எம் தலைவர் பிரபாகரன் அறம் வழி நின்ற சான்றோன்

Posted on


மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலை இய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல-
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய்

– புறநானூறு- முரஞ்சியூர் முடிநாகராயர்

தொன்மம் நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்து விட்டு …நம் ஆன்மாவில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குத் உலகத் தமிழர்கள் ஒரே அலைவரிசையில் திரண்டு போற்றி மகிழ்ந்தனர்.தாயக தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஒரு மாபெரும் வீழ்ச்சிக்கு பின்னர்.. எதிர்காலம் குறித்த மாறா நம்பிக்கையை உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழ் தேசிய இனத்தின் வழித் தோன்றல்கள் தங்களுக்குள் தாங்களே எழுப்பிக் கொண்டார்கள். நம் சம காலத்தில் தமிழருக்கே உரிய தொன்ம அறப் பலத்தோடு நம்மை எல்லாம் வழி நடத்தும் நம் தேசிய தலைவர் பிறந்த நாளை தங்கள் இனத்தின் மீட்சி நாளாக உலகத் தமிழர்கள் ஒற்றைக் குரலில் உலகுக்கு அறிவித்தனர். ஒரு பேரழிவிற்கு பின்னால்..சாம்பலாய் கருகிய ஒரு இனம்..சுதந்திர வேட்கையும் ,இன மான உணர்வும் கொண்டு தனக்குள்ளே உயிருட்டி..உருவாக்கிக் கொண்டு தங்களுக்கான சுதந்திரத்தினையும், தங்களுக்கான நாட்டினையும் அடைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் சிந்திக்க துவங்கி உள்ளனர் என்பதற்கு அறிகுறிகளாக உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள் அறிவிக்கின்றன. ஒரு தொன்ம அறம் வழி சார்ந்த ஒரு தேசிய இனத்தின் ஈடு இணையற்ற தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என்பதனை நம் எதிரிகளும், துரோகிகளும் புரிந்துக் கொண்டு முழி பிதுங்கி நிற்கின்ற நிலைமையை உலகத் தமிழர்கள் மாவீரர் தின நிகழ்வுகளால் இன்று ஏற்படுத்தி உள்ளார்கள்.

தமிழரின் நெடிய வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது ஒரு அற உணர்வு கொண்ட தேசிய இனம் தான் இது என்று நம்மை நாமே பெருமிதம் கொள்ள நிறையக் காரணங்கள் உண்டு.

குறியீடுகளால் நிரப்பப் பட்டது தமிழரின் இலக்கியம். முல்லைக்கு தேர் அளித்த பாரி, மகனை தேர்க் காலில் இட்ட சோழன், தன் பச்சிளம் மகவினையும், போர்க் களத்திற்கு அனுப்பிய தாய்,காயம் பட்ட புறாவிற்காக தன் தொடையினை அறுத்த சிபி ,குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை அளித்த பேகன் என புனைவும் ,குறியீடுமாய் திகழும் நம் இலக்கியங்கள் காட்டும் குறியீடுகள் எவை என்று ஆராயும் போது வீரமும் , அறமும், இரக்கமும்,ஈகையும் நம் முன்னோர்களின் வாழ்வாக இருந்திருக்கின்றன.வரலாற்றில் ஒரு இனத்திற்கென இப்படிப் பட்ட அறவியல் கூறுகளை எங்கும் பார்க்க இயலாது. சங்க இலக்கியங்களில் ஒழுகும் அற உணர்வு தமிழரின் வாழ்வியலில் அறம் எத்தனை நூற்றாண்டு காலமாய் நீடீத்து வந்திருக்கிறது என்பதனை உணர்த்துகிறது. எதிரியிடம் கூட நாம் நாகரீகத்தினை, இரக்கத்தினை காட்டும் தன்மையை நம் தொன்ம இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. உலகில் தன் இனத்திற்காக,மொழிக்காக தன்னைத் தானே தனிமனிதனாய் எரித்துக் கொண்டும், வெடித்துக் கொண்டும் இறந்த தமிழின இளைஞர்கள் தன் இனத்தின் அறவுணர்ச்சி மூலமாகவே ஆன்ம பலம் அடைந்தார்கள். தன் இனத்திற்காகவும், மொழிக்காவும் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள முன்வருவதுதான் தியாகத்தின் உச்சம். அந்த தியாகத்தினை மிகவும் நேர்த்தி மிகுந்த துணிவான முறையில் தமிழ் இளைஞர்கள் மனம் உவந்து செய்தார்கள். இதே அற உணர்வினால் தான் தன் கைக்கு எட்டிய தொலைவில் தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட உயிர் ஈகைப் போராளிகள் தங்களைத் தாங்களே நெருப்புக்கு இரையாக்கி விதையாய் இந்த மண்ணில் வீழ்ந்ததும் நடந்தது.ஆணுக்கு சமம் பெண் என உலக நாகரீகங்களுக்கு கற்றுக் கொடுத்த நம் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சியாய் நம் சகோதரிகள் பெண் புலிகளாய் களம் புகுந்ததும், தீரத்துடன் போரிட்டதும், நம் விழிகளை பெருமித கண்ணீரால் நிறைக்கும் உணர்வாகும். இதே அறம் தான் நம் வான்புலிகள் சிங்கள மக்கள் மீது குண்டு வீசாமல் படை இலக்கினை மட்டுமே தாக்கி விட்டு பறந்த போதும் இருந்தது. இதே அறம் தான் நம் தேசிய தலைவர் மீதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் இன்றளவும் ஒரு தவறான செய்தியை கூட சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு எதிரிகளை நிற்க வைத்திருக்கிறது.

