துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு” பேசுகிறார் பிரபாகரன்

Posted on

நாளாந்த வாழ்வின் கடமைகளும், கவலைகளும், சம்பந்தமில்லா மனிதர்களும் நீதிக்கான வேட்கையிலிருந்து நம்மை தணிக்கின்றன. இச்சூழல்வினைக்கு நானும் விதி விலக்கல்ல. அதிகாலை எழுந்து நடக்கும்போது இருக்கிற உணர்வெழுச்சியும் வேகமும் அந்தியாகும் போது இருப்பதில்லை. ஆயினும் ஒருசில நிகழ்வுகள் மட்டும் நம்மை நிம்மதியாக இருக்க முடியாமற் செய்யும், எண்ணும்போதெல்லாம் கண்ணியச் சீற்றம் கிளர்த்தும். கடந்த சுமார் ஐம்பது நாட்களாய் என்னை கனன்றுகொண்டே இருத்தி வைக்கும் நிகழ்வு மே, 14, 15, 16 நாட்களில் முல்லைத்தீவு பகுதியில் பாதுகாப்புத்தேடி ராணுவக் கட்டுப் பாட்டு பகுதிகளுக்குள் வந்த பல்லாயிரக் கணக்கான தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவம் ஆடைகள் களைந்து, நிர்வாணமாய் கைகளை உயர்த்திக்கொண்டு வரச்செய்த கொடுமை.

சரியோ, தவறோ… எந்த வரலாற்று- பண்பாட்டுக் காரணங் களாலோ தெரியவில்லை… பெண்களை பொத்திப் பாது காத்து வளர்க்கும் சாதி இந்த தமிழ்ச்சாதி. உயிரினும் மானம் பெரிதெனக் கருதி வாழ்ந்த சாதி. தாய்மையை தெய்வீகமாய் போற்றிய பண்பாடுடைத்த சாதி. அப்படியான தொரு மக்கள் இனத்தின் அன்னையர்களும், நங்கை நல்லாரும், மாணவ வயதிலான பிள்ளைகளும்கூட அக்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பதை நினைக்கும் போதெல்லாம் இரத்தம் சூடாகிறது. இயேசுபிரான் சொல்லித் தந்த “பகைவனுக்கும் நேசம் தா…’, “வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தையும் காட்டு’ போன்ற உன்னத பாடங்கள் மறந்து “பழிதீர்’ என்ற வெறியே பிறக்கிறது. இந்த உணர்வுகள் சரியா தவறா என்றும் தெரியவில்லை.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகழ்பெற்ற சொல்லாடல்களில் ஒன்று- “துன்பத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு’. எனது நேர்காணலின் போது கிளிநொச்சி அரசியல் அலுவலக வளாகத்தின் வேப்பமர நிழலில் அமர்ந்து நீண்டநேரம் உரையாடினார். அப்போது அவரிடம் சொன் னேன்: “”துன்பத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக்கொடு என்ற உங்களின் சொல்லாடல் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் ஆட்சியாளர் கள் செய்கிற குற்றத்திற்காய் அப்பாவி மக்களை தண்டிப்பது பழியும், பாவமுமல்லவா?” என்றேன்.

“”ஒருபோதும் சிங்கள மக்கள் அழிய வேண்டுமென நாங்கள் நினைத்ததில்லை. அப்படி நினைக்கவும் மாட்டோம். எல் லோரும் மனிதர்கள்தானே. சிங்கள ராணுவம் தமிழர்களை கண்மூடித்தனமாக அழிப்பது போல் நாங்களும் சிங்கள மக்களை அழிக்கவேண்டுமென்று முடிவெடுத்தால் தினம் ஆயிரம்பேரை கொல்ல முடியும். எங்களுடைய ஒரு தாக்குதல்கூட அப்பாவி மக்களை இலக்கு வைத்து செய்யப்பட்ட தில்லை. ராணுவ-அரசியல் இலக்குகளை தாக்கும்போது சில நேரங்களில் பொதுமக்கள் சிலரும் பலியாகிவிடுகிறார்கள். அதற்காக மிகவும் வருந்துகிறோம். நீங்கள் ஒரு கணக்கெடுத்துப் பாருங்களேன்… சிங்கள ராணுவத் தாக்குதலில் ஆயிரம் தமிழர்கள் ஒருமாதம் செத்திருந்தா, எங்கட தாக்குதல்களில் பத்து அப்பாவி சிங்கள மக்கள்கூட செத்திருக்கமாட்டார்கள்.”

தொடர்ந்து பேசிய பிரபாகரன் சொன்னார் : “”கொழும்பிலெ இன்டைக்கு தமிழ் சனம் பாதுகாப்பா தலை நிமிர்ந்து நடக்குதென்டா அது புலியளாலத்தான். தமிழரெ அடிச்சா புலி திருப்பி அடிக்கு மெண்டு இப்போ அவையளுக்குத் தெரியும். 1983-க்குப் பிறகு இன்றுவரைக்கும் தமி ழருக்கெதிரான கலவரம் எதுவும் நடக்கே லெதானே? சிங்களவன் திருந்தியிட்டா னெண்டு நினைக்கிறியளா? இல்லெ. அடிச்சா புலியள் கட்டாயம் திருப்பி அடிப்பினு மென்ட பயம். அந்த பயம்தான் தமிழருக்கு இன்றிருக்கிற பாதுகாப்பு.”

