தலைவர் பிரபாகரன்ஒரு போராளி என்ற தளத்திலிருந்து எழுச்சிபெற்ற இராஜதந்திரி

Image Posted on

தேசிய அரசியல் இப்பொழுது தெளிவற்ற பாதையிற் சென்றுகொண்டிருக்கிறது. இவ்விதமான அமைதியற்ற தருணத்திலே கடந்தகால நினைவுகளையும் உணர்வுகளையும் மட்டுமல்லாது சாதனைகளையும் வேதனைகளையும் இரைமீட்டிப் பார்ப்பது அவசியமானது. தமிழினத்தின் எதிர்காலம் இனிமேல் எந்தப்பாதையிலே செல்லப்போகிறது?

தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் யாவரும் இப்பொழுது தொய்ந்து போயுள்ள நிலையில் நைந்துபோயுள்ள எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்வேண்டியது அவசியமானது. கட்சியரசியல் தலைமைகள் “சுயநல அரசியற் பூச்சாண்டித் தனங்களுடன்” பேச்சுவார்த்தைகள் என்ற பேச்சோடு காலத்தைக் கடத்துகின்றன. இப்பொழுது சமாதானப் பேச்சுவார்த்தையே போராட்டமாகிவிட்டது. ஆயுதப்போராட்டமானது இப்பொழுது சமாதான ரீதியான அரசியற் போராட்டமாக மாறியுள்ள தருணத்திலே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐம்பதாவது அகவையை எட்டியுள்ளார்.

தமிழர் மீது இனவெறியோடு தொடரப்பட்ட கொடூரமான தாக்குதல், இன அழிப்பு நடவடிக்கைகள் இனிமேல், எந்தப் பாதையிலே செல்லப்போகின்றன? தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பின் வெண் சூட்டிலே பிறந்த விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறியமையும் இயக்கங்களிடையே மோதல்கள் தொடர்ந்தமையும் வரலாறாகி விட்டது. தமிழினத்தின் விமோசனத்திற்கான உயிர்ப்பும் உயிர்மூச்சும் தம்பி பிரபாகரனின் தீர்க்கதரிசனமான உறுதி என்ற மயிரிழையிலேதான் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது நடைபெறுவது போராட்டத்திற்கான பேச்சுவார்த்தையா பேச்சுவார்த்தைக்கான போராட்டமா என்ற கேள்விக்கு விடைகாண முடியாது இலங்கையின் தேசிய அரசியலே தளம்பிப் போயுள்ளது.

நிரம்பிய பட்டறிவுகளின் மத்தியிலே ஐம்பது வயதை எட்டியுள்ள பிரபாகரன், தன்னை ஒரு போராளி என்ற தளத்திலிருந்து எழுச்சிபெறவைத்து, சாணாக்கியம் மிக்க இராஜதந்திரியாகப் புடமிட்ட வரலாறுதான் இப்பொழுது தமிழினத்தின் எதிர்காலத்தை வழிப்படுத்தும் ஒரேயரு பற்றுக்கோடாகியுள்ளது. இப்பொழுது நல்லதும் கெட்டதுமாகப் பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் எதிர்காலமே சூனியத்தை நோக்கிச் செல்கிறது. தமிழினத்தின் விடுதலைக்காகத் தீர்க்கதரிசனமான உணர்வுகளோடு சிந்தித்த தலைவர்கள் இனவாதக் கும்பல்களின் நடுவில் வெறுமனே கையைப் பிசைக்கின்றார்கள். ஆயுதப்போராட்டம் தணிந்த நிலைமையிலே விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து அரசியல் ரீதியான போராட்டத்திலே கால்பதித்துள்ளது. இனவாத அரசியற் சக்திகளின் பயங்கரவாதப் போக்குகளின் மத்தியிலே அரசியலைத் தனியாகவும் போராட்டத்தைத் தனியாகவும் பிரித்துப்பார்க்க முடியாதென்ற விடயத்தை ஆழமாக உணர்ந்துள்ள பிரபாகரன், இப்பொழுது தமிழினத்தின் தலைமைக் குரலாக மாறியுள்ளமை வரலாறாகிவிட்டது.

இலங்கையின் அரசியலில் தமிழ் மக்களின் போராட்டமே உரிமைப் போராட்டம் என்பதும் இனவாதிகளின் அரசியல் முரண்பாடுகள்தான் பயங்கரவாத நடவடிக்கைகள் என்பதும் வெளிப்படுவதற்குரிய ஆதார சுருதியாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளும் தம்பி பிரபாகரனின் பன்முக ஆளுமை நிரம்பிய உள்ளாற்றல்களும் அமைந்து அனைத்துலக சமூகத்தின் கண்களை மெல்லமெல்லத் திறந்துள்ளன. தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலே, ஆயுதப்போராட்டம் என்ற மூச்சோடு வெளிப்பட்ட இளைஞர்களுக்குத் தம்பி பிரபாகரன் அளித்த தலைமைத்துவம் இப்பொழுது உலகளாவிய கவனவீர்ப்பைப் பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் உரிமைப் போராட்டம் அரசியற் போராட்டமாக வியாபித்துள்ளமை அமைதிக்காக ஏங்கும் தமிழ் மக்களுக்கான விமோசனப் பெருந்தெருவைச் செப்பனிடத்தொடங்கியுள்ளது.

