பொற்காலம் படைக்கும் தம்பி -பழ.நெடுமாறன்-

Posted on

24/12/2009

ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வுதுயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது.

தமிழர் வரலாற்றில் விந்தையான செய்தியொன்று உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பொற்காலத் தமிழர்கள் தோன்றி செயற்கரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில், அதாவது சங்க காலத்தில் பொற்கொட்டு இமயத்து புலி பொறித்து ஆண்டான் சோழன் கரிகால் பெருவளத்தான். ஆரியப்படை கடந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். இமயம்வரை சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டிக் கனக விசயர் தலையில் ஏற்றிக்கொண்டு வந்து கற்பின் செல்விகண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன்.சிறப்பு மிக்க இந்த சங்க காலத்திற்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்தன.

மீண்டும் ஒரு பொற்காலம் படைக்கச் சோழப் பெருவேந்தர்கள் இராசராசனும் இராசேந்திரனும் தோன்றினர். கங்கை வரை மட்டுமல்ல – கடல் கடந்து சிங்களம், புட்பகம்,சாவகம், கடாரம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டனர். இந்திய வரலாற்றில் இத்தகைய சாதனை படைத்த பெருவேந்தர்கள் வேறு யாரும் இல்லை. அதன்பின் மற்றும் ஓராயிரம் ஆண்டுகள் உருண்டோடின. இடைக்காலத்தில் தமிழகமும் ஈழமும் அடிமைப்பட்டன. தெலுங்கர், மராட்டியர், முகம் மதியர்,பிரெஞ்சுக்காரர்,ஆங்கிலேயர், இந்திக்காரர் என அந்நியர் பலரிடம் தமிழகம் அடிமைப்பட நேர்ந்தது. அதே காலக்கட்டத்தில் போர்த்துகீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களர் என அந்நியரிடம் அடிமைப்பட்டது ஈழத் தமிழகம்.

வாள்முனையில் தமிழரை வென்றடக்க முடியாத ஆரியர் வஞ்சகம் நிறைந்த வர்ணா சிரம பண்பாட்டுப் படையெடுப்பின் மூலம் தமிழ் இனத்தைச் சாதிகளாகப் பிரித்துக் கூறு போட்டனர். தமிழ் மொழியின் சீரிளமைத் திறனைச் சிதைக்க முயன்றனர். தமிழர்களின் வாழ்வு சரிந்தது. வட மொழியின் மரணப் பிடியில் சிக்கித் தவித்த அன்னைத் தமிழை மீட்கப் போராடினார் மறைமலையடிகள். வருணாசிரமப் பழமைவாதப் பிடியில் சிக்கித் தவித்த தமிழரை மீட்டெடுக்கப் போராடினார் பெரியார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இருவரும் மேற்கொண்ட அயராத முயற்சிகளைப் பல அறிஞர்களும் தலைவர்களும் தொடர்ந்து மேற்கொண்டு தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட அரும்பாடுபட்டனர்.

ஆனாலும் இந்திய தேசியம் என்னும் மாயையில் மூழ்கிக் கிடந்த தமிழர்களை மீட்பது எளிதாக இல்லை. அதைப் போலத் திராவிட தேசியம் என இல்லாத தேசிய மாயையிலும் தமிழினம் சிக்கித் தவித்தது. சிங்களப் பேரினவாதப் பிடியில் சிக்கி ஈழத் தமிழரும் நலிந்தனர். இதற்கெல்லாம் தீர்வு காண தமிழ்த் தேசியம் என்ற மாமருந்தால் தான் முடியும் என்பதை உணரத் தமிழினம்தவறியது. மொழி அடிமைத்தனத்திலிருந்தும், இன அடிமைத்தனத்திலிருந்தும், விடுதலை பெற வேண்டுமானால் முதற்கண் நாம் யார் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். நாம் தமிழர் என்ற உணர்வு பெறுவோமானால் அரசியல் விடுதலை எளிதில் கிடைக்கும். அந்த அரசியல் விடுதலையைப் பெறுவதற்கான வழி என்ன? இந்தக் கேள்விக்கு விடை காணத் தமிழகத்திலும், தமிழீழத்திலும் எண்ணற்ற தலைவர்கள் முயன்றார்கள்.

