தமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்

Posted on

தமிழ்த் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தமிழரது விடுதலைப் போராட்டம் பற்றிய எனது தனிப் பட்ட அனுபவத்தையும் எழுத விரும்புகின்றேன்.

எனது பதவியளிப்புக்குப் பின்னர் RUHRGEBIET தெற்கிலமைந்துள்ள கிறேபெல்டு என்ற நகரில் ஒரு திருச்சபைச் சமயத்துணைக் குருவாக நியமிக்கப்பட்டேன். அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனப்படுகொலைகள் காரணமாக ஒவ்வொருமாதமும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வந்த காலமது. 1983ம் ஆண்டில் நடைபெற்ற கறுப்பு யூலையின் பயங்கர நாட்களுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் ஐரோப்பாவுக்கும் ஜேர்மனிக்கும் இடம்பெயர்ந்தார்கள். இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த அனர்த்தங்கள் பற்றி அந்நாட்களில் நான் மிகவும் கொஞ்சமே அறிந்திருந்தேன்.

எனது பள்ளி நாட்களில் சிறீலங்கா எப்படி இறைவனின் சுவர்க்கமாகப் போற்றப்பட்டது என்பதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். நான் குருவாகக் கடமை யாற்றிய ஆலயத்திற்கு முன்னால் நான் ஒரு தமிழ் வாலிபனைச் சந்தித்தேன். தான் ஓர் இந்துக் கோவிலைத் தேடுவதாக, அவன் தனது கைகளாலும் கால்களாலும் எனக்கு விளக்கினான். அவன் என்னிடம் தனது விலாசத்தைத்தந்தான். புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்தது அவனது சுத்தமில்லாத விடுதி. நான் சென்றவேளை அவ்விடுதியில் 300 க்கும் அதிகமான இளந்தமிழர்கள் வசித்து வந்தார்கள். நான் அவனைப் பார்ப்பதற்கு அவனது விடுதிகுச் சென்றேன். தென் ஆசியர்களுடன், குறிப்பாகத் தமிழர்களுடன் எனக்கேற்பட்ட முதல் சந்திப்பாக அது அமைந்திருந்தது.

நான் வெறும் தேனீரோ, பால் கலந்த தேனீரோ அருந்த வரும்படி அழைக்கப்பட்டேன். எங்களால் ஒரே மொழியில் பேச முடியவில்லையெனினும் நாங்கள் எங்களது சைகைகளாலும், கண்களாலும், முகபாவனைகளாலும், மொழியில்லா வெறுமையினால் எம்முள் முகாமிட்டிருந்த மௌனங்களாலும் நாம் குறைவில்லாமல் நிறையவே பேசினோம் என்று சொல்லலாம். அதன் பின்னர் அவர்களை நான் அடிக்கடி சென்று பார்த்தேன். நாட்கணக்காக, வாரக்கணக்காக, மாதக்கணக்காக அந்த வாலிபர்களின் சோகந்தோய்ந்த கதைகளைப் புரிந்துகொள்ள முயன்றேன். அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை, சித்திரவதை, குடும்ப அங்கத்தவர்களின் கொலைகள் என்ற வகையில் அவர்கள் அனுபவித்த சோதனைகளைக் கேட்பது எனக்கு விறைக்க வைக்கும் அனுபவமாக அமைந்தது.