போரின் இறுதி நாட்களில் தினம் சராசரி 200 தமிழ்மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, கொழும்பு நகரில் பொதுமக்களை குறிவைத்து பெரிய தாக்குதல்களை புலிகள் நடத்துவார்களென்ற அச்சம் இருந்தது. குறிப்பாக மே-15 அன்று காயம்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் புல்டோசர்கள் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட கொடுமை நடந்தபின் அத்தகையதோர் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அப்படி எதுவும் நடந்து விடக்கூடாதென நான் பிரார்த்தித்த அதேவேளை -நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை அறிய முயன்றதும் உண்மை. மே 15-ம் தேதி இது குறித்து, அப்படி எதுவும் தயவுகூர்ந்து செய்து விடாதீர்கள் என்ற வேண்டுதலோடு புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர் கூறினார், “”ஃபாதர்… இன்றுகூட புலிகள் நினைத்தால் சிங்கள ராணு வம் கொல்லும் தமிழரைவிட பத்து மடங்கு சிங்களவரை அழித்தொழிக் கும் வளங்கள் புலிகளிடம் உள்ளன. ஆனால் அப்படி எதுவும் செய்யக்கூடாதென தலைவர் மிகவும் கண்டிப்பான உத்தரவிட்டுள் ளார்.”

உண்மையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் கொழும்பு நகரில் பெரிய தாக்குதலொன்று நடத்த வேண்டுமென்ற அழுத்தம் பிரபாகரன் மீது தளபதியர்களால் தரப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் சொன்னதாகக் கூறப்படுவது : “”தமிழ் மக்களுக்கான நீதியை வரலாற்றுக்கும், உலக சமுதாயத்திற்கும் விட்டுவிடுகிறேன். புலிகள் இயக்கம் அப்படியொரு செயலைச் செய்து அவனுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையென்டு காட்டவேண்டாம்” என்றிருக்கிறார்.

வேப்பரமர நிழலில் நான் கேட்ட “சென்சிடிவ்’வான கேள்விகளில் ஒன்று- “”மாற்றுக் கருத்துடைய தலைவர்களை அழித்தொழிக்கும் புலிகளின் கொள்கை ஏற்புடையதல்ல. அதிலும் அரசியல் ரீதியாகச் செத்துப் போனவர்களை யெல்லாம் ஏன் மீண்டும் நீங்கள் கொல்ல வேண்டும்? இந்த அணுகுமுறையை மாற்றக்கூடாதா?” என்றேன். இக்கேள்வியை சற்று தயக்கத்தோடுதான் நான் கேட்டேன். ஆனால் துளியளவுகூட அவர் கோபமோ, அதிருப்தியோ காட்டவில்லை. “”எங்களைப் பொறுத்தவரை சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஓர் இன அழித்தல் போரை நடத்தி வருகிறது. அந்த அரசுடன் இணைந்து செயல்படு கிறவர்கள் அனைவருமே தமிழருக்கெதிரான போரில் பங்குதாரர்கள் ஆகிறார்கள். அவ்வகையில் அவர்களும் எமது அரசியல்-ராணுவ எதிர் தாக்குதலுக்கெதிரான இலக்குகளே. அதேவேளை புலிகள் இயக்கமும் மாறிக்கொண்டுதான் வந்திருக்கிறது. முன்பிருந்த இறுக்கம் இப்போது இல்லை. வளர்ச்சிப்பாதையில் நாங்களும் பலவற்றை கற்றுக்கொண்டு எங்களை சரிப்படுத்திக்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

விடுதலைப்புலிகளை விமர்சிக்கிறவர்கள் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்ட- “”வளர்ச்சிப் பாதையில் நாங்களும் பலவற்றை கற்றுக்கொண்டு எங்களை சரிப்படுத்திக்கொள்ளும்” -தன்மையை காண மறுக்கிறார்கள். அவர்களது பழைய சில தவறுகளின் அடிப்படையிலேயே இன்றும் அவர்களைத் தீர்ப்பிடுகிறார்கள். எனது நண்பரும் இப்போது கனடா மருத்துவ பல்கலைக் கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றி வருகிறவருமான கலாநிதி சந்திரகாந்தன் ஒருமுறை என்னிடம் கூறிய நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. சந்திரகாந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1995 இடப்பெயர்வின்போது உள்நாட்டு அகதியாகி, பின் லண்டன் சென்று, அங்கிருந்து பின்னர் கனடா போனவர். கொழும்பிலிருந்து லண்டன் செல்லும் பயண வழியில் மணிலா நகருக்கு என்னை நேரில் பார்த்து நன்றி சொல்ல வந்திருந்தார். இவரும் வானொலியில் என் குரலைக் கேட்டு நான் 50, 60 வயதுக்காரராக இருப்பேன் என்ற நினைப்பில் வந்தவர். வானொலியிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே இதுதான். அது ஒரு குருட்டு மீடியம். குரல்தான் பொறி. காதோடு வந்து கதைபேசி வசியம் செய்யும். குரலுக்குரியவன் கறுப்பா, வெளுப்பா, பல் விளக்கினானா, தலை வாரியிருக்கிறானா, உடலசைவுகள் நயமாக இருக்கிறதா, பார்க்க லட்சணமாய் இருக்கிறானா போன்ற அக்கறை களெல்லாம் வானொலிக்கு இல்லை. கருத்தும், குரலுமே அங்கு கதாநாயகர்கள்.