இடைவிடாத அறப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனாலும் ஆதிக்கவாதிகளின் இராணுவ வலிமைக்கு முன்னால் அவைகள் வெற்றி பெற முடியவில்லை.‘தமிழன் தனது உயிரைத் தியாகம் செய்வதற்கு எப்போது தயாராகிறானோ அப்போது அவன் விடிவுகாலம் நோக்கி அடி எடுத்து வைக்கிறான். விடிவுக்கான ஒரே வழி இதுவே’ என்பதைத் தமிழினம் உணரத் தவறிற்று. ஆண்டாண்டு காலமாக ஊமையாய், ஆமையாய், அந்நியர்களின் அடிமையாய் அடங்கிக் கிடந்த தமிழர் வாழ்வில் மீண்டும் ஒரு பொற்காலம் பிறக்கும் நேரம் நெருங்கிற்று. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வில் துயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது. தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடத் துணிந்த புலித்தேவன்.

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்புசுல்தான் போன்றவர்கள் வீரமுடன் போராடியும் வென்றாரில்லை. தூக்குக் கயிற்றிலும் துப்பாக்கிக் குண்டிலும் சாவை எதிர்கொண்டார்கள். தமிழ் ஈழத்திலும் போர்த்துகீசியரை எதிர்த்துப் போராடிய பண்டார வன்னியனும் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டான். அதற்குப் பின் அந்நியரை எதிர்க்கும் துணிவைத் தமிழினம் அடியோடு இழந்தது என்றே கூறலாம். அதன்பின் தமிழினம் அடிமைத்தனத்திற்கு ஏற்ற இனமாக அந்நியரால் கருதப்பட்டது. இலங்கை, பர்மா, மலேசியா, இந்தோனேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்குப் படை எடுத்துச் சென்று அவற்றையெல்லாம் வென்ற டக்கிய இராசேந்திரசோழனின் பரம்பரையிலே வந்த தமிழர்கள் அதே நாடுகளுக்குக் கப்பல் கப்பலாக அடிமைகளாக ஆட்டு மந்தைகள் போல் ஓட்டிச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு தமிழினம் கூலி என்ற இழிவான சொல்லுக்கு உரிய இனமாக ஆக்கப்பட்டது. இந்த இழிவையும் பழியையும் துடைக்க யாராலும் முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழீழக் கடற்கரைச் சிற்றூரில் ஆர்ப்பரிக்கும் அலை யோசை நடுவே பிறந்த ஒரு தமிழன் வளரும் போதே இன உணர்வோடு வளர்ந்தான். மாசுபடிந்து கிடக்கும் மறத்தமிழினத்தின் பழியைத் துடைக்க உறுதி பூண்டான். ஆயுதம் தூக்குவதன் மூலமே சிங்கள வல்லரக்கரை நம்முடைய மண்ணிலிருந்து வெளியேற்ற முடியும் என முழங்கினான். இளைஞர்கள் பலர் அவருடன் கரம்கோர்த்தனர், புலிகள் உருவானார்கள். ‘சிறுபிள்ளைகளின் வெள்ளாமை வீடு வந்து சேருமா?’ எனக் கிண்டல் செய்தவர்கள் பலர்.

‘நீங்கள் துப்பாக்கியைத் தூக்கினால் அவர்கள் பீரங்கி கொண்டு வருவார்கள். என்ன செய்வீர்கள்?’ எனக் கெட்டிக்காரத்தனமாகக் கேட்டதாகக் கருதி, கெட்டிக்காரத்தனமாகப் பேசிவிட்டதாக நினைத்து சில தலைவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனாலும் அந்த இளம் புலி கொஞ்சமும் கலங்கவில்லை. உறுதியோடு தனது இலக்கை நோக்கி முன்னேறியது. 25 ஆண்டு காலத்தில் உலகம் வியக்கும் சாதனைகளை, அந்த வீர இளைஞன் தலைமையில் புலிகள் படைத்தார்கள். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா போன்ற வல்லரசுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களுடன் போராடிய சிங்கள இராணுவத்தை ஓடஓட விரட்டினார்கள். அவர்களுக்கு உதவி புரிய வந்த ஐந்தாவது பெரிய வல்லரசான இந்தியாவின் படையையும் தங்கள் மண்ணை விட்டு வெளியேறவைத்தார்கள்.

