்டுமானங்களைஅழிக்க சிறிலங்கா எடுத்த முயற்சிகளுக்கு எதிரான அறிவியல் பொருளியல் திட்டமிடல் சக்தி. தமிழ்ப் பெண்களை சிங்கள அரசாங்கம் போரின் இலக்குகளாக்கி அவர்களைப் பாலியல் வன்முறைக்கும் வாழ்வியல் அழிப்புக்கும் உள்ளாக்குவதன் மூலம் தங்களின் மக்களை அச்சப்படுத்திஅரசியல் பணிவைப் பெறும் செயற்திட்டத்தை முன்னெடுக்க முற்பட்ட வேளையில் அதே பெண்களுக்கு சக்தியளித்து போராடும் ஆற்றல் கொண்டு அவர்களை எழவைத்த தலைசிறந்த சிந்தனைச் சக்தி எங்கள் தேசியத் தலைவர்.

மண்விடுதலையும் பெண் விடுதலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற உண்மையை தமிழர்க்கு உணர்த்தியவர் தலைவர் பிரபாகரன். இதனால் இன்று மண்ணும் பெண்ணும் விடுதலை காணும் பெருமைமிகு வரலாறு தமிழீழ வரலாறாக உள்ளது.

அடுத்து தமிழ்ச் சிறுவர்கள் போரின் தாக்கத்தினைப் பலவழிகளில் அனுபவிக்க நேர்ந்த பொழுது தாய் தந்தையரை இழந்து ஆதரவு தேடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது தமிழ்ச் சிறுவர்களுக்கான செஞ்சோலைபோன்ற ஆதரவு நிலையங்களை காந்தரூபன் அறிவியல் கழகம் போன்ற கல்விகேள்வி அளிக்கும் அமைப்புக்களை எல்லாம் தோற்றுவித்து தமிழ்ச்சிறுவர்கள் வாழ்வுக்கு யுத்தகாலத்திலும் இயன்ற பாதுகாப்புக்களை வழங்கிதன்னையே அந்த ஆதரவு தேடும் சிறுவர்களின் தந்தையாக மாற்றிபேரன்பைப் பொழிந்து அவர்களை வளர்த்தெடுப்பவர் எங்கள் தலைவர் பிரபாகரன்.

சிறுவர்களுக்கு மட்டுமல்ல, போராளிகளுக்கும் தந்தைக்குரிய அன்புடன் போர்க்கலையில் மட்டுமல்லாது அவர்கள் எந்த எந்தத் துறைகளில் முன்னேற விரும்பினார்களோ எந்த எந்தக் கலைகளில் தம்மை வெளிப்படுத்த விரும்பினார்களோ அவைகளுக்கு எல்லாம் பயிற்சியும் கல்வியும் அளித்து அறிவார்ந்த கலைத்துவம் மிகுந்த மக்களாகவும் போராளிகள் திகழ வழிகாட்டியவர் எங்கள் தலைவர்பிரபாகரன்.

ஒரு மனிதனில் இத்தனை பேராற்றலா!
கம்பன் தரும் விளக்கம் பதிலாகிறது.

எவ்வாறு ஒருவர் பலவிதமா பேராற்றல்களைப் பலவடிவில் வெளிப்படுத்த இயல்கிறது என்றுஉள்ளம் ஏங்குகின்ற பொழுது கம்பன் இராமனின் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்த பிரம்மனே பேசுவது போல அமைத்தஒரு இன்தமிழ்ப்பாடலிலே விடைகிடைக்கிறது.

என் உருக்கொடு இவ் உலகினை ஈனுதி இடையே உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமைகோன் தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது – முதலோய்!

