தேசிய தலைவரின் அரசிலே…

Posted on

நாம் சிந்திக்கும் காலங்களிலிருந்து செயல்படும் காலத்திற்கு பெயர்ந்திருக்கிறோம். பழைய நிகழ்வுகளின் பட்டறிவை தேக்கி வைத்து அதை நிகழ்கால போருக்கு பயன்படுத்தப்போகிறோம். நமக்கு பட்டறிவைப் போன்று ஒரு ஆசிரியர் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. இப்போதும்கூட நாம் சிதறி இருக்கின்றோம். ஆனால் சிந்திப்பவர்களாக மாறி இருக்கிறோம்.

உலகெங்கும் நாம் சிறுசிறு கூட்டங்களாக பிரிந்து கிடந்தாலும் நம்மை இணைக்கும் ஒரே ஆற்றல் மொழி. நம்மை உறவென்று சொல்லிக் கொள்ள மொழியே பாலமாக இருக்கிறது. நமக்கான சிந்தனைகள், செயல்கள், பணித்தளங்கள், பாடநூல்கள், பகுத்தறிவு சிந்தனைகள், பல்வேறு நிலையில் பிளவுப்பட்டு இருந்தாலும் நாம் மொழியால் ஒன்றுபட்டிருக்கின்றோம். மொழியின் வலிமை மகத்தானது, மாறாதது. ஆகவே தான் நாம் மொழியை நேசிக்கச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மொழியை பேசச் சொல்லி கட்டாயப்படுத்துகிறோம்.

நாம் வேறு கலாச்சார ஆடை அணிந்து கொண்டு வேறு இனமாக நம்மை காட்டிக் கொள்ளலாம். ஆனால் நாம் பேசும் மொழி நம்மை யாரென்று அடையாளப்படுத்தும். ஒரு மொழியை நாம் காக்க வேண்டுமே அதற்கு என்ன செய்யலாம்? என்று இதுவரை இந்த உலக அரங்கில் தமிழ், தமிழ் தேசியம், தமிழ் மான உணர்வு, தமிழ் இன உணர்வு, தமிழ் கலாச்சார காப்பாளர்கள் என பல்வேறு அடையாளங்களோடு புறப்பட்டவர்களெல்லாம் ஒரு செடி வளர மண் தேவை என்பதை உணரத் தவறினார்கள்.

ஒரு செடி வளர மண் தேவையைப் போல ஒரு மொழி வளர ஒரு நாடு தேவை.நாட்டை தவிர்த்து நாம் மொழியை காப்போம், அந்த மொழிக்கு செந்தமிழ் என பெயரிடுவோம், கன்னித் தமிழ் என வாழ்த்துவோம், முத்தமிழ் என முழக்கமிடுவோம் என்றெல்லாம் கூறிகொண்டிருந்தோம் என்றால் நம் மொழி நம்மோடு மண்ணில் புதைக்கப்பட்டு சமாதியாக்கப்பட்டுவிடும். ஆனால் மொழி வளர காலமெல்லாம் அம்மொழி செழித்திருக்க பன்னெடுங்காலமாய் நாம் காத்த மொழி நம் மூதாதையர் எல்லாம் பேசிய மொழி, அவர்கள் அந்த மொழியிலே தான் நம்மை கொஞ்சினார்கள். நமக்கான செய்யுள்களை வடித்து வைத்தார்கள். இலக்கியங்களை புனைந்து தந்தார்கள். புராணங்களை எழுதி வைத்தார்கள். அப்படிப்பட்ட நம் மொழி இன்னும் நம் சந்ததியாராலும் காக்கப்பட வேண்டும் என்றால், பேசப்பட வேண்டும் என்றால் நமக்கு நமது மொழி அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மொழி அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள அந்த மொழி பேசும் இனத்திற்கான ஒரு நாடு இன்றியமையாதது மட்டுமல்ல, அது கட்டாயமானது. இதை நம் முன்னோர்களை விட நமது தேசிய தலைவரே மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார். ஆகவேதான் தமிழீழ தாகம் என்ற ஒரு சொல்லை அவர் பயன்படுத்தினார். இந்த தமிழீழ தாகம் ஒவ்வொரு தமிழனுக்கும் இயற்கையாக வரவேண்டும். இது மென்பானங்கள் அருந்தி தனித்துக் கொள்வதல்ல. களிம்புகளால் சரிசெய்து கொள்வதல்ல. இது உயிருணர்ச்சி. இதன் சொல், செயல் அனைத்தும் நமது உயிருக்கு நிகரானது.உயிர் போனால் திரும்ப வராது. மொழி போனாலும் அதுதான் நடக்கும்.