அழிவுகளையும் கொலைகளையும் சித்தரிக்கும் திரைப்படங்களைப் பார்த்தேன். அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே அவர்கள் மீது இக் குற்றங்கள் செய்யப்பட்டன. அந்நாட்டில் நடைபெற்ற-நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களையும் அதனால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் நான் படிப்படியாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். குடியேற்றத்திற்கு முன்னரும் பின்னருமான இலங்கையின் சரித்திரத்தைப் பற்றி படித்தேன். சிங்கள தேசியவாதத்தின் வளர்ச்சி பற்றியும், சிறீலங்காவை ஒரு சிங்கள பௌத்த நாடாக மாற்ற விரும்பும் அதி தீவிர தேசியவாதம் பற்றியும் நான் தெரிந்துகொண்டேன். எனது தமிழ் வாலிப நண்பர்களுக்கு அவர்களது தந்தைமார்களோ, தாய்மார்களோ, உடன் பிறப்புக்களோ குண்டுவீச்சுக்களாலோ எறிகணை வீச்சுக்களாலோ கொல்லப்பட்ட செய்திகள் அவர்களுக்குக் கிடைத்த போதெல்லாம் நான் அவர்களது பிரச்சினைகளை அமைதியாகக் கேட்பதுண்டு.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது ஜெர்மனியில் குண்டு வீச்சுக்களால் ஏற்பட்ட அழிவுகள் பற்றி எனது பெற்றோர் கூறக்கேட்டிருக்கின்றேன். ஜெர்மனியில் நான் இருந்த வேளைகளில், அவர்களது தாயகத்திலுள்ள கோயில்கள், ஆலயங்கள், மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் பற்றியும் சேதங்கள் பற்றியும் செய்திகளாக எங்களுக்குச் சொல்லப்பட்டன. அந்தச் சம்பவங்கள் பற்றி நான் ஏற்கெனவே பெற்றிருந்த ஆழ்ந்து காணும் அறிவு, அவர்கள் கொண்டுள்ள நாட்டுப்பற்று, அவர்களது துயரங்களை, தனிமை போன்றவற்றையும் புரிந்துகொள்ள உதவியது. சிறீலங்காவில் உண்மையாக நடைபெறும் நிகழ்வுகளிலிருந்து வித்தியாசமான நோக்கையே ஜெர்மன் அரசு கொண்டிருந்தது.

அவர்களைப் பொறுத்தமட்டில், சிறீலங்கா இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும் தாக்குதல்களிலேயே ஈடுபட்டுள்ளது. நான் பங்குகொண்ட பல கலந்துரையாடல்களில் அவர்கள் அந்த நிலைப்பாட்டையே நிலை நிறுத்தினர். விடுதலைப் புலிகளுடன் சில தமிழர்களுக்கு முன்னர் கஷ்டங்கள் இருந்திருக்கலாம். ஆனால் தெற்காசியாவிலோ, லத்தின் அமெரிக்காவிலோ, ஆபிரிக்காவிலோ நடைபெறும் விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தமட்டில், மேற்கத்தைய நாடுகள், விடுதலை இயக்கங்களை ஆதரிக்காமல் அந்தந்த அரசாங்கங்களையே ஆதரிக்கின்றன என்று எனக்கு உணர்த்தப்பட்டது. தமிழர்கள், சிறீலங்கா அரசாலும் இராணுவத்தாலும் தூண்டப்பட்ட இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஜெர்மனியில் வாழும் தமிழர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பாதுகாப்பில்லாமலேயே வாழ்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கைக்கான உழைப்பைப் பெறுவதைத் தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு ஜேர்மனியில் கிடையாது. 1980 ஆண்டுக் கடைசியில் ஜேர்மன் உயர் நீதிமன்றம், இன ஒடுக்கலால் பாதிக்கப்பட்டவர்களை உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டவர்கள் என ஏற்கலாமெனத் தீர்ப்பளித்தது. அதன்படி அவர்கள் ஜெர்மன் சமூகத்துடன் ஒன்றிணைய அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிறீலங்காவில் போர் நிலையை உள்நாட்டுப் போராகவே ஜெர்மன் அரசு பார்க்கிறது. தமிழ் இனத்தவர்களது ஒன்றிணைந்த முயற்சிகளால் இன்று அவர்கள், அங்கு நிலவும் ஜேர்மன் சமூக அமைப்புக்கு இயைபாகத் தங்கள் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் தழுவிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

1995 ஆண்டுத் தொடக்கத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா பதவிக்கு வந்தபோது, பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் எப்படித்தங்கள் தாய் நாட்டிற்குப் போவதற்குத் திட்டமிட்டார்கள் என்பதை என்னால் ஞாபகப்படுத்த முடிகிறது. ஆனால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் முன்னவையை விடக்கூடுதலாக இருந்தன. இதன் விளைவாகவே ஒட்டு மொத்தத் தமிழர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்தனர். நவாலி சென். பீட்டர் ஆலயத்தின் மீதான குண்டு தாக்குதல் சம்பவத்தைப் பற்றிச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பேசியபோது சந்திரிக்கா அதற்கு எதிராகப் பேசிய விதத்தைக் கண்டு நான் திகைத்தேன். வெளித்தோற்றத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா தன்னை ஒரு சமாதான விரும்பியாகக் காட்டிக்கொள்கின்றார்.

