தமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்

Posted on

தமிழீழத் தலைவர் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைக்கும் போதெல்லாம் எனது கருத்தில் மூன்று பெரியார்கள் தோன்றுவதுண்டு.

அவர்கள் முவரும் தனியே தோன்றுவதில்லை. அந்த மூவரும் ஒரே நேரத்தில் பிரபாவில் ஒருவராகத் தெரிகிறார்கள். இக்கட்டுரையில் அவர்களது வயதை அடிப்படையாக வைத்து அவர்களை வரிசைப்படுத்துகிறேன்.

1.மோசஸ்:

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, யூத மக்கள் அடிமைகளாக எகிப்து நாட்டில் வாழ்ந்தகாலம். அன்றைய எகிப்து பலமான, வளமான நாடு. தாழ்த்தப்பட்டது, கடினமானது, ஆபத்தானது என்று கருதப்பட்ட அத்தனை வேலைகளையும் அன்று அந்த நாட்டில் யூத மக்களே செய்து வந்தனர். அவர்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. மிருகங்ளைப் போல் நடாத்தப்பட்டனர். வறுமையிலும், வேதனையிலும் மிதந்தனர். இறைவன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, தூய மோசஸ் கனவில் தோன்றி, ‘உன் மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும்’, என்று கேட்டாராம். எவ்வளவோ இன்னல்களுக்கிடையே, எவ்வளவோ சஞ்சலத்துக்கிடையே, எவ்வளவோ ஏமாற்றங்களுக்கிடையே, எகிப்து மன்னனிடமிருந்து, எகிப்து இராணுவத்திடமிருந்து, எகிப்திய ஆதிபத்திய வாதிகளிடமிருந்து மோசஸ் யூத மக்களை விடுவித்தார் என்று விவிலிய நூல் விபரிக்கின்றது.

நமக்கு ஈழத்தமிழரின் சரித்திரம் தெரியும். பல நூற்றாண்டு காலம், இலங்கைத் தீவின் வடக்கிலும், கிழக்கிலும் அரசு அமைத்து, எல்லைகளைக்காப்பாற்ற இராணுவம் உருவாக்கி, ‘தேச வழமை’ என்ற சட்டத் தொகுப்புக்கு வடிவம் கொடுத்து, வரி விதித்து, மக்களைப் பாதுகாத்து, மக்கள் ஒரு குறையுமின்றி வாழ வழி செய்து, பரம்பரை பரம்பரையாக தமிழ் மன்னர்கள் ஆண்ட நாடு தமிழ் ஈழம். போத்துக்கீசர் ஆகட்டும், ஆங்கிலேயர் ஆகட்டும் தமிழ் அரசர்களின், தமிழ் வீரர்களின், வீரத்தையும் – விவேகத்தையும் – தியாகத்தையும் நேரில் பார்த்தார்கள். முன்னவர்கள் யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னனை, இந்தியாவின் கோவாவில் தூக்கில் இட்டதையும், பின்னவர்கள் கண்டியின் கடைசித் தமிழ் மன்னனை இந்தியாவின் வேலூரில் தூக்கிலிட்டதையும் வரலாறு எமக்கு கூறுகின்றது.

1800 முதல் 1946 வரை ஆங்கிலேயன் புத்திசாலித் தனமாக தமிழரின் திறமையைப் பயன்படுத்திக் கொண்டான். அன்று தமிழர் நிம்மதியாக உரிமைகளுடன் வாழ்ந்ததாக அறிகிறோம். பெப்ரவரி 48இல் ஆங்கில எஜமான் கப்பலேறியதும், அவன் இடத்தை சிங்கள எஜமான் கைப்பற்றிக் கொண்டான். ஈழத் தமிழர் இரண்டாந்தர குடிமக்களாக, அந்நியராக, அடிமைகளாக நடத்தப்பட்டனர். தமிழரின் வரிப்பணத்தில் சிங்களத் தெற்கு வளர்ந்தது. தமிழர் பகுதிகள் முன்னேற்றத்தைக் காணவில்லை. எங்கும் எதிலும் தமிழனுக்கு ஒரு நீதி, சிங்களவனுக்கு ஒரு நீதி என்று ஆனது. தமிழனின் கூக்குரல், தமிழனின் அமைதிப்போராட்டங்கள் சிங்களவரின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தையும் கவரவில்லை.