ஆகவே நம் உயிர் கொடுத்தாவது மொழி காக்க வேண்டிய கடமை நமக்குள் ஆயிரம் ஆயிரம் விருட்சமாய், வீரமாய் வளர்ந்தெழ வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்க நாம் களத்திற்கு வருவதற்கு முன்னால் குடும்பங்களில் பழக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு உண்டியல் வைக்கலாம். யாரெல்லாம் பிற மொழி கலக்காமல் தமிழ் பேசுகிறார்களோ அவர்களை தினமும் பாராட்டலாம். பிறமொழி கலந்து தமிழ் பேசுபவர்களை அவர்கள் வீட்டில் உள்ள உண்டியலில் தண்டம் கட்டச் சொல்லலாம். பின்னர் அப்பணத்தை சேர்த்தெடுத்து ஒரு நல்ல தமிழ் நூலை அந்த வீட்டிற்காக வாங்கலாம்.இது மிக எளிதாக தோன்றினாலும்கூட இதனால் முதலில் நம் குடும்பத்தில் மொழி உணர்ச்சி ஏற்பட துணைபுரியும். எந்த ஒரு செயலும் குடும்பங்களிலிருந்துதான் சமூகத்திற்கு மாறுகிறது. ஆகவே நம் குடும்பங்களுக்குள் நமக்கான மொழி அடையாளங்கள் குறித்து விவாதித்து விளக்கம் தரலாம்.

இதன்மூலம் நம் பிள்ளைகளுக்கு நாம் தமிழர்கள் என்கிற உணர்ச்சியை ஊட்டி வளர்க்கலாம். இந்த உணர்ச்சி நம் பிள்ளைகளிலிருந்து அவர்களின் பிள்ளைகளுக்கு நகர்ந்து செல்லும். ஆகவே இது ஒரு செயலாக செய்ய நாம் முனைப்பு காட்ட வேண்டும்.உலகெங்கும் உள்ள நமது உறவுகள் மற்ற சிறு சிறு இனங்களை காட்டிலும் பெரியது. ஆனால் சிறு சிறு இனங்கள் கூட தமக்கான ஒரு நாட்டை கட்டி, தமக்கான ஒரு அரசை அமைத்து, விடுதலையோடு எவ்வித அடக்குமுறையோ அச்சுறுத்தலோ இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மிகப்பெரிய தொகை கொண்ட தமிழினமோ, தமக்கான ஒரு நாடு இன்றி தவிக்கின்றது.

நமது கவலையெல்லாம் என்னதென்றால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த நமது இனத்தை காக்க, தாய் தமிழ்நாடு என்று சொல்லிக் கொள்கின்ற சொந்த மண்ணில் நம் இனத்திற்கு எதிராகவே நம் இனப்பகைவர்கள் இருக்கிறார்களே அதுதான். இதை மாற்றி அமைக்க நாம் இந்திய தேசியத்தை உடைத்தெறிய வேண்டும். இல்லாவிட்டால் இந்திய தேசியத்தை மறுக்க வேண்டிய ஒரு அவசியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த மொழி காக்கும் சமருக்காகத்தான் நாம் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீரவித்துக்களை தமிழீழ மண்ணில் புதைத்திருக்கிறோம்.