அவ்வளவுதான், ஆனால் அவரது உள்ளார்ந்த நோக்கங்களை இச்சிறிய கட்டுரையில் வெளிப்படுத்துவது சாத்தியமில்லை என்பதால் விட்டுவிடுகிறேன். 2002ம் ஆண்டு மாசி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஜெர்மன் அதிகாரிகளினது மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனியில் வாழும் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்து பெறுவது மிகவும் கடினமானது. இதனாலேயே ஜெர்மனியில் வாழும் தமிழர்களுக்கு வித்தியாசமான வதிவிட அனுமதிகள் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு ஜெர்மன் பிரஜா உரிமைகளும் சிலருக்கு நிரந்தர விதிவிட அனுமதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே வேளை, பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் எந்நேரமும் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற அபாயத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

2002ம் ஆண்டு நான் முதன் முதலாக வட சிறீலங்காவிற்குப் போனேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது குண்டு வீச்சுக்களினால் அழிக்கப்பட்ட வீடுகளையும், சீரழிக்கப்பட்ட கட்டிடங்களையும், கோயில்களையும், ஆலயங்களையும், பள்ளிக்கூடங்களையும் வேறு பலவற்றையும் நேரில் கண்டேன். அங்கே எல்லா இடங்களிலும் இராணுவச் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. நான் சாவகச்சேரிக்குச் சென்றேன். மிகவும் மோசமாக அழிக்கப்பட்ட நகரம் இதுவே. உத்தியோகப் பற்றற்ற முறையில் காணாமற் போனோர் என அறிவிக்கப்பட்டவர்கள் மூர்க்கத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழிகளைப் பார்த்தேன். வெட்டி வீழ்த்தப்பட்ட பல இலட்சக் கணக்கான பனை மரங்களைக் கண்டேன்.

ஆனையிறவைத் தாண்டிக் கிளிநொச்சிக்குப் போனேன். காயமுற்ற புலிப்போராளிகளுக்கான மறுவாழ்வு மையத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டேன். அங்கே சம்பிரதாய பூர்வமான அறிமுகங்களுக்குப் பின்னர், நாங்கள் ஒரு சுதந்திரப் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட பல விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடினோம். எனது கத்தோலிக்க கடவுள் பற்றிய சாஸ்திர அறிவு லத்தீன்- அமெரிக்க அணுகுமுறை பற்றிய தெளிவைத் தந்தது. ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் கடவுளின் சாம்ராஜ்யத்திற்கு, தெரியப்படுத்த வேண்டுமென யேசுவின் உபதேசத்தில் சொல்லப்படுவதே முக்கியமானது என்று அது கூறுகிறது. இதுவே யேசுவின் உபதேசத்தின் சாரமாகும். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முதலில் ஒடுக்கப்பட்டவர்களின் அவலக்குரலைக் கேட்கவேண்டும்.

பின்னர் அவர்களின் அவலத்திற்கான காரணத்தையும் அதற்குப் பின்னர் அவர்களின் ஒடுக்குமுறைபற்றிய சரித்திரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். எகிப்தில் ஒடுக்கப்பட்ட இஸ்ரேலியரின் விவிலிய கதை இதுவே. பின்னர் விடுதலைக்கான அறைகூவலைச் செய்வதற்கு மக்களை இட்டுச்சென்ற இன, சமூக, அரசியல் அமைப்பு பற்றிக் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய ஒடுக்கு நிலை ஏற்படுவதற் கான காரணத்தை ஆராய்ந்து காணவேண்டும். தீர்க்கதரிசிகளைக் குறைகூறியமை பற்றியும் பாலஸ்தீனத்தில் தாபனப்படுத்தப்பட்ட சமயமுறைக்கு எதிராக யேசு ஆற்றிய சொற்பொழிவுகள் பற்றியும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். கடைசிப் படியாக, கிறிஸ்தவர்களாகிய நாங்கள் விடுதலைக்கு உதவும் முகமாக என்ன செய்யலாம் என்று ஒருவரை ஒருவர் கேட்கவேண்டும். ஒடுக்கமுறைக்கு இட்டுச்சென்ற நிலையை நீக்குவதற்குப் போராட முடியுமா?,

இதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் சரித்திரச் சூழ்நிலையைப் பார்ப்பது முக்கியமானது. இறந்த காலத்தில் அவர்களுக்கிருந்த சாத்தியக்கூறுகள் யாவை, இப்பொழுது அவர்களால் என்ன செய்யமுடியும்? இதுதான் சுவர்க்கத்தின் ராஜ்யத்தின் தொடக்கம். யேசு தனது போதனையில் ‘சுவர்க்கத்தின ராஜ்யம் உன்னுள்ளேயே உள்ளது’ என்று கூறுகிறார். பார்த்து, தீர்மானம் எடுத்துச் செயற்படுவதே விடுதலை பற்றிய சாஸ்திர அறிவு என்று சொல்லப்படுவதின் சாரங்களாகும். எங்களின் கலந்துரையாடல்களின்போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. ஒன்று வன்முறை பற்றியது, மற்றது நீண்டகாலமாக நான் தமிழர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும் ஏன் என்னால் தமிழில் பேசமுடியவில்லை என்பது பற்றியது.