வரலாற்றின் நெடிய பக்கங்களில் பார்க்கும் போது வேறு எந்த இனத்தினை காட்டிலும் தன் மொழிக்காகவும், தன் இனத்திற்காகவும் கரும்புலிகளாக, மொழிப் போராட்ட தீரர்களாக திகழ்ந்து தான் வீழ்ந்து இனம் செழிக்க களம் புகுந்த மாவீரர்கள் உடைய ஒரே இனம் நம் தமிழினம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஈகையும், வீரமும் உடைய நம் முன்னோர்களின் வழித் தோன்றலாய் தோன்றி, உலகினை ஒற்றை இயக்கத்தின் வாயிலாக எதிர்த்த தனி மனித ஆளுமையான நம் தேசிய தலைவர் தமிழர்களின் பெருமை மிகு அடையாளம். கொடும் துயர்களுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் பெருமை மிகு தலைமையும் அறம் இழக்கா உணர்வினை தக்க வைத்ததுதான் நான்காம் கட்ட ஈழப் போர் நமக்கு விட்டுச் சென்ற பாடம். இந்த பூமிப் பந்தெங்கும் வன்னி முகாம்களில், தமிழக வயல்களில், வளைகுடா நாடுகளின் சுடும் பாலையில், மலேயா காடுகளில், அமெரிக்க, கனடா நாடுகளில், கணினி திரைகளுக்கு முன்னால், என எங்கும் பரவிக் கிடக்கும் தமிழினம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக நம் தொன்ம அறத்தின் தொடர்ச்சியாய் தலைவரும், இயக்கமும் பாதுகாத்த இந்த அற உணர்வுதான் இருக்கிறது. செஞ்சோலை குழந்தைகளை கூட குண்டு வீசி கொல்லும் கொடிய சிங்கள ராணுவத்திற்கு எதிராக அற உணர்வுடன் தலைவர் நடத்திய மரபு வழிப் போரும், பிடிபட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகவும் மதிப்புடன் நடத்திய பண்பும் நம்மை மேன் மேலும் பெருமிதத்திற்கு உள்ளாக்குகிறது. தொடர்ச்சியான கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தன் மக்களை பாதுகாத்த உளப்பாட்டின் உறுதி நம் தேசிய தலைவரின் மதிப்பினை பன் மடங்கு உயர்த்துகின்றன.

ஒரு இனம் வீழ்வதும் ..பிறகு வீழ்ச்சியினை கடந்து மீள்வதும் உலகத்தியற்கை. தேசிய இனங்களின் தன்னுரிமைக்கான விடுதலைப் போராட்டங்கள் போராட்டங்கள் உலக நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகின்றன. ஆனால் வேறு எந்த இனத்திற்கும் மேதகு.பிரபாகரன் போல அறம் வழி நின்ற தலைவர் கிட்ட வில்லை. தன் குடும்பத்திற்காக தன் இனத்தினை காட்டிக் கொடுத்த தலைவர்களை ஈழ விடுதலைப் போர் நமக்கு அடையாளம் காட்டியது. ஆனால் தன் இனத்திற்காக தன் குடும்பத்தினரையும் தலைவர் இழக்க சித்தமாக இருந்ததை நாம் அறிகிறோம்.அதற்கு உதாரணமாக இன்னும் சிங்கள ராணுவத்தின் கோரக் கரங்களின் ஊடாக தேசிய தலைவரின் பெற்றோர்கள் இருந்து வருகிறார்கள்.

தேசிய தலைவரை எந்த ஆன்ம சக்தி இப்படி நேர்மை வலிவோடு செயல்பட வைக்கிறது என்று நாம் சிந்திக்க துவங்கினால் நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்று விடுகிறோம். தமிழ் தொன்மத்தின் அறவுணர்ச்சி முழுவதையும் உள்வாங்கிய ஒரு மனிதராய் நம் தேசிய தலைவர் இருக்கிறார். தன் வாழ்வு முழுக்க மக்களுக்கான ஒன்று என்பதனை அவர் மிகச் சரியாக உணர்ந்திருந்தார். சாதாரண மனிதர்களுக்கு உண்டான பலவீனங்கள் எதனையும் அவரிடம் காண முடியாமல் போவதற்கு காரணமும் அதுதான். மேதகு.பிரபாகரனின் அறவுணர்ச்சிதான் கடும் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளை காப்பாற்ற செஞ்சோலை சிறுவர் இல்லமாக உருவெடுத்தது. ஆண் குழந்தைகளுக்காக காந்தரூபன் அறிவுச் சோலையாக,போரினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மீள் வாழ்விற்காக வெற்றிமனையாக, இன ஒடுக்கு முறை யுத்தத்தினால் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட முதியவர்களை காக்க மூதாளர் பேணகமாக,போரினால் தொடர்ந்த வறுமையை அழிக்க தமிழர் புனர் வாழ்வு கழகமாக, மருத்துவ பணிகளுக்கு தியாகி திலீபன் மருத்துவ சேவை மையமாக என பரிமாணங்களில் தமிழ்த் தேசியத்தலைவரின் அறவுணர்ச்சி மிளிர்ந்தது.

