தலைவர் பிரபாகரன் தொடர் 12

Posted on

‘ஐயோ, உயிருக்கு ஆபத்தில்லையே?’ என்றுதான் முதலில் கேட்டிருக்கவேண்டும். ஆனால் பிரபாகரன் கேட்டது, `ஐயோ, யார் செய்தது?’

அவருக்குத் தெரியும். அத்தனை எளிதில் போகக்கூடிய உயிர் இல்லை அது. ஏனெனில் சதாசிவம் கிருஷ்ணகுமார் என்கிற வெங்கிட்டு என்கிற கிட்டுவின் உயிர், ஏழு கடல் தாண்டி, ஏழு மலைதாண்டி எங்கோ ஒரு ரகசிய இடத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அசுரனின் உயிர் போல ஈழ விடுதலை என்னும் பெருங்கனவுக்குள் புதைத்துவைக்கப்பட்டிருப்பது. சற்றும் நிகரற்ற போராளி. அப்பழுக்கே சொல்லமுடியாத அர்ப்பணிப்பு உணர்வின் சொந்தக்காரர். ஒப்புவமையற்ற சுறுசுறுப்பு. ஓயாத களப்பணி. புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரபாகரனுக்கு கிட்டு ஒரு முக்கியத் தளபதி.

அவருக்குத்தான் ஆபத்து என்று செய்தி வந்திருந்தது. அன்றைக்கு மார்ச் 31-ம் தேதி. 1987-ம் வருடம். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்கு வீதி வழியே கிட்டுவின் மிட்சுபிஷி லான்ஸர் போய்க்கொண்டிருந்தது. மிகச் சரியாகக் குறி பார்க்கப்பட்டு எங்கிருந்தோ வீசப்பட்ட கையெறி குண்டு, காரில் மோதி வெடித்தது. எழுந்த பெரும் சத்தமும் சூழ்ந்த கரும் புகையும் சில வினாடிகள் பிராந்தியத்தை நிலைகுலையவைத்துவிட்டன.

சில வினாடிகள்தாம். ஐயோ, உள்ளே இருப்பது கிட்டுவல்லவா? பாய்ந்து கதவைத் திறந்து அவரை வெளியே இழுத்தபோது எங்கிருந்து என்று தெரியாமல் ரத்தம் பொங்கிக்கொண்டிருந்தது. கிட்டுவை மருத்துவமனைக்கும் தகவலைப் பிரபாகரனுக்கும் உடனே உடனே அனுப்பிவிட்டு, யாழ்ப்பாணத்து மக்கள் கவலை தின்று காத்துக்-கிடந்தார்கள்.

அப்போதுதான் பிரபாகரன் கேட்டார். யார் செய்தது?

பிரச்னை. பெரிய பிரச்னை. மாபெரும் அரசு இயந்திரத்துக்கு எதிராக ஒரு யுத்தத்தை திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், இயக்கத்துக்கு உள்ளே இம்மாதிரியான பிரச்னைகள் எழுவது ஆபத்து. ஆனாலும் கிருமிகள் போல விஷ எண்ணங்கள் சில மனங்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. பதவிப் போட்டி. அதிகாரப் போட்டி. ஆளுமையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற ஒப்பீடு.

மாத்தையாதான் காரணம் என்று இயக்கத்தில் பலபேருக்குச் சந்தேகம். விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாம் நிலைத் தளபதியும் பிரபாகரனின் மிக நெருங்கிய சகாவுமான கிட்டுவின் கார் மீது வேறு யார் குண்டு வீசத் துணிய முடியும்? தவிரவும் கிட்டுவைப் பகையாளி என்று கருத, இயக்கத்தில் வேறு யாரும் கிடையாது.

ஒரு வீரனாகக் களத்தில் கிட்டுவின் இருப்பும் செயல்பாடும் மிகத் தீவிரமானது. அவருக்கு பிரபாகரன் தான் ராணுவ குரு. துப்பாக்கி பிடிக்கக் கற்றுக்கொண்டது அவரிடம்தான். ஒரு சமயம் ஊராட்சித் தேர்தல் ஒன்று நடந்தது (1983). கண் துடைப்புத் தேர்தல். அதனைப் புறக்கணியுங்கள் என்று புலிகள் மக்களிடம் சொல்லியிருந்தார்கள். இருப்பினும் அரசாங்கம் தேர்தல் வேலைகளில் மும்முரமாகவே இருந்தது. ராணுவப் பாதுகாப்-புடன் வாக்குச் சாவடிகளில் தேர்தல் தினம் விடிந்தபோது, கிட்டு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச் சாவடிகளுக்குப் போனார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.

கிட்டு பயின்றது கெரில்லா தாக்குதல்தான். ஆனாலும் அவருடைய வேகம் பிற போராளிகளால் எளிதில் கடைப்பிடிக்கக்கூடியதல்ல. பிரபாகரனுக்குத் தனிப்பட்ட முறையில் இதில் மிகப்பெரிய பெருமித உணர்வு உண்டு. ஒரு சுத்த வீரனைப் பெறுவதைக் காட்டிலும் தலைவனுக்கு வேறு பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியாது.

அதனால்தான் துடித்துப் போனார். மருத்துவமனையிலிருந்து வந்த தகவல் விரும்பக்கூடியதாக இல்லை. கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் ஒரு கால் போய்விட்டது.

1979-ம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கிட்டுவுக்கு, பிரபாகரன் இரண்டு விஷயங்கள் கற்றுக்கொடுத்தார். முதலாவது, யுத்தம் செய்வது. அடுத்தது, சமையல் செய்வது.

`வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம். சாப்பாட்டு ருசி ஒழிந்தால்தான் விடுதலைக்கான யுத்தத்தில் முழுக்கவனம் செலுத்தமுடியும்’ என்பார் பிரபாகரன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அத்தனை பேருக்குமே சமைக்கத் தெரியும். அது அங்கே ஒரு கட்டாயப்பாடம். என்னத்தையாவது போட்டுச் சமைத்து கூடி உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் எப்போதும் உண்டு.

சென்னையில் இருந்த காலத்தில் ஒருநாள் கிட்டு, `இன்றைக்கு எனக்கு இங்கே சாப்பாடு இல்லை. வெளியே ஒரு புரட்சி செய்யப்போகிறேன்’ என்று தோழர்களிடம் அறிவித்தார். என்னவோ விவகாரம் என்று பிரபாகரனுக்குப் புரிந்துவிட்டது. `நண்பா ஜாக்கிரதை’ என்று மட்டும் சொன்னார். காத்திருந்தார்கள். கிட்டு தனது அன்றைய உணவு கோட்டாவான பத்து ரூபாயுடன் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிக்கொண்டார். குளித்துவிட்டு வேட்டி கட்டிக்கொண்டார். மேல் சட்டை அணியாமல் நாலணாவுக்கு ஒரு பூணூல் வாங்கிப் போட்டுக்கொண்டு நெற்றியிலும் கழுத்திலும் இரு தோள்களிலும் வயிற்றிலும் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டார். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ருத்திராட்ச மாலை வாங்கி அணிந்துகொண்டு, `சரி வருகிறேன்’ என்று புறப்பட்டு வெளியே போனார்.

அவர் நேரே போன இடம் ஒரு மிலிட்டரி ஹோட்டல். இயக்கத் தோழர்கள் சிலர், என்ன நடக்கிறது என்று பார்க்க அவருடன் வந்து உட்கார, கிட்டு சர்வரிடம் திட்டவட்டமாகத் தனது ஆர்டர்களை அளித்தார். மட்டன் பிரியாணி. முட்டை பொடிமாஸ். கோழிப் பொரியல்.. வேறென்ன இருக்கிறது?

சுற்றிலும் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த யாரைப்பற்றியும் கவலைப்படாமல் வக்கணையாக ருசித்துச் சாப்பிட்டு முடித்து பில்லுக்குப் பணம் கொடுத்துவிட்டு, அந்த ஹோட்டலின் உணவுத்தரத்தையும் பாராட்டிவிட்டு பெரிதாக ஓர் ஏப்பம் விட்டபடி எழுந்து வந்தார் கிட்டு.

அந்தணர்களைக் கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. ஓர் அந்தணர் மிலிட்டரி ஹோட்டலுக்கு வந்தால் மற்றவர்கள் எத்தனை பதற்றமாகிவிடுகிறார்கள் என்று பார்த்தீர்களல்லவா? தோற்றத்துக்கும் செயல்பாடுகளுக்கும் நாமே நெருங்கிய தொடர்பை உண்டாக்கிவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார். விழுந்து விழுந்து சிரித்தார் பிரபாகரன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்தவர் பண்டிதர். 1985-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அவர் ஒரு தாக்குதலில் மரணமடைய, அந்தப் பொறுப்புக்குக் கிட்டுவை அமர்த்தினார் பிரபாகரன்.

கிட்டு இயக்கத்துக்கு வந்த சமகாலத்தில்தான் மாத்தையாவும் வந்தார். மாத்தையா பருத்தித்துறையைச் சேர்ந்தவர். அவரும் பிரபாகரனிடம் போர்ப்பயிற்சி பெற்று வளர்ந்தவர்தான். யாழ்ப்பாணத்துக்குக் கிட்டு என்றால், வன்னிக்கு மாத்தையா. சம அந்தஸ்துதான். சம பொறுப்புதான். ஒரே பதவிதான். ஆனாலும் கிட்டுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அவர் நடத்திய தாக்குதல் சம்பவங்கள். அவற்றில் கிடைத்த வெற்றிகள். பிரபாகரனுக்கு அவர் மீதிருந்த அன்பு. இயக்கத்தோழர்கள் மத்தியில் வளர்ந்த மரியாதை. யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் பரவிய புகழ், இந்தியத் தொடர்புகள், கிட்டுவின் வாசிப்பு ஆர்வம், உலக அறிவு, அரசியல் அறிவு, எல்லாவற்றுக்கும் மேலாக அவரது அர்ப்பணிப்புணர்வு..

இன்னது என்று சொல்லமுடியாது. மாத்தையாவுக்கு கிட்டுவின் வளர்ச்சி பிடிக்காது போயிற்று. செய்தது மாத்தையாதான் என்று அப்போது தெரியாவிட்டாலும், அந்த கார் குண்டு வீச்சு ஏதோ ஓர் அபாயத்தின் ஆரம்பம் என்று பிரபாகரன் மனத்தில் பட்டது. உமா மகேஸ்வரன் விவகாரம் முடிந்து, அதன்பின் தன் காதல் திருமண களேபரங்கள் முடிந்து, இயக்கத்தில் பலர் பிரிந்து, போராடி ஒன்று சேர்த்து, இழுத்துக்கட்டி ஒருவழியாக சுதந்திரப் போரில் முழுக் கவனம் குவிக்க ஆரம்பித்த தருணத்தில், இது பேரபாயம் என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஓலமிட்டது.

அந்த அபாயத்தின் அதிர்வு அத்துடன் நிற்காமல் கருணா போன்றோரின் கலகங்கள் வரை நீண்டது புலிகளின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாவது பாகம். அந்த இரண்டாவது பாகத்தில் பிரபாகரனின் களப்பணியும், சிந்தனையும் எப்படி இருந்தது?

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நாம் மீண்டும் களத்தில் சந்திப்போம்..

(முதல் பாகம் முற்றும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s