யேசு சாத்வீக வழிநிற்போரைப்போற்றினார். போரின் பின்னர் அமைதியும் இணக்கமும் ஏற்படுவது பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. ஆனால் கடுமையான சரித்திரச் சூழ்நிலைகளில் எதுவித மறுமொழியும் சாத்தியமாகாது. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து பேச்சு வார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. எனவே இழந்த தமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராட வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிலக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள இராணுவத்தினால் தமது மக்கள் மீது புரியப்படும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவே அவர்கள் சண்டையிடுகிறார்கள். விடுதலை பற்றி உள்ளுக்குள் இருந்துகொண்டுதான் புரியமுடியும். ஒடுக்கப்பட்டவர்களது சரித்திரம் பற்றி அறியாதவர்கள், அது பற்றித் தீர்ப்புக்கூறத் தகுதியற்றவர்கள்.

தமிழர்களது விடுதலைப் போராட்டம் பற்றி நான் புரிந்துகொண்டதிலிருந்து கூறுவதென்றால், வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் தொடக்கப்பட்ட போராட்டமானது சிறீலங்காவின் நிலைக்கு அளிக்கப்படும் சரித்திர ரீதியான மறுமொழியேயாகும். கடைசியில் இப்போராட்டம் தமிழர்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து அவர்கள் விரும்பும் அமைதியைக் கொண்டுவருமென்பதே எனது நம்பிக்கை. வன்னியில் கேட்கப்பட்ட அடுத்த கேள்வி கூட்டுப் பொறுப்புரிமை பற்றியதாகும். ஒரே மொழியைப் பேசுவது என்பது ஒன்றாயிருப்பதற்கான முக்கியமாக அடையாளம் என்பதை காயமுற்ற புலிகள் மிகவும் தெளிவாகவே புரிந்துகொண்டிருந்தனர்.

விடுதலைக்கான போராட்டத்தில் கிருஸ்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்களோடு ஒரே கூறாக அல்லது அவர்களின் ஒரு பகுதியாகத்தானும் இருக்கவேண்டும் என்பது முக்கியம். ஆனால் நான் ஒரு தமிழன் அல்ல. நான் ஒரு ஜெர்மன் நாட்டவன். நான் முதலாவது பணக்கார உலகத்தின் ஓர் அங்கத்தவன். குடியேற்றத்தின்போது மக்களையும் நாடுகளையும் ஒடுக்கியதோடு, இன்று வரை பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபட்டுவரும் ஒரு குற்றமுள்ள கலாச்சாரத்தின் அங்கத்தவன். நான் ஒரு செயற்கையான கூட்டுப்பொறுப்புரிமையைக் காட்டமாட்டேன்.

எனது நாட்டில் தமிழரது போராட்டத்திற்காக ஒரு நிலைப்பாடு எடுப்பேன். தமிழருடைய தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாளுக்காக நான் இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். நான் அவரை என்றும் சந்தித்ததில்லை. அவர் சமாதானத்தின் ஓர் அடையாளம் மட்டுமல்ல, அதையும் விடக்கூடியவர். அவர், என்றும் தோற்கடிக்கப்படாத தமிழ் மக்களின் அடையாளம். எப்பொழுதும் தன்னம்பிக்கை கொண்ட மக்களின் அடையாளம் அவர். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கு முறைக்குள் வாழ்ந்துவிட்டு, தன்னம்பிக்கையுடன் வாழ முயல்வது ஒரு புத்தம்புதிய அனுபவமாகும். வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ் மக்களது தன்னம்பிக்கைளை மீளக்கொடுத்திருக்கிறார். அதனைத் தன்னுள் மீளக்கண்டு பிடிப்பது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

மானுட, சமூகவியல் ஆய்வாளர்,

ஜேர்மனி.

கலாநிதி அருட்திரு.

அல்பேட் கூலன்

pdf tamil and english

fr albert koolin about eelam struggle

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s