தமிழீழத்தில் பெரும் பகுதி இன்று சுதந்திர பூமியாக விளங்குகிறது என்றால் அதற்கு அந்த இளைஞன் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் செய்த அளப்பரிய தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே காரணமாகும். விவசாயக்கருவிகளைத் தூக்குவதைத் தவிர வேறு போர்க் கருவிகளைத் தூக்கி அறியாத சீன விவசாய இளைஞர்களை ஒன்று திரட்டி, சீனாவில் மாபெரும் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி, செஞ்சீனம் படைத்தார் மாவோ சேதுங். வியட்னாம் விவசாயிகளை வலிமை மிக்கவர்களாக மாற்றி பிரெஞ்சு, அமெரிக்க வல்லரசுகளின் கொட்டத்தை அடக்கினார் ஹோசிமின். வல்லரசுகளை வீழ்த்துவதற்கு மாவோ சேதுங், ஹோசிமின் ஆகியோருக்கு அன்று சோவியத் நாடு எல்லாவகையிலும் உறுதுணையாக நின்றது.

ஆயுதங்களைஅள்ளிக்கொடுத்தது. பிற உதவிகளையும் செய்தது. ஆனால் சின்னஞ்சிறிய தமிழீழத்தில் தனது இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியை மட்டுமே நம்பி, உலகத்தமிழர்களின் சிறுசிறு உதவிகளைப் பெற்று சாதனை வரலாறு படைத்திருக்கிறார் அருமைத்தம்பி பிரபாகரன். அவர் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்த தியாகங்களின் விளைவாக ஈழத் தமிழினம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினமே இன்று பெருமிதத்தில் உயர்ந்து நிற்கிறது. கூலியாக உழைக்க மட்டுமே தகுதி வாய்ந்தவன் தமிழன் என்ற இழிவைப் புலிகள் சிந்திய இரத்தம் துடைத்தது. தமிழர்கள் வீரமற்ற கோழைகள் என இகழ்ந்தவர் நடுநடுங்கப் புலிகளாகப்பாய்ந்து உயர்ந்து வீரத்தின் விளைநிலம் தமிழினமே என் பதை நிலைநாட்டியுள்ளனர்.

பிரபாகரனின் தலைமையில் புலிகள் பெற்றுள்ள இந்த இராணுவ வலிமை ஈழத் தமிழர்களுக்கு அரசியல் விடுதலையை மட்டுமல்ல – சமூக விடுதலையையும் பொருளாதார விடுதலையையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக என்றும் இல்லாத வகையில் நமது தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் உலகளாவிய உயர்வும் மதிப்பும் கிடைத்திருக்கிறது. தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதைப் போல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழர் வாழ்வில்பொற்காலம் படைக்கும் தலைவன் தோன்றியுள்ளான். அத்தகைய தலைவனே நமது தம்பி பிரபாகரன் ஆவார். அருமைத் தம்பியின் பொன்விழா கொண்டாடப்படும் இந்தவேளை தமிழினத்தின் வரலாற்றில் மீண்டும் ஒரு பொற்காலம் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையாகும். அவர் தலைமையில் தமிழினம் உலகில் சிறந்த இனமாக மீண்டும் மிளிரும் அறிகுறியும் நம்பிக்கையும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறது. நிறைவான நெஞ்சத்தோடு அவருக்குப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்துக் கூறுவோமாக.

தலைவர், தமிழர் தேசிய இயக்கம்,

தமிழீழப் பற்றாளர்,

தமிழகம்.

பழ.நெடுமாறன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s