எனச் சூரியத்தேவன் காலையிலே தனது தோற்றத்தால் பகலைஉண்டாக்கி உச்சமடைந்து பகலை நடத்தி மாலையில் குளிர்த் தென்றல் உலாவரும் அளவுக்கு வெம்மையைக் குறைப்பது போல பிரம்மாவினுடைய படைத்தலையும் திருமாலின் காத்தலையும் உருத்திரனின் அழித்தலையும் செய்யும் மும் மூர்த்திகளும் இணைந்தவனாக இராமன் விளங்குகிறான் எனக் கம்பன் தன் தமிழ் கொண்டு இறைமையின் தன்மை சொல்கிறான்.
இறை என்ற சொல் நாட்டின் தலைவனையும் குறிக்கும் சொல்.

மக்களின் இறைமையாளனாகிய நாட்டின் தலைவனும் தன் மக்களுக்குத் தேவையான அமைதி வாழ்வைத் தோற்றுவித்து அதனைப் பாதுகாத்து அதற்கு இடையூறு விளைக்கும் பகைவர்களை அழித்தொழிக்க பொறுப்புள்ளவனாகிறான். அந்த வகையில் சூரியத்தேவனை உருவகப்படுத்தி கம்பன் கூறிய இந்த விளக்கப்பாடல் தமிழீழ மக்களின் சூரியத்தேவனாக அடிமையிருள் அகற்றி நிற்கும் பிரபாகரன் எவ்விதம் பலவித பேராற்றல்களும் ஓருங்கமைந்த மக்கள் சக்தியாக இலங்குகிறார் என்கிற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

தேசியத்தின் வெளிப்பாட்டுத் திருநாள். இந்த சக்தி, இந்த வலிமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு எங்கிருந்து வந்தது என்று பார்க்கின்ற பொழுது, மக்களில் இருந்து, மக்களால், மக்களுடைய சக்தியாக தேசியத்தலைவர் பிரபாகரன் பரிணாமமடைந்து நிற்பது தெரிகிறது. அவர் மக்களின் விடுதலையை விரும்பினார்.

அந்த விடுதலை விருப்புக்காக தனது அனைத்து விருப்புக்களையும் துறக்கும் பொதுநல நெஞ்சம் கொண்டவராக அவர் வளரத் தொடங்கியதும், பதவியையும் பணத்தையும் காட்டித் தமிழ்த் தலைமைகளை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை மாறி என்றும் யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத அரசியல் தலைமை ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை என்ற வடிவில் வெளிப்பட்டது.

இதனால் இலங்கைத் தமிழ் மக்கள் சிறுபான்மையினம் என்று நேற்றையத் தமிழ்த் தலைமைகள் ஏற்று மாற்றார் முன் மண்டியிட்டு தம் வாழ்வுக்குப் பதவிப்பிச்சை பெற்ற நிலை மாறி, தமிழீழ மக்கள் தனியான தேசியத்தவர் என்ற உண்மை உலகிற்கு மீளவும் வெளிப்பட்டது.

இவ்வாறாகத் தமிழர் தேசியம் தன்னை தெளிவாகவும் உறுதியுடனும் வெளிப்படுத்த மூலாதாரமாக அமைந்தது தேசியத் தலைவர் பிரபாகரன் என்னும் தமிழர் தலைவரின் உன்னதமான உறுதியான வழிகாட்டலும் பங்கேற்பும் ஆகும். இதனால் தேசியத் தலைவரின் 50வது பிறந்த நாள் என்பது தமிழ்த்தேசியத்தின் வெளிப்பாட்டின் திருநாள்.

பாதுகாப்பு ஆற்றலின் பெருநாள்.