எமது மன உறுதிக்கு எதிரி சவால் விடுகின்றான்.இந்த சவாலை ஏற்பதற்கு எமது ஆன்ம உறுதியை தவிர வேறு ஆயுதங்கள் தேவை இல்லை

-1991 மாவீரர் தின உரையில்..

மேதகு. பிரபாகரன் ஆயுதங்களை மட்டும் நம்பி போராடிய வெறும் கலகக் காரர் இல்லை . மாறாக ஆன்ம உறுதியோடு சுதந்திர வாழ்விற்காக போராடிய புரட்சியாளர் அவர். சங்க இலக்கியங்கள் ஊடாகவும், நெடிய தமிழ் பண்பாட்டு பாரம்பரிய விதைகள் மூலமாக இயல்பாகவே தமிழன் என்கிற முறைமையின் தலைவர் பெற்ற அறவுணர்ச்சிதான் போர் களத்தில் ஆயுதங்களை விட வலிமையான ஆன்ம உறுதியாக உருவெடுத்தது.

எங்கள் இனத்தின் தேசிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நாங்கள் தேசிய விடுதலைக்காக போராடி வருகிறோம்.எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும், சுய கெளவரத்துடனும் வாழுகின்ற புனித உரிமையை பாதுகாக்கவே நாங்கள் போராடுகிறோம்.(1984-ல் அனிதா பிரதாப்பிற்கு அளித்த பேட்டியில் )

தேசிய தலைவர் தன் நோக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார். உலகம் முழுதும் வாழுகின்ற தமிழர்களின் கரங்களில் இன்று ஈழ விடுதலைப் போர் கையளிக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோலன் ஹிட்லரால் மாண்ட யூத இனம் எப்படி தங்களுக்கான ஒரு நாட்டினை சமைத்தார்களோ, அதே போல உலகத் தமிழர்கள் தங்களுக்கான ஈழ நாட்டினை என்ன விலை கொடுத்தேனும் அடைந்தே தீர வேண்டும். நாம் இந்த விடுதலைப்போரில் அளவிற்கு அதிகமாகவே விலை கொடுத்து விட்டோம். நாம் இழந்த உறவுகளின் நினைவு எப்போதும் நம் உள்ளத்தின் உச்சாணிக் கொம்பில் நிலை நிற்க வேண்டும். புதைக் குழிகளுக்குள் புதையுண்டு போன எண்ணற்ற தமிழர்களின் இறுதி மூச்சு இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது என்ற கவனப்பாடு நம் மனதில் என்றும் வேண்டும். தமிழின இளைஞர்கள் மற்ற இன இளைஞர்களை காட்டிலும் உள்ளம் முழுக்க வீழ்ந்த வன்மத்துடன் செயல் புரிய வேண்டும். கல்வி,பொருளாதாரம், தொழில் என அனைத்து துறைகளிலும் இழப்புகளின் தீரா துயர் தந்த வன்மத்துடன் போராடி தமிழர்கள் முதலிடம் அடைய வேண்டும். சிறுக சிறுக பெருகி..ஆர்ப் பரிக்கும் மக்கட் வெள்ளமாய் தமிழர்களுக்கான தாயகத்தினை அடைய போராடுவதற்கான மன நிலையை தக்க வைப்பதுதான் நாம் மாவீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க இயலும்.

கடும் துயர் சூழ்ந்த போதும் அறம் காத்த சான்றோனாய் தலைவர் பிரபாகரன் இருக்கிறார். அவர் குறித்த பெருமிதமும், தீவிர செயல்பாடுமே நம் எதிர் காலத்தினை தீர்மானிக்கும்

12 கோடி தமிழர்களின் ஒற்றைக் கனவு தமிழீழம். அதை நாம் எந்த விலை கொடுத்தேனும் அடைந்தே தீருவோம். தமிழர்கள் ஒருவருகொருவர் சந்திக்கும் போது அடுத்தாண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று சொல்லுவோம். அறம் வழி நின்று உலகத்திற்கு தமிழரின் துயர் சூழ்ந்த போதும் அகலா அறத்தினையும், மாறா மறத்தினையும் உணர்த்திய தேசிய தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என உரக்கச் சொல்லுவோம்.

“தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்”

மணி.செந்தில்
வழக்கறிஞர்,குடந்தை
தமிழ்நாடு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s