தலைவர் பிரபாகரன் தொடர் 10

Posted on

ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தேவதைகளாலும் சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள்! திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள். வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது. தொழில் போனது. உறவுகள், தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.

தறிகெட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இல்லை அது. உட்கார்ந்து யோசித்து திட்டமிட்டுச் செய்யப்பட்ட கலவரம். பீடாதிபதி ஜெயவர்த்தனா ஆசீர்வாதமளித்திருந்தார். அவர் அதிபர். கண்ணசைத்தால் போதும். கலவரதாரிகள் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிடுவார்கள். ஒரு கையில் வாக்காளர் பட்டியல். மறுகையில் ஆயுதம். வீடு வீடாகத் தேடிச் சென்று கொல்வது ஒரு சுகம். இழுத்துப் போட்டு எரிப்பது ஒரு சுகம். குழந்தைகள் கதறுகின்றனவா? தூக்கிப் போட்டு கீழே விழும்போது சுட்டுத்தள்ளு. பார்க்கும் மக்கள் வாயடைத்து நிற்பார்கள். கொத்தாகச் சுட்டுத்தள்ள அதுவே தருணம். வீணாக்காதே. ஓடுகிறார்களா? பிடித்து நிறுத்திக் கத்தியைச் சொருகு. கடைகளுக்குள் புகுந்துகொண்டு ஷட்டரை இறக்கிவிடுகிறார்களா? விட்டுவிடு. அவர்களுக்கு உள்ளேயே ஜீவ சமாதியளித்துவிடலாம். ஒரு கடைக்கு ஒரு கேன் பெட்ரோல் போதும். நீ புகைக்காதவனாயினும் பரவாயில்லை. பாக்கெட்டில் எப்போதும் தீப்பெட்டி இருக்கட்டும்.

இதெல்லாம் காவியத்துக்குப் பாயிரம் போல. மேல் பேச்சுக்கு `விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம்’ என்று சொல்வார்கள். ஏய், பார்த்தாயா? இங்கே புலிகள் இருக்கிறார்களா? மரியாதையாகச் சொல்லிவிடு. பிரபாகரன் இங்கேதான் பதுங்கியிருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். எங்கே?

ஊர் ஊராக ராணுவ டிரக்குகள் போகும். இறங்கி, எதிர்ப்படுபவர்களைப் பிடித்து விசாரிப்பார்கள். அடித்துத் துவைத்துத் தூக்கிப் போடுவார்கள்.

அப்படித்தான் ஜூலை 15-ம் தேதி மீசாலை கிராமத்துக்கு ராணுவம் போனது. இரண்டு ஜீப்புகள், ஒரு மினி பஸ், பின் தொடரும் ஒரு பெரிய ராணுவ டிரக். நிறைய வீரர்கள். அனைவரிடமும் ஆயுதங்கள். சுற்றி வளைத்து நின்றவர்கள் மத்தியில் நான்கு விடுதலைப் புலிகள் மாட்டிக்கொண்டார்கள். அதுவும் பதுங்க வழியில்லாத வெட்ட வெளிப் பிரதேசம்.

சரி, தாக்கத் தொடங்கலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு சுட ஆரம்பித்தார்கள். உக்கிரமான சண்டை. வீரம் செறிந்த சண்டை. நான்கு பேருக்கும் நூறு பேருக்கும் இடையிலான சண்டை. ஆனால் பதுங்கியிருந்து தாக்குவதற்கும் வெட்டவெளியில் நின்று பதிலடி தருவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எதிரியின் குறி சரியாக அமையும் வரை மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும்.

பல நிமிடங்கள் நீடித்த அந்த யுத்தம் இரண்டு விஷயங்களைத் தெளிவாக்கியது. இலங்கை வீரர்களுக்குக் குறி பார்த்துச் சுடத் தெரியாது என்பது ஒன்று. வெட்டவெளியில் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கிக்கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்குத் தப்பிக்கத் தெரியும் என்பது இரண்டாவது.

இரண்டு பேர் அன்றைக்குத் தப்பித்தார்கள். இரண்டு பேர் இறந்தார்கள். அதுவும் சிங்கள வீரர்களால் கொல்லப்பட்டு அவர்கள் உயிர் துறக்கவில்லை. குண்டடி பட்டிருந்தது. ஓட முடியாது என்று தெரிந்து, எதிரியிடம் நான் மாட்டிக்கொள்ளக்கூடாது, என்னைச் சுட்டுவிடு என்று கேட்டு சக போராளியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். சுட்டவர்களின் முகமெங்கும் கண்ணீர். சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை.

சீலன், ஆனந்த் என்கிற அந்த இரு போராளிகளுள் சீலன் பிரபாகரனுக்கு மிக நெருக்கமான தோழன். பின்னாளில் தனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்தபோது அந்தச் சீலனின் இயற்பெயரான சார்லஸ் ஆண்டனி என்பதையே அதற்கு வைக்குமளவுக்கு நெருக்கமான தோழன்.

எனவே பிரபாகரன் துடித்து எழுந்தார். விட்டுவிடுவதற்கில்லை. சீலன், ஆனந்தின் உயிர் இயற்கையில் கரைவதற்குள்ளாக ஒரு பதிலளித்தாகவேண்டும். செல்லக்கிளி என்று கூப்பிட்டார். கிளி பறந்து வந்தது. கூடவே அவரது படைப்பிரிவினர். மறுபுறம் புலனாய்வுப் பிரிவினர் தட்டி எழுப்பப்பட்டு, யாழ்ப்பாணம் முழுதும் இரவு நேரங்களில் ராணுவ வாகனங்கள் ரோந்து போகும் பாதைகள் பற்றிய விவரம் உடனே, உடனே வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

பரபரவென்று திட்டம் தீட்டப்பட்டது. திருநெல்வேலியைத் தேர்ந்தெடுத்தார்கள். யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலி. ராணுவக் கவச வாகனங்கள் இரவுப் பொழுதில் அணி வகுத்துப் போகும் பாதை. வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். புறப்பட உத்தரவு கேட்டார் செல்லக்கிளி.