நாம் நமது இனத்தை காக்க வேண்டும் என்பதற்காகத்தான் முப்பது ஆண்டு காலமாக கருவி ஏந்தி களத்திலே இருந்திருக்கின்றோம்.நாம் நம் உயரைக் குறித்து எந்த நிலையிலும் சிந்தித்தது கிடையாது. எமது நாட்டிற்கு, எமது இனத்திற்கு, எமது உயிரிழப்பால் ஒருத்துளி நன்மை கிடைக்கும் என்றால் நாம் ஓராயிரம் முறை உயிரிழக்க தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இதுதான் தமிழீழத்திலே தேசிய தலைவரின் தலைமையில் நிகழ்ந்த போரின் ஆன்ம நிகழ்வு. இதுதான் நமது தேசிய தலைவரின் அடிமனதில் உறைந்து கிடந்த இன சிந்தனை. அவர் அந்த மண்ணை காத்து அரசாள விரும்பவில்லை. அந்த மண்ணை காப்பதின் மூலம் நம் மொழியை காக்க விரும்பினார், நம் இனத்தை காக்க விரும்பினார்.

ஆனால் இன துரோகிகள் தலைவரை மட்டுமல்ல, நம் இனத்தையும் காட்டிக் கொடுத்தார்கள்.எப்போதெல்லாம் இயேசுவைக் குறித்துப் பேசுகிறோமோ அப்போதெல்லாம் யூதாசைக் குறித்தும் பேசுவோம். எப்போதெல்லாம் கட்டபொம்மனைக் குறித்து பேசுகிறோமோ அப்போதெல்லாம் எட்டப்பனைக் குறித்தும் பேசுகிறோம். நாம் எப்போதெல்லாம் நம் தேசியத் தலைவரின் ஆற்றல்மிகு செயல்பாடுகளைக் குறித்து பேசுகிறோமோ அப்போதெல்லாம் இந்த இன துரோகிகளைக் குறித்து பேசிக் கொண்டே இருப்போம். நாம் பேசுவோம், காலாகாலத்திற்கு வரலாறு அதை பேசிக் கொண்டே இருக்கும்.

நிகழ்காலத்தில் கேவலம், பதவிக்காகவும், சுகத்திற்காகவும் இனத்தை அழிவுக்குள்ளாக்கிய இந்த அயோக்கியர்கள் நாளை வரலாற்றில் வாசிக்கப்படும் போது அவமானப்பட்டு அவர்களின் சந்ததி தலைகுனியும். அதைக்குறித்த கவலை இவர்களுக்கு இருக்கப்போவது கிடையாது. காரணம் இவர்களுக்கு சுகமும் மகிழ்ச்சியும் பணமும்தான் தேவை. இந்த மானங்கெட்டவர்கள் இனமானத்தை மட்டுமா கெடுத்தார்கள். தன்மானத்தையும் இழந்து தரம்கெட்டு போனார்கள்.

இதை எப்படி சமன் செய்வது? எப்படி முறியடிப்பது? என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னதென்றால் நமது தேசிய தலைவர் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம். அவரின் உயரிய ஆற்றல் வாய்ந்த தன்மான, இனமான உணர்வுகளோடு நாமும் வளர்கிறோம். நமது உறவுகளும் வளர்கின்றது. சில துரோகிகள் தோன்றுகிறார்கள். இது வரலாற்றெங்கும் காணப்படுகின்ற நிகழ்வுகள் தான். ஆனால் வெற்றியை மட்டும் வரலாற்று நாயகர்கள்தான் தக்கவைத்துக் கொள்வார்கள். அந்த வரிசையிலே நமது தேசியத் தலைவர் ஒரு வரலாற்று நாயகன்.

