மொழி காத்த தலைவன்

Posted on

மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.

ஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.

தமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது.ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது.

அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும்கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.

ஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.

ஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.

சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.

இன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள்.இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.

தமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவனின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தமிழ் அப்படிப்பட்டதா? கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா? அதை எப்படி இழப்பது? அதை காப்பது நமது கடமையல்லவா? ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.

இனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை ஏழு கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.

தமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.தனக்கென ஒரு மண் தேவையா? என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.

ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா? இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா? தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா? நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா? கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா? வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே! இதை நம்மால் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

ஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது.இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காக்கும் அந்த தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.

அத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.

எந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலிநிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.

தமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.

ஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.

-கண்மணி-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s