ஈழத்தமிழ் சகோதரிகளின் துன்பம், துயரம், வேதனை, கண்ணீர் உலகத் தமிழர்களை மிகவும் பாதித்தது. இந்த வேதனைகளுக்கெல்லாம் ஒரு முடிவேயில்லையா? தமிழரின் நேர்மையான கோரிக்கைகள் உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் இல்லையா? தமிழர்கள் இப்படியே அழியவேண்டியதுதானா? அறிஞர் அண்ணா 1961 இல் எழுதியது போல “நாமெல்லாம் ஒன்றும் செய்ய முடியாமல் கையைப்பிசைந்து கொண்டு இருக்க வேண்டியதுதானா” என்று தவித்தோம், தடுமாறினோம், தள்ளாடினோம். அன்று எகிப்து நாட்டில் வாடிய யூத மக்களுக்கு ஒரு மோசஸ் கிடைத்தது போல திக்குத் திசை தெரியாமல் திண்டாடிய தமிழருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக வந்து உதித்தவர்தான் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

2. அண்ணல் காந்தி:

சரி பிரபாவை மோஸசோடு ஒப்பிடலாம். ஆனால் காந்தியுடன் எப்படி ஒப்பிடுவது. அடிகள் அகிம்சை வீரர். பிரபா வன்முறையாளர் ஆயிற்றே என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அவர்கள் காந்தியாரின் கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.‘எவனோ ஒரு காமுகன் என் மனைவியின் கற்புக்கோ, எனது மகளின் கற்புக்கோ குந்தகம் விளைவிப்பான் என்றால், அவன் மீது வன்முறையைப் பயன்படுத்த நான் தயங்கமாட்டேன். அப்படி வன்முறையைப் பயன்படுத்தி, எனது குடும்பத்தினரை என்னால் பாதுகாக்க முடியவில்லை என்றால் நானொரு கோழை என்று பொருள்’ என்று அண்ணல் காந்தி எழுதியுள்ளார். இப்பொழுது கூறுங்கள் பிரபாவை, காந்தியடிகளுடன் ஒப்பிடுவது தவறா?,

திருமிகு பிரபாகரன் வன்முறையை, வன்முறைக்காகத் தேர்ந்தெடுத்தவர் அல்ல. வன்முறையை அவர் மீது திணித்தவர்களே சிங்களவர்கள்தான். அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரை சிங்களக்காடையர்கள் தாக்கினார்கள். அறவழிப் போராட்டத்தில் பங்குபற்றிய தமிழரை சிங்களப் போலிசாரும் இராணுவத்தினரும் தாக்கினர். சிங்களவருக்கு தெரிந்தது வன்முறைதான். அதே முறையை அவனுக்கே பதிலாகத் தந்தார் பிரபா. அவ்வளவு தான். அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30இல் சுட்டுக் கொல்லப்பட்டபின் அன்றைய தமிழ் நாட்டின் மிகச்சிறந்த பாடகர் தியாகராஜ பாகவதர் ஒரு பாடல் பாடினார். “சேய்க்கு வரும் நோய்க்கு தாய் மருந்து உண்பார் போல் தாய் நாட்டுக்கு தொல்லை கேட்டுதான் உண்ணாது இருப்போருக்கு கைமாறு செய்வதுண்டோ” என்று ஒரு பாடல் பாடினார். அண்ணலைப் போலவே பிரபாவும் அவரது மனைவி மக்களும், தமிழ் ஈழத்துக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் செய்துள்ள தியாகங்கள் எத்தனை எத்தனையோ!