இரு, நானும் வருகிறேன் என்றார் பிரபாகரன். கோபம் குறையவில்லை. சற்றும் அணையாத தீ. உள்ளுக்குள் கனன்ற பெருநெருப்பு. புறப்பட்டார். பிரபாகரன், செல்லக்கிளி, விக்டர், சந்தோஷம், புலேந்திரன், கிட்டு. பதினான்கு பேர் கொண்ட குழுவில் ஆறு கமாண்டர்கள். பிரபாகரனே களமிறங்கினாலும் இந்தத் திட்டத்துக்கு செல்லக்கிளிதான் கமாண்டர் என்று முடிவு செய்யப்பட்டது.

இருள் மூடிய வானம். செல்லக்கிளி பலாலியாழ்ப்பாணம் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார். பொது மக்களிடம் சாங்கோபாங்கமாக விஷயம் சொல்லப்பட்டிருந்தது. யாரும் வெளியே வரவேண்டாம். கடைகளைத் திறக்கவேண்டாம். வாகனங்களை வெளியே எடுக்க வேண்டாம். இன்றொருநாள் வீட்டில் நிம்மதியாகத் தூங்குங்கள். இனி தூங்க அவகாசம் கிடைக்குமா என்று சொல்லமுடியாது.

சாலையில் கண்ணிவெடிகள் பொருத்தப் பட்டன. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செல்லக்கிளி ஒருதரம் போய்ப் பார்த்தார். பதினான்கு பேரும் நிலையெடுத்து சாலையின் இரு புறமும் அணி வகுத்துப் பதுங்கி நின்றார்கள். பிரபாகரன் காத்திருந்தார்.

மாதகல் என்னும் இடத்தில் ராணுவ முகாம் ஒன்று உண்டு. அங்கிருந்துதான் புறப்படுவார்கள். புறப்பட்டார்கள். முன்னால் ஒரு ஜீப். பின்னால் ஒரு கவச வாகனம். மொத்தம் பதினைந்து வீரர்கள்.

வருகிறார்கள் என்றார் செல்லக்கிளி. அலர்ட் ஆனார்கள். ஜீப் நெருங்கியது. கண்ணிவெடி பொருத்தப்பட்ட இடத்தை அது தொட்டபோது பிரபாகரன் விசையை அழுத்தினார்.

வெடித்தது. வெடித்தார்கள்.

அதுதான் ஜெயவர்த்தனாவை அதிரச் செய்தது. எண்பத்தி மூன்றாம் வருடம் ஜனவரியிலேயே ஆரம்பித்த அரசாங்கக் கலவரத் திருவிழா தன் அடுத்த பரிமாணத்தை எட்டுவதற்கும் அதுவே காரணமாயிற்று. அன்றைக்கு ராணுவ டிரக்கில் சென்றுகொண்டிருந்த அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.

விவரிக்க முடியாத கொடூரங்கள். எங்கும் மரண ஓலம், காணுமிடமெல்லாம் ரத்தம். யாழ்ப்பாணம் ஒரு மாபெரும் திறந்தவெளி மயானமாகிக்கொண்டிருந்தது. அவலம் ஒரு பக்கம். சீற்றம் ஒரு பக்கம். பிரபாகரன் விடாமல் பதில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சமயம் அது. மக்களின் முழு ஆதரவும் புலிகளின் பக்கம் இருந்தது. இைளஞர்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை நோக்கிப் படையெடுத்து வந்து சேரத் தொடங்கிய தருணம் அது.

ஒரு மாறுதலுக்கு அந்தச் சமயம் நான்கு பெண்கள் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். கல்லூரி மாணவிகள். பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு அநியாயம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலிருந்த கடைசித் தமிழ் மாணவர் வரை நீக்கிவிட்டு, முற்றிலும் சிங்கள மயமாக்க அரசு மேற்கொண்ட முயற்சி.

எனவே `நாம் உண்ணாவிரதம் இருப்போம்’ என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்த அந்த மாணவிகள் நான்கு பேரும் ஒப்புக்குச் சொல்லவிலை. உண்மையிலேயே சாகும் வரை உண்ணாவிரதத் திட்டம் அவர்களிடம் இருந்தது. யார் சொல்லியும் கேட்கவில்லை.

விஷயம், பிரபாகரனுக்குப் போனது. நான்கு பெண்கள். யார் அவர்கள்? விவரம் திரட்டப்பட்டது. எதற்கு உயிர் விட வேண்டும்? இந்த மன உறுதியை இவர்கள் வேறு உருப்படியான விதங்களில் வெளிப்படுத்தலாம் அல்லவா? ம்ஹும். வேண்டாம். அவர்கள் உண்ணாவிரதம் இருந்து செத்துப் போக அனுமதிக்காதீர்கள். தூக்கி வந்துவிடுங்கள் என்று சொன்னார்.

ஒரு ஜீப். நான்கு போராளிகள். மின்னல் வேகம். அந்த நான்கு பெண்களும் பிரபாகரனின் எதிரே நின்றுகொண்டிருந்தார்கள். பெயரென்ன என்று கேட்டார்.

நான்கு பேரும் பேரைச் சொன்னார்கள். அதிலொரு பெயர் மதிவதனி..

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s