10, 15 நிமிடங்களுக்கு சந்திரகாந்தனால் என்னிடம் எதுவுமே பேச வரவில்லை. அப்போது 1997. நான் மாணவத் தோற்றம் மாறாதிருந்த காலம். கால்பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டி ருந்தபோதுதான் சந்திக்க வந்தார். வாசகர்கள் என்னிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள விரும்பி னால் அது அன்றாட உடற்பயிற்சி. அதிகாலை 4.30க்கு எழுந்துவிடுவேன். விட்டேத்தியாய் ஒன்றரை மணி நேரம் நடப்பேன். பிரபஞ்சத்தின் ஆதார ஸ்ருதியோடு ஒத்திசைவாய் இணைந்திருப்பது போன்ற உணர்வு அக்காலைப் பொழுதுகளில் கிட்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாய் என் எடையை 68 கிலோவிலும் இடையை 34 இன்ச் சிலுமாய் வைத் திருக்கிறேன். ஆதலால் இதுவரை சர்க்கரை நோயோ, கொழுப்போ, ரத்த அழுத்த மோ எதுவும் இல்லை. தினம் சுமார் 15 மணி நேரம் வரை களைப்பின்றி வேலை செய்ய முடிகிறது.

இரவு உணவில் நானும் சந்திரகாந்தனும் நண்பர்களானோம். கணக்கில்லாமல் முதுகலை பட்டங்களும், முனைவர் பட்டங்களும் படித்து வைத்திருக்கிற நடமாடும் பல்கலைக்கழகம் அவர். என்னை கையோடு லண்டனுக்கு கூட்டிச் சென் றார். பி.பி.சி.தமிழோசையின் ஆனந்தி அக்கா அவருக்கு நண்பர். என்னை பி.பி.சி.யில் ஈழ மக்களின் அவலம் பற்றி பேசவைக்க வேண்டு மென்பது சந்திரகாந்தனின் அவா. லண்டன் பி.பி.சி. நிலையம் சென்றபோது ஆனந்தி அக்காவும் அருட்தந்தை என்ற பிம்பத்தை “தாடி, வெள்ளை அங்கி, கனிந்த முகமென’வெல்லாம் எதிர்பார்த் திருந்திருக்கிறார். நானோ கல்லூரி மாணவன்போல் சந்திரகாந்தன் அருகில் நின்றிருந்தேன். “”எங்கெ பாதிரியார்?” என ஆனந்தி அக்கா கேட்க… “”இவர் தான்” என சந்திரகாந்தன் என்னைக் காட்ட… முதலில் நம்ப மறுத்த அவர், “”இந்த போப்பாண்ட வரை என்ன செய்யிறது… இப்படி சின்ன பொடியனையெல்லாம் அவர் எடுத்துக்கொண்டா எங்கட பிள்ளையளுக்கு எங்கெ போய் மாப் பிள்ளை தேடுறது…” என்று கலாய்த்தது இன்னும் மிச்சமிருக்கும் இதமான சில நினைவுகள்.

பி.பி.சி. கேன்டீனில் மதிய உணவில் இணைந்த போது சந்திரகாந்தனும் ஆனந்தி அக்காவும் பேசிய வற்றுள் மறக்க முடியாதது இது: “”புலிகள் தவறுகள் பல செய்திருக்கினும்தான். அதேவேளை, வளர வளர அவர்கள் மாறிக்கொண்டு வருகின்றனர். ஆனால் உலகமோ அவர்களை பழைய தவறுகளின் அடிப்படையில்தான் தீர்ப்பிடுகிறது. “”இது நூற்றுக்கு நூறு சதம் உண்மை. தமிழகத்தின் சில எழுத்தாளர்கள்கூட புலிகளின் பழைய தவறுகளை இப்போதும் முழங்கி வருகிறார்கள். ஆனால் சிங்கள -பௌத்த பேரினவாதம்தான் பிரச்சனையின் வேர்மூலம் என்பதைக்கூட நமக்கு சுட்டிக்காட்ட இவர்கள் தயங்கும் போதுதான் நமக்கு சந்தேகம் வருகிறது.”

(நினைவுகள் சுழலும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s