தமிழ் வாழும் மட்டும் அந்த தலைவரின் பெயர், அவரின் உயரிய சிந்தனை, அவருக்கான உள் கட்டுமான அமைப்பு, அவரால் விளைந்த சீரிய தமிழ் சிந்தனை, அவரிடமிருந்து பிறந்த வீரம், அவரால் அளிக்கப்பட்ட தமிழ் எழுச்சி, அவரோடு வாழும் தமிழினம் என்றும் அவரை மறுதலிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ முயற்சிக்காது. காரணம் தமிழனுக்கான அடையாளத்தை அவர் பெற்றுத்தர களத்திற்கு வந்தார். தமது வாழ்நாளின் பெரும் பகுதியை காடுகளிலேயே கழித்தார். தமது வாழ்க்கையின் பெரும் நாட்களை ஆயுதங்களிலே செலவழித்தார்.

அவருக்குள் எப்போதும் ஒரே ஒரு தத்துவம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அது விடுதலை தத்துவம். அந்த விடுதலை தத்துவம் தான் நம்மை விடுதலை பாதைக்கு அழைத்து வந்தது. இதுவரை நமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்கின்ற சிந்தனை எவருக்கும் எழாதபோது அவருக்கு மட்டும் எழுந்ததே! எப்படி? அது அவர் இந்த இனத்தின் மேல் கொண்ட பற்று. இந்த இனத்தின்மேல் கொண்ட பாசம். இந்த இனத்தின்மேல் அவர் வைத்த அன்பு. அதைவிட மேலாக இந்த இனத்தை காக்க வேண்டும் என்கின்ற ஆவல். ஆகவேதான் இதுவரை எந்த தலைவரும் செய்யாத பெரும் செயலை அவர் செய்துகாட்டினார். நமக்கான ஒரு நாட்டை கட்டியமைத்தார். போரிலே மண்ணிழப்பதும், மீண்டும் பெற்றுக் கொள்வதும் மிகச் சாதாரண நிகழ்வு. நமது மண் நமக்கானது.

மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் வீழ்த்தப்பட்டு பின்னர் சொந்த மக்கள் அதை வெற்றிக் கொண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் பதிவுகளாய் இருக்கிறது. ஆகவே இப்பொழுது சிங்கள பேரினவாத பாசிசம் தமது கொடும் கரங்களால் கருவிகள் தரித்து ஒரு இனத்தை அழித்து போட முயற்சி செய்து தோற்றுபோய் அம்பலப்பட்டு நிற்கிறது.இப்போதல்ல, எப்போதுமே தமிழினத்தை வெல்ல எந்த ஒரு அடக்குமுறையாளனாலும் முடியாது. இது ஒரு சாதாரண சொல் அல்ல. தமிழினம் என்பது காற்றோடு கலந்த உயிராதாரம். ஆகவே இதை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலகெங்கும் வாழும் தமிழுறவுகள் தயார் நிலையில் இயங்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். தொடர்ந்து செயல்படுவோம், தமிழீழம் மலரும். தமிழ் தேசியம் வெல்லும்.

தமிழ் தேசியத்தின் தலைவரோடு நாம் அரசமைப்போம். அந்த அரசிலே அடக்குமுறை இருக்காது. அதிலே பாசம் இருக்கும், பரிவு இருக்கும், அங்கே சாதியம் இருக்காது, பெண்ணடிமை இருக்காது, ஆண்டான் அடிமை இருக்காது, நாம் தமிழர் என்ற ஒற்றைச் சொல் மட்டுமே அங்கே ஓங்கி உயர்ந்து காணப்படும். நம்முடைய வாழ்வின் உயர்வு இருக்கும். அது நாம் காணாத ஒரு சொர்க்கத்தை கண்டதைப்போன்று நிகழ்வாக இருக்கும். அந்த காலம் இதோ மிக மிக அருகில் இருக்கிறது. அது நிச்சயம் அடைந்தே தீருவோம். நம்முடைய செயலால் அதை விரைவுப் படுத்துவோம். விரைவுப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க நாம் செயலாற்றுவோம்.

-கண்மணி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s