அவ்வாறே தலைவர் பிரபாகரன் விடுதலைக்காகத் தன்னைமுற்று முழுதாக அர்ப்பணித்துக் கொண்ட பொழுது அந்த அர்ப்பணிப்பில் இலட்சியத்துக்காக மரணத்தையும் எதிர் கொள்ளும்நெஞ்சுறுதி அவருக்கு மட்டுமல்ல தமிழீழ மக்களுக்கும் ஏற்பட்டது. இதனால் மரணமற்ற மனிதகுலமொன்று தமிழீழ மண்ணிலே தோன்றியது. இதன் வழி அதுவரை மரணத்துக்குப் பயந்து சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மண்ணிலே நடாத்தி வந்த தமிழினப் படுகொலைகளைத் தமிழீழத் தேச உட்கட்டுமான அழிவுகளை எல்லாம், கைகட்டி வாய் பொத்தி எல்லோரும் ஏற்று சொத்தைப் பல்லிகளாய் வாழ்ந்த நிலை மாறி, விடுதலை வேங்கைகள் பூமியாய் தமிழீழம் தலைநிமிர்ந்தது.

சிங்கள பௌத்த பேரினவாதச் சிங்கத்தின் கோரப்பற்களை சாதாரணத் தமிழ் மகளே பிடுங்கி வீசும் வீரபூமியாக தமிழீழம் மாறியது. உலகின் பலம் பொருந்திய இராணுவமான இந்திய இராணுவத்தின் அமைதிப்படைப் போர்வையிலான ஆக்கிரமிப்பைக் கூட தமிழீழம் எதிர்கொண்டு புறந்தள்ளிய வரலாற்றை உலகு கண்டு திகைத்தது. காலத்துக்கு காலம் உலக ஆதிக்க சக்திகளும் பிராந்திய மேலாண்மை சக்திகளும் சிங்களப்படைகளுடன் சேர்ந்து நின்று ஆடிய ஆடும் ஆட்டங்கள் எல்லாம் தமிழீழ மக்களின் நெஞ்சுறுதி முன்னால் செயலிழந்தன, செயலிழக்கின்றன.

தமிழர் படையைவிடப் பன்மடங்கு ஆயுதப் பலமும் ஆளணிப்பலமும் கொண்ட சிங்களப்படையை கரும்புலிகள் தம் உயிரையே ஆயுதமாகக் கொண்டு எதிர்கொண்டு வெற்றிக்கு தம்மையே ஈகமாக்கும் பண்பை தமிழீழத் தேசியத்தின் சிறப்பம்சமாக உலகுகண்டது. அசுரப்பலத்துடன் நிற்கும் ஆக்கிரமிப்பாளனை தன் உயிரையே ஆயுதமாக்கி வென்றிடும் அளவுக்கு உறுதி கொண்ட தேசியமாகத் தமிழீழத் தேசியம் பலம் பெற்றுநிற்கிறது.

கடலிலும், தரையிலும் தமிழர் இராணுவப்பலம் என்றால் என்ன என்பதை உலகு கண்டு கொண்டது. சிறிலங்காவின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை விடுதலைப்புலிகள் முறியடித்த விதம், உலகப் போர்க்கலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டது. ஆனையிறவு முதல் கட்டுநாயக்கா வரை தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய இராணுவச் சாதனைகள் உலக இராணுவ ஆய்வாளர்களை மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது.

இந்த தமிழீழ மக்களின் தேசிய பாதுகாப்பு அளிக்கும் திறன் தான், இராணுவ நடவடிக்கைகளால் அல்ல, அமைதி வழிப் பேச்சுக்கள் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென உலகு சிறிலங்காவின் மேல் அழுத்தங்களைக் கொடுக்க வைத்தது.

இவ்வளவு து ரத்திற்கு தமிழர் பிரச்சினையைஉலகு உற்று நோக்க வைத்த பெருமைக்குரியவராக உலகின் தலைசிறந்த இராணுவ வல்லுனராக தேசியத் தலைவர் இலங்குகிறார். இந்த பிரபாகரன் என்னும் தமிழீழத் தாயகத்தின் தலைமைத் தளபதியின் வீரத்தால் காப்பாற்றப்பட்ட மண்ணாகதமிழீழத் தாயகம் திகழ்கிறது. இதனால் தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த நாள் என்பது, தமிழர் தாயகத்தின் பாதுகாப்பாற்றல் வெளிப்பட்ட பெருவிழாவாக மக்களால் போற்றப்படுகிறது.

இனியும் அடிமை கொள்ள முடியாதென்பதே
தலைவரின் 50வது பிறந்த நாள் பெருஞ் செய்தி.

ஆனால் இந்த இலங்கை வரலாற்றின் இயல்புத்தன்மையை மறுத்து தமிழர்களை அடிமை கொள்ள யாரும் நினைத்தால் அது இனி எந்த யுகத்திலும் சாத்தியமில்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கும் சரித்திர புருஷனாகத் தேசியத் தலைவர் பிரபாகரன் திகழ்கிறார். இதனைத்தான் அவரின் 50 வது பிறந்த நாள் மாட்சியாகத் தமிழர்கள் காண்கின்றனர்.

தேசியத்தலைவர் பிரபாகரன் இன்று, அனைத்து தமிழீழ குடிமக்களினதும் உணர்வில் தாயகம், தேசியம், தன்னாட்சியுடன் வாழும் உரிமையும் கடமையும் கொண்டவர்கள் அவர்கள் என்ற உணர்வை, அவர்களின் மரபணுவாகவே மாற்றி நிற்கிறார்.

இதனால் இனிமேல் அடிமையுள்ளத் தமிழனை, ஆக்கிரமிப்புகளுக்கு அஞ்சி வாழும் தமிழனை, தமிழீழ மக்களின் சந்ததியில் யாருமே காண முடியாது என்பதை சிறிலங்காவும் உலகும் புரிந்து கொள்ள வேண்டிய காலம் இது.  இதுதான் பிரபாகரன் யுகத்தின் செய்தி.  தாயகத்தினதும், தன்னுடையவும் பாதுகாப்பையும் அமைதியையும் பேணியவண்ணம் யாருடனும் இணைந்து மனிதமேம்பாட்டுக்கு உழைக்கத் தயாராக இருப்பவர்கள் தமிழீழத்தவர்.

ஏனெனில், அவர்களுக்கு எதற்கும் அச்சப்படும் நிலை இன்று இல்லை. இதுதான் பிரபாகரன் செய்த மாபெரும் சாதனை. சமூக பொருளாதார அரசியல் ஆன்மீக விடுதலை என்பது முழுமையாக ஈட்டப்படுவதாக இருந்தால், மனித மனதின் அச்சம் அகற்றப்படல் வேண்டும். இந்த அச்சம் அகன்றமனிதர்களாக ஆனால் தேவையான சமுதாய முறைமைகளுக்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு சமுதாய வாழ்வில் சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவம் என்னும் உன்னதங்களை நிலைநிறுத்தக் கூடிய அரசியல் சமூகமாக தமிழீழ மக்கள் பிரபாகரனின் மக்கள் விளங்குகின்றனர். இதனால் அவர்களால் எந்த வெற்றியையும் ஈட்ட முடியும்.

இந்த உள்ள உறுதி கொண்ட எங்கள் தமிழீழ மக்களுடன்,  புலம் பெயர் தமிழீழ மக்களாகிய நாமும் இணைந்து தமிழீழ தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்கு சத்தியத்தின் தர்மத்தின் நிலைநாட்டலுக்கு தேவையான பாதுகாப்பைத் தொடர்ந்து பேணவும், தாயகத்தினதும் மக்களினதும் மேம்பாட்டுக்கு தொடர்ந்தும் உழைக்கவும் உறுதி பூணுவது ஒன்றே, நாம் எங்களின் உயிரினும் இனிய தேசியத் தலைவருக்கு நாம் அளிக்கும் மிகச்சிறந்த 50வது பிறந்தநாள் பரிசாக அமையும்.

சூ.யோ.பற்றிமாகரன்

அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர். பிரித்தானியா.

www.velupillai-prabhakaran.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s