அழிவுப் போரென முத்திரை குத்தப்பட்ட ஆயுதப்போரை ஆரம்பித்த சிங்கள இனவாதச் சக்திகள் இப்பொழுது தம்முள்தாமே போரிடும் கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. தமிழினத்தின் விடுதலைப்போராட்டம் வெறுமனே பூவா தலையா போட்டுப்பார்க்கும் விடயமன்று. இனவாதக் கட்சிகளும் தலைமைகளும் தமிழினத்தின் விடுதலையைக் கசாப்புக்கடை விவகாரமாக்கி விட்டுள்ளமை, சமாதானம் பேசமுற்பட்ட அனைத்துச் சக்திகளையும் தலைகுனிய வைத்துள்ளது. சமாதானத்தைப் பற்றிப் பேசுபவர்கள் உணர்ச்சியற்ற வறட்டுத் தனங்களின் மத்தியிற் சிக்கியுள்ளனர். இனவாதம் பேசுபவர்கள் கையாலாகாத கசப்புணர்வுகளோடு நாட்டின் எதிர்காலத்தையே விழுங்கும் செயல்களையெல்லாம் தூண்டிவிட்டுள்ளனர். தேசத்தின் முதுகெலும்பையே தகர்க்கும் முயற்சிகள் சகல கோணங்களிலும் வெளிப்படுகின்றன.

இவ்வாறான அரசியற் கலாச்சாரத்தின் மத்தியிலே தலைவர் பிரபாகரனின் உறுதியொன்றுதான் தமிழ் மக்கள் மத்தியில் நிம்மதியையும் சுதந்திரத்தையும் தரும் விடயமாகியுள்ளது. இடைக்கால நிர்வாக அமைப்புக் கோரிக்கையும் சுதந்திரமான சுயநிர்ணய உரிமை என்ற வரிசையில் வெளிப்பட்ட உணர்வுகளையும் புறங்கையாலே தட்ட முனைபவர்கள், வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் ஓசைப்படாமல் அங்கீகரிக்கப்படாத ஒரு தனிநாடே உருவாகியுள்ளதையிட்டு ஏக்கமடைகின்றனர். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பிளவுகளைத் தூண்டிவிட்டபடி, இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் இலங்கையர் என்ற விடயத்தை அங்கீகரிக்க முற்படாது, தொடரும் ‘இனவாத நாயோட்ட அரசியலில்’ அமைதி, சமாதானம் என்றபடி வெளிப்படும் உச்சாடனங்களின் உள்ளுடனையெல்லாம், சர்வதேச சமூகம் விழுங்கிக் கக்கியபடி பார்த்துக் கொண்டிருக்கின்றது.

யுத்தத்தின் காரணமாக வடகிழக்குப் பிரதேசங்களை நொருங்க வைத்த இராணுவத்தினர் செய்த சர்வநாசங்கள் இன்னும் முடிவில்லாது தொடர்கின்றன. ஈழத் தமிழர்களின் அபாரத் திறமையும் மனவுறுதியும் சாம்பல் மேட்டிலிருந்து புதிய சக்தியாக எழுவதற்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையும் தீர்க்க தரிசனமும்தான் மூச்சாக இருந்திருக்கின்றனவென்பதை இப்பொழுது தமிழ் கூறும் நல்லுலகம் உணர்ந்து விட்டது. ஆயுதப் போராட்டத் தலைமை என்ற அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தபடி அரசியற் போராட்டத்தை ஆற்றுப்படுத்தும் விடுதலைப் புலிகளும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தமிழினத்தின் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் சுக்கானாக மாறியுள்ளமை, பேச்சுவார்த்தை சமாதானம் என்றபடி வெளிப்படும் தென்னிலங்கை அரசியற் சக்திகளை இப்பொழுது விழிப்படைய வைத்துள்ளது.

யுத்தத்தையே நடாத்த முடியாது தறிகெட்டுப் போன இலங்கையின் அரசியற் சக்திகள், பேச்சுவார்த்தை, சமாதானம் என்றபடி செயற்பட முற்படும் அர்த்தமற்ற அரசியல் இப்பொழுது இனவாதச் சொயல்களுடன்தான் வெளிப்படுகின்றது. இலங்கையில் வெளிப்பட்டுள்ள தீவிரவாதப் போக்குடனான விடுதலைப் போராட்டம், சுதந்திரப் போராட்டமே என்ற உண்மையை உலகிற்கு உணர வைக்கும் போராட்டத் தலைவராக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எழுச்சி பெற்றுள்ளார்.

இலங்கையில் வெளிப்பட்ட உள்நாட்டு முரண்பாடுகளையும் யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் தார்மீகக் கடமையிலிருந்து சர்வதேச சமூகமும் இலங்கை அரசியற் சக்திகளும் பிசகினால் அமைதியையும் சமாதானத்தையும் தேடும் பயணம் தொடர்கதையாகத்தான் போய்முடியும். போராடும் அமைப்புக்களைச் சேர்ந்த அனைவரும் முழுமையாக ஒன்றுபடாது முட்டாள்தனமான பாதையிற் கால்பதிக்க முற்படுவதைத் தடுக்கும் ஒரேயரு சக்தியான விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஐம்பதாவது அகவை நிறைவு, புதிய சமாதான எழுச்சிக்கான பாதையை நிமிர வைக்க வேண்டுமென வாழ்த்துவோமாக!

அரசியல் ஆய்வாளர்,

முன்னாள் தினக்குரல்ஆசிரியர்,

ஊடகத்துறை விரிவுரையாளர்,

இலங்கை.

சிவநேசச்செல்வன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s