3. ஜெனரல் சார்ல்ஸ் டிகோல்

(charales de gaulle 1890-1970) பிரான்ஸ் நாட்டின் நம்பிக்கை நாயகன் ஆன இவரை நிறையப் பேருக்கு தெரியாது. 1940 யூன் மாதத்தில் பிரான்ஸ் நாடு, நாஜி ஜெர்மனுடன் போரில் வெற்றி பெற இயலாத நிலைமை. வயதான புகழ்மிக்க மார்ஷல் (Marchal) ஜெர்மனியிடம் சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்து அவ்விதமே சரணாகதி அடைந்தார். அன்று ஏறத்தாழ 95 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் அம்முடிவை ஏற்றனர். ஆனால் ஐம்பது வயதே ஆன, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஜெனரல் டிகோல், “பிரான்சு ஒரு பெரிய வல்லரசு. ஒரு வல்லரசு, பிரான்சு போன்ற வல்லரசு, ஒரு போரில் தோற்பதில்லை. நமக்கு உலகம் முழுவதும் குடியேற்ற நாடுகள் (colonies) உள்ளன.

அவற்றின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் இப்போரின் முடிவில் பிரான்சு வெற்றி பெற்ற நாடுகளில் ஒன்றாக விளங்க முடியும்” என்று சூளுரைத்து தன்னந் தனியனாய் இங்கிலாந்து சென்று தேசபக்த பிரெஞ்சுக்காரர்களை ஒன்று திரட்டி சிறிது சிறிதாக ‘சுதந்திர பிரான்சை’ உருவாக்க ஒரு புதிய இராணுவத்தை உருவாக்கி, பல குடியேற்ற நாடுகளை தன் அணியில் சேர்த்து, பிரெஞ்சு மக்களிடம் ஜெர்மன் எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்து, வளர்த்து 1944 ஆகஸ்ட் 25இல் அவரது பிரெஞ்சு இராணுவத்தின் துணையுடன் பாரிஸ் நகரை விடுவித்து 44 இறுதியில் பிரான்சு முழுவதையும் விடுவித்தார்.

அதன்பின் அவரது படையினர் முன்பு ஆக்கிரமித்த ஜேர்மனியின் ஒரு பகுதியை வென்று 1945 மே 8இல் பிரான்சு நாட்டை வெற்றிபெற்ற நாடுகளில் ஒன்றாக உலகத்துக்கு காட்டினார் டி கோல். டி கோலுக்கும் – பிரபாவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளைக் காண்பதுண்டு. இதோ ஒரு உதாரணம். சமீபத்தில் ஜெனரல் டிகோலின் மகன் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். “1940 முதல் 45 வரை சுதந்திரப் பிரான்சின் இராணுவம் கலந்து கொண்ட எல்லாப் போர்களையும் எனது தந்தை தான் திட்டமிட்டு வழிநடத்தினார்” என்று அதில் எழுதியுள்ளார். அதே போன்று 1983முதல் தமிழீழ விடுதலைப் போரை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரபா தான் திட்டமிட்டு வழிநடத்துகிறார் என்பது நாம் எல்லாம் அறிந்த உண்மை.

அன்று தன்னந் தனியராய், தேசபக்தியால், பிரான்சை மீட்டெடுப்பேன் என்று சூளுரைத்த டிகோல் பிரான்சை மீட்டுக் காட்டினார். இன்று தன்னந் தனியராய், தேசபக்தியால், சுதந்திர தமிழீழத்தைப் பெற்றெடுப்பேன் என்று உறுதியேற்ற பிரபா தமிழீழத்தைப் பெற்றுத் தருவார் என்று நம்புகின்றோம். 50 வயது காணும் பிரபா, இன்றைய தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம். பேராசிரியர் சுப.வீ கூறுவது போல, “அவர் நமக்கெல்லாம் வாராது வந்த மாமணி”. தமிழினம் வெகு காலமாய் எதிர்பார்த்து, காத்திருந்த தலைவர். வழிகாட்டி. அவர் வாழுங்காலத்தில் வாழ்வதே ஒரு பெருமை என்று நம்புவர்களில் நானும் ஒருவன்.

அவர் நீண்டகாலம் வாழட்டும். வாழ்க வேலுப்பிள்ளை பிரபாகரன்!

முன்னாள் கல்லூரிஆசிரியர்,

எழுத்தாளர்,

பிரான்ஸ்.

செவாலியர்